மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் - 3
தொடர்: 3
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக
இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தி இருந்தாக வேண்டும். நபி
மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.
ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட
பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.
வலதுபுறத்தை அல்லாஹ் விரும்புவதாக ஹதீஸ் உள்ளதா?
உளூவில் விரும்பத்தக்க செயல்கள் என்று சிலவற்றை ஹிதாயா நூலாசிரியர்
பட்டியலிடுகிறார்.
அதில் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பிற்குரியது என்று
கூறிவிட்டு எல்லாவற்றிலும் வலப்புறத்திலிருந்து துவக்குவதை அல்லாஹ் விரும்புவதாக நபி
சொன்னார்கள் என்று புளுகியுள்ளார். இதோ அதற்கான ஆதாரம்:
الهداية شرح البداية -
(1 / 13)
والبداءة بالميامن فضيلة
لقوله عليه الصلاة والسلام إن الله تعالى يحب التيامن في كل شيء حتى التنعل والترجل
செருப்பணிதல், தலைவாருதல்
என அனைத்திலேயும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை அல்லாஹ் விரும்புவதாக நபிகள் நாயகம்
கூறியுள்ளதால் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பானதாகும்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 13
நாம் பார்த்த வரை எந்த ஹதீஸ் நூலிலும் வலதிலிருந்து துவங்குவதை
அல்லாஹ் விரும்புகிறான் என்ற ஹதீஸ் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலதை விரும்புவார்கள் என்று தான்
ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யும்போதும், தலை வாரும்போதும், செருப்பணியும்
போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை
விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 426
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புவார்கள் எனும் செய்தியை
உல்டா செய்து அல்லாஹ் விரும்புவதாகச் சொல்வதே தவறு. அதிலும் இப்படி நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறியமைக்கு எந்த ஆதாரமும் இல்லாமலிருக்கும் போது அதை நபியின் பெயரில்
பதிவு செய்வது மகா தவறல்லவா?
இதை விட சிறியதொரு வார்த்தை மாற்றத்தை பேச்சின் வேகத்தில் அறிஞர்
பி.ஜே மாற்றிச் சொல்லி விட்டால் போதும்! நபி நேசம் கட்டுப்பாடற்று பொங்கியெழுந்து அதை
(வீடியோ) படமாக்கி, கட்டிங் வேலைகள் செய்து, ‘பார்த்தீர்களா! பி.ஜேவின் தில்லுமுல்லை’ என ஊர் ஊராகப் படம் ஓட்டி விடுவார்கள்
இந்த மத்ஹப்வாதிகள்.
ஆனால் அவர்கள் மதிக்கும் மத்ஹபு இமாம்கள் அதை விடப் பெரும் பிழையைச்
செய்தால், இல்லாத செய்தியை நபியின் மீது இட்டுக்கட்டிக் கூறினால் அப்போது
மட்டும் இவர்களது பார்வை செயலிழந்து போகும். நபி நேசம் வற்றிவிடும். ஆஹா என்னே நபி
நேசம்? என்னே மத்ஹபு பற்று?
“ஹதஸ்” பற்றி ஹதீஸ் உண்டா?
ஹதஸ் என்பது காற்று பிரிதல், மலம்
- ஜலம் கழித்தல் ஆகியவைகளைக் குறிக்கும் சொல்லாகும்.
காற்று பிரிதல், மலஜலம் கழித்தல்
இவைகளைப் பற்றித்தான் நபிகள் நாயகம் கூறிய ஹதீஸ் உள்ளதே? பிறகேன் இப்படியொரு தலைப்பு என புருவத்தை உயர்த்தி விட வேண்டாம்.
இது தொடர்பாகப் பல ஹதீஸ்கள் இருந்தாலும் நூலாசிரியர் கூறும்
ஹதீஸ் (?) இல்லாததால் இந்த சிறு தலைப்பை இட்டுள்ளோம்.
