சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் 5 - புகாரியில் பதிவாகியுள்ள ஒரு பொய்ச் செய்தி!
தொடர் - 5
எம்.எஸ். செய்யது இப்ராஹீம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும்
வகையிலும்,
அவர்கள் மீது அவதூறுகளைச் சுமத்தும் வகையிலும், திருக்குர்ஆனில் அண்ணலார் குறித்து வல்ல இறைவன் சிலாகித்துக்
கூறியுள்ள சிறப்பம்சங்களைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் ஒரு சில செய்திகள் சரியான
அறிவிப்பாளர் வரிசையுடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல நூற்களில்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுக்கதைகள் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு முரணாக அமைந்துள்ளதால்
அவற்றுக்கும் அண்ணலாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறி நாம் அவற்றை மறுக்கின்றோம்.
இந்த இடத்தில் மீண்டும் ஒன்றை நாம் நினைவூட்டிக் கொள்கின்றோம்; அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று சொல்லப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு
முரண்படுவதால் இத்தகைய செய்திகள் கட்டுக்கதைகள் என்பதுதான் நமது நிலைப்பாடு.
அண்ணலார் கூறிய செய்திகளை நாம் மறுக்கவில்லை; இந்தக் கட்டுக்கதைகளை அண்ணலார் கூறவே இல்லை என்றுதான் மறுக்கின்றோம்.
இப்போது இத்தகைய செய்திகள் குறித்து நாம் வைத்த வாதங்களையும், அதற்கு பரலேவி மதத்தினர் எடுத்து வைத்த மறுப்பையும், அதற்கு நாம் எழுப்பிய எதிர்க் கேள்விகளையும் இங்கே காண்போம்.
‘புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் ஒரு செய்தி ஆதாரப்பூர்வமானதாகப்
பதிவு செய்யப்பட்டிருக்குமேயானால் அது 100 சதவீதம் உண்மையானது; அதில் எவ்வித சந்தேகமும் இல்லை; அதை மறுக்கக்கூடாது; அதை அப்படியே
நம்ப வேண்டும்’ என்பதுதான்
தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பவர்களின் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாடு எவ்வளவு தவறானது என்பதை விளங்க வைப்பதற்காக
கோவை விவாதத்தில் பரலேவி மதத்தினரை நோக்கி புகாரி என்ற ஹதீஸ் கிரந்தத்தில் இருக்கும்
ஒரு செய்தியை எடுத்துக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது.
புகாரியில் 3849வது செய்தியாக
பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செய்தியை முன்வைத்து இந்தச் செய்தியை ஆதாரப்பூர்வமான செய்தியாக
நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம்.
இது ஆதாரப்பூர்வமான செய்தியே அல்ல; ஆதாரப்பூர்வமான செய்தி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுக்கதை
தான் என்பது இந்தச் செய்தியைப் படிக்கும் எவருக்கும் இலகுவாகத் தெரியும். முதலில் அந்தச்
செய்தியைப் படியுங்கள்:
விபச்சாரம் செய்த பெண் குரங்குக்கு கல்லெறி தண்டனை(?)
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள்
பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து
கொண்டு கல்லெறிந்தேன்.
அறிவிப்பவர்: அம்ர் பின் மைமூன்
நூல்: புகாரி 3849
புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி குறித்து விவாதத்தின்
போது கேள்வி எழுப்பினோம்.
குரங்குகள் விபச்சாரம் செய்யுமா?
ஒரு குரங்கு விபச்சாரம் செய்ததா இல்லையா என்பதை எப்படிக் கண்டு
பிடிப்பது?
விபச்சாரம் செய்த ஒரு குரங்கைக் கண்டுபிடிப்பதாக இருந்தால் அந்தக்
குரங்கின் கணவன் குரங்கு எது என்பதையும், அந்தப் பெண்
குரங்கிற்கு அந்நியக் குரங்கு எது என்பதையும் எப்படிக் கண்டறிவது?
திருமணம் முடித்த நபர்கள் விபச்சாரம் செய்தால் தான் விபச்சாரத்திற்குக்
கல்லெறி தண்டனை கொடுக்கப்படுவது மார்க்கக் கட்டளை!
அப்படியானால் விபச்சாரம் செய்த அந்தப் பெண் குரங்கு திருமணம்
முடித்த குரங்கு என்பதை யார், எப்படி உறுதி செய்தார்கள்?
குரங்குகளுக்கு மத்தியில் திருமண பந்தம் உள்ளதா?
அந்த குரங்குகள் விபச்சாரம் செய்ததை உறுதி செய்ய நான்கு சாட்சி
குரங்குகள் வரவேண்டுமல்லவா? அந்த நான்கு சாட்சியம் கூறிய
குரங்குகள் வந்து யாரிடம் சாட்சி கூறின?
இதுபோன்ற சட்டதிட்டங்கள் எல்லாமே மனிதர்களுக்குத்தானே அல்லாஹ்
வழங்கியுள்ளான்?
அதை குரங்குகளுக்கு பொருத்திப் பார்த்து குரங்குகளுக்கு தண்டனை
வழங்கியது யார்?
