May 31, 2017

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் - பகல் நேர தொழுகை கால்நடைகளா?

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் - பகல் நேர தொழுகை கால்நடைகளா?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

ஒற்றைப்படையில் ருகூவு, ஸஜ்தா தஸ்பீஹ்கள்?

கமர்ஷியல் பத்திரிக்கைகளை மக்களிடையே விளம்பரப்படுத்த, பக்கத்திற்குப் பக்கம் பரபரப்பு என்று குறிப்பிடுவார்கள்.

அந்த பாணியில் ஹிதாயா நூலை விளம்பரப்படுத்துவதாக இருந்தால் பக்கத்திற்கு பக்கம் பச்சைப் பொய்கள் என்று கூறலாம். சாதாரணமான பொய்கள் அல்ல, நரகைப் பரிசளிக்கும் நபி மீதான பொய்கள் நிறையவே ஹிதாயாவில் உள்ளன. அதுவும் பக்கத்திற்குப் பக்கம் உள்ளது எனலாம்.

கடந்த இதழில், ஒரு முஃமின் ஸஜ்தா செய்யும் போது அனைத்து உறுப்புக்களும் ஸஜ்தா செய்கின்றன என நபி மீது பொய்யுரைக்கப்பட்டிருப்பதை வாசித்தோம் அல்லவா? அதை வாசித்ததன் மூச்சை முழுமையாக வெளியிடும் முன் - அதற்கு இரண்டு வரிகளில் இன்னுமொரு பொய்யை நபி மீது அள்ளி வீசுகிறார்.

الهداية شرح البداية - (1 / 50)

 ويستحب أن يزيد على الثلاث في الركوع والسجود بعد أن يختم بالوتر لأنه عليه الصلاة والسلام كان يختم بالوتر

ருகூவு, ஸஜ்தாவில் (தஸ்பீஹ்களை) மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்துவது விரும்பத்தக்கதாகும். அப்போது அவற்றை ஒற்றைப்படையான இலக்கத்தில் முடிக்க வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஒற்றைப்படையான இலக்கத்தில் முடிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 50

ருகூவு, ஸஜ்தாவில் செய்யும் தஸ்பீஹ்களை மூன்று தடவைக்கு மேல் அதிகமாகச் செய்வதாக இருந்தால் ஒற்றைப்படையான இலக்கத்தில் தான் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு நபிகள் நாயகம் செய்துள்ளதாக ஹதீஸ் உள்ளது என்றும் நபி மீது பச்சைப் பொய்யைக் கூறுகிறார்.

எங்கிருந்து இந்தச் செய்தியை எடுத்தார்? இதற்கு ஆதாரமாக அமைந்த ஹதீஸ் நூல் எது? மத்ஹபினரே பதில் சொல்லுங்கள்.

பகல் நேர தொழுகை கால்நடைகளைப் போல் அமைய வேண்டும்?

கிராஅத் (ஓதுதல்) சம்பந்தமான பிரிவு என்று தலைப்பிட்டு விட்டு அதில், லுஹர், அஸர் நேர தொழுகைகளில் இமாம் சப்தமின்றி மௌனமாக கிராஅத் - ஓத வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ஆதாரமாக நபிகள் நாயகம் கூறியதாகப் பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்.

الهداية شرح البداية - (1 / 53)

لقوله عليه الصلاة والسلام صلاة النهار عجماء

பகல் நேர தொழுகையாகிறது கால்நடைகளாகும். (அதாவது கால்நடை பேசாது  - மௌனம் காப்பதை போன்று கிராஅத் சப்தமாக ஓதப்படாது)

இந்தச் செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

மேலும் இமாம் நவவீ அவர்கள் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு இது அடிப்படை ஆதாரமில்லாத தவறான செய்தி என்று விமர்சித்துள்ளார்.

المجموع شرح المهذب - (3 / 389)

وقوله صلاة النهار عجماء ,,,وهذا الحديث الذى ذكره باطل غريب لا أصل له.

