மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் - ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா?
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக
இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது
கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.
ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள்
பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.
ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா?
ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது தொடர்பாக, இலந்தை இலை கலந்த தண்ணீரால் அல்லது கற்பூரம் கலந்த தண்ணீரால்
மூன்று அல்லது ஐந்து அல்லது தேவைக்கேற்ப குளிப்பாட்ட வேண்டும் என ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகள் தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்துவிட்ட போது எங்களிடம்
வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள்.
நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத்
தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: முஸ்லிம் 1253
இதிலும் ஹிதாயா நூலாசிரியர் வழக்கம் போல தம் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்.
தண்ணீரின் தன்மையைப் பற்றி அலசும் வேளையில் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது பற்றி இப்படி
குறிப்பிடுகிறார்.
لِأَنَّ الْمَيِّتَ قَدْ
يُغْسَلُ بِالْمَاءِ الَّذِي أُغْلِيَ بِالسِّدْرِ ، بِذَلِكَ وَرَدَتْ السُّنَّةُ
،
இறந்து போனவர் சில வேளை இலந்தை இலை கலந்து கொதிக்க வைக்கப்பட்ட
நீரால் குளிப்பாட்டபடுவார். இவ்வாறு நபிமொழி வந்துள்ளது.
ஹிதாயா, பாகம் 1. பக்கம் 18
தண்ணீரில் இலந்தையிலை கலந்து குளிப்பாட்ட வேண்டும் என்பது ஹதீஸில்
உள்ளது. அந்நீர் கொதிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இவர் கூறுவதை போன்று எந்த
நபிமொழியும் இல்லை. இது ஹதீஸின் பெயரில் சொல்லப்பட்ட இவரின் சொந்த கைச்சரக்காகும்.
ஜனாஸாவைக் குளிப்பாட்டும் நீர் கொதிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும்
என்று எந்த ஹதீஸும் இல்லாத நிலையில் இது நபி மீது இட்டுக் கட்டப்பட்டுள்ளது என்பது
தெளிவு.
ஆயிஷா (ரலி) அவர்களின் செயலை நபியின் சொல்லாக்கிய ஹிதாயா
இதுவரை நாம் பட்டியிலிட்ட செய்திகளை வாசித்த வாசகர்களுக்கு ஒரு
விஷயம் நன்றாகப் புரிந்திருக்கும்.
ஹிதாயா நூலாசிரியருக்கு நிதானம் என்பது கொஞ்சங் கூட இல்லை. பொய்யான
செய்திகளை நபியின் பெயரில் சொல்வது மட்டுமின்றி
இருக்கும் ஹதீஸ்களைக் கூட ஒழுங்காகக் கவனிக்காமல் முன் பின் மாற்றி, இல்லாதததை ஹதீஸில் செறுகி சொல்லிவிடும் இவரது தொடர் வழக்கத்திலிருந்து
இந்தப் புரிதல் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.
இதோ மேற்கண்ட புரிதலை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியை பாருங்கள்.
விந்து அசுத்தமானது; ஈரமாக இருந்தால்
அதைக் கழுவ வேண்டும்; காய்ந்து விட்டால் அதைச் சுரண்டி
விட்டாலே போதுமானது என்று சட்டம் சொல்லி விட்டு வழக்கம் போல் ஆதாரம் காட்டும் இடத்தில்
கோட்டை விட்டு விடுகிறார்.
لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ
وَالسَّلَامُ لِعَائِشَةَ { فَاغْسِلِيهِ إنْ كَانَ رَطْبًا وَافْرُكِيهِ إنْ كَانَ
يَابِسًا }
நபிகள் நாயகம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அது ஈரமாக இருந்தால் கழுவி
விடு, காய்ந்து விட்டால் அதை சுரண்டி எடுத்து விடு என்று கூறியுள்ளார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 35
நபிகளார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இவ்வாறு சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட
செய்தி கூட இல்லை. இவர்களின் வகையறாக்கள் இட்டுக் கட்டியிருந்தாலே தவிர.
மாறாக ஆயிஷா (ரலி) அவர்களின் செயலாகவே உள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக்
கழுவுவேன். (அந்த ஆடையோடு) நபி (ஸல்) அவர்கள் தொழச் செல்வார்கள். அவர்களின் ஆடையில்
ஈரம் அப்படியே இருக்கும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 229
அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்)
தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், “அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும்.
அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக!
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன்.
அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 485
ஆயிஷா (ரலி) அவர்களின் செயலாகப் பதிவு செய்யப்பட்ட ஒன்றை நபிகள்
நாயகம் தான் ஆயிஷா அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் அப்படி ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதைப்
போன்று கூறும் இவரிடத்தில் நிதானம் கொஞ்சங் கூட இல்லை என நினைப்போரை குறை சொல்ல முடியாது
தானே!
அடிவானம் கறுத்துப் போகும் வரை...
