சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் 6 - அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா?
தொடர் – 6
எம்.எஸ். செய்யது இப்ராஹீம்
திருக்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் குறித்த கோவை விவாதத்தில்
உம்மு ஹராம் (ரலி) என்ற அந்நியப் பெண்ணுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனித்திருந்ததாகவும், அந்தப் பெண் நபிகளாருக்குப் பேன் பார்த்து விட்டதாகவும் பதிவு
செய்யப்பட்டுள்ள கட்டுக்கதை குறித்து விவாதிக்கப்பட்டது.
முதலில் அந்தப் பொய்ச்செய்தி குறித்து காண்போம். புகாரியில்
பதிவு செய்யப்பட்டுள்ள அந்தப் பொய்ச் செய்தி பின்வருமாறு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான்
(ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின்
துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின்
வீட்டிற்குச் சென்ற போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபி (ஸல்) அவர்களுக்குப்
பேன் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி
விழித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி (7001)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உம்மு ஹராம் (ரலி)
அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு
உணவளித்துவிட்டு அவர்களுடைய தலையில் பேன் பார்த்து விடுவதற்காக உட்கார்ந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3535)
நபி (ஸல்) அவர்கள் தனது தலையை உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில்
வைத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3536)
மேற்கண்ட செய்தியில் உம்மு ஹராம் என்ற பெண்மணியின் வீட்டிற்கு
நபிகளார் தனிமையில் சென்றதாகவும், அங்கு அந்தப் பெண்மணி நபிகளாருக்குப்
பேன் பார்த்து விட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இதை எப்படி ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள முடியும்? இன்னும் ஒரு படி மேலே போய் தெளிவாகச் சொல்வதென்றால் இந்த ஹதீஸிற்கு
புகாரியின் விளக்கவுரையாக இப்னு ஹஜர் அவர்கள் எழுதியுள்ள ஃபத்ஹுல் பாரி என்ற நூலில், “உம்மு ஹராம் என்ற அந்நியப் பெண்ணுடன் நபிகளார் தனித்திருந்தது
குறித்தோ, அவர்களது மடியில் தலை வைத்தது பற்றியோ, அவர்கள் நபிகளாருக்குப் பேன் பார்த்துவிட்டது பற்றியோ சொல்லப்படும்
இந்தச் செய்தியை எவ்விதத்திலும் சரிகாண இயலாது. மாறாக, நபிகளாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இது என்று நாம் எடுத்துக்
கொள்வது தான் இதற்கான சரியான விளக்கம்’’ என்று கூறியுள்ள செய்தியையும் நாம் சுட்டிக் காட்டி கீழ்க்கண்ட
கேள்விகளை எழுப்பினோம்.
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்ற அன்னியப் பெண்ணிடம் அடிக்கடி
வந்து செல்லும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள். உம்மு ஹராம் நபியவர்களுக்குப் பேன்
பார்த்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமிடம் தூங்கி விட்டார்கள் என்று இந்த
ஹதீஸ் கூறுகிறது.
ஒரு ஆண் ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் இது போன்று படுத்து உறங்குபவனாகவும், அடிக்கடி அங்கு சென்று வருபவனாகவும் இருந்தால் அவன் ஒழுக்கங்கெட்டவன்
என்று மக்கள் கூறுவார்கள். சாதாரண மனிதன் இதைச் செய்தாலும் அதை யாரும் அங்கீகரிக்காத
போது நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள
முடியாது; அப்படியானால் இந்தக் கட்டுக்கதையை ஹதீஸ் என்று சொல்லலாமா?
