May 30, 2017

படைத்தவன் சட்டத்தை பரிகாசப் பொருளாக்காதீர்!

படைத்தவன் சட்டத்தை பரிகாசப் பொருளாக்காதீர்!

எம். ஷம்சுல்லுஹா

தொலைபேசி தலாக்!

குறுஞ்செய்தி தலாக்!

மின்னஞ்சல் தலாக்!

என்று நவீன சாதனங்கள் மூலம் சொல்லப்படும் தலாக் சரியானது தான் என மார்க்கமறியா மூட அறிஞர்கள் வழங்கும் பத்வாக்கள் தற்போது  தலாக் சட்டம் குறித்த வெறுப்புணர்வை அதிகமாக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண் வழக்கு தொடுத்தார்.

இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த தலாக் கடிதத்தில் வரவில்லை. மாறாக, தொலைபேசியில் வந்தது. 2015 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்  அதிகாலை கணவனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் தலாக் தலாக் தலாக் என்று சொல்லி விட்டு தொலைபேசி அழைப்பை கணவர் துண்டித்து விட்டார். ஆம்! தொலைபேசியில் வார்த்தைகளை மட்டுமல்ல!  வாழ்க்கையையும் சேர்த்தே கணவர் துண்டித்து விட்டார்.

இதன் பின்னர் அவரிடமிருந்து நான்கு குழந்தைகளையும் கணவர் பறித்துக் கொண்டார்.  இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வந்து இந்த தலாக் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் நீதி மன்றத்தில் கோருகின்றார்.

மார்க்க அறிஞர்கள், இது தலாக் அல்ல; செல்லாது என்று தீர்ப்பு அளித்திருந்தால் ஜமாஅத்திலேயே இவருக்கு நியாயம் கிடைத்திருக்கும். இஸ்லாத்துக்கு எதிரான தவறான ஃபத்வாவின் காரணமாக நீதிமன்றங்கள் தலாக் சட்டத்தில் தலையிட வழி ஏற்படுத்தி விட்டனர்.

கடித தலாக்குகள், தொலைபேசி தலாக்குகள், ஸ்கைப் தலாக்குகள், வாட்ஸ்அப் தலாக்குகள். ஃபேஸ்புக் தலாக்குகள், மின்னஞ்சல் தலாக்குகள் என்று தலாக்கிற்கான விளையாட்டு அரங்குகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.

இஸ்லாமியச் சட்டப்படி இந்த தலாக்குகள் செல்லுமா?

கணவன் மனைவிக்கிடையே பிணக்கு ஏற்பட்டால் உடனே தலாக் சொல்ல இஸ்லாம் வழிகாட்டவில்லை.

அறிவுரை கூற வேண்டும். அதில் இணக்கம் ஏற்படாவிட்டால் படுக்கையில் இருந்து பிரிக்க வேண்டும்.

அதிலும் இணக்கம் ஏற்படாவிட்டால் தலாக் என்ற நிலைக்குப் போகாமல் இருக்க இலேசாக அடித்து அறிவுரை கூற வேண்டும்.

இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் இரு குடும்பத்தைச் சேர்ந்த நடுவர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி இணக்கம் காண வேண்டும்.

அதன் பின்னர் தான் ஒரு தலாக் கூற வெண்டும்.

மேற்கண்ட நவீன தலாக் சொன்னவன் இவற்றில் எந்த ஒன்றையும் கடைப்பிடிக்க முடியாது. இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் போது இவற்றில் எந்த ஒன்றையும் செய்திருக்க மாட்டான்.

மேலும் இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் போது உடனடியாக தலாக் கூறும் அவசரம் எதுவும் இல்லை.

இஸ்லாமிய நெறியைப் பேணாமல் சொன்ன தலாக் செல்லாது என்று மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுக்கவில்லை.

இதைவிட முக்கியமாக தலாக் சொல்லும் போது இரு சாட்சிகள் அவசியம். இது பற்றிய அறிவும் மார்க்க அறிஞர்களுக்கு இல்லாததால் இது செல்லத்தக்க தலாக் எனக் கூறியுள்ளனர்.

அல்லாஹ் தலாக் விடும் போது இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றான்.

அவர்கள் (அந்த பெண்கள்) தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் 65:2

இவ்வசனத்தில் விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும்போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை.

இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தபால் எழுதி, அல்லது இரண்டு சாட்சிகளின் முன்னால் தொலைபேசியில் பேசி தலாக் என்பதைத் தெரிவித்தால் இந்த நிபந்தனையைப் பேணிவிட்டதாக நினைக்கின்றனர்.

விவாகரத்துச் செய்பவனையும், செய்யப் பட்டவளையும், இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.

