தலையே போனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இழக்க மாட்டோம்!
நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட
வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர்.
உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம்.
அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி
விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 2:109)
யூதர்களும், கிறித்தவர்களும்
அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்’’ எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம்
வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.
அல்குர்ஆன் 2:120
“அவர்கள் (ஏகஇறைவனை)
மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக
ஆக வேண்டும்’’ என்று அவர்கள்
விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில்
(எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்!
அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
அல்குர்ஆன் 4:89
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் பங்கிற்கும், இறை மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள்
தங்கள் பங்கிற்கும் முஸ்லிம்களைத் தங்கள் கொள்கையின் பால் தடம் மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்
என்பதை மேற்கண்ட வசனங்கள் உணர்த்துகின்றன. இது வரலாற்றில் நடந்து முடிந்த விஷயம் என்று
கருதக் கூடாது. வரலாற்றின் ஒவ்வொரு காலக் கட்டத்திலும், இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும்.
அதன் ஒரு கட்டமாகத் தான் இன்று இந்தியாவில் முஸ்லிம்களை வழித் தடம் மாற்றுவதற்குரிய அனைத்து
ஆயத்த வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையிலான சங்கப் பரிவாரங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள்
தர்ஹா வழிப்பாட்டின் மூலம் தங்கள் தனித்துவத்தை
இழந்து தடந்தெரியாமல் உள்ளார்கள். இணை வைப்பாளர்களுக்கும், தங்களுக்கும் இடையே வேறுபாடும், வித்தியாசமும் இல்லாமல் உள்ளார்கள்.
அங்கு கோயில்; இங்கு தர்ஹா!
அங்கு தேர்;
இங்கு சந்தனக் கூடு! அங்கும் உண்டியல்; இங்கும் உண்டியல்! அங்கு திருநீறு - அதாவது சாம்பல்; இங்கு சந்தனம்! அங்கும் கோபுரம்; இங்கும் கோபுரம்! அங்கும் கொடி; இங்கும் கொடி! அங்கும் யானை ஊர்வலம்; இங்கும் யானை ஊர்வலம்! அங்கு கச்சேரி, மேள தாள வாத்தியம் மற்றும் வெடி முழக்கம்; இங்கும் கச்சேரி, மேள தாள வாத்தியம் மற்றும் வெடி முழக்கம்! கோயிலிலும் முடி காணிக்கை; தர்ஹாவிலும் முடிக் காணிக்கை! அங்கும் பிறந்த தின விழாக்கள்
நீத்தார் நினைவு நாட்கள்; இங்கும் பிறந்த தின விழாக்கள், நினைவு நாட்கள்!
இப்படி சடங்கு சம்பிரதாயங்கள் சகலத்திலும் சரி நிகர் சமம், சங்கமம், எம்மதமும் சம்மதம் என்ற ரீதியில்
முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு மத்தியில் தூய இஸ்லாத்தை நிலைநாட்டுவோர் மீது காவிக்கறை படிந்தவர்கள் மட்டுமின்றி, மதச் சார்பற்ற சிந்தனை உள்ளவர்கள் கூட வன்முறை, பயங்கரவாதப் பழிகளைச் சுமத்துகின்றனர். வளரும் பயங்கரவாதச் சிந்தனைக்கும் செயல்களுக்கும் அப்பழுக்கற்ற இந்தத் தூய இஸ்லாமிய சிந்தனை தான் காரணம் என்று
அபாண்டமாகப் பேசுகின்றனர். உண்மையான ஓரிறைக் கொள்கை தான் பயங்கரவாதச் செயல்களுக்கு
ஊற்றுக் கண்ணாக இருக்கின்றது என வாய் கூசாமல் புரட்டு வாதம் புரிகின்றனர்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் தெளிவான விஷயம், நடுநிலை வாதிகள் முதல் நயவஞ்சகர்கள், சங்கப் பரிவாரங்கள் வரையிலான அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் தாம்
கொண்டிருக்கின்ற கொள்கை அடிப்படையில் வாழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.
அவர்களை அவர்களுடைய ஏகத்துவக் கொள்கையிலிருந்து இணை வைப்பின் பக்கம் திருப்பி விட வேண்டும்
என்பது தான் அவர்கள் அனைவரின் நோக்கமாகும்.