மகத்தான குணம் கொண்ட மாநபி
நபிகள் நாயகம் (ஸல்) மகத்தான குணம் கொண்டவர்கள் என்று அல்லாஹ்
அவர்களைச் சிலாகித்துச் சொல்லிக் காட்டுகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் அன்னியப் பெண்ணுடன் தோலும் தோலும் உரசும்
நிலையில் இருந்தார்கள் என்று நம்பினால் நபி (ஸல்) அவர்கள் மோசமான குணத்தைக் கொண்டவர்களாக
இருந்தார்கள் என்று கூற வேண்டிய நிலைவரும். நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க
வேண்டுமென்றால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
(அல்குர்ஆன் 68:4)
அன்னியப் பெண்களைக் கண்டால் பார்வையைத் தாழ்த்துமாறு குர்ஆன்
கட்டளையிடுகிறது. இதற்கு மாற்றமாக பார்ப்பதைத் தாண்டி அன்னியப் பெண்ணின் தோல் தன் மீது
படும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறும் இந்த ஹதீஸை நம்பினால்
குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடந்தார்கள் என்று நம்ப வேண்டிவரும்.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக்
கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (24:30)
எந்த அந்நியப் பெண்ணும் தன்னைத் தொட்டுவிடக் கூடாது என்பதில்
நபி (ஸல்) அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். ஆண்கள் நபி (ஸல்) அவர்களின்
கையைப் பிடித்து பைஅத் (உறுதிப் பிரமாணம்) செய்தார்கள். பெண்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில்
பைஅத் செய்ய வந்த போது அவர்களைத் தொடாமல் பேச்சின் மூலமாக பைஅத் செய்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபியே இறை நம்பிக்கை கொண்ட
பெண்கள் உங்களிடம், அல்லாஹ்வுக்காக எதையும் இணை
வைக்க மாட்டார்கள் திருட மாட்டார்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் தங்கள் குழந்தைகளைக்
கொலை செய்ய மாட்டார்கள் தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்ப மாட்டார்கள் நற்செயலில்
உங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று உறுதி மொழி அளித்தால் அவர்களிடம் உறுதி மொழி
வாங்குங்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தை நபி (ஸல்)
அவர்கள் பெண்களிடம் ஓதி வாய் மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு
வாங்க மாட்டார்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை அவர்களுக்குச் சொந்தமான
பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (7214)
இவ்வளவு பேணுதலாக நடந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் முறையின்றி
உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் சென்று வந்திருக்க முடியாது. இந்த ஹதீஸ் முற்றிலும்
நபி (ஸல்) அவர்களின் அழகிய குணத்திற்கு மாற்றமாக உள்ளது.
உம்மு ஹராம் (ரலி) அவர்களின் கணவர் உட்பட யாரும் இல்லாத போது
நபி (ஸல்) அவர்கள் உம்முஹராமின் வீட்டில் படுத்து உறங்கினார்கள் என்று நம்புவது இஸ்லாத்தை
விட்டும் நம்மை வெளியேற்றிவிடும். ஆணும் பெண்ணும் தனித்திருப்பதைத் தடை செய்த உத்தம
நபி ஒரு போதும் உம்மு ஹாரமுடன் தனித்து இருந்திருக்க மாட்டார்கள்.
அன்னியப் பெண்களிடம் வந்து செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இந்த விஷயத்தில் சமுதாயத்திற்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். இந்நிலையில்
இந்த மானக்கேடான காரியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே செய்தார்கள் என்று ஒரு முஸ்லிம்
நம்பலாமா? எனக்கேள்வி எழுப்பினோம்.
நபிகளாரை இழிவுபடுத்திய கப்ரு வணங்கிகள்
மேற்கண்ட செய்தியை நாம் சொல்லிக் காட்டியவுடன் நபிகளார் அந்நியப்
பெண் மடியில் படுத்தார்கள் என்று சொல்வது அவதூறு; இப்படித்
தான் ஹதீஸ்களை ஆபாசமாக நாம் சித்தரிப்பதாகப் பொய்யை அள்ளிவிட்டார்கள்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் மடியில் நபிகளார் படுத்ததாக நீங்கள்
நம்பக்கூடிய,
நீங்கள் பெரிதும் புகழ்ந்து போற்றக்கூடிய, உங்களது முக்கிய இமாம்களில் ஒருவரான அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி
அவர்கள் தானே கூறியுள்ளார்கள். அப்படியானால் அவரைப் பொய்யர் என்றும், இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர் என்றும், நபிகளாரை இழிவுபடுத்திய காஃபிர் என்றும் சொல்வீர்களா என்று கேள்வி
எழுப்பினோம். நீண்ட நேரமாக வாய்திறக்காமல் மௌனம் காத்த கப்ரு முட்டி உலமாக்கள் கடைசியாக
இது குறித்து ஒருபடுபயங்கரமான(?) விளக்கத்தை அளித்தார்கள்.
நபிகளாரை இழிவுபடுத்தினால் அவர் முஸ்லிமாம்
அதாவது அந்நியப் பெண்ணின் மடியில் நபிகளார் தலைவைத்துப் படுத்ததாக
அவர்கள் மதிக்கக்கூடிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சொல்வது உண்மைதானாம்; அந்தச் செய்தியை இமாம் அவர்கள் நம்புகின்றார்களாம்; ஆனால் அவரை காஃபிர் என்றோ, நபிகளாரை
இழிவுபடுத்தி விட்டார் என்றோ சொல்ல மாட்டார்களாம்; காரணம் என்னவென்றால், அவர் இந்த
ஹதீஸை மறுக்கவில்லையாம்; அது உண்மை என்று மனப்பூர்வமாக
நம்பிச் சொல்கின்றாராம்; அதனால் அவர் முஸ்லிமாம்; நாம் இதைப் பொய் என்று சொல்வதால் நாம் காஃபிராகி விட்டோமாம்
என்று உலகமகா உளறலை வெளிப்படுத்தினர் கப்ரு வணங்கி உலமாக்கள்.
