May 14, 2017

குடும்பவியல் தொடர்: 8 - நெருங்காதீர்!

குடும்பவியல் தொடர்: 8 - நெருங்காதீர்!

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு நெருங்கிய குற்றத்தில் வரும்.

சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற அந்தரங்கத்தைக் காட்சியாக்குகிறார்கள். பாடல்களும் அருவருக்கத்தக்க வகையில் தான் இருக்கின்றன. இதைப் பார்த்து ரசித்தால் விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியைத் தாண்டிவிட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது? என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிடுவது தான்.

முதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன? என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட ஒருவகையான மனோதத்துவ இயல் தான்.

இன்றைய சூழ்நிலையில் சமூகம் கெட்டு, குட்டிச் சுவராகப் போனதற்குக் காரணம், விபச்சாரத்தின் அனைத்து வாசல்களையும் திறந்து வைத்து விட்டு, விபச்சாரம் செய்யாதே என்று கூறுவது தான்.

இஸ்லாம் ஒன்று மட்டும் தான் "அதன் அருகில் கூடச் சென்று விடாதே!' என்று கூறுகிறது. விபச்சாரத்தைச் செய்யாதே என்று கூறுவதால் மட்டும் பயனில்லை. ஏனெனில் விபச்சாரத்திற்குரிய காரண காரியங்களை நெருங்கிவிட்டால் அதைச் செய்துவிடுவாய் என்று கூறும் மார்க்கம் இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் ஒன்று தான் இருக்கமுடியும்.

இன்று இவ்வுலகில் நடக்கிற எல்லாவிதமான கேடுகளுக்கும் காரணம், விபச்சாரத்திற்குத் தூண்டுகின்ற ஆபாசப் படங்களையும் காட்சிகளையும் பாடல்களையும் பார்ப்பது தான். இதையும் அம்மா, அப்பா, பிள்ளைகள் என குடும்ப சகிதம் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும் அளவுக்கு நமது மனநிலை மாறியிருப்பது தான் காரணம்.

இரட்டை அர்த்தம் தருகிற பாடல்களைக் கேட்கிறோம். அதில் வரும் உடல் சேட்டைகளைப் பார்த்து ரசிக்கிறோம். இதில் எந்தவிதமான வெறுப்பும் நமக்கு வராமல் இருக்கிறது. இந்தக் காட்சியில் காட்டுவதை நமது பிள்ளைகள் செய்தால் ஒத்துக் கொள்வோமா? இந்த மாதிரி நமது தங்கையோ தம்பியோ அந்நியர்களுடன் ஆட்டம் போட்டால் ஒத்துக் கொள்வோமா? எதை நாம் நடைமுறையில் அருவருக்கத்தக்கதாக நம் ஆள்மனது நம்புகிறதோ, எண்ணுகிறதோ அதை நாம் செய்யவில்லை. ஆனால் நெருங்கிவிட்டோம். அதைப் பார்க்கிற போது நமக்கு வெட்கம், ரோஷம் வரவேண்டும். ஆனால் நம்மிடம் அது இல்லாத அளவுக்கு மாற்றியிருப்பது இந்தக் காட்சிகள் தான் என்பதை நாம் முதலில் புரிய வேண்டும். அதனால் தான் அல்லாஹ், "அதன் அருகில் கூட நெருங்காதீர்கள்' என்று கூறுகிறான்.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.  (அல்குர்ஆன் 17:32)

விபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.

கணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால் சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ, பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி கடைசியில் எதை விபச்சாரம் என்று அல்லாஹ் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும் விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.

அதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே! அப்படி நெருங்குவது அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

"வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!   

(அல்குர்ஆன் 7:33)

இந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப் பேசிவிட்டு, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர். விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லை தான். விபச்சாரத்திற்கு நெருங்கி விட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

(அல்குர்ஆன் 25:68)

ஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.

ஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும் நமக்கு எச்சரித்துள்ளார்கள். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் தமக்கு ஏற்பட்ட ஒரு கனவின் மூலம் நமக்கு விளக்குகிறார்கள். நபிமார்கள் கனவு காண்பது இறைவன் புறத்திலிருந்து வருகிற வஹியாகும். நபிமார்களல்லாத நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் காணும் கனவுகள் பெரும்பாலானவை பொய்யாகவும் கற்பனையாகவும்தான் இருக்கும். அதைப் பெரிதுபடுத்தவே கூடாது. நபிமார்களின் கனவில் ஷைத்தான் குறுக்கிட இயலாது. ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் நபிமார்களைப் பாதுகாப்பான். அதனால்தான் இப்ராஹீம் நபியவர்கள் கனவில் தனது மகன் இஸ்மாயீல் அவர்களை அறுப்பதாகக் கண்டதைச் செயல்படுத்தினார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.

(அல்குர்ஆன் 37:102)

நேற்றிரவு கனவு கண்டீர்களா? என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்கிறார்கள். நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள் நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரிக்கிறார்கள். அந்தக் காட்சியில் நமக்குரிய ஆதாரம் இருக்கின்றது.

...அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் "இவர்கள் யார்?' எனக் கேட்டேன்..... "அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்'' என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1386

இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும் பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.

சட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள் பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும். அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும் நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம் கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை வர்ணிக்கிறார்கள்.

ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறப்புத் தண்டனை தான் வேக வைக்கும் தண்டனையாகும். இதைத்தான் அல்லாஹ் மேற்சொன்ன வசனத்தில் கடும் தண்டனை என எச்சரிக்கிறான்.

எனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள். அதனால் இந்தச் சமூகமும் தழைத்தோங்கும். இல்லற வாழ்க்கையிலிருந்து தடுமாறி ஒழுக்கக் கேட்டிற்குச் செல்வதுதான் இன்று குடும்ப வாழ்க்கை கசப்பாவதற்குக் காரணமாகி விடுகின்றது.

