May 31, 2017

இணையை விரும்பாத ஏகாதிபத்திய தலைமை! ஜெயலலிதா மரணம் சொல்கின்ற சிந்தனைகள்!

இணையை விரும்பாத ஏகாதிபத்திய தலைமை! ஜெயலலிதா மரணம் சொல்கின்ற சிந்தனைகள்!

இந்தியாவில் முக்கியத் தலைவர்கள் இறந்து விட்டால் அந்தச் சாவு, அந்தத்  தலைவர்களை மட்டும் காவு கொள்வதில்லை. கூடவே குடிமக்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினரையும் காவு கொண்டு  விடுகின்றது. குடிமக்களில் ஒரு கூட்டத்தையே கூட்டிப் போய் விடுகின்றது. இது இந்தியாவின் தலையெழுத்து.

1984ல் தனது சீக்கிய மெய்க்காப்பாளரால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சாவின் வெறியாட்டம்தலைநகர் டெல்லியை கொலை நகராக்கியது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோரத் தாண்டவம் ஆடியது. இந்திய அரசாங்கத்தின் கணக்குப்படி 2700 பேர் கொலை வெறிக் கூட்டத்தால் கொல்லப்பட்டனர்.

டெல்லி காவல் துறையே உயிர்க்கொல்லி காவுத் துறையாக மாறி சீக்கியர்களின் உயிர்களை கண்மூடித்தனமாகப் பறித்தது. செத்து விடு அல்லது ஊரை விட்டுச் சென்று விடு என்ற முழக்கத்துடன் கொலைவெறிக் கும்பல் சீக்கியர்களை ஊரை விட்டே துரத்தியடித்தது.  இந்தக் காட்டுமிராண்டித்தனமான கருவறுப்புப் படலத்திலிருந்து 20,000 பேர் தலை தப்பியது புண்ணியம் என்று தப்பி ஓடினர்.

நாஜியின் ஜெர்மனியில் ஒரு யூதர் எந்த நிலையில் இருந்தாரோ அது போல சொந்த நாட்டிலேயே தான் அகதியாக உணர்ந்ததாக பிரபல எழுத்தாளரும் 1984 கலவர சமயத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவருமான குஷ்வந்த் சிங் குறிப்பிட்டார்.

அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் தம் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் அளவு கலவரத்தின் தாக்கம் இருந்ததை பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ். நருலா குறிப்பிட்டுள்ளார். இது டெல்லி கலவரத்தின் கோரத்தின், கொடூரத்தின் பரிமாணத்தையும், பயங்கரத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

தனது தாயார் மரணத்திற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜிவ் காந்தியிடம் சிறுபான்மை சீக்கிய சமுதாயம் குறிவைத்துக் கொல்லப்பட்டது குறித்துக் கேட்டதற்கு, ‘ஒரு பெருமரம் பெயர்ந்து விழும் போது பூமி குலுங்குவதைத் தடுக்க முடியாது என்று தான்தோன்றித்தனமான பதிலை அளித்தார். இதிலிருந்து இந்தியாவில் மனித உயிரின் மதிப்பென்ன? என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு தலைவர் என்ற மரம் செத்து, சரிகின்ற போது அல்லது சாய்க்கப்படும் போது அதை ஒட்டி எத்தனை இதர மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன என்பதற்கு இந்திரா காந்தி மரணம் ஓர் எடுத்துக்காட்டாகும். இதுதான் இந்தியாவின் நிலை! இந்தியாவின் தலைவிதி!

இது மனித உயிருக்கு ஏற்படுகின்ற பாதிப்பென்றால் தனி மனித  உடைமைகளுக்கும், பொது  உடைமைகளுக்கும் ஏற்படுகின்ற பாதிப்பை ஏட்டில் வடித்து விட முடியாது.

நடிகர் ராஜ்குமார் இறந்த போது கொளுத்தப்பட்ட பஸ்கள் எண்ணிக்கை 100 ஆகும்.

இது எதை உணர்த்துகின்றதுஇதைச் செய்பவர்கள் மனிதர்கள் அல்ல! மிருகங்கள் தான் என்பதை உணர்த்துகின்றது. தலைவர் இறந்து விட்டால் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும். கடைகள் இழுத்து மூடப்பட வேண்டும்.  அரசு அலுவலகங்களுக்கு, பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட வேண்டும். மருத்துவமனையிலிருந்து தலைவரின் சவத்தை ஆம்புலன்ஸில் ஏற்றியது முதல் பொதுமக்கள் மரியாதை செய்வதற்காக வைக்கப்பட்டு சவ வண்டியில் ஏற்றி சகல ராணுவ மரியாதையுடன் சவக்குழியில் இறக்குகின்ற வரை அல்லது கொளுத்தி சாம்பலாக்கப்படுகின்ற வரை நேரலை காட்சிகளாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும். அது வரை நாடே செயல்படாமல் முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவெல்லாம் நடைபெறவில்லை என்றால் தலைவரின் ஆன்மா சாந்தியடையாது.