இதுபோன்ற ஒரு மானக்கேடான செயலை நபிகளார் செய்திருக்க மாட்டார்கள்
என்று நம்புவதுதானே சரி; அப்படி நம்புவதுதான் இறைநம்பிக்கைக்கு
அழகு.
அவ்வாறு நம்புபவர் காஃபிர்; நபிகளார்
மானக்கேடான செயலைச் செய்துள்ளார்கள் என்று நம்பி அதை உண்மை என்று சொல்பவர் முஸ்லிமா
என்று நாம் எழுப்பிய கேள்விக்கு கடைசி வரைக்கும் கப்ரு வணங்கி உலமாக்கள் வாய்திறக்கவே
இல்லை.
பொய்யான விளக்கம் கொடுத்து மாட்டிக் கொண்ட கப்ரு வணங்கிகள்
அதுமட்டுமல்லாமல் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் பால்குடி
செவிலித் தாயார் என்று பொய்யான விளக்கத்தை இவர்களாக இட்டுக்கட்டிச் சொல்லி மாட்டிக்
கொண்டனர்.
உம்மு ஹராம் அவர்கள் நபிகளாரின் செவிலித்தாயாக இருந்தால் அதற்கான
ஆதாரத்தைக் கொடுங்கள் என்று கேள்வி எழுப்பினோம்; நபிகளார்
இறந்து பல நூறு வருடங்களுக்குப் பின்னதாக எழுதப்பட்டுள்ள சில நூல்களில் எவ்வித ஆதாரமும்
இல்லாமல் அடித்துவிடப்பட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி உம்மு ஹராம் (ரலி) அவர்கள்
நபிகளாரின் சின்னமாகவும் இருக்கலாம்; மஹரமான உறவு
அல்லாத நபராகவும் இருக்கலாம்; செவிலித்தாயாகவும் இருக்கலாம்; மாமியாகவும் இருக்கலாம் என்று அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட
ஆதாரமில்லாத பொய்யான செய்தியைத்தான் தங்களது பொய் வாதத்திற்கு ஆதாரமாக காட்ட முடிந்ததே
தவிர உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் செவிலித்தாய் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும்
கடைசி வரைக்கும் அவர்கள் தரவில்லை. இதிலிருந்தே அவர்கள் சொன்னது தார்ப்பாயில் வடிகட்டிய
பொய் என்பது நிரூபணமானது.
இந்த கட்டுக்கதையை உண்மையென்று சொல்லி கடைசி வரைக்கும் அண்ணலாரின்
மகத்தான குணத்தை களங்கப்படுத்துவதிலேயே தான்
இந்தக் கூட்டம் குறியாக இருந்தது.
உண்மையிலேயே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் செவிலித்தாயாக
இருந்திருந்தால் புகாரியில் வரும் இந்தச் செய்திக்கு விரிவுரை எழுதிய இப்னு ஹஜர் அவர்கள்
அந்தப் பதிலையே சொல்லியிருப்பார்கள். ஆனால் அவரோ உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அண்ணலாருக்கு
அந்நியப்பெண் தான்; அதனால் தான் அவர்களது மடியில்
தலைவைத்துப் படுத்ததாக வரும் இந்தச் செய்திக்கு எவ்வித விளக்கம் சொன்னாலும் அதை ஏற்க
முடியாது; மாறாக அது அண்ணலாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து என்று
விளக்கமளித்துள்ளாரே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் எனக் கேட்டதற்கு கப்ரு
வணங்கிகள் கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.
அடுத்ததாக தாடி வைத்த அந்நிய ஆணுக்கு அந்நியப் பெண்ணை பால் புகட்டச்
சொல்லி நபிகளார் கட்டளையிட்டதாக வரும் கட்டுக்கதை ஹதீஸ் கிடையாது என்பது குறித்த வாதங்களை
எடுத்து வைத்தோம். அந்தச் செய்தியை நியாயப்படுத்த கப்ரு வணங்கிகள் எப்படியெல்லாம் உளறினார்கள்
என்ற செய்தியை அடுத்த இதழில் காண்போம்.
EGATHUVAM JAN 2017