மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்
என்ன தான் மனிதன் ஆகாயத்தை முட்டுகின்ற அறிவியல் வளர்ச்சி கண்டிருந்தாலும், விண்ணைத் தொடுகின்ற வியக்கத்தக்க விஞ்ஞானப் புரட்சி படைத்தாலும்
வானிலிருந்து ஒரு சொட்டு மழையை அவனால் இறக்க முடியாது. இதோ அல்லாஹ் தனது திருமறையில்
கேட்கிறான்.
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?
அல்குர்ஆன் 56:68, 69
இது எக்காலத்துக்கும் பொருந்துகின்ற இறை சவாலாகும்.
மழை என்பது வல்லமை மிகு அல்லாஹ்வின் கையில் இருக்கும் தனி அதிகாரமும்
ஆற்றலும் ஆகும். வானிலிருந்து மழை பெய்யவில்லை எனில் மண்ணில் உயிர் வாழ்க்கை இல்லை.
இதையே திருக்குர்ஆன் கூறுகின்றது.
வானத்தில் உங்கள் உணவும், நீங்கள்
வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.
அல்குர்ஆன் 51:22
ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த
ஆண்டு பொழியவில்லை. தென்மேற்குப் பருவமழை தான் கர்நாடகாவுக்கு நீர்வளத்தைத் தருகின்றது.
அங்கிருந்து காவிரிக்கு நீர்வரத்து கிடைக்கின்றது.
இதுபோல் கேரளாவில் பொழிகின்ற தென்மேற்குப் பருவமழையினால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கின்றது.
இப்போது தென்மேற்குப் பருவமழை பொய்த்து விட்டதால் இந்த மாவட்டங்களுக்குத்
தண்ணீர் கிடைக்காமல் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களின் முதன்மை
உணவான அரிசி விளைச்சல் இல்லை. குறுவை பயிரிட முடியாத அளவுக்கு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாயினர்.
அரிசியைப் போன்றே இதர தானியங்களும் விளைச்சல் இல்லை.
அரிசி விலை இப்போதே வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. காய்கறிகளின்
விலையும் ஏறியிருக்கின்றது. வறட்சியின் இந்தக் கோரப்பிடி தொடருமானால் ஒட்டுமொத்த இந்தியாவும்
கடுமையான பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும்.
ஏற்கனவே கோடை வெயிலிலும் மின்வெட்டிலும் தவிக்கின்ற, தகிக்கின்ற, தமிழக மக்கள்
நீரினால் கிடைக்கும் மின்சாரத்தை இழந்து தற்போது தமிழகம் இருள்மயமாகக் கிடக்கின்றது.
இப்படிப்பட்ட கால கட்டத்தில் மழை ஒன்று தான் மக்களுக்குத் தீர்வு!
இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கைவசம் உள்ள ஆற்றலாகும்.
இன்று இந்த நாட்டில் உள்ள மக்கள் தங்கள் போலி தெய்வங்களிடம்
மழை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர். முஸ்லிம்கள் உண்மையான, ஏகனான, தனித்தவனான, ஒரே ஒருவனான அல்லாஹ்விடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் மழை தேடுவதற்காக, "ஸலாத் அல்இஸ்திஸ்கா' என்ற மழைத்
தொழுகையை நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். இதன்படி நமது ஜமாஅத்தினர் மழைத் தொழுகை
தொழுவோமாக! மழை வேண்டுவதற்காக நபி (ஸல்) அவர்கள் சில சிறப்பு துஆக்களையும் நமக்குக்
கற்றுத் தந்திருக்கின்றார்கள். அந்தத் தொழுகை மற்றும் துஆக்கள் மூலம் அல்லாஹ்விடம்
மழை வேண்டிப் பெறுவோமாக!
அத்துடன் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பாவ மன்னிப்புத் தேடிக் கொள்வோமாக!
ஏனெனில் நபி நூஹ் (அலை) அவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்ற போது, மழை வேண்டுமானால் பாவ மன்னிப்புத் தேட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
"உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக
இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்''
அல்குர்ஆன் 71:10,11
நூஹ் நபியின் இந்த அறிவுரைப்படி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத்
தேடி, பருவ மழையைப் பெறுவோமாக!
தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு கிளைகள் மழைத்
தொழுகையை அறிவித்து நிறைவேற்றி வருகின்றன. இதன் எதிரொலியாகத் தமிழகத்தில் மழைக்கான
அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. இந்நிலை நீடித்து, பருவமழை பொய்க்காமல் பொழிவதற்கு வல்ல ரஹ்மானிடம் தொடர்ந்து பாவமன்னிப்புத்
தேடுவோம்.
EGATHUVAM SEP 2012