இதுபோன்ற அநியாயத்தையும் அராஜகத்தையும் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

ஆனால் அண்மையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த போது இந்த அவல நிலையில் கொஞ்ச மாற்றம் ஏற்பட்டுள்ளது. பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் அவை கொளுத்தப்படவில்லை. ஒரு சில இடங்களில் தவிர பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் கூட  நடைபெறவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்றாலும் அவை அடித்து உடைக்கப்படவில்லை. அரசாங்க மற்றும் தனியார் சொத்துகள் எதுவும் சூறையாடப்படவில்லை. தீக்கிரையாக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர் இறந்தவுடன் எதிர்க்கட்சியான திமுகவின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. அதுபோன்ற அராஜக நடவடிக்கைகள் ஜெயலலிதா மரணத்தின் போது அரங்கேறவில்லை. ரயில் பயணங்கள் பாதிப்புக்குள்ளாகவில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் மூடிக் கிடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்த்து வேறு பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த வகையில் தமிழகம் இந்த முறை தகாத சம்பவங்களை விட்டும் தப்பி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

அதற்காக தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இனிவரும் காலங்களில் தலைவர்களின் இறப்பின் போது இந்தப் பண்பாடு தொடருமானால் தமிழகம் இந்த  நல்முன்மாதிரிக்கு இந்தியாவிற்கே சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகத் திகழும் என்பதில் எந்த சந்தேகமில்லை

இது, ஜெயலலிதாவின் இறப்பையொட்டி நாம் பார்க்க வேண்டிய முதல் சிந்தனையாகும்.

ஜெயலலிதாவின் ஆசான் எம்.ஜி.ஆர். இறந்த போது 30க்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இலட்சக்கணக்கோர் மொட்டை அடித்துக் கொண்டனர்.

ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பின்னர் இறந்த போதும் இதுவரை 77 பேர்கள் இறந்துள்ளனர். இந்தத் தகவலை ழிஞிஜிக்ஷி குறிப்பிடுகின்றது. ஆனால் 470 பேர் இறந்ததாக அதிமுக அறிவித்துள்ளது. இதில் அதிர்ச்சியில் இறந்தவர்களும் உண்டு; தற்கொலை செய்தவர்களும் உண்டு. இவர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலிலதா இறந்த செய்தி கேட்டு தனது கை விரலை ஒருவர் வெட்டியுள்ளார். தற்கொலை முயற்சி செய்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 50,000 ரூபாய் ஆறுதல் தொகை அளிக்கப்பட்டது.

தலைவர்களும், தங்களுக்குப் பிடித்த நடிகர்களும் சாகின்ற போது அல்லது குற்றம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்படும் போது தற்கொலை சாவுகள்  நடப்பது இந்தியாவின் மற்றொரு சாபக் கேடும் தலைவிதியுமாகும். இதில் ஜெயலலிதாவின் சிறைவாசம், சுகவீனம், மரணம் ஒரு விதி விலக்கல்ல! இந்த சாபக்கேட்டை விட்டு தமிழ் நாடும் இந்தியாவும் தப்ப வேண்டுமென்றால், அதற்கு இஸ்லாமிய மார்க்கம் தான் தீர்வாகும்.

தாம் விரும்புகின்ற பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய தலைவர்கள் சாகக் கூடாது என்று நினைக்கும் தொண்டர்கள், தோழர்கள், சீடர்கள், பக்தர்கள் இருக்கத் தான் செய்வார்கள். முஸ்லிம்களிலும் அவ்வாறு இருந்திருக்கின்றார்கள்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒழுக்க புருஷருமான முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) அவர்கள், ‘முஹம்மது நபி (ஸல்) மரணிக்கவில்லை என்ற வாதத்தை வைக்கின்றார்கள். நபித்தோழர்களும் இந்த  வாதத்தின் மயக்கத்தில்  தம்மை மறந்து விடுகின்றார்கள். இத்தனைக்கும் இடையே ‘‘ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” (அல்குர்ஆன் 29:57, 21:35, 3:185)  என்று ஒவ்வொரு முஸ்லிமுக்கும் திருக்குர்ஆன் பாடம் நடத்தியிருக்கின்றது.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்

அல்குர்ஆன் 3:144

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கக் கூடியவர்கள்  என்று அல்லாஹ் இந்த வசனத்தில் உலக மக்களுக்கு  தெளிவாகச் சொல்லி விடுகின்றான்.

நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

அல்குர்ஆன் 39:30

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா?

அல்குர்ஆன் 21:35

நீரும் மரணிக்கக்கூடியவர் தாம் என்றும், நீங்கள் நிரந்தரமாக வாழக்கூடியவர் அல்லர் என்றும் நபி (ஸல்) அவர்களை நோக்கி நேரடியாகவும்  கூறிவிடுகின்றான். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தங்கள் வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பத்தில் உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன் என்று தன்னுடைய தோழர்களுக்கும் மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றார்கள். இதை ஆதாரபூர்வமான நபிமொழிகளில் நாம் அதிகம் பார்க்க முடிகின்றது.

1. இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு முஸ்லிமும் தனது அன்றாட வாழ்க்கையில்  உறங்கும் போதும் விழிக்கும் போதும் மரணத்தை நினைவூட்டுகின்ற சில பிரார்த்தனைகளை சொல்ல வேண்டும் என்று கூறுகின்றது (மரணம் சம்பந்தமாக இதே இதழில் இன்னாலில்லாஹி என்ற தனிக் கட்டுரை இடம் பெறுகின்றது. அதனால் இங்கு இந்த விபரம் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது)

2. மரணத் தகவல் ஒருவரை அடைகின்ற போது, தானும் மரணிக்கக் கூடியவன் தான் என்ற கருத்துகள் அடங்கிய சமாதான, தன்னையே தேற்றிக் கொள்கின்ற ஆறுதல் வாசகங்களை வாயால் சொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம்  தன்னையும் அந்த மரணம் தழுவாமல் விடாது என்று உளவியல் ரீதியாக அவரை ஒப்புக் கொள்ள வைத்து, அந்த மரணச் செய்தியை ஜீரணிக்கச் செய்கின்றது. அத்துடன் இதன் மூலம் அவருக்கு ஏற்படவிருக்கின்ற மரண அதிர்ச்சியின் பாதிப்பை விட்டும் அவரைக் காக்கின்றது.

3. நோயாளிகளை விசாரிக்கச் செல்லுமாறு  ஒரு முஸ்லிமுக்கு வழிகாட்டுவதன் மூலமும் மரணத்தை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது.

4. மரணத்தை நினைப்பதற்காக மயானங்களைச் சந்தியுங்கள் என்று குறிப்பிட்டு, இறந்தவர்களின் அடக்கத்தலங்களான பொது மையவாடிகளை அடிக்கடி சந்திக்கச் சொல்கின்றது. அடக்கத்தலங்களைச் சந்திக்கும் போது, இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்றாலும் நாங்களும் இறைவன் நாடினால் உங்களுடன் விரைவில் வந்து சேர்ந்து விடுவோம் என்ற செய்தியைச் சேர்த்து சொல்லச் செய்கின்றது. இதன் வாயிலாக அவ்வப்போது  மரண ஒத்திகைப் பயிற்சியை இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அளிக்கின்றது.

இத்தனை பாடங்களை படித்தவர்களில் ஒருவர் தான் உமர் (ரலி) அவர்கள். அப்படிப்பட்ட உமர் தான் முஹம்மது நபி மரணிக்கவில்லை என்ற வாதத்தை வைக்கின்றார்கள்.

அப்போது தான் அந்த உமரை விடவும் மூத்தவரும் முன்னவருமான அபூபக்ர் (ரலி) அவர்கள், அந்த முஹம்மது நபியின் மரணத்தைப் பற்றிய குர்ஆன் வசனங்களை நினைவுபடுத்தியதும் உமர் (ரலி) சுதாரித்து நிதானத்திற்கு வந்து விடுகின்றார்கள்.

வரலாற்றின் இந்த முக்கிய நிகழ்வுக்குப் பின்னர் முஸ்லிம்களிடம் மரணத்தைப் பற்றிய சரியான பார்வை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதிந்து விட்டது. அதனால் முஸ்லிம்களிடம் மரணம் பற்றிய செய்தி பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் ஒரு வழக்கம் உள்ளது.ஒருவர் வீட்டை விட்டுக் கிளம்பும் போது, நான் போகின்றேன் என்று சொல்லக் கூடாது. மாறாக, நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்ல வேண்டும்.  காரணம் போகின்றேன் என்ற சொல்லிச் சென்றவர் திரும்ப வராமல் ஆகி விடுவார் என்ற பயம் தான். அந்த அளவுக்கு மரணத்தைப் பற்றிய பயம் மக்களிடம்  ஆட்கொண்டுள்ளது. சாவு, இறப்பு என்ற வார்த்தையை அபசகுனமான வார்த்தையாக மக்கள் கருதுகின்றனர்.  இஸ்லாம் மவ்த் மரணம்  என்ற வார்த்தையை தண்ணீர் மாதிரி மக்களுடைய வாய்களில் புழங்க வைத்துள்ளது.

