சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் 4 - அன்னையார் மறுத்த ஹதீஸ்கள்
தொடர்: 4
எம்.எஸ். செய்யது இப்ராஹீம்
‘திருக்குர்ஆனுக்கு
முரண்படுவதாகக் கூறி, ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரப்பூர்வமான
ஹதீஸை மறுத்துள்ளார்களே! இதை ஆதாரமாக வைத்து
நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களைக் காஃபிர் என்று சொல்வீர்களா?’ என விவாதத்தில் நாம் கேள்வி எழுப்பினோம்; இது குறித்து விளக்கமளித்தால் வசமாக மாட்டிக் கொள்வோம் என்று
பயந்த பரலேவிக் கும்பல் கடைசி வரைக்கும் இது குறித்து வாய்திறக்கவே இல்லை.
திருக்குர்ஆனுக்கு முரண்படும் காரணத்தால் அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் மறுத்த இன்னும் சில ஹதீஸ்களை இந்த விவாதத்தில் நாம் எடுத்துக் காட்டினோம்.
பத்ருப் போரில் நபி கூறியதாக வந்த செய்தியை மறுத்த ஆயிஷா (ரலி)
பத்ரு போரில் கொல்லப்பட்ட காஃபிர்களது பிணங்களைப் பாழுங்கிணற்றில்
வீசிய பிறகு அந்தப் பிணங்களை நோக்கி, “எங்கள் இறைவன்
எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் பெற்றுக்கொண்டோம்; உங்களுக்கு
வாக்களித்ததை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா?” என்ற கருத்துப்பட
நபிகளார் பேசினார்கள் என்று வரக்கூடிய செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இது எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித்
தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில்
நின்று கொண்டு,
அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். நான்
கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர்
கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், நான் அவர்களுக்குச்
சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள் என்று தான் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (இப்போது அவர்கள் செவியேற்கிறார்கள் என்று நபியவர்கள் சொல்லவில்லை.)
பிறகு, ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்
வசனங்களை) ஓதினார்கள்:
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (27:80)
(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய
முடியாது. (35:22)
நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது
(இந்நிலை ஏற்படும்) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 3979
பாழும் கிணற்றில் போடப்பட்ட காஃபிர்கள் செவியேற்றார்கள் என்ற
கருத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஆதாரப்பூர்வமான ஹதீஸை ஆயிஷா (ரலி)
மறுத்துள்ளார்கள். இது புகாரி (3979) முஸ்லிம் (1697) மற்றும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.
அப்படியானால் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸ்களை மறுத்தது குறித்து
உங்கள் நிலை என்ன? ஆயிஷா (ரலி) அவர்களை யூதக் கைக்கூலி
என்று சொல்வீர்களா என்று கேள்வி எழுப்ப, பரலேவிக் கூட்டம்
விழி பிதுங்கியதே தவிர வாய்திறக்கவே இல்லை.
மூன்று விஷயங்களில் சகுனம் உள்ளது என்ற ஹதீஸை மறுத்த ஆயிஷா
(ரலி)
சகுனம் மூன்றில் இருக்கிறது என்ற ஹதீஸை குர்ஆனுக்கு முரண் என்று
ஆயிஷா (ரலி) மறுத்துள்ளார்கள் என்ற செய்தியை அடுத்த ஆதாரமாக எடுத்து வைத்தோம்.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுனம் என்பது
பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான்
இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்துக் கொண்டிருக்கிறார்
என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபியவர்களுக்கு)
இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக
அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு ‘இந்தப்
பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு
முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது’ (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்)
நூல்: அஹ்மத் 24894
ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் 2858, 5093, 5753,
5772 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் 4127, 4128 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது
புகாரியில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப் பட்டுள்ள ஒரு ஹதீஸை
ஆயிஷா (ரலி) அவர்கள் எப்படி மறுக்கலாம்? அவர்கள் ஒரு
முஸ்லிமா? என்று இது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை?
தெள்ளத்தெளிவாக சகுனம் உண்டு என்று நபிகளார் சொன்னதாக வரக்கூடிய
செய்தியை 57:22 என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண் என்ற அடிப்படையில் மறுத்துள்ளார்களே
எனக் கேள்வி எழுப்ப இதற்கும் பரலேவிக் கூட்டம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
நாய், கழுதை, பெண் ஆகியவை தொழுகையை முறிக்கும் என்ற செய்தியை மறுத்த ஆயிஷா
(ரலி)
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் குறித்துப்
பேசப்பட்டது. அப்போது சிலர், ‘(தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே
செல்லும்) நாயும், கழுதையும், பெண்ணும் தொழுகையை முறித்துவிடுவன’ என்று கூறினர். அப்போது ஆயிஷா
(ரலி) அவர்கள்,
‘(பெண்களாகிய) எங்களை நாய்களுக்குச் சமாமாக்கி
விட்டீர்களே?
நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கையில் நான் அவர்களுக்கும்
கிப்லாவுக்குமிடையே கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை
ஏற்படும். (தொழுது கொண்டிருக்கும்) அவர்களுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லாமல் (நான்
கட்டிலிலிருந்து) ஒரே நழுவு நழுவிவிடுவேன்’ என்று கூறினார்கள்
நூல் : புகாரி 511
மேற்கண்ட செய்தியில் எந்த திருக்குர்ஆன் வசனத்தையும் கூட ஆதாரமாகக்
கூறாமல் ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளார் சொன்னதாக சொல்லப்பட்ட ஒரு ஹதீஸைப் பொய் என்று
சொல்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
சொல்லியதாக வரக்கூடிய கூற்றுக்கு மாற்றமாக அவர்களே நடந்துள்ளார்கள் என்பதுதான். அப்படியானால்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும்போது நான் குறுக்கே படுத்துக் கிடப்பேன். பெண் குறுக்கே
படுத்துக்கிடப்பதால் தொழக்கூடியவரது தொழுகை முறிந்திருக்கும் என்று நபி சொன்னதாக வரும்
செய்தி உண்மையென்று இருக்குமேயானால் என்னை குறுக்கே படுக்க நபிகளார் அனுமதித்திருக்க
மாட்டார்கள் என்பதுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் வைக்கும் தர்க்க ரீதியான சான்று.
இந்த அடிப்படையிலும் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸ்களை மறுத்ததாக
வருகின்றதே! இதற்கு உங்கள் பதில் என்ன என்று நாம் கேட்க அதற்கும் வாய்திறக்கவில்லை
இந்த ஹதீஸ் காப்பாளர்கள்(?).
இவர்கள் உண்மையிலேயே ஹதீஸ் காப்பாளர்களாக இருந்திருந்தால் என்ன
செய்திருக்க வேண்டும்?
திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லியும்,
உமூமுல் பல்வா என்ற நடைமுறையில் உள்ள செய்திகளுக்கு முரண்படுவதாகச்
சொல்லியும்,
வேறு பல ஹதீஸ்களுக்கு முரண்படுவதாகச் சொல்லியும்,
நமது அறிவுக்கு முரண்படுவதாகச் சொல்லியும்,
ஹதீஸ்களை மறுத்த சஹாபாக்கள், ஹனஃபி
மத்ஹபு அறிஞர்கள், மாலிக் இமாம், ஷாஃபி இமாம் உள்ளிட்ட பல அறிஞர்கள், இன்னும் கஸ்ஸாலி, ஸர்ஹசீ, பஹ்ருத்தீன் ராஸி உள்ளிட்ட அனைவருமே காஃபிர்கள்; இவர்கள் அனைவருமே
ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று ஃபத்வா வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர்கள் சொல்லவில்லை.
இதிலிருந்தே திருக்குர்ஆனுக்கு முரண்படுகின்றது எனக்கூறி ஆதாரப்பூர்வமான செய்திகளாக
வந்துள்ள செய்திகளில் ஒரு சில செய்திகளை மத்ஹபு இமாம்களும் மறுத்துள்ளார்கள் என்பதும், இது ஒன்றும் புதிய கொள்கையோ, அல்லது
யூதக்கொள்கையோ இல்லை என்பதும் நிரூபணமானது.
தக்க காரணங்களையும், சான்றுகளையும்
காட்டி திருக்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஹதீஸ்களே அல்ல; அது நபி சொன்னதே இல்லை என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை
சரியானதுதான் என்பது மீண்டும் இந்த விவாதத்தின் வாயிலாக நிரூபணமானது.
அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்ததாக உம்மு ஹராம் (ரலி) என்ற சஹாபியப் பெண் நபிகளாருக்கு
பேன் பார்த்துவிட்டார்களா?
நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதா?
அந்நியப் பெண்ணிடத்தில் தாடி வைத்த இளைஞர் ஒருவரை பால்குடிக்கச்
சொல்லி நபிகளார் கட்டளை போட்டார்களா? என்பன குறித்து
வரக்கூடிய திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகள் பற்றி நாம் எடுத்து வைத்த வாதங்களையும்
அதற்கு பரலேவிக்கும்பல் எப்படி எப்படியெல்லாம் உளறியது என்பது குறித்தும் இந்தத் தொடரின்
அடுத்த பாகத்தில் காண்போம்.
EGATHUVAM NOV 2016