அல்மஜ்மூஉ, பாகம் 3, பக்கம் 389

மேலும் தாரகுத்னீ மற்றும் பிற அறிஞர்கள் இந்தச் செய்தி நபிகளாரின் கூற்றல்ல, மாறாக சில மார்க்க அறிஞர்களின் கூற்றே என்று கூறியுள்ளதாகவும் இமாம் நவவீ கூறுகிறார்.

المجموع شرح المهذب - (3 / 46)

 (صلاة النهار عجماء) قلنا قال الدارقطني وغيره من الحفاظ هذا ليس من كلام النبي صلى الله عليه وسلم يرو عنه وانما هو قول بعض الفقهاء

அல்மஜ்மூஉ, பாகம் 4, பக்கம்  46

மத்ஹபு அறிஞர்களே இது நபி மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்று இனம் காட்டும் அளவுக்கு ஹிதாயாவின் வாய்மையின் இலட்சணம் இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த லட்சணத்தில் இந்த ஹிதாயா நூலை தான் அரபி மத்ரஸாக்களில் ஆலிம்களுக்கு (?) பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பாட போதனைகளாக படித்தால் நபி மீது பொய்யுரைப்பதில் புடம் போட்ட தங்கங்களாக வருவார்கள் என்பதில் என்ன சந்தேகம்? அது தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்தக் கூடாது?

ஹிதாயாவில் இமாம் அபூஹனிஃபா அவர்களின் பெயரால் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

الهداية شرح البداية - (1 / 67)

قال أبو حنيفة رحمه الله إن صلى ثمان ركعات بتسليمة جاز وتكره الزيادة على ذلك ,,,ودليل الكراهة أنه عليه الصلاة والسلام لم يزد على ذلك

எட்டு ரக்அத்களை ஒரு சலாமில் தொழுதால் அது கூடும். ஆனால் அதை விட அதிகப்படுத்துவது வெறுப்பிற்குரியதாகும் என்று அபூஹனிபா கூறுகிறார். நபிகள் நாயகம் இதை விட அதிகப்படுத்தியதில்லை என்பதுவே அவ்வெறுப்பிற்கான காரணமாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம்  67

அதிகபட்சமாக ஒரு சலாமில் எட்டு ரக்அத்களே தொழ இயலும் என்றும் அதற்கு மேல் அதிகமாக தொழுவது வெறுக்கத்தக்கது என்றும் அபூஹனிபா கூறியதாகக் கூறுகிறார்.

இங்கே நாம் கேள்விக்குள்ளாக்குவது அபூஹனிபா இப்படிச் சொன்னாரா? இல்லையா? அது சரியா? தவறா? என்பதை அல்ல. அபூஹனிபா இவ்வாறு சொன்னதை முட்டுக் கொடுக்க நபி மீது இட்டுக்கட்டிய குட்டு வெளிப்பட்டதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்துவது சரியல்ல என்று அபூஹனிபா சொன்னதை நிறுவ நபிகளாரை ஏன் வம்பிழுக்க வேண்டும்? நபிகள் நாயகம் இவ்வாறு தொழவில்லை என்று நபி மீது ஏன் துணிந்து பொய் சொல்ல வேண்டும்?

இப்படி நாம் விமர்சிக்கக் காரணம் உண்டு.

நபிகளார் ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமான நபிமொழிகள் இருக்கின்றன.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?’’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்துவைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான். அவர்கள் எழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள். சலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும்.

அறிவிப்பவர்: சஅத் பின் ஹிஷாம் (ரஹ்)

நூல்: முஸ்லிம் 1357

இந்தச் செய்தி நபிகளார் ஒரு சலாமில் ஒன்பது ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்க இதை வெறுக்கத்தக்கது என்று குறிப்பிட்டதோடு நபிகள் நாயகம் இவ்வாறு செய்யவில்லை என்று அறிவிப்பது நூலாசிரியரின் அலட்சியத்தை அப்பட்டமாக அறியத்தருகின்றது.

பெண்ணே! செல் பின்னே!

இமாமத் பற்றி அலசும் பாடத்தில் பெண்ணை இமாமாக முன்னிறுத்த கூடாது என்றுரைக்கிறார். அதற்கு அவர் நபியின் பெயரில் குறிப்பிடும் செய்தி அபத்தமானது.