எம்மாபெரிய பாசத்திற்குரிய  தலைவரானாலும், நெருங்கிய உறவினரானாலும் அவர் இறந்து விட்டால் அவரது இறப்புச் செய்தி  ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் பாதிப்பையும், கவலையையும் ஏற்படுத்தினாலும் அந்த செய்தியைக் கேட்ட மாத்திரத்தில்  அவர் அதிர்ச்சியில் மரணிக்கின்ற நிலைக்கு  அல்லது தற்கொலை செய்து தன்னை மாய்த்துக் கொள்கின்ற விரக்தி மற்றும் விளிம்பு  நிலைக்கு அது அவரைக் கொண்டு போவதில்லை. இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமிய மார்க்கம் படித்துக் கொடுத்த மரணம் பற்றிய பயிற்சியும் பக்குவமும் தான். இஸ்லாம் கொடுக்கின்ற  இந்த உளவியல் ரீதியான தொடுதல் தான் இது போன்ற மரணச் செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் மரணிக்கின்ற மரணத்தை விட்டும் மக்களைக் காக்கின்றது.

ஜெயலலிதாவின் மரண செய்தி கேட்டு இத்தனை பேர்கள் இறந்திருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் இறப்பு பற்றிய இதுபோன்ற உளவியல் ரீதியான பயிற்சி இல்லாதது தான். மரணத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனைத்து விதமான சோதனைகளுக்கும் இஸ்லாம் இது போன்ற மாமருந்தை மக்களுக்கு அளிக்கின்றது. இத்தகைய பாடத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் இருக்கின்ற ஒரே வழி அவர்கள் இஸ்லாத்தை ஏற்பது தான். இது ஜெவின் மரணத்தை ஒட்டி நாம் பார்க்க வேண்டிய இரண்டாவது சிந்தனையாகும்.

மறைந்த எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சித் தலைமை 1989ல் ஜெயலலிதாவிடம் வந்தது. அதன் பிறகு 1991ல் ஆட்சித் தலைமையும் அவருக்குக் கிடைத்தது. அதன் பின்னர் 2001 முதல் 2006, 2011 முதல் 2016, மீண்டும் 2016ல்  ஆட்சித் தலைமை கிடைத்தது. மரணிக்கின்ற வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.

இக்காலக் கட்டங்களில் யாரும் அதிகாரத்தில் தனக்கு இணையாகவும், சமமாகவும் ஆக்கப்படுவதை அவர் ஒரு போதும் சம்மதித்ததுமில்லை; சரி கண்டதுமில்லை.  திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று நான்கு அதிகார மையங்கள் இருக்கின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை ஒரே ஓர் அதிகார மையம் தான். காரணம் தனக்கு இணையாக எந்த ஒரு சக்தியும் உருவாகாத அளவில் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்.

வருங்கால முதல்வரே!என்று வார்த்தையளவில் யாராவது  ஒரு தொண்டன் அவரது அமைச்சர்களில் ஒருவரை வாழ்த்தி விட்டாலோ, வர்ணித்து விட்டாலோ போதும், அவ்வளவு தான்! தொண்டர் செய்த தப்புக்கு அந்த அமைச்சர் பொறுப்பாக மாட்டார் என்றாலும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு அதள பாதாளத்தில் தூக்கி எறியப்படுவார். கட்சியில் இப்படி இணையாகப் புறப்பட்டவர்கள் புரட்டி எறியப்பட்டுள்ளார்கள். அந்த அளவுக்கு இணை வைப்பை விரும்பாதவர்.

தனக்கு நிகராக யாரும் எழுந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்  இரண்டாம் கட்டத் தலைவரை, தான் உயிருடன் இருக்கும் வரை அவர் அறிமுகப்படுத்தவில்லை. தான் இறந்த பின்பு தனது கட்சி பிளவுண்டு விடக் கூடாது; பிரிந்து, சிதறுண்டு சின்னா பின்னாமாகி விடக் கூடாது என்று கட்சி நலனில் கரிசனம் கொண்டு, கவலை கொண்டு ஓர் இரண்டாம் கட்டத் தலைவரை அவர் அடையாளம் காட்டியிருக்க  வேண்டும். அப்படிக் காட்டினாரா என்றால் இல்லை. இதற்குக் காரணம் தனக்கு இணை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்.

