May 9, 2017

நிர்மூலமான இஜ்மா நீர்த்துப் போன ஸைபுத்தீன்

நிர்மூலமான இஜ்மா நீர்த்துப் போன ஸைபுத்தீன்

எண்பதுகளின் இறுதிக் கட்டத்தில் தமிழகமெங்கும் தவ்ஹீத் எனும் தீப்பந்தம் பற்றி எரிந்தது. அது காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்த போது, அதை அணைப்பதற்கு, அந்த சத்தியக் கொள்கையை அழித்தொழிப்பதற்கான முயற்சிகளும் அதே வேகத்தில் நடைபெற்றன.

மேலப்பாளையம் ஆலிம்கள் நிறைந்த ஊர் என்பதால் அதன் வேகம் மற்ற இடங்களைக் காட்டிலும் சற்றுக் கடுமையாக இருந்தது. அதன் ஒரு கட்டமாக தவ்ஹீதை எதிர்க்கும் நோக்கத்தில் இங்கு 06.12.1988ல் புதுமனைப் பள்ளிவாசலில் மஜ்லிஸ் உலமா சார்பில், "மத்ஹபுகள் மாநாடு'' நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு ஸைபுத்தீன் ரஷாதி அழைக்கப்பட்டிருந்தார். அங்கு போய் தனது சவால் படலத்தை, சவடால் படலத்தை அரங்கேற்றத் தொடங்கினார்.

"எங்காவது பி.ஜே. சிக்குவான்னு எனக்கு ஆசை' என்று பேசினார். பேசி முடித்ததும் அப்போது தவ்ஹீது ஜமாஅத்தின் பொறுப்பில் இருந்தவர்கள் அவரைச் சுற்றி முகாமிட்டனர், முற்றுகையிட்டனர். அதன் பின்னர் கடிதப் போக்குவரத்திலேயே காலம் தள்ளிவிட்டு ஓட்டம் எடுத்தார். இதுபோன்று விருதுநகர், காயல்பட்டணம், திருச்சி என பல்வேறு ஊர்களில் சவடால் படலத்தை வெளியிட்டு, தப்பித்துக் கொண்டிருந்தார். கடைசியில் மரைக்காயர்பட்டிணத்தில் வசமாக மாட்டிக் கொண்டு திருச்சியில் விவாதத்தில் கலந்து கொண்டார்.

1988 முதல் சரியாக 25 ஆண்டுகள் கழித்து விவாதம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற இந்த விவாதத்தில்

1. இஜ்மாஃ எனப்படும் ஏகோபித்த முடிவு மார்க்க ஆதாரமாகுமா?

2. மார்க்கத்தைச் சொல்வதில் பி.ஜே. பொய்யரா? ஸைபுத்தீன் பொய்யரா?

என்ற தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.

இதில் முதல் தலைப்பான இஜ்மாஃ என்ற தலைப்பின் கீழ் முதல் நாளில் விவாதம் நடைபெற்றது. மீதி இரண்டு நாட்கள் இரண்டாவது தலைப்பில் விவாதம் நடந்தது.

இஜ்மாஃ என்ற தலைப்பில் பேசும் போது சகோதரர் பி.ஜே., வாதங்களை எடுத்து வைத்தார்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.

அல்குர்ஆன் 2:38

"தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 46:9

இந்த வசனங்களை பி.ஜே. அவர்கள்  எடுத்துக் காட்டி, அல்லாஹ் தனது தூதருக்கு அருளிய வஹ்யீ என்ற தூதுச் செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என நெற்றியடி அடித்தார்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 5:3

இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி, மார்க்கம் முழுமையாக்கப்பட்ட பின் இந்த மார்க்கத்தில் மூக்கை நுழைக்க எந்தவொரு கொம்பனுக்கும் அதிகாரமில்லை. இஜ்மாஃ என்ற மூன்றாவது ஆதாரத்தை உள்ளே நுழைக்க எவருக்கும் அதிகாரமில்லை என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

இதற்குப் பதிலளிக்க முனைந்த ஸைபுத்தீன் ரஷாதி, இஜ்மாஃ என்பது இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதற்கு ஒரேயொரு குர்ஆன் வசனத்தையோ, நபி (ஸல்) அவர்களின் ஒரே ஒரு  ஹதீஸையோ ஆதாரமாகக் காட்டவே இல்லை. அவரால் காட்டவும் முடியாது. இஜ்மாஃவுக்கு ஆதாரம் குர்ஆனிலும் இல்லை, ஹதீஸிலும் இல்லை. அதனால் அவரது வாதத்திலும் ஆதாரம் எதுவும் இல்லை.

அல்குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு தான் மார்க்கத்தின் ஆதாரங்கள் என்பது நமது நிலைப்பாடு. இத்துடன் இஜ்மாஃ, கியாஸ் போன்றவை சேர்த்து நான்கு ஆதாரங்கள் என்பது சைபுத்தீனின் நிலைப்பாடு. ஆனால் இதற்கு அவர் குர்ஆன், ஹதீஸிலிருந்து எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. இந்த அடிப்படையில் அவர்களது முதல் தலைப்பு நிர்மூலமானது. அவரும் நிலைகுலைந்து, நீர்த்துப் போனார்.