قَوْلُهُ عَلَيْهِ الصَّلَاةُ
وَالسَّلَامُ { وَآخِرُ وَقْتِ الْمَغْرِبِ إذَا اسْوَدَّ الْأُفُقُ }
மக்ரிப் தொழுகையின் இறுதி நேரம் அடிவானம் கறுத்து போகும் வரையிலும்
உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 39
ஆடையில் பட்ட இந்திரியம் தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்களின் செயலை
நபிகள் நாயகம் ஆயிஷா (ரலி)க்கு கட்டளையிட்டதாகக் கூறியதன் மூலம் நடக்காத ஒரு சம்பவத்தை
நடந்ததை போன்று கற்பனை செய்து பதிவிட்ட ஒரு செய்தியை சற்று முன் பார்த்தோம் அல்லவா?
அதே பாணியில் அமைந்த நூலாசிரியரின் மற்றுமொரு கற்பனை இது.
அடிவானம் கறுத்துப் போகும் வேளையில் நபிகளார் இஷா தொழுவார்கள்
என்று அபூதாவூதில் 333 ஹதீஸ் உள்ளது.
இதையே கொஞ்சம் - அதிகமாகவே உல்டா செய்து நபிகள் நாயகம் சொன்னதாக
நபி பெயரில் மேற்கண்டவாறு புனைகிறார்.
இப்படி நபிகளார் சொன்னார்கள் என்பதற்குரிய ஆதாரத்தை மத்ஹபின்
காவலர்கள் எடுத்துரைப்பார்களா?
இது போன்ற புனைதல் ஏராளமாக ஹிதாயாவில் உள்ளதால் இனி அதன் நூலாசிரியர்
- முனைவர் என்றல்ல - பூமி போற்றும் புனைவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுவார்.
பெயரை மாற்றிய நூலாசிரியர்
கருத்தாகச் சொல்லப்பட்டதை சம்பவம் நடைபெற்றதாக மாற்றிச் சொல்வது, அறவே நடைபெறாததை நடைபெற்றதாக அவிழ்த்து விடுவது இது போன்றவகளை
மிகச் சாதாரணமாக நூலாசிரியர் செய்கிறார்.
ஒருவருக்கு நடைபெற்ற சம்பவத்தை இன்னொருவருக்கு நடைபெற்றதாக மாற்றி
அறிவித்த நிகழ்வுகளும் அதிகமாகவே ஹிதாயாவில் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
மற்றும் அவரது தந்தையின் சகோதரர் மகன் ஆகிய இருவருக்கும் பயண நேரத்தில் பாங்கு - இகாமத்
சொல்லி தொழுது கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னதாக ஹதீஸ் (திர்மிதி 189) உள்ளது.
ஆனால் ஹிதாயா நூலாசிரியரோ இதை அபீமுலைக்காவின் இரண்டு மகன்களுக்கு
நடைபெற்றதாக மாற்றிப் பதிவு செய்துள்ளார்.
الهداية شرح البداية -
(1 / 43)
والمسافر يؤذن ويقيم لقوله
عليه الصلاة والسلام لابني أبي مليكة رضي الله عنهما إذا سافرتما فأذنا وأقيما
பயணத்தில் இருப்பவர் பாங்கு - இகாமத் இரண்டும் சொல்ல வேண்டும்.
ஏனெனில் அபீமுலைக்காவின் இரண்டு மகன்களுக்கு
நீங்கள் பயணத்தில் இருந்தால் பாங்கு - இகாமத் கூறிக் கொள்ளுங்கள் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 43
இதே போல அபூஹுரைரா (ரலி) நபியிடமிருந்து அறிவிக்கும் ஒரு செய்தியைக்
குறிப்பிட்டு இதை அபூதர் (ரலி) அறிவிப்பதாக பெயர் மாற்றி குறிப்பிட்டுள்ளார்.
பார்க்க: ஹிதாயா 1 பக் 64
மஸ்தூரா
வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல எனும் சொல் வழக்கு ஒன்று
உண்டு.
யாருக்கும் தெரியாமல் ஒரு கருத்தை நிலைநாட்டுவோரை இவ்வாறு குறிப்பிடுவார்கள்.
நபிமொழிகளைக் குறிப்பிடுகையில் ஹிதாயா நூலாசிரியரின் அணுகுமுறையைப்
பார்க்கும் போது இச்சொல் வழக்கு நம் நினைவுக்கு வந்து போவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஹதீஸில் இல்லாத வார்த்தைகளை நைச்சியமாக செறுகி விடுவதில் கைதேர்ந்த
கெட்டிக்காரராக காட்சியளிக்கிறார்.
நாம் சொல்வது மிகையான வர்ணனை அல்ல என்பதைப் பின்வரும் செய்தியை
அறியும் போது தெளிவாகலாம்.
الهداية شرح البداية -
(1 / 43)
وبدن الحرة كلها عورة إلا
وجهها وكفيها لقوله عليه الصلاة والسلام المرأة عورة مستورة
பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டிய அவ்ரத் என்று நபிகளார் கூறியுள்ளதால்
சுதந்திரமான பெண்ணைப் பொறுத்தவரை அவளது முகம், இரு முன்கைகளை
தவிர மற்ற அனைத்து பகுதிகளும் மறைக்கப்பட வேண்டியதே.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 43
இவர் குறிப்பிடும்படியான செய்தி எந்த நூலிலும் இல்லை.
