May 14, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 5 - சூபிஸத்தின் சுய வரலாறு

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 5 - சூபிஸத்தின் சுய வரலாறு

தொடர்: 5


மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது?

முதல் மூன்று நூற்றாண்டுகளில் சூபிஸம் என்ற வார்த்தை பிரபலமாகவே இல்லை என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள். இப்னு தைமிய்யாவிற்கு முன்பு இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கல்தான் ஆகியோரும் கூறியுள்ளனர்.

உலக வாழ்க்கையில் நாட்டம் கொள்ளாமல் மறுமை வாழ்க்கையை மையமாகக் கொண்டு வணக்கத்தில் திளைத்த ஏழை எளியவர்களாக நபித்தோழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் சூபிகள் என்று அவர்களில் யாருக்கும் பட்டம் சூட்டப்படவில்லை. எனவே இது ஆரம்ப காலத்தில் இல்லாத, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும். இப்படி ஒரு வாதத்தை சூபிஸ மறுப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

இதற்கு சூபிஸ ஆதரவாளரான சிராஜ் அத்தூஸி என்பவர் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.

நபித்தோழர்களுக்கு, "நபித்தோழமை' என்பதை விட வேறு எந்தப் பட்டமும் அவர்களுக்குப் பெரிது கிடையாது. அதுதான் அவர்களுக்கு மாபெரும் பட்டமும் பதவியுமாகும். இதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எந்தப் பட்டத்தையும் சூட்டக்கூடாது.

அவர்களில் உலக வாழ்வை மறந்து மறுமை வாழ்க்கையில் மூழ்கியவர்கள் இருந்தனர். அவர்களுக்குக் கிடைத்த அனைத்து அந்தஸ்தும் மரியாதையும் நபித்தோழமை என்ற பரக்கத்தின் மூலமே கிடைத்தது. அவர்களை நபித்தோழர்கள் என்ற வார்த்தையுடன் இணைக்கும் போது இவர்கள் அந்த வார்த்தையை விட வேறு வார்த்தையைத் தேர்வு செய்வது அசாத்தியமாகும்.

சூபிஸம் என்ற வார்த்தை பாக்தாதைச் சேர்ந்த சிலர் கண்டுபிடித்த புதிய வார்த்தை என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதமும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

காரணம் இந்த வார்த்தை ஹஸன் அல்பஸரீ காலத்திலேயே அறிமுகமாகியுள்ளது. ஹஸன் பஸரீ நபித்தோழர்களின் ஜமாஅத்தையே சந்தித்தவர்.

நான் தவாஃப் செய்யும் போது ஒரு சூபியைக் கண்டேன். அவருக்குப் பணம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து, "என்னிடம் ஆறில் ஒரு பகுதி நாணயம் உள்ளது. அது எனக்குப் போதும்' என்று கூறிவிட்டார்.

இவ்வாறு ஹஸன் பஸரீ கூறியதாக அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹாஷிம் என்ற சூபி இல்லையென்றால் மயிரிழை அளவிலான முகஸ்துதி எனும் ரியாவை நான் அறிந்திருக்க முடியாது என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ கூறியதாக அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

"இஸ்லாம் வருவதற்கு முன்னால் ஏதோ ஒரு நேரத்தில் கஅபாவை தவாஃப் செய்ய ஒருவர் கூட இல்லை என்ற ஒரு கட்டம் ஏற்படும் கட்டத்தில் தூரமான ஊரிலிருந்து சூபி ஒருவர் வந்து தவாஃப் செய்துவிட்டுத் திரும்புவார்'' என்று ஒரு சம்பவத்தை சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மக்கா சம்பவங்கள் என்ற நூலில் முஹம்மது பின் இஸ்ஹாக் மற்றும் சிலரிடமிருந்து அறிவித்துள்ளார்.

இது சரியான சம்பவம் என்றால் சூபி என்ற பெயர் இஸ்லாம் வருவதற்கு முன்னாலேயே அறிமுகமான வார்த்தை என்பதை விளங்கலாம். சீரும் சிறப்பும் உள்ளவர்கள் இந்தப் பெயருடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இது தான் சிராஜ் அத்தூஸி என்பவர் அளிக்கும் பதிலுரையாகும்.

இந்தப் பதிவுகள் அனைத்தும் சூபிஸம் என்ற வார்த்தை ஆரம்ப காலத்தில் இருந்தது என்பதற்கு ஒருபோதும் ஆதாரமாகாது. இஸ்லாத்தில் இணைந்தவர்கள் இந்த வார்த்தையை இறக்குமதி செய்த பின்னர் தான் முஸ்லிம்களிடம் இது அரங்கேறி விட்டது.