இப்போது இந்திய முஸ்லிம்களிடம் முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களாக எஞ்சியிருப்பதும் மிஞ்சியிருப்பதும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, இறந்தவர்களின்
அடக்க முறை ஆகியவை தான். இந்த அடையாளங்களையும் தொலைத்து விட்டால் முஸ்லிம்களையும், மற்றவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றி ஒருங்கிணைந்து
விடலாம் என்ற தப்புக் கணக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பரிவாரங்கள் களமிறங்கியிருக்கின்றன.
முஸ்லிம்களிடம் உள்ள மிச்ச, சொச்ச
அடையாளங்களை அப்புறப்படுத்துவதற்கும், அகற்றுவதற்கும்
உச்ச நீதி மன்றம் உரிய சந்தர்ப்பத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அதனுடைய எதிர்பார்ப் பிற்கும், ஏக்கத்திற்கும் தக்க வகையில்
முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் முஸ்லிம் விரோத பாசிஸ அரசு மத்தியில் அமர்ந்துள்ளது.
‘நீ ஏன் வாய்
பொத்திக் கொண்டு வாளாவிருக்கின்றாய்? அதற்கான வாசலை
நான் திறந்து விடுகின்றேன்; நீ புகுந்து விளையாடு’ என்று பாசிஸ பாஜக அரசுக்கு உச்ச
நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதற்கேற்ப மத்திய அரசு இந்த சந்தடி இடைவெளியில்
தனது மதச்சார்பின்மை என்ற பெயரில் தனது பச்சோந்தித்தனத்தை வெளிக்காட்டுகின்றது,
உச்ச நீதிமன்றம் கருத்துக் கேட்டவுடன் மத்திய அரசு சட்ட ஆணையத்திடம்
கருத்துக் கேட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு 16 கேள்விகள் அடங்கிய தாள் ஒன்றை வெளியிட்டு அதன்மீது வாக்கெடுப்பு
நடத்துகின்றது.
பெரும்பான்மை மக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்புகின்றார்கள்
என்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதற்கு இந்த ஆயுதத்தை சட்ட ஆணையம் கையில் எடுத்துள்ளது.
மோடி எப்படி ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் மோடி
வித்தை காட்டி மோசடியாக மக்கள் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுகின்றார் என்பதை நாட்டு
மக்கள் நன்கு அறிவார்கள். அது போல் இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையைக் காட்டி சிறுபான்மையினரின்
உரிமையியல் சட்டங்களைப் பறிப்பதற்கு சட்ட ஆணையம் சதி செய்கின்றது. உச்ச நீதிமன்றம்
உரிமையியலை ஓய்ப்பதற்கும், ஒழிப்பதற்கும் ஒரு வாய்ப்புக்காகக்
காத்திருக்கின்றது. அப்படி ஒரு நெருக்கடியும், நிர்ப்பந்தமும்
வந்தால் முஸ்லிம்கள் தங்கள் உயிர் போனாலும்
உரிமையியலை ஒரு போதும் இழக்க மாட்டார்கள் என்பதை உரக்கத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதில் வேடிக்கை என்னவெனில், மத்திய அரசு தலாக் விஷயத்தில் பச்சோந்தித்தனத்தைப் பின்வருமாறு
வெளிப்படுத்தியிருப்பது தான்.
‘‘தலாக் நடைமுறையை, மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை. தலாக்
நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும்
சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச்
சட்டமே பிரதானமாகத் திகழும், இந்தியா போன்ற மதச் சார்பற்ற
நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது’’ என்று கூறியுள்ளது.
மதச்சார்பின்மையில் உண்மையிலேயே பாஜகவுக்கு நம்பிக்கை இருக்குமானால்
உ.பி.யில் ராமர் கோயில் விவகாரத்தைக் கிளப்பியிருக்கக் கூடாது. ஆனால் தேர்தலுக்காக
இப்போது அதைக் கிளப்பியிருக்கின்றது.
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை
பகிரங்கமாக அறிவித்து, அதே கொள்கையில் தான் பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்கள் உறுதியாக
உள்ளன. தற்போது காவிரி விவகாரத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட
போது, அதைச் சொல்ல உச்ச நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்று திமிர்
வாதம் பேசினார்கள்.
ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கருத்தை நீதிமன்றம் வெளியிடும்
போது மட்டும் சட்டத்திற்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பது போன்று வேஷம் போடுகிறார்கள்
என்பதையும் நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
EGATHUVAM NOV 2016