May 7, 2017

திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்: 11 - யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை

திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்: 11 - யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை

பி. ஜைனுல் ஆபிதீன்

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

அல்குர்ஆன் 78:1-5

உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள மிகப் பெரிய அடையாளங்கள் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் புகை மூட்டம், தஜ்ஜால், ஈஸா நபியின் வருகை போன்றவற்றைப் பார்த்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதில்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர்.

முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். "துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். "என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்'' என்றார். (தனது பணியாளர்களிடம்) "என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!'' என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது 'ஊதுங்கள்!'' என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். "என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்'' என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது'' என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.

அல்குர்ஆன் 18:94-99

முன்பே அந்தக் கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது.

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்றெல்லாம் இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.

இறுதியில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

அல்குர்ஆன் 21:96

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது.

அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் முற்றுகையிடப்படுவார்கள். ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறிக் கிடக்கும். நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு'' என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5228

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5228

அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.

நவீன கருவிகளையும்ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக் கேள்வி தவறானதாகும்.

மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள், பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இது வரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.

இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத் தான் பார்க்க முடியும்.

குறிப்பிட்ட காட்டில் தான் வீரப்பன் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தும் வெகு நாட்களாக அவனது இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாததற்கு இது தான் காரணம். காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.

இலங்கையில் பிரபாகரனும், புலிகளும் இந்திய, இலங்கை இராணுவத்தினரால் நீண்ட நாட்களாகப் பிடிக்கப்பட முடியாமல் போனதற்குக் கூட அடர்த்தியான காட்டுப்பகுதியை அவர்கள் தேர்வு செய்தது தான் காரணம்.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.

செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.

எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.

இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். அந்த நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக, அதாவது யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்க முடியும்.

இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும் (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ்

நூல்: அஹ்மத் 21299

இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

"யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: தப்ரானி

ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.

உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 3348

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 1593


EGATHUVAM AUG 2012