அல்ஜரஹ் வத்தஃதீல் - அறிவிப்பாளர்களின் குறை நிறை என்ற நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இந்த நூல்கள் நல்லவர்களை, கெட்டவர்களை அலசி, உரசிப் பார்க்கின்ற ஆய்வு நூல்களாகும். அவர்களை எடைபோட்டுப் பார்க்கின்ற நூற்களாகும். இந்நூல்களில் நல்லவர்களை எடைபோடுவதற்குச் சில வார்த்தைகளையும் கெட்டவர்களை எடைபோடுவதற்குச் சில வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த சூபி என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இல்லாத வார்த்தை என்பதற்குப் போதிய சான்றாகும்.

இரண்டாவது ஆய்வு

சூபிஸம் என்ற இந்தச் சரக்கின் அடிப்படையும் மூலமும் முன்சென்ற திரிக்கப்பட்ட மார்க்கங்களிலிருந்தும் தகர்க்கப்பட்ட பழைய சித்தாந்தங்களிலிருந்தும் எடுக்கப்பட்டது தான். இதை இஹ்யா உலூமித்தீன் மற்றும் இதர நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுகின்ற செய்திகள் மூலம் பின்னர் தெளிவாக விளக்குவோம். அப்போது, கஸ்ஸாலி அவர்கள் இஹ்யாவில் நிரப்பி வைத்திருக்கின்ற முடை நாற்றமெடுக்கும் மூல ஆதாரங்களை, மாய்மாலங்களை அடையாளம் காட்டுவோம்.

கிறித்துவத்தின் சூபிஸ வழிகேடு வெட்ட வெளிச்சமானது. யூதத்தின் சூபிஸ வழிகேடும் நன்கு தெளிவானது. புத்த மதத்தின் சூபிஸச் சிந்தனையும் பட்டவர்த்தனமானது. பிளேட்டோவின் சூபிஸ விஷமும் பகிரங்கமானது.

ஷியா கொள்கையை எடுத்துக் கொண்டால் அதன் முதுகெலும்பும் அதன் உடம்பில் ஓடுகின்ற உதிரமும் வழிகேடான சூபிஸ சிந்தனை தான்.

சூபிஸத்தைப் படித்து, ஆழ்ந்து சிந்தனை செய்யக்கூடிய ஒவ்வொருவரும் அதன் வேர்களும் கிளைகளும் இலைகளும் அனைத்துமே ஷியாயிஸம் என்பதைத் தெரிவாகப் புரிந்து கொள்வார். இதன் அத்தனை தன்மைகளையும் நன்கு விளங்கிக் கொள்வார். இந்தத் தொடரிலும் அந்தந்த இடங்களில் பொருத்தமாக நாம் சுட்டிக் காட்டும் போது மிகத் தெளிவாக விளங்கும்.

இஸ்லாம் என்றால் அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழிகாட்டலும் மட்டும் தான்.

அந்தத் தூய மார்க்கம் இந்த அந்நிய இறக்குமதிகளை ஒருபோதும் அனுமதிக்காது; ஆதரிக்காது. ஏனெனில் அவ்வாறு அந்த இறக்குமதிகளை உள்வாங்க ஆரம்பித்தால் இஸ்லாத்தின் தூய பாதைக்கு நேர் எதிரான பாதையில் பயணிக்க வைத்துவிடும்.

இஸ்லாத்தைப் படித்துப் பாதுகாத்தவர்கள், நபி (ஸல்) அவர்களின் செயல்திட்ட வரலாற்றையும் நபிவழி நடந்த தோழர்கள், நல்லவர்களின் வரலாற்றையும் புரட்டுபவர்கள் யாருமே உருப்படாத, ஒன்றுக்கும் உதவாத இந்தச் சித்தாந்தங்களின் பக்கம் அறவே திரும்பிப் பார்க்க மாட்டார்.

மூன்றாவது ஆய்வு

வரலாற்று நெடுகப் பார்த்தோமென்றால் சூபிஸம் என்பது முஸ்லிம்களுக்கு ஒரு சோதனையாகவே அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது முஸ்லிம்களுடைய ஒற்றுமையைக் குலைத்துள்ளது. அவர்களது ஒருங்கிணைப்பை உடைத்திருக்கின்றது. அவர்களது புகழை மங்கச் செய்திருக்கின்றது.

இஸ்லாத்தின் மிக உயர்தரமான, உன்னதமான கடமை ஜிஹாத் என்ற அறப்போராகும். தான் திரட்டி வைத்த அனைத்து சக்திகள் மூலம் தன்னை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தலே ஜிஹாத் ஆகும். இந்த அறப்போரை விட்டும் முஸ்லிம்களை அப்புறப்படுத்தி அவர்களை ஒரு மூலையில் முடக்கி, முடமாக்கிப் போட்டு விட்டது. (ஜிஹாத் என்பது தீய சக்திகளுக்கு எதிராக ஒரு நல்ல அரசாங்கம் நடத்தும் புனிதப்போராகும். தனிநபர்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் அல்ல.)

அறப்போருக்கு அடுத்தபடியாக, நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் எனும் பணி.

இந்தப் பணியை ஆற்றுவதை விட்டு முஸ்லிம்களை செயலிழக்க வைத்தது சூபிஸம் என்ற விஷச் சிந்தனை!