சரி! விஷயத்திற்கு வருவோம்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14ல் உளூவை முறிக்கும் காரியங்கள்
பற்றிக் குறிப்பிடுகையில் முன்பின் துவாரங்களிலிருந்து வெளியேறுபவை உளூவை முறித்து
விடும் என்று துவக்கமாகச் சொல்கிறார். அதற்கு ஆதாரங்களாக திருக்குர்ஆன் 5:6 வசனத்தையும், அதைத் தொடர்ந்து
பின்வரும் செய்தியையும் எடுத்தெழுதுகிறார்.
இதில் வசனத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி நாம் விமர்சனம் செய்யவில்லை.
செய்யவும் முடியாது. ஏனெனில் அவர் குறிப்பிட்ட
வசனம் இது தான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக் காகத் தயாராகும்போது உங்கள்
முகங்களையும்,
மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள்
தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால்
(குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில்
ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின்
மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில்
உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 5:6
கழிப்பறையிலிருந்து வந்தால் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும்
செய்ய வேண்டும் என்ற இறைவசனம் நூலாசிரியரின் கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுகிறது.
கழிவறைக்குச் செல்பவர் முன் பின் துவாரங்களிலிருந்து வெளியேறுகிற
சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே செல்வார். அவற்றை வெளியேற்றி விட்டு வரும்போது தொழுகைக்குத்
தயாராவதாக இருந்தால் உளூ செய்ய வேண்டும் என்ற கருத்தை மேலுள்ள வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
எனவே தம் கருத்துக்கு நூலாசிரியர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டியது
மிகச் சரியானதே!
ஆனால் அதையடுத்து அவர் கூறுகிறார்.
الهداية شرح البداية -
(1 / 14)
وقيل لرسول الله صلى الله
عليه وسلم ما الحدث قال ما يخرج من السبيلين
ஹதஸ் என்றால் என்னவென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முன்பின்) இரு துவாரங்களிலிருந்து வெளியேறுபவையே ஹதஸ் ஆகும்
என்றார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14
அவர் சொன்ன இந்த நபிமொழி (?) குறித்து
தான் நாம் கேள்வி எழுப்புகிறோம். இப்படியொரு ஹதீஸ் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹதஸ் என்றால் என்னவென்று கேட்கப்பட்டதாகக்
கதை கட்டும் இச்சம்பவம் எந்த நூலில் பதிவாகியுள்ளது?
அபூஹுரைராவிடம் இது பற்றி கேட்கப்பட்டதாக புகாரியில் ஹதீஸ் உள்ளது.
ஆனால் அதிலும் கூட நூலாசிரியர் நபி சொன்னதாகச் சொன்ன பதிலை அபூஹுரைரா (ரலி) கூறியதாக
இல்லை.
ஹம்மாம் பின் முனப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறுதுடக்கு (ஹதஸ்) ஏற்பட்டவர் உளூசெய்யாத வரை அவருடைய தொழுகை
ஏற்கப்படாது’’ எனக் கூறியதாக
அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர்
“அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறுதுடக்கு என்பது என்ன?’ என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்று பதிலளித்தார்கள்.
(நூல்: புகாரி 135)
அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு நடந்த சம்பவத்தை கொஞ்சம் டிங்கரிங்
செய்து அப்படியே நபிகள் நாயகத்திற்கு நடந்த ஒன்றைப் போன்று சித்தரித்துக் காட்டுகின்ற
நூலாசிரியரின் இச்செயல் மத்ஹபினருக்குக் கோபத்தை வரவழைக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஏனெனில் நூலாசிரியர் தவ்ஹீத் ஜமாஅத் காரர் அல்லவே!
நபிகளார் வாந்தி எடுத்த பின் உளூ செய்யவில்லை என்ற ஹதீஸ்
வாந்தி எடுப்பது உளூவை முறிக்காது என்பதில் இரு கருத்துக் கொள்ள
இடமில்லை. எனினும் ஒரு கருத்தை நபியின் பெயரில் சொல்வதாக இருந்தால் தகுந்த ஆதாரத்துடன்
சொல்ல வேண்டும்.