மரணத்தை தழுவக் கூடிய இவரே தனக்கு நிகரான இணை ஏற்படுவதை விரும்பாத போது, என்றென்றும் உயிருடன் இருக்கக் கூடிய வல்ல நாயன் தனக்கு இணை வைப்பதை எள்ளளவேனும் விரும்புவானா? என்று  நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

உங்களிலிருந்தே அவன் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் பங்காளிகளாக உங்களது அடிமைகளில் எவரும் உள்ளனரா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இருப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.

அல்குர்ஆன்  30:28

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

அல்குர்ஆன் 16:71

தனக்குக் கீழுள்ளவர்களை, தன்னளவிற்குத் தரம் உயர்த்தி, பங்காளியாக்குவதை பலவீனமான இந்த மனிதன் பயப்படுகின்றான். அதற்கு  இசைய மறுக்கின்றான். ஆற்றல் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இணையாளர், பங்காளியரை வைத்துக் கொள்ள விரும்புவானா? என்பதை  மேற்கண்ட இரண்டு வசனங்களும்  தெளிவாக உணர்த்துகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பிடிக்குமா? என்று முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்றாவது சிந்தனையாகும்.

அதிமுகவுக்காகத் தங்களையே அர்ப்பணித்து, தியாகம் செய்த எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் இலட்சோப இலட்சம் தொண்டர்கள் இருந்தாலும்  பொதுச் செயலாளர் பதவி இன்று சசிகலாவை நோக்கிப் பாய்கின்றது. அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் பதவியாகும். அப்படி அந்தப் பொறுப்புக்கு சசிகலா தான் என்றால் அவர் தான் தமிழகத்தின் முதல்வராவார். இன்று அஇஅதிமுக வட்டாரம் அதையும் பேச ஆரம்பித்து விட்டது. இது எதைக் காட்டுகின்றது? அதிகாரத்தை தான் நாடியவருக்கு  வழங்குவபவன் அல்லாஹ் தான்.

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:26

என்று குர்ஆன் கூறக் கூடிய அந்த உண்மை இங்கு நிரூபணம் ஆகின்றது. இது நாம் ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து தெரியக் கூடிய நான்காவது சிந்தனையாகும்.

ஜெயலலிதா அப்போல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் அம்மா குணமாகி திரும்ப வந்து விடுவார்கள் என்று  சோதிடர்கள் பலர் சோதிடம் சொன்னார்கள். அது நிறைவேறாமல், ஜெயலலிதா பிணமாகத் தான் திரும்ப வந்தார். இதிலிருந்து சோதிடம் முழுக்க முழுக்கப் பொய் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி உள்ளது. இது ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து  தெரியக் கூடிய ஐந்தாவது சிந்தனையாகும்.

ஜெயலிலாதா இறந்த பின்பு எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப் பட்டிருக்கின்றார். இதற்காக முதலமைச்சர் பன்னீர் செல்வம்  தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக 15 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இறந்த தலைவர்கள் பெயரால் நினைவு மண்டபங்கள், நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படுக்கின்றன. சலவை மற்றும் பளிங்குக் கற்களில் சமாதிகள் கட்டப்படுகின்றன. வாழ்க்கையைக் கழிப்பதற்காகக் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகி, கடைசியில் ஏதுமறியாத பச்சைக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டுத் தாங்களும் தற்கொலை செய்கின்ற தம்பதிகள் பற்றிய  செய்திகள் பத்திரிக்கைகளில் அன்றாடம்  வெளியாவதை நாம் பார்க்கின்றோம்.

கிட்னி செயல்பாடு இழந்தவர்கள் கிட்னி மாற்றுப் பதிகத்திற்கும், டயாலிசிஸுக்கும், இதய நோயாளிகள் மாற்று இதய சிகிச்சைக்கென்றும் குழந்தைகளின் இதய வால்வுகளை மாற்றுவதற்கும்  பணத்திற்காக ஆலாய்ப் பறக்கின்ற, அலையாய் அலைகின்ற மக்கள் வசிக்கக் கூடிய நம் நாட்டில் பல கோடி மக்களின் வரிப் பணத்தை, பொருளாதாரத்தை இப்படி சமாதிகளில்  சாம்பலாக்குவதும், வெண்கலச் சிலைகளில் விரயமாக்குவதும் அக்கிரமும் அநியாயமும் ஆகும். இது   இந்தியாவின் மற்றொரு சாபக்கேடாகும்.


இது நாம் ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து பெறக் கூடிய ஆறாவது சிந்தனையாகும்.

EGATHUVAM JAN 2017