ஒதுங்கி இரு! ஓரத்தில் ஒடுங்கி இரு! தனித்திரு! தாகித்திரு! பசித்திரு! பட்டினியாயிரு! தள்ளியிரு! தவமிரு என்ற மந்திரங்களைச் சொல்லி, செயல்திறன்மிக்க, வீரமிக்க ஒரு முஸ்லிமைச் செத்த பிணமாக்கியது இந்த சூபிஸச் சிந்தனை தான். இவற்றையும் ஆங்காங்கே உதாரணங்களுடன் நாம் விளக்குவோம்.

முஸ்லிம்களின் அறிவையும், அவர்களது மார்க்கத்தையும் பறித்து, ஆதாரமோ அடிப்படையோ இல்லாத கற்பனைகளிலும் கனவுகளிலும் போதையுண்டவர்களைப் போன்று மிதக்க வைத்து விட்டது இந்தச் சூபிஸம்.

ஒரு சூபிஸவாதியின் ஒட்டுமொத்த சித்தனையுமே தொழுகை, நோன்பு, ஹலால், ஹராம் போன்ற ஷரீஅத் சட்டங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்து, மோ(ட்)ச நிலையை அடைவதாகும்.

நான்காவது ஆய்வு

அதிகமான எழுத்தாளர்கள் கஸ்ஸாலியின் ஆக்கத்தைப் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் எழுதித் தள்ளியிருக்கின்றனர். அவர்களில் முஸ்லிம்களும் கிழக்கத்தியர்களும் அடங்குவர். ஒவ்வொருவரும் தங்கள் கண்களில் என்னென்ன கண்ணாடியை அணிந்தார்களோ அந்தக் கண்ணாடிக்குத் தக்க அவர்கள் கஸ்ஸாலியைப் பார்த்தனர்.

தத்துவவியலாளர்கள் கஸ்ஸாலியை தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தனர். கடவுள் கோட்பாட்டாளர்கள் தனது கோட்பாட்டின் அடிப்படையில் அவரைப் பார்த்தனர். சூபிகள் அவரை சூபிஸம் அடிப்படையில் பார்த்தனர். கஸ்ஸாலியோ சூபிகளின் ஆசானாகத் திகழ்ந்தார். அவர் தான் சூபிஸப் பாதைக்கு அடித்தளம் அமைத்த ஆசான்.

கஸ்ஸாலியை குர்ஆன், ஹதீஸ் என்ற கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தவர்களும் உண்டு. அவர்களது பார்வையில் முன்னோர்களின் சரியான நிலைப்பாட்டை என்னால் காண முடிந்தது. அவர்களில் ஹாபிழ் தஹபியும் ஒருவராவார். அவரது கருத்தை இன்ஷா அல்லாஹ் இதில் கொண்டுவர இருக்கின்றேன்.

அபூஹாமித் அல்கஸ்ஸாலியும் சூபிஸமும் என்ற தலைப்பில் டமாஸ்கஸைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் என்பவர் ஓர் அற்புதமான ஆய்வு நூலை ஆக்கம் செய்திருக்கின்றார். அது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் கஸ்ஸாலியின் நூற்களை ஆய்வு செய்து, அதில் மலையளவுக்குக் கொட்டிக் கிடக்கின்ற கொள்கை ரீதியிலான தவறுகளை முஸ்லிம்களிடம் எடுத்துரைப்பது அதற்கான திறமை படைத்த ஒவ்வொரு சிந்தனையாளர் மீதும் கடமையாகும்.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:159

வேதத்தில் உள்ள செய்திகளை மறைப்பவர்களை, இருட்டடிப்பு செய்பவர்களை சாபத்திற்குரியவர்கள் என்று இறைவன் இந்த வசனத்தில் சாடியுள்ளான். அதனால் இதற்கு ஆற்றல் படைத்த அறிஞர்கள் இந்தச் சாபத்தின் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக் காட்டி, "இதன் மீது வாளை வைத்து, நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்லக் கூடாது என்று தடுத்தாலும் அதனை நான் சொல்லியே தீருவேன்'' என்று கூறினார்கள்.

நூல்: தாரமீ 544

கழுத்துக்கே கத்தி வந்தாலும் காரணங்கள் எதுவாக இருந்தாலும் சத்தியத்தை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதில் முன்னோர்களான நபித்தோழர்கள் முன்னுதாரணங்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதையே இது நமக்கு உணர்த்துகின்றது.


சத்தியத்தை இப்படித் துணிச்சலாக மக்களிடம் சமர்ப்பிப்பதில் அவர்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, அவர்களிடமிருந்து நாம் பாடம் பயில வேண்டும். எழுத்து, சொல் வடிவத்தில் செவிக்கு வந்த, கண்ணில் பட்ட எந்த அசத்தியத்தையும் மக்களிடம் சொல்லாமல் நாம் ஊமைகளாக ஆகிவிடக் கூடாது.

EGATHUVAM DEC 2013