எனவே எதிர்த்தரப்பில் உள்ள பெண் யார் என்பது தெரியாமல், அவள் இவனுக்கு மனைவி தானா என்பதையும் அறியாமல், தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறானா என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்து விவாகரத்துச் செய்தால் செல்லுமா என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது. வீடியோ மூலம் ஒருவன் விவாகரத்துச் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.

ஒரு திரையில், தலாக் சொல்பவனையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால் இந்த தலாக்கும் செல்லத்தக்கதல்ல.

எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேரிடையான இரு சாட்சிகளுக்கு முன்னால் தான் விவாகரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தலாக் சொன்னதாக ஆகாது.

தற்காலிகமாகப் படுக்கையைப் பிரித்தல், அறிவுரை கூறுதல், இரு குடும்பத்து நடுவர்கள் மூலம் நல்லிணக்கத்துக்கு முயற்சி செய்தல் ஆகியவற்றைச் செய்த பிறகுதான் விவாகரத்து செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் ஒருவன் செய்தானா என்பதை அறிந்தவர் தான் சாட்சியாக இருக்க முடியும்.

இரு குடும்பத்துக்கும் நெருக்கமானவன் அல்லது இரு குடும்பத்துடனும் இது குறித்து பேசியவனுக்குத் தான் மேற்கண்ட நடைமுறைகளை அவன் செய்தானா என்பதை அறிய முடியும்.

மேலும் விவாகரத்துக்குப் பின்னர் மனைவிக்கு நியாயமான ஈட்டுத் தொகை வழங்கும் கடமை விவாகரத்துச் செய்தவனுக்கு உள்ளது. இதை இஸ்லாமிய அரசு அல்லது ஜமாஅத்துகள் தான் பெற்றுத் தர முடியும். எனவே ஜமாஅத்தார் முன்னிலையில் தான் இரு சாட்சிகள் சாட்சி சொல்ல வேண்டும்.

இதில் இருந்து தபால் மூலமோ, எஸ்.எம்.எஸ். மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ தலாக் சொல்லுதல் அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்குரியதாக்குவதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது குர்ஆனில் தலாக் சம்பந்தபட்ட விஷயங்களை கூறி விட்டு,  ‘‘அல்லாஹ்வின் வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கி விடாதீர்கள்  என்று சொல்கின்றான்.

அல்குர்ஆன் 2:231

மேற்கண்ட வகையில் தலாக் சொல்பவர்கள் மற்றும்  அது சரி என மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்கள் இதைவிட அல்லாஹ்வின் சட்டத்தை யாராவது கேலிக்குரியதாக்க முடியுமா?

தலாக்குக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை ஒருவன் கடைப்பிடித்தானா இல்லையா என்பதை அறியாமல் சாட்சி சொல்பவன் அநியாயத்துக்குத் தான் சாட்சி கூறுகிறான். எனவே இருவரின் பிரச்சினைகள் பற்றி அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.

ஒரு மகனுக்கு மட்டும் சொத்தைக் கொடுத்து மற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருந்த நபித்தோழர் ஒருவர், இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கியபோது நான் அநியாயத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். (பார்க்க : புகாரி 2650)

ஒரு ஆண் மார்க்கத்தின் நெறியைப் பேணாமல் தலாக் சொல்லும்போது அதற்குச் சாட்சியாக இருப்பதும் இது போன்றது தான்.

எனவே இந்த விதியைக் கவனத்தில் கொண்டால் அவசரப்பட்டுச் செய்யும் பல விவாகரத்துக்கள் தவிர்க்கப்படும்.

தலாக் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய இந்த நிபந்தனைகளை சமுதாய ஆலிம்கள் கடைப்பிடிக்காமல் போனதால் தான் இது உச்ச நீதிமன்றம் வரை போய் அல்லாஹ்வின் சட்டங்கள் பரிகசிப்படுவதற்கு வழி வகுத்து விட்டன.

நீதிபதிகளிடம் காவிச் சிந்தனை படிந்திருப்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் காவிச் சிந்தனையில்லாத, நடுநிலை உள்ள ஒரு நீதிபதி இதை அநியாயமாகத் தான் பார்ப்பார்.

அப்படி ஓர் அநியாயம் அல்லாஹ்வின் வேதத்திலோ அவனது தூதரிடத்திலோ இல்லை. ஆனால் இந்த ஆலிம்களாக உருவாக்கிக் கொண்ட மத்ஹபு சட்டங்களில் இருக்கின்றது.  இவர்கள் செய்யும் தவறுக்காக குர்ஆன் பரிகாசத்திற்குள்ளாகின்றது.


இனியாவது உலமாக்கள் திருந்துவார்களா?

EGATHUVAM NOV 2016