அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 5
தொடர்: 5
உலக விஷயங்களும் மார்க்க விஷயங்களும்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்
என்ற கொள்கையை அதன் முழுப்பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் தொடர் பிரச்சாரத்தை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுத்துள்ளது.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள பல்வேறு கருத்துக்களை
நாம் இத்தொடரில் பார்த்து வருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்பதால் தூதர் என்ற
முறையில் அவர்கள் காட்டிய வழி மட்டுமே மார்க்கத்தில் உள்ளதாகும். இறைத்தூதர் என்ற முறையில்
அல்லாமல் மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை மார்க்கத்தில் அடங்காது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள்
என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் இவ்வாறு சாப்பிடவில்லை.
இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச்
சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக
நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம்
செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.
அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று
கூற முடியாது.
அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி
இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.
ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை
அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப
வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.
இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித்
தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து
வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு
விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித்
தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்’ எனக் குறிப்பிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 4358
மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான்
உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக்
கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல்: முஸ்லிம் 4357
மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக
என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால்
அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று
கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல்: முஸ்லிம் 4356
வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது
மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக்
காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது.
அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது ‘‘இது உடும்பு இறைச்சி’’ என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி)
அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது ஹராமா?’’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை.
எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை’’ என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம்
பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
(ஹதீஸின் கருத்து)
நூல்: புகாரி 5391, 5400, 5537
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல்
போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை என்பதால்
தான். எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை
என்று புரிந்து கொள்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும்
கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.
மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.
இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.
இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது
அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.
அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுவதிலேயே இந்த அளவுகோலை மார்க்கம்
வகுத்திருக்கும் போது, இறைவன் புறத்திலிருந்து வஹீ
அறிவிக்கப்படாத நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, மத்ஹபுகளைப் பின்பற்றுவது, எவரது
கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதை உணர
வேண்டும்.
EGATHUVAM OCT 2016