الهداية شرح البداية - (1 / 56)

 أما المرأة فلقوله عليه الصلاة والسلام أخروهن من حيث أخرهن الله فلا يجوز تقديمها

அல்லாஹ் அவர்களை (பெண்களை) அப்புறப்படுத்தியுள்ளவாறு நீங்களும் அப்பெண்களை அப்புறப்படுத்தி விடுங்கள் என்று நபிகளார் கூறியுள்ளதால் பெண்களை (இமாமாக) முன்னிறுத்துவது கூடாது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 56

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது என்ற கருத்தில் நாம் உடன்படுகிறோம். அதற்கு வேறு சில நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன.

தொழுகை வரிசைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கும் போது ஆண்கள், சிறுவர்கள், பெண்கள் என்று வரிசைப்படுத்தியுள்ளதால் பெண் இமாமத் செய்வது இதற்கு முரணாகிறது என்பது போன்ற பல ஆதாரங்களால் நாமும் அதைக் கூடாது என்றே கூறுகிறோம்.

ஆனால் ஹிதாயா நூலாசிரியரோ புதிதாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்.

அல்லாஹ் அவர்களை (பெண்களை) அப்புறப்படுத்தியவாறு நீங்களும் அப்பெண்களை அப்புறப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் சொன்னதாகப் பதிவு செய்து தம் கருத்திற்கு வலு சேர்க்கின்றார்.

ஆனால் இதை நபிகள் நாயகம் கூறியதாக எந்த ஹதீசும் இல்லை. இவ்வாறு கூறுவது நபிகளாரின் மேல் கூறும் வடிகட்டிய பொய்யாகும்.

மத்ஹபினர்களுக்குத் துணிவிருந்தால் - தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக கருதுவதில் உண்மையிருந்தால் - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரத்தை மக்களிடம் சமர்ப்பிக்கட்டும்.

ஸஜ்தா திலாவத்

ஸஜ்தா திலாவத் பற்றிய பாடத்தில் குர்ஆனில் மொத்தம் 14 இடங்களில் இறை வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்றும் அவ்விடங்கள் எவையெவை என்பதையும் விளக்குகிறார்.

அதை தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்.

الهداية شرح البداية - (1 / 78)

والسجدة واجبة في هذه المواضع على التالي والسامع سواء قصد سماع القرآن أو لم يقصد لقوله عليه الصلاة والسلام السجدة على من سمعها وعلى من تلاها وهي كلمة إيجاب

இவ்விடங்களில் சஜ்தா திலாவத் செய்வது ஓதுபவர், செவியேற்பவர் இருவர் மீதும் அவசியமானதாகும். அவர் குர்ஆனை செவியேற்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரியே. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியேற்பவர் - ஓதுபவர் இருவர் மீதும் ஸஜ்தா உண்டு என கூறியுள்ளார்கள். இது கட்டாயம் எனும் கருத்தை தரும் வார்த்தையாகும்.

ஸஜ்தா வசனங்கள் மொத்தம் 14 என்பதற்கு ஆதாரமில்லை என்பது தனி விஷயம்.

ஸஜ்தா வசனங்களைக் கேட்பவர், ஓதுபவர் என இருவரும் சஜ்தா செய்வது கட்டாயம்; இவ்வாறு நபிகள் நாயகம் உத்தரவிட்டுள்ளார்கள் என்று புழுகியுள்ளார்.

இல்லாத நபிமொழியை எப்படி குறிப்பிடுகிறார் என்று பாருங்கள்.

இவர் குறிப்பிட்ட வார்த்தையை நபிகள் நாயகம் மொழிந்தார்கள் என்பதற்குரிய ஆதாரத்தை நிலைநாட்டுவார்களா?


நபிகள் நாயகம் கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் பதிவாகாத நபிமொழிகள் (?) இவருக்கு மட்டும் எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ? வாய் திறப்பார்களா வக்காலத்து வாங்குவோர்?

EGATHUVAM JAN 2017