நரகத்திற்கு அழைக்கும் நாகூர் ஹனிஃபா 8 - திருவருள் தாரும் நாகூரார்
நாகூர் இப்னு அப்பாஸ்
ஏகத்துவம் எனும் ஓரிறைக் கொள்கையை வாழ்வியல் நெறியாக இறைவன்
நமக்கு வழங்கியிருக்கின்றான்.
ஏகத்துவத்தைத் தெளிவுபடுத்தி வழிகாட்டுவதற்காகத் திருமறைக் குர்ஆனையும்
மானுடத்திற்கு அருளியுள்ளான். திருக்குர்ஆனோடு தொடர்புள்ள ஒருவன் தன்னுடைய வாழ்வைக்
கொள்கையளவிலும்,
தனிமனித ஒழுக்கத்திலும் பக்குவப்படுத்திக் கொள்வான்.
ஆனால், இன்றைக்கு இருக்கும் தமிழ் பேசும்
மக்களிடத்தில் அத்தொடர்பு குறைந்துவிட்டது.
திருக்குர்ஆன் அவர்களது வாழ்வில் பெற்றிருக்கும் இடத்தைவிட இஸ்லாமியப்
பாடல்கள் என்ற பெயரில் உலா வரும் பாடல்கள் பெரும் இடத்தைப் பிடித்து இருக்கின்றன.
அதனால் அம்மக்கள் இஸ்லாத்தின் அடிப் படையைக் கூட விளங்காதவர்களாக
உள்ளனர்.
அப்பாடல்களின் வரிகள் எடுத்துரைக்கும் கருத்துக்கள் தான் இஸ்லாம்
என அவர்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், அப்பாடல்களோ இஸ்லாத்தின் அடிப்படையையே
தகர்க்கின்ற கருத்துக்களை உள்ளடக்கியிருப்பது மட்டுமல்லாமல் நரகிற்கு அழைத்துச் செல்லும்
பாதையாகவே அமைந்துள்ளன.
அந்த பாடல்கள் இஸ்லாத்திற்கு எவ்வாறெல்லாம் எதிராக உள்ளன என்பதைத்தான்
இக்கட்டுரையின் வாயிலாக தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம்.
அந்த அடிப்படையில், “கடலோரம் வாழும்
காதர் மீரா” என்ற பாடல்
எவ்வாறு ஏகத்துவத்திற்கு முரண் என்பதை இம்மாதக் கட்டுரையில் அறியவிருக்கின்றோம்.
இப்பாடலில் இடம்பெறும் தெளிவான ஷிர்க்கை உள்ளடக்கியிருக்கும்
வரிகளை முதலில் காண்போம்.
“கடலோரம் வாழும்
காதர் மீரா”
“சாதக வடிவாய்
இறங்கும் சிங்காரா”
“திருவருள்
தாரும் நாகூரார்”
“தஞ்சை மன்னன்
பிணியினை தீர்த்தீர்”
“மெய்யருள்
தாரும் நாகூரார்”
பல்லாண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்ட நாகூரில் அடங்கியிருக்கும்
காதர் மீரா வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றும், அவர்
அருள் வடிவாய் விளங்குகின்றார் என்றும் தஞ்சை மன்னனுக்கு ஏற்பட்ட நோயையே இவர்தான் குணப்படுத்தினார்
என்றும் அவரிடமே தான் அருளை வேண்டுவதாக இப்பாடல் தொடர்கிறது.
அருள் செய்வது அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள அதிகாரம் என்பதையும்
நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது என்பதையும் சென்ற இதழில்
அறிந்துவிட்டோம்.
அல்லாஹ்வுடன் மற்ற கடவுள்களை வணங்குவது எவ்வாறு ஷிர்க்கோ அவ்வாறே
இறைவனுடைய அதிகாரம், ஆற்றல், பண்புகள் ஆகியவற்றில் அணுவளவு மற்றவர்களுக்கு இருக்கிறது என்று
கற்பனை செய்வதும் ஷிர்க்கே!
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான்.
சூரியனையும்,
சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும்
குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின் றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ
அவர்கள், அணு வளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.
அல்குர்ஆன் 35:13
ஆனால், தர்கா வாதிகள் இறைவனுக்கு மட்டும்
சொந்தமான பல்வேறு தன்மைகளை அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்
பிரேதங்களுக்கு வழங்கி வழிபடுகின்றார்கள்.
இப்பாடலின் “தஞ்சை மன்னன்
பிணியினை தீர்த்தீர்” என்ற வரிக்குப் பின்னால் ஒரு கதை கூறப்படுகிறது.
ஷாகுல் ஹமீது ஒரு முறை தஞ்சாவூருக்கு வருகை தந்தாராம்.
அப்போது தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த அச்சுதப்ப நாயக்கர் நோய்வாய்ப்பட்டிருந்தாராம்.
மன்னன், ஷாகுல் ஹமீதின் வருகையை அறிந்து அவரை அழைத்து வரச் சொன்னாராம்.
இவரும் சென்று மன்னனுக்கு நிவாரணம் அளித்தார் என்றும் இவரின் அருளால் பிள்ளைப்பேறு
இல்லாமல் இருந்த மன்னனின் மனைவி பிள்ளை பாக்கியம் பெற்றாள் என்றும் கதையை கட்டவிழ்க்கின்றார்கள்.
நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்வுக்கே!
“நான் நோயுறும்
போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்”
அல்குர்ஆன் 26:80
பிள்ளை பாக்கியத்தை வழங்குபவன் அல்லாஹ்வே!