முஸ்லிம்களாகிய நம் அனைவரின் ஆசை, நம்பிக்கை எல்லாம் மறுமை வாழ்க்கையில் சுவனத்தை அடைய வேண்டும் என்பது தான். அதற்கு இவ்வுலகில் வாழும் போது பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இருந்தாலும் இரண்டு காரியங்களுக்குப் பொறுப்பேற்கும் மனிதர்களுக்கு சொர்க்கம் கிடைக்க அல்லாஹ்வின் தூதர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ôன நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அüக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அüக்கிறேன்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ர-), நூல்: புகாரி 6474, 6807

நாக்கை ஒரு மனிதன் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். நாக்கினால் தான் எல்லா பிரச்சனைகளுமே உருவாகிறது. அதற்காக ஊமையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. அதாவது நாக்கை அல்லாஹ் அனுமதித்த அனைத்து நல்லவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ் தடுத்திருக்கிற காரியங்களுக்கு இந்த நாக்கைப் பயன்படுத்தக் கூடாது. பொய் பேசாமல், அவதூறு கூறாமல், பிறரைப் பழித்துவிடாமல், சபிக்காமல், கோள் சொல்லாமல், ஆபாசமான பேச்சுக்களைப் பேசாமல் நாவைப் பேணவேண்டும்.

அதே போன்று ஆண்களும் பெண்களும் தங்களது கற்புகளைப் பேணிக் காப்பாற்றினால் அவர்களின் சுவனத்திற்கு நபிகளார் பொறுப்பாளார் ஆவார்கள். இந்தப் பொறுப்பை நபிகள் நாயகமாக, சொந்தமாகச் சொல்லவே இயலாது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹியின் மூலம் தான் நபிகளார் இப்படிச் சொல்லவே முடியும்.

எனவே நபிகள் நாயகம் சுவனத்திற்குப் பொறுப்பாளர் என்றால் அல்லாஹ் தான் பொறுப்பு என்று விளங்க வேண்டும். அல்லாஹ் சொல்லாமல் நபிகள் நாயகத்தினால் சுயமாக இப்படிச் சொல்லவே முடியாது என்பதையும் சேர்த்தே விளங்க வேண்டும்.

அதுபோக இந்த ஒழுக்கக்கேடான விஷயங்களில் இன்னும் சில அடிப்படையான செய்திகளைத் தெரிய வேண்டும். பொதுவாக எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு வகையில் ஒழுக்கக்கேட்டை செய்பவர்களாகத் தான் இருப்பார்கள் என இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது. அதாவது ஒவ்வொரு மனிதனும் விபச்சாரத்தின் ஒரு பங்கை எப்படியாவது செய்துவிடுவான். எப்படியெனில் ஒழுக்கங்கெட்டதைத் தன் பார்வையின் மூலம் பார்க்கும் போது கண்ணினால் ஒருவன் விபச்சாரம் செய்கிறான் என்று அர்த்தம். விபச்சாரத்திற்குரிய செய்தியைக் காது மூலமாக ஒருவன் கேட்டால் அதனைச் செய்த பங்கு அவனுக்கு உண்டு. இந்தக் கருத்தில் தான் நபியவர்கள் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி 6243, 6612, முஸ்லிம் 5164, 5165

மனிதன் எப்படியாவது ஒரு தடவையாவது விபச்சாரத்தின் பங்கில் விழுந்துவிடுவான். கண்டிப்பாக இது நடந்தே தீரும் என்கிறார்கள். உதாரணத்திற்கு ஒருவன் நான் எந்தப் பெண்ணையும் பார்த்ததே இல்லை என்று சொன்னால் நிச்சயமாக அது பொய்யாகத் தான் இருக்க முடியும். அல்லாஹ் விதியாக்கி விட்டான் என்ற பிறகு ஒருவன், நான் அப்படி இல்லை என்று சொல்லவே முடியாது.

ஒருவர் தவறான போஸ்டரைப் பார்த்தாலோ அல்லது ஒரு மாதிரியான பெண்ணைப் பார்த்தாலோ மனதில் இதுபோன்ற சலனங்கள் வரத்தான் செய்யும்.

இவ்வளவு ஏன்? யூசுஃப் நபியின் நிலைமை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யூசுஃப் நபியவர்களுக்கும் கூட இலேசான சலனம் ஏற்பட்டுவிட்டதாகத் தான் அல்லாஹ் நமக்குச் சொல்கிறான்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

(அல்குர்ஆன் 12:24)

அந்தப் பெண் யூசுஃப் நபியை அழைத்த போது அவரும் ஆணாக இருப்பதால் அவரது மனதிலும் சிறிய அளவிலான ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் இறைவனின் அத்தாட்சியைப் பார்த்திருக்காவிட்டால் அவரும் அந்த கெட்ட செயலில் விழுந்திருப்பார் என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அப்படியெனில் யூசுஃப் நபியவர்களுக்கும் இதில் ஒரு எண்ணம் வரத்தான் செய்திருக்கிறது.

இது எல்லா மனிதர்களுக்கும் வந்தே தீரும் என்பதைத் தான் நபியவர்கள் விபச்சாரத்தின் ஒரு பங்கை ஆதமின் மகன் அடைந்தே தீருவான் என்று பிரகடணப்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற எண்ணமே வராமல் நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. இப்படி எண்ணம் வந்தால் அதை முறியடித்து அதைச் செயல்படுத்தாமல் இருப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

நமது மறுமை வெற்றியைப் பாழாக்கிவிடாமல் இவ்வுலகில் நாம் கவனத்துடன் வாழ்வதற்குத் தான் இவற்றை நாம் கூறுகிறோம்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM DEC 2013