May 7, 2017

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள் தொடர்: 6 - ஆறு நோன்பை வெறுக்கும் அபூஹனீஃபா

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள் தொடர்: 6 - ஆறு நோன்பை வெறுக்கும் அபூஹனீஃபா

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மாநபி வழி

உலகை ஆளும் உன்னதக் குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளோம். அதனாலே ரமலான் துவங்கி விட்டால் நோன்பு, தொழுகை, தர்மம், திக்ர், குர்ஆன் ஓதுதல் என ஒவ்வொருவரும் நல்லடியார்களாகக் காணப்படுகிறார்கள். அது போன்றே ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது மிகவும் சிறப்பான, உவப்பான காரியம் ஆகும்.

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு நோற்பது, இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பதற்கு சமமானது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

"யார் ரமலானில் நோன்பு நோற்றுப் பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி),

நூல்: முஸ்லிம் 1984

"ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்பிற்குச் சமமானது. அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸப்வான் (ரலி),

நூல்: தாரமி 1690

ஷவ்வால் மாத ஆறு நோன்பு நபிவழி என்றும், அது சிறப்பிற்குரியது எனவும் இச்செய்திகள் சந்ததேகத்திற்கிடமின்றி தெரிவிக்கின்றன.

பெரும்பாலான முஸ்லிம்கள் ஆறு நோன்பை அறிந்தவர்களாகவும், நோற்பவர்களாவும் உள்ளனர். ரமலான் நோன்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் கஞ்சி காய்ச்சி நோன்பாளிகளுக்கு வழங்குவதைப் போன்று பல பள்ளிகளில் இந்த ஆறு நோன்புக்கும் கஞ்சி ஏற்பாடு செய்வது, ஆறு நோன்பு முஸ்லிம்களிடத்தில் பரவலாக அறிப்பட்ட ஒன்று என்பதை உறுதிப்படுத்துகின்றது. இப்படி அனைவரும் அறிந்து வைத்துள்ள ஆறு நோன்பை அபூஹனிபா மறுக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா?

மத்ஹபு வழி

மழைத் தொழுகை இல்லை, கிரணகத் தொழுகையில் குத்பா இல்லை என்று கூறுவதன் மூலம் நபிவழி மெய்ப்படுத்தும், உறுதிப்படுத்தும் பல வணக்க வழிபாடுகளை மத்ஹபுகள் இல்லை என்று கூறியதை அரபி மூலத்துடன் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இப்போது அந்த வரிசையில் நபிமொழிகளில் ஆதாரமுள்ள ஆறு நோன்பையும் மறுக்கும் நிலைக்கு மத்ஹபு சென்றுள்ளது. ஆம்! ஆறு நோன்பு நோற்பதை இமாம் அபூஹனிபா வெறுப்பிற்குரியது என்று கூறியுள்ளார்.

ஆறு நோன்பை அபூஹனிபா வெறுத்தார் என்ற தகவலை நாம் பொய்யாக, அவர் மீது இட்டுக்கட்டிக் கூறவில்லை. மாறாக அவரைப் பின்பற்றும் அவரது மத்ஹபைச் சார்ந்தவர்களின் நூல்களிலேயே இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பது வெறுப்பிற்குரியதாகும்... இமாம் அபூஹனிபா அவர்களிடத்தில் பிரித்தோ, தொடர்ச்சியாகவோ ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பதும் அதில் உள்ளதாகும். (வெறுக்கத்தக்கதாகும்) தொடர்ச்சியாக ஆறு நோன்பு நோற்றால் வெறுக்கத்தக்கது, பிரித்து வைத்தால் அவ்வாறு இல்லை என்பது அபூயூசுப் அவர்களின் கருத்து.

நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம் 6, பக்கம் 133

எந்தெந்த நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்ப்பட்டுள்ளது, வெறுக்கத்தக்கது என்பதைப் பட்டியிலிடும் போது அதில் ஆறு நோன்பையும் சேர்த்துள்ளார்கள். நபிவழியில் உறுதியான ஆறு நோன்பை, சிறப்பிற்குரிய வணக்கவழிபாட்டை அபூஹனிபா எவ்வாறு வெறுக்க முடியும்? அபூஹனிபா வெறுப்பதற்கு அவரின் மத்ஹபின் தரப்பிலிருந்து என்ன காரணம் சொல்லப்பட்டாலும் அது ஏற்புடையதா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். மேலும் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் அபூஹனிபாவைப் பின்பற்றி, ஆறு நோன்பு இல்லை என்று மறுப்பார்களா? அல்லது வெறுப்பார்களா?