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன்
நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு
ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும்
சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 42:49, 50
பிள்ளை பாக்கியத்தைத் தரும் ஆற்றலை இறைவன் தனது அதிகாரமாக இவ்வசனத்தில்
குறிப்பிடுகிறான்.
ஆனால், ஷாகுல் ஹமீத் அவர்களை நல்லடியார்
என்றும் அவர் நல்லடியார் என்பதால் பிள்ளை பாக்கியத்தைத் தரும் ஆற்றலைப் பெற்றிருந்தார்
என்றும் இவர்கள் கதைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
நல்லடியார்களுக்கு இவ்வாற்றல் இருக்கும் என்றால் இறைவனின் உற்ற
தோழர் என்று நற்சான்று வழங்கப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்களே தள்ளாத வயது வரை ஏன் பிள்ளை
பாக்கியம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அவர்களுக்கும் இறைவன் தானே அந்த பாக்கியத்தைத் தருகிறான்.
இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக!
அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் “நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்’’ என்றார். “நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள்
நற்செய்தி கூறுகிறோம்’’ என்று அவர்கள் கூறினர். “எனக்கு
முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார். “உண்மையின்
அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!’’ என்று அவர்கள் கூறினர். “வழி
கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?’’ என்று அவர் கேட்டார்.
அல்குர்ஆன் 15:51-56
இப்ராஹீம் நபிக்கு அந்த ஆற்றல் இருக்கும் என்றால் அவரே தனக்கு
ஒரு வாரிசை ஏற்படுத்தியிருக்கலாமே!
அல்லாஹ்தான் அவர்களுக்கும் குழந்தை பாக்கியத்தை வழங்கியிருப்பதிலிருந்து
பிள்ளையைத் தரும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே என்று தெளிவாகிறது.
இப்ராஹீம் நபிக்கே இந்த ஆற்றல் இல்லை எனும் போது ஷாகுல் ஹமீதுக்கு
எங்கிருந்து வந்தது?
அதே போன்று ஸக்கரிய்யா (அலை) அவர்களும் முதுமையை அடைந்தும் தனக்கென்று
ஒரு வாரிசு இல்லாதவர்களாக இருக்கின்றார். அவருக்கும் இறைவன் பிள்ளைப் பேறை வழங்குகின்றான்.
(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக்
கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு
பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில்
நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன்.
என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை நீ எனக்கு வழங்குவாயாக!
அவர் எனக்கும்,
யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை
(உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.) “ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம்.
அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை’’ (என இறைவன் கூறினான்) “என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின்
இறுதியை அடைந்து விட்டேன்’’ என்று அவர் கூறினார். “அப்படித் தான்’’ என்று (இறைவன்) கூறினான். “அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த
நிலையில் உம்மைப் படைத்தேன்’ எனவும் உமது இறைவன் கூறினான்’’ (என்று கூறப்பட்டது.)
அல்குர்ஆன் 19:2-9
இவ்வாறு இறைத்தூதர்கள் கூட பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார்கள்.
அவர்கள் உட்பட அனைவருக்கும் இறைவன் தான் அந்த பாக்கியத்தை வழங்குகின்றான்.
அது இறைவனுடைய அதிகாரத்திற்குட்பட்ட விஷயமாக உள்ளது.
ஆனால், அந்த அதிகாரத்தில் ஷாகுல் ஹமீதுக்குப்
பங்கு இருப்பதைப் போன்ற ஒரு விஷமத்தனத்தை மக்கள் மனதில் விதைக்கக் கூடியதாக இப்பாடல்
வரியும் கஃப்ஸாக்களும் அமைந்துள்ளன.
இறந்துவிட்ட பெரியார்களை, இறைத்தூதர்களை
விட பெரும் நல்லடியார்களாகச் சித்தரிக்க முயன்று அவர்களைக் கடவுளாக ஆக்கிவிட்டனர் இக்கயவர்கள்.
இவ்வாறு இஸ்லாமியப் பாடல்கள் எனும் பெயரால் சமுதாயத்தில் ஒலிபரப்பப்படும்
பாடல்கள் அனைத்தும் இஸ்லாமிய அகீதாவிற்கு நேர் எதிராக உள்ளன.
அருள் செய்யும் அதிகாரம், குழந்தை
பாக்கியம் தருவது, மறைவான ஞானம், நோய் நிவாரணம் அளிப்பது போன்ற இறைவனுக்கு மட்டுமே குறிப்பாக
எந்தத் தன்மைகள், அதிகாரங்கள் உள்ளனவோ அவற்றில்
பங்காளிகளை ஏற்படுத்தக் கூடியதாகத்தான் ஒட்டுமொத்த பாடல்களின் கருவும் அமைந்துள்ளன.
“சந்ததியை ஏற்படுத்திக்
கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன்
எனும் இழிவும் அவனுக்கு இல்லை’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
அல்குர்ஆன் 17:111
இதுபோன்ற பாடல்கள் கூறும் கருத்து உண்மை என நம்பினால் இணை கற்பித்தல்
எனும் மாபாதக பாவத்தைச் சம்பாதித்தவர்களாக ஆவோம். அப்பாவம் இறைவனால் மன்னிக்கவும் படாது.
அப்பாவச் சுமையுடன் சுவனத்தின் வாடையையும் நுகர முடியாது என்பதைச் சிந்திக்கும் மக்கள்
உணர்ந்து கொள்வார்கள்.
EGATHUVAM JAN 2017