அல்மர்அது அவ்ரதுன் - பெண் என்பவள் அவ்ரத் என்று தான் ஹதீஸ்
உள்ளது. இது திர்மிதி 1093ல் உள்ளது.
ஆனால் நூலாசிரியர் ஹதீஸில் இல்லாத மஸ்தூரதுன் என்ற வாசகத்தை
இருப்பதைப் போன்று சேர்க்கின்றார்.
நபிகளார் சொல்லாத வார்த்தையை நபி சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.
நபிகளார் சொல்லாததை நபியின் பெயரால் சொல்வது தானே பொய். இதைத்
தானே நபிகள் நாயகம் கண்டித்தார்கள்.
சிறிய வார்த்தையாக இருப்பினும் அதை நபியோடு இணைத்துச் சொல்லும்
முன் உண்மையில் அப்படி ஹதீஸ் உள்ளதா என்று ஆராய்ந்த பிறகே சொல்ல வேண்டும். அதல்லாமல்
வாய்க்கு வந்ததை, ஆதாரமற்றதை நபியின் பெயரால்
அவிழ்த்து விடுவது அறியாமை மட்டுமல்ல அகந்தையுமாகும்.
எல்லா உறுப்புக்களும் ஸஜ்தாவில்...
தொழுகையில் ஸஜ்தாவின் போது கால்விரல்களை கிப்லா திசை நோக்கி
சற்று மடக்கி வைக்க வேண்டும் என்பது நபிவழி.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே
நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும்போது தமது கைகளை தம் தோள்களுக்கு
நேராக உயர்த்துவார்கள். ருகூஉ செய்யும்போது தம் கைகளை முழங்கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள்.
பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்த்தார்கள். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை
உயர்த்தும்போது தம் ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக
நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தாச் செய்யும்போது அவர்கள் தமது கைகளைப் பரப்பி வைக்கவுமாட்டார்கள்; அவற்றை விலாவுடன் ஒடுக்கி வைக்கவும் மாட்டார்கள்; தம் கால்விரல் முனைகளை கிப்லாவை நோக்கி வைப்பார்கள். இரண்டாவது
ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக்காலை
நட்டு வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது இடது காலை
(குறுக்கு வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை
நட்டு வைத்து தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 828
இப்போது இதை விவரிக்க காரணம் என்னவெனில் ஹிதாயாவின் ஆசிரியர்
சஜ்தாவின் போது கால்விரல்களை கிப்லா திசை நோக்கி மடக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறார்.
அதற்கு ஆதாரமாக மேற்கண்ட புகாரி 828 ஹதீஸைக் குறிப்பிட்டிருந்தால் அல்லது வேறு ஆதாரப்பூர்வமான செய்தியைக்
குறிப்பிட்டிருந்தால் இதை எழுத வாய்ப்பு நேர்ந்திருக்காது.
ஆனால் அவர் செய்தது - ஆதாரமாக குறிப்பிட்டது என்ன தெரியுமா?
இதோ அந்த ஆதாரம்...
الهداية شرح البداية -
(1 / 50)
ويوجه أصابع رجليه نحو القبلة
لقوله عليه الصلاة والسلام إذا سجد المؤمن سجد كل عضو منه
(ஸஜ்தாவில்) இருகால் விரல்களும் கிப்லாவை நோக்கி முன்வைக்கப்பட
வேண்டும். ஏனெனில் முஃமின் ஸஜ்தா செய்யும் போது அவனது அனைத்து உறுப்புக்களும் ஸஜ்தா
செய்கின்றன. என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 50
முஃமின் ஸஜ்தா செய்யும் போது அவனது அனைத்து உறுப்புக்களும் ஸஜ்தா
செய்கின்றன என்று நபி சொன்னதாக ஒரு செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். இப்படி ஒரு
செய்தி எந்த ஹதீஸ் நூற்களிலும் இல்லை.
தான் குறிப்பிடும் கருத்திற்கு எவ்வளவோ ஆதாரப்பூர்வமான செய்திகள்
இருக்க பொய்யான,
அடிப்படை ஆதாரமற்ற செய்தியை ஏன் குறிப்பிட வேண்டும்.
தான் கூறும் கருத்திற்கு பல நபிமொழிகள் இருக்கும் நிலையிலேயே இப்படி நபி மீது இட்டுக்கட்டி அக்கருத்தை நிலைநாட்டுகிறார்
எனில் நபிமொழிகளில் இல்லாத கருத்தை நிலைநாட்ட என்னவெல்லாம் செய்வார்? எத்தனை செய்திகளை இட்டுக்கட்டுவார்? நினைத்தாலே இவர்களின் நபி நேசம் புல்லரிக்கின்றது.
EGATHUVAM DEC 2016