நபிகள் நாயகம் ஒன்றை அனுமதித்திருக்கும் போது, சிறப்பித்துச் சொல்லியிருக்கும் போது அதை வெறுப்பிற்குரியது என்று யார் சொன்னாலும் அது நபிகள் நாயகத்தை அவமதிக்கும் செயலாகும். எந்த முஸ்லிமும் இது போன்ற கருத்துக்களை ஏற்கவோ, அங்கீகரிக்கவோ, ஜீரணிக்கவோ கூடாது.

இதன் மூலம் அபூஹனிபா, நபிகள் நாயகத்தை அவமதிக்கின்றார் என்ற கருத்தை நாம் முன்வைக்கவில்லை. மத்ஹபிற்கும் இமாம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இமாம் அபூஹனிபாவிற்கும் பல ஹதீஸ்கள் தெரியாமல் இருந்துள்ளது, அதனாலே அவர் பல தவறான மார்க்க தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றார் என்பதை உணர்த்தவே இதைக் கூறுகிறோம்.

தவறுகள் ஏற்படும் மனிதனைப் பின்பற்றுவதை விட்டும் விலகி, தவறுகளே ஏற்படாத இறைவனை, பிழைகளில்லாத இறைச்சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். மத்ஹபுகளிலிருந்து விலக வேண்டும் என்பதே இதைக் குறிப்பிடுவதன் நோக்கம்.

நோன்பில் ஒரு புதிர் கணக்கு

அல்லாஹ்விற்காக சில நாட்கள் நோன்பு வைப்பது என் மீது உண்டு என்று எவ்வித நிய்யத் இன்றி ஒருவர் கூறினால் அவர் மீது பத்து நாட்கள் நோன்பு நோற்பது கடமையாகும். இச்சட்டம் அபூஹனிபாவிடத்தில் ஆகும். அவர்கள் இருவரும் (அபூயூசுப், முஹம்மத்) ஏழு நாள் என்கிறார்கள்.

நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம் 2, பக்கம் 320

ஹனபி மத்ஹபினரின் மார்க்கச் சட்ட விளக்க நூலான பஹ்ருர் ராயிக்கில் இவ்வாறு கூறப்படுகின்றது. இந்த அர்த்தமற்ற சட்டத்திற்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? சில நாட்கள் என்று சொன்னால் அது எப்படி பத்து நாட்களை குறிக்கும்? மூன்று, நான்கு, ஐந்து, ஐம்பது என்று எவ்வளவோ இருக்க பத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது எந்த அடிப்படையில்? இதற்கான நபிமொழி ஆதாரத்தை மத்ஹபைப் பின்பற்றுவோர் கூறுவார்களா?

இமாமை பின்பற்றும் பயணி

மாநபி வழி

25 கிலோ மீட்டர் தொலைவு ஒருவன் பயணம் செய்தால் அவன் தொழுகையை சுருக்கித் தொழுவதற்கும், இரு தொழுகைகளையும் ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதற்கும் சலுகையைப் பெறுகின்றான். அவ்வாறு சுருக்கித் தொழும் போது லுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை 4 ரக்அத்களுக்கு பதிலாக 2 ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும். இது சலுகையே தவிர கண்டிப்பாக இப்படித் தான் தொழுதாக வேண்டும் என்பதில்லை. ஹதீஸ்களில் பயணிக்களுக்கான இந்தச் சலுகை இருப்பதை அறிகிறோம்.

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூன்று மைல்'' அல்லது "மூன்று ஃபர்ஸக்'' தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ,

நூல்: முஸ்லிம் 1230

இறைவன் அளிக்கும் இச்சலுகையை பயணிகள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இறைவன் அளித்த இச்சலுகையை தகுந்த ஆதாரமின்றி யாரும் ரத்தாக்கி விட முடியாது. அந்த அதிகாரம் உலகில் எவருக்கும் இல்லை.

உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

 (அல்குர்ஆன் 6:115)

உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்!

(அல்குர்ஆன் 18:27)

இதை நினைவில் கொண்டு இது தொடர்பாக மத்ஹபு கூறும் சட்டத்தைப் பாருங்கள்.

மத்ஹபு வழி

பயணி ஒருவர் உள்ளூர்வாசி இமாமை அத்தஹிய்யாத் இருப்பில் அடைந்து அவருடன் தொழுகையில் இணைந்து விட்டார் எனில் அந்தப் பயணி உள்ளூர்வாசியைப் போன்று நான்கு ரக்அத்கள் தொழுவது கடமையாகும். ஏனெனில் அவர் இமாமுடைய தொழுகையில் இணைந்து விட்டதால் இமாமின் மீது கடமையான நான்கு ரக்அத் அவர் மீதும் கடமையாகும் என்று அபூஹனிபா கூறுகிறார்.

நூல்: அல்ஹுஜ்ஜா பாகம் 1, பக்கம் 296

அத்தஹிய்யாத் அமர்வில் இமாமை அடைந்த பயணி உள்ளூர்வாசியைப் போன்று முழுமையாகத் தான் தொழவேண்டும். இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழக்கூடாது என்று ஹனபி மத்ஹபு கூறுகின்றது.

இமாமுடன் சேர்ந்து தொழுவதால் இமாமுக்கு எது கடமையோ அது தான் பயணிகளுக்கும் கடமையாம். எனவே அவர் எழுந்து நான்கு ரக்அத்களை முழுமையாகத் தொழவேண்டும் என மத்ஹபு சட்டம் சொல்கிறது. இதற்கு என்ன ஆதாரம்? எந்த அடிப்படையில் இச்சட்டத்தை வகுத்தார்கள் என்பதைத் தெரிவிப்பார்களா?

(தக்பீர் தஹ்ரீமா) துவக்கத்திலிருந்து இமாமைப் பின்பற்றும் பயணி முழுமையாகத் தொழவேண்டும் என்றால் அது சரி. ஏனெனில் இமாம் என்பவர் பின்பற்றப்படுவதற்குத் தான் நியமிக்கப்படுகின்றார் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

"பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்'' அல்லது "(பின்பற்றப்படுவதற்காகவே) இமாம் இருக்கிறார்''. அவர் தக்பீர் ("அல்லாஹு அக்பர்'' என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹு அக்பர் எனச்) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் (ருகூஉவி-ருந்து நிமிரும்போது) "சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்'' என்று கூறினால், நீங்களும் "ரப்பனா ல(க்)கல் ஹம்து'' என்று கூறுங்கள்; அவர் சஜ்தா செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்.

(நூல்: புகாரி 733)

இமாமின் துவக்கத்திலிருந்து இல்லாமல் அத்தஹிய்யாத் அமர்விலிருந்து இமாமை ஒரு பயணி பின்பற்றினால் இவர் முழுமையாகத் தான் தொழவேண்டும் என்ற சட்டம் எவ்வித ஆதாரமும் அற்றது. அவருக்குள்ள சலுகையை மறுக்கும் வரம்பு மீறிய செயலாகும். பயணிகளுக்கு இறைவன் வழங்கிய சலுகையை எவ்வித ஆதாரமும் இன்றி ஹனபி மத்ஹபு மறுத்து நபிவழியுடன் மோதுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.

பால்குடிக் காலம்

மாநபி வழி

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

 (அல்குர்ஆன் 2:233)

குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பால் புகட்டும் காலம் இரண்டு வருடங்கள் அதாவது 24 மாதங்கள் என்று இவ்வசனம் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் ஹனபி மத்ஹபு கூறுவது என்ன?

மத்ஹபு வழி

பாலருந்தும் பருவம் அபூ ஹனீஃபாவிடம் முப்பது மாதங்காகும்

நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 223

இதில் வேறென்ன சொல்ல? மத்ஹபுச் சட்டம் தெளிவாக இறைச்சட்டத்துடன் மோதுகின்றது என்பதை தவிர!


தொடரும் இன்ஷா அல்லாஹ்