ஹிதாயாவில் வாந்தி உளூவை முறிக்காது என்பதற்கு ஆதாரம் என்ற பெயரில்
ஒரு செய்தியைப் பதிவிடுகிறார்கள்.
الهداية شرح البداية -
(1 / 14)
روي أنه عليه الصلاة والسلام
قاء فلم يتوضأ
நபி (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள்; ஆனால் உளூச் செய்யவில்லை என்று ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14
ஹதஸ் தொடர்பாக நபியின் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்வை நடந்தததாக
நூலாசிரியர் கட்டிய கதையை மேலே பார்த்தோம் அல்லவா? அந்தக்
கதையின் வடு கூட மாறாத நிலையில் அதற்கு அடுத்த வரியில் இப்படிப் பொய்யை அவிழ்த்து விடுகிறார்.
நபிகளார் வாந்தி எடுத்தார்கள்; பிறகு உளூ செய்தார்கள் என்று பலவீனமான செய்திகள் உள்ளன. ஆனால்
ஹிதாயா ஆசிரியர் குறிப்பிடுவதைப் போன்று நபிகள் நாயகம் வாந்தி எடுத்து உளூ செய்யவில்லை
என்று எந்தச் செய்தியும் கிடையாது.
அடிப்படை ஆதாரமற்ற ஒரு செய்தியைப் புனைந்து அல்லது யாரோ புனைந்து
கூறியதை அப்படியே வாந்தி எடுத்து, நபிகள் வாந்தி எடுத்து உளூ செய்யவில்லை
என்று கூறினால் இது நியாயமா? தகுமா? இதற்கு மத்ஹபினர் என்ன பதிலை அளிக்கப் போகின்றார்கள்?
குளிப்பின் பர்ளு?
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது அவசியம் செய்ய வேண்டிய காரியங்களென
சிலவற்றை ஹிதாயா நூலாசிரியர் பட்டியலிடுகிறார்.
அவற்றில் வாய் கொப்பளிப்பது, மூக்கிற்குத்
தண்ணீர் செலுத்தி சிந்துவது என இவ்விரண்டையும் குளிப்பின் பர்ளு என குறிப்பிடுகிறார்.
இதற்கு நபிமொழி ஆதாரம் என இவர் முன்வைப்பது ஹதீஸ் நூல்களில்
இல்லாததாகும்.
وَالْمُرَادُ بِمَا رُوِيَ
حَالَةَ الْحَدَثِ بِدَلِيلِ قَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { إنَّهُمَا فَرْضَانِ فِي الْجَنَابَةِ سُنَّتَانِ
فِي الْوُضُوءِ } “ .
கடமையான குளிப்பின் போது வாய் கொப்பளிப்பது, மூக்கை சிந்துவது இரண்டும் பர்ளாகும். உளூ செய்யும் போது இவ்விரண்டும்
சுன்னத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 16
இப்படி ஒரு நபிமொழி எங்கும் இல்லை.
வாய் கொப்பளிப்பது மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவது இயற்கை மரபு
என்று நபி சொன்ன செய்திகள் உண்டு. (முஸ்லிம் 436)
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது இவ்விரண்டையும் நபிகளார்
செய்துள்ளார்கள் என்றும் ஹதீஸ்கள் உள்ளது. (புகாரி 259)
ஆனால் மேலே நாம் கண்டதைப் போன்று வாய் கொப்பளிப்பது, மூக்கைச் சிந்துவது கடமையான குளிப்பின் போது பர்ளு, உளூவின் போது சுன்னத்
என்று எந்த ஹதீஸும் கிடையாது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஹதீஸ் நூல்களில் இல்லாத இந்தச்
செய்தியை இரண்டு நபித்தோழர்கள் அறிவித்திருப்பதாக வேறு குறிப்பிடுகிறார்.