ஆதாரப்பூர்வமான செய்தியாக புகாரி என்ற தனது ஹதீஸ் கிரந்தத்தில்
புகாரி இமாம் பதிவு செய்துள்ளார்களே! அப்படியானால் குரங்கு விபச்சாரம் செய்ததாக வரும்
செய்தியை புகாரி இமாம் அவர்கள் நம்பித்தான் பதிவு செய்தார்களா?
விபச்சாரம் புரியும் குரங்குகளையெல்லாம் கல்லால் எறிந்து கொல்ல
வேண்டும் என்பதுதான் புகாரி இமாமின் கொள்கை என்று சொல்லப் போகின்றீர்களா?
என்ற சராமரியான கேள்விகளால் கப்ரு வணங்கிகளின் விழி பிதுங்கியது.
புகாரி இமாம் ஆதாரப்பூர்வமான செய்தியாகப் பதிவு செய்துள்ள இந்தச்
செய்தி கட்டுக்கதை தான் என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
இதுபோலத்தான் திருக்குர்ஆனுக்கு முரண்படும் வகையில் அமைந்த சில
செய்திகளை,
தனக்குக் கிடைத்த தகவலின்படி ஆதாரப்பூர்வமான செய்தியாக புகாரி
இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். புகாரி இமாம் பதிவு செய்ததாலேயே அது ஆதாரப்பூர்வமான
செய்தி அல்ல என்பதை விளக்கி கேள்வி எழுப்பினோம்.
கடைசி வரை வாய்திறக்காத கப்ரு வணங்கிகள்
கப்ரு வணங்கிகளான பரலேவிகள் கடைசி வரைக்கும் குரங்கு குறித்த
செய்திக்கு வாய் திறக்கவே இல்லை. இந்தச் செய்திக்கு நாங்கள் பிறகு பதில் சொல்லுவோம்; ஒவ்வொன்றாகப் பதில் சொல்லுவோம் என்றெல்லாம் பில்டப் கொடுத்த
பரலேவிக் கூட்டம் கடைசி வரைக்கும் மூச்சுவிடவில்லை.
விவாதம் நிறைவடையப் போகும் கடைசி அமர்விற்கு முந்திய அமர்விலும்
கூட இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் கூட அதற்குப் பதிலளிக்கவில்லை.
இதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த வாதம் 100 சதவீதம் சரியானது என்பதை பரலேவிக் கூட்டமே தங்களது அசாத்திய
மௌனத்தின் வாயிலாக ஒப்புக்கொண்டு விட்டனர். உதாரணத்திற்குத் தான் இந்த ஒரு செய்தி.
இதுபோல பல செய்திகள் திருக்குர்ஆன் கூறும் உண்மைகளுக்கு முரணாகவும், திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு எதிரானதாகவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தையும், ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது.
அந்த கட்டுக்கதைகளைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கின்றது.
அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வந்துள்ள ஒரு
செய்திதான் உம்மு ஹராம் (ரலி) என்ற அந்நியப் பெண்ணோடு நபிகளார் தனித்திருந்தார்கள்; அந்தப் பெண்மணி நபிகளாருக்கு பேன் பார்த்து விட்டார்கள் என்று
வரும் செய்தி.
இந்தக் கட்டுக்கதை குறித்து விவாதத்தின் போது நாம் எடுத்து வைத்த
வாதங்களையும்,
அதற்கு பரலேவி மதத்தினரின் உளறல்களையும் அடுத்த இதழில் காண்போம்.
குறிப்பு: புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள, குரங்கு விபச்சாரம் செய்தது குறித்த சம்பவத்தை உண்மையென்று நீங்கள்
நம்புகின்றீர்களா? இது இட்டுக் கட்டப்பட்ட செய்தி
தானே என்று நமது சகோதரர்கள் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது சலஃபுக் கும்பலைச்
சேர்ந்த ஒரு சலபியிடம் இதே கேள்வியை கேட்டார்கள்.
அதற்குப் பதிலளித்த அந்தக் கள்ள சலஃபு ஆலிம், ‘ஆமாம்! குரங்குகள் அதிகம் ரோஷம் உடையவை; அதனால் தான் கணவன் அல்லாத வேறு குரங்கோடு இணைந்ததற்காக அந்த
மனைவி குரங்கை மற்ற குரங்குகள் கல்லால் எறிந்து கொலை செய்துள்ளன’ என்று அதி அற்புதமான(?) விளக்கமொன்றை அளித்தாரே பார்க்கலாம்.
கட்டுக்கதைகளை உண்மை என்று மக்களை நம்ப வைப்பதற்கு இவர்கள் எத்தகைய
பொய்களையும் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று!
இதுபோல கேவலமான விளக்கம் சொல்லி மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்
தான் பரலேவி மதத்தினர் இந்தக் குரங்கு செய்தி பற்றி கடைசி வரைக்கும் வாய் திறக்காமல்
ஓட்டம் பிடித்திருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாமலில்லை.
EGATHUVAM DEC 2016