அதுபோல் இரண்டாவது தலைப்பு தொடர்பான விவாதத்தில் ஸைபுத்தீன் ரஷாதி நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக்கட்டிக் கூறியிருப்பதை ஆதாரத்துடன் பி.ஜே. நிரூபித்தார்.

"நேர்மையான வியாபாரி இறைவனின் நேசத்திற்குரியவராவார்'' என்று நபிகள் நாயகம் கூறினார்கள் என ரஷாதி ஒரு பயானில் உரையாற்றிய வீடியோ கிளிப்பை விவாத அரங்கில் ஒளிபரப்பினோம்.

இது நபியின் மீது சொல்லப்பட்ட ரஷாதியின் திட்டமிட்ட பொய், இச்செய்தியை நபிகள் நாயகம் கூறியுள்ளார்களா? இந்த ஹதீஸ் (?) எந்த நூலில் உள்ளது? அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா? என்று பல முறை ரஷாதியிடத்தில் கேட்டும் இறுதி வரை அதற்கான எந்த ஆதாரத்தையும் நம்மிடம் அவர் அளிக்கவில்லை.

இதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் அவர் இட்டுக்கட்டி பல்வேறு ஊர்களில் பேசி இருந்த வீடியோக்களைப் போட்டுக் காட்டி நபியின் பெயரால் திட்டமிட்டு பொய் சொன்னவர் தான் ஸைபுத்தீன் என்பதை பீஜே நிரூபித்தார். இந்த ஹதீஸ்கள் எந்த நூலில் உள்ளது என்று கேட்ட போது கடைசி வரை ஸைபுத்தீனால் பதில் சொல்ல முடியவில்லை. நபியின் பெயரால் துணிந்து பொய் சொல்லும் கேடுகெட்டவர் ஸைபுத்தீன் என்பது நிரூபணமானது.

அதேபோன்று விவாதக் களத்தில் பி.ஜே. எடுத்து வைத்த எந்த வாதத்திற்கும் உரிய பதிலை அவர் அளிக்காது வெளியிடங்களில் பயான் செய்வது போலவே அங்கேயும் சம்பந்தமில்லா தலைப்புகளில் பயான் செய்துக் கொண்டு இருந்தார்.

அவருடைய விவாத பயானுக்கிடையில், "யார் சத்தியத்தைச் சொல்லாது அமைதியாக இருக்கிறானோ அவன் ஊமை ஷைத்தான் ஆவான்' என நபிகள் நாயகம் கூறினார்கள்'' என புருடா விட்டார்.

இப்படி நபிகள் நாயகம் சொன்னதாக நிரூபிக்க முடியுமா? அதற்கான ஆதாரத்தை கொடுங்கள் என்று கேட்டோம். இதற்கும் எவ்வித ஆதாரத்தையும் இறுதி வரை அவர் தரவில்லை.

இப்படி நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து பொய் சொன்னதை பி.ஜே. எடுத்துக் காட்டிய போதும் அதற்கு அவரிடமிருந்து மழுப்பல் தான் பதிலாக வந்தது.

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வதை விட மோசமான பொய் வேறெதுவும் இருக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி),

நூல்: புகாரி 1291

நபி (ஸல்) அவர்கள் மீதே இந்த ஸைபுத்தீன் ரஷாதி பொய் சொல்கின்றார் என்றால் மார்க்கத்தில் பொய் சொல்பவர் இவர் தான் என்று பி.ஜே. தெளிவாக உறுதிப்படுத்தினார்; உண்மைப்படுத்தினார்.

இந்த அடிப்படையில் இரண்டாவது தலைப்பிலும் சத்தியமே வென்றது. இந்த உண்மையை, விவாத சிடிக்களைப் பார்ப்பவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த விவாதக் களத்தில் ஸைபுத்தீனின் முகத்திரையைக் கிழித்து சத்தியமே முத்திரை பதித்தது, அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் இஜ்மாஃ பற்றி அக்குவேறாக, ஆணிவேறாக ஆய்வு செய்து பார்த்துவிட்டு எள்ளளவு, எள்முனையளவு கூட ஆதாரமில்லை என்று தெரிந்து தான் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு வந்தனர். இருப்பினும் ஸைபுத்தீன் ஏதேனும் ஒரு ஆதாரத்தைத் தந்தால் நாம் மறுபரிசீலனை செய்யலாம் என்று பார்த்தோம்.


ஆனால் இவ்வளவு காலம் இவர்கள் கொடுத்த இந்தப் பூதாகரத் தோற்றம் இவரது வாதத்தின் மூலம் புஸ்வானமாகிப் போனது; பிசுபிசுத்துப் பூஜ்யமானது; நீறு பூத்து நீர்த்துப் போனது என்பதே உண்மை.

EGATHUVAM MAR 2013