ஆம்! இனாயா ஷரஹ் ஹிதாயா, பக்கம் 70ல் இந்தச் செய்தியைப் பற்றிக் குறிப்பிடும் போது ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் இதை அறிவித்திருப்பதாகக் கூறுகிறார்.
என்னவொரு வினோதமிது? இப்படி ஒரு
செய்தியை நபி சொன்னதாக ஆதாரமே இல்லை என்று நாம் கூறுகையில் இதை இரண்டு நபித்தோழர்களின்
தலையில் சுமத்தி விடுவது பொய்யின் மேல் பொய்யை வீசும் செயலல்லவா?
இது தான் நபிமொழிகளை அறிவிப்பதில் உள்ள பேணுதலா? இது மத்ஹபினர்களுக்கு நபி மீது பொய்யுரைப்பதாகத் தெரியவில்லையா?
இப்படியெல்லாம் இரண்டு நபித்தோழர்களின் பெயரைப் பயன்படுத்தி
நபி சொன்னார்கள் என்று சொல்கிறாரே வேறு எங்கும் இச்செய்தி உள்ளதா என்று முடிந்த மட்டும்
தேடிப்பார்த்தாலும் பின்வரும் செய்தி ஒன்றே கிடைக்கின்றது.
கடமையான குளிப்பின் போது வாய் கொப்பளிப்பதையும், மூக்கை சிந்துவதையும் மூன்று முறை அவசியம் செய்ய வேண்டும் என
நபி உத்தரவிட்டுள்ளார்கள் என்று அபூஹுரைரா அறிவிப்பதாக ஒரு செய்தி தாரகுத்னீ (ஹதீஸ்
எண் 409) உள்ளிட்ட சில நூல்களில் உள்ளது.
இமாம் தாரகுத்னீ அவர்களே இதைப் பதிவு செய்து விட்டு இது இட்டுக்கட்டப்பட்ட
செய்தி என்று குறிப்பிட்டுள்ளது தனி விஷயம்.
ஆனால் இந்தச் செய்தி நூலாசிரியர் குறிப்பிட்ட பொய்யான செய்தியை
ஒத்ததாக இல்லை. அவர் பதிவிட்ட அடிப்படையே இல்லாத பொய்யான செய்திக்கும் இந்த இட்டுக்கட்டப்பட்ட
செய்திக்கும் அதிக வேறுபாடு உள்ளது தெளிவு.
நபியின் பெயரால் சொல்லப்படும் செய்தியை உறுதிப்படுத்தி விட்டுச்
சொல்ல வேண்டும் என்ற நியதிக்கு மாற்றமாக, கேட்டதையெல்லாம்
தன் நூலில் கொண்டு வந்துள்ளார் என்றே இதைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது.
மேலும் ஆதாரப்பூர்வமான இதர நபிமொழிகள் கடமையான குளிப்பை நிறைவேற்ற
வாய் கொப்பளிப்பது, மூக்கைச் சிந்துவது ஆகியவை அவசியம்
இல்லை. இவற்றைச் செய்யாமலேயே குளிப்பு நிறைவேறிடும் என்ற கருத்தைத் தருகின்றன.
‘அல்லாஹ்வின்
தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க
வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில்
மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர்
உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 497
கடமையான குளிப்பு நிறைவேற உடலும், தலையின் அடிபாகமும் நனைவதே போதுமானது என்பதை இச்செய்தி தெரிவிக்கின்றது.
உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் இவ்விரண்டைத்தான்
போதிக்கிறார்கள். மூக்கைச் சிந்துவது வாய் கொப்பளிப்பதை வலியுறுத்தவில்லை என்பதிலிருந்து
இதை அறியலாம்.
எனவே நூலாசிரியர் நபியின் பெயரால் அவிழ்த்து விட்ட பொய்ச் செய்தி
எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை என்பதோடு, இதர நபிமொழிகளுக்கு
மாற்றமாக உள்ளதையும் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது.
EGATHUVAM NOV 2016