May 7, 2017

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள் தொடர்: 6 - பால்ய விவாகமும் மறுக்கும் உரிமையும்

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள் தொடர்: 6 - பால்ய விவாகமும் மறுக்கும் உரிமையும்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மத்ஹபு வழி

வயதுக்கு வராத சிறுவர், சிறுமியை தகப்பன் அல்லது பாட்டன் திருமணம் முடித்து வைத்து விட்டால் வயதுக்கு வந்ததும் அவ்விருவருக்கும் சுய விருப்பம் கிடையாது. (அதாவது அந்தத் திருமண உறவை முறிக்க முடியாது)

நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198

சிறுவர், சிறுமியின் பால்ய விவாகம் கூடும்.

(நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198)

பால்ய விவாகம் கூடும் என்றும், இதற்குப் பிறகு அவ்விருவரும் பருவமடைந்து விட்டால் திருமண பந்தத்தை முறிக்கும் உரிமை அவ்விருவருக்கும் இல்லை என்றும் ஹனபி மத்ஹபு கூறுகின்றது. இமாம் அபூஹனிபா மற்றும் அவரது மாணவர் அபூயூசுப் ஆகியோர் இச்சட்டத்தை முன்மொழிவதாக இதன் தொடர்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

மாநபி வழி

ஹனபி மத்ஹபு சொல்லும் இச்சட்டத்தில் நபிவழிக்கு முரணான இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று பால்ய விவாகம். இதை நபிவழி அனுமதிக்கவில்லை.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

அல்குர்ஆன் 4:21

இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும். ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியோ, முதிர்ச்சியோ இல்லாத சிறுவர், சிறுமிகள் திருமணம் என்ற கடுமையான ஒப்பந்தத்தைச் செய்யலாகாது என்பது இந்த வசனம் தெரிவிக்கும் பொருளாகும். ஆனால் மத்ஹபோ இந்த வசனத்தைச் சற்றும் கண்டு கொள்ளாமல் பால்ய விவாகம் கூடும் என்கிறது.

நம்மில் யாரும் ஒரு வியாபாரம் பற்றி அறியாத சிறுவனோடு வியாபார ஒப்பந்தம் செய்து கொள்வோமா? சொத்து பத்துகளை வாங்கும், விற்கும் ஒப்பந்தத்தைச் செய்வோமா? இவைகளையே செய்ய மாட்டோம் என்றால் திருமணம் என்பது இவைகளை விடக் கடுமையான ஒப்பந்தம் இல்லையா?

இந்த நடைமுறை அறிவு இருந்தாலே பால்ய விவாகத்தை அனுமதிக்கும் மத்ஹபுச் சட்டம் தவறு என்பதை உணரலாம். மேலும் திருமணத்திற்குப் பின் அவ்விருவரும் பருவத்தை எய்துவிட்டால் பிரிந்து கொள்ளும் உரிமை இல்லை என்றும் மத்ஹபு போதிக்கின்றது. இதுவும் நபிவழிக்கு எதிரான சட்டமே.

கன்னிப்பெண்ணாக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் திருமணத்திற்கு அவளின் சம்மதம் மிக அவசியம் என்பது நபிவழி.

"கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது. கன்னி கழிந்த பெண்ணிடம் உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6968

திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனில் அந்த பந்தத்திலிருந்து விலகும் உரிமை பெண்ணுக்கு உண்டு. நபியவர்கள் தங்கள் வாழ்க்கையிலே இதை நடைமுறைப்படுத்தி உள்ளார்கள்.

கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

நூல்: புகாரி 6945

ஆனால் அறியாத பருவத்தில், அவர்களது விருப்பம் என்ன என்பதே தெரியாத நிலையில் திருமணம் முடித்து வைக்கலாம் என்று மத்ஹபு கூறுவதோடு விபரம் அறிந்த பின் பிரியும் உரிமை கிடையாது என்றும் சட்டம் வகுப்பது சரியா? இது நபிவழி அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டமா? என்பதை அறிவுள்ள மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நிர்ப்பந்தத்தின் நிலை மத்ஹபு வழி



திருமணம், விவாகரத்து, விவாகரத்தைத் திரும்பப் பெறுதல், மனைவியுடன் உறவு கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தல், போர் இன்றியே எதிரிகளிடமிருந்து கிடைக்கும் வெற்றிப் பொருளை எடுத்துக் கொள்ளுதல், லிஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பாக்குதல்), அடிமையை விடுதலை செய்தல், பழிக்குப் பழி வாங்காது மன்னித்தல், சத்தியம், நேர்ச்சை ஆகிய பத்து காரியங்களையும் நிர்ப்பந்தப்படுத்தி செய்தாலும் அக்காரியங்கள் செல்லும்.

நூல்: ஷரஹ் பத்ஹுல் கதீர்  பாகம் 3, பக்கம் 489

திருமணம், விவாகரத்து உள்ளிட்ட பத்துக் காரியங்களை நிர்ப்பந்தப்படுத்தி செய்தால் அது செல்லும் என்று மத்ஹபு கூறுகின்றது. அதாவது ஒரு பெண்ணின் தந்தையைக் கத்தியைக் காட்டி மிரட்டி, உனது மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்காவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி, அவளைத் திருமணம் செய்தால் அந்தப் பெண் அவனுக்கு மனைவியாகி விடுவாள் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

அதே போல் கணவன், மனைவி ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது, யாரேனும் ஒருவர் வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நீ தலாக் விடு என்று கூறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தக் கணவன் தன் மனைவியைத் தலாக் விட்டால் அந்தத் தலாக் செல்லுபடியாகும், அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று இந்தச் சட்டம் கூறுகின்றது. இச்சட்டத்திற்கு மாநபிவழியில் ஆதாரமுண்டா என்பதை காண்போம்.

மாநபி வழி

இஸ்லாத்தில் எந்த ஒரு காரியத்திற்காகவும் யாரையும் நிர்ப்பந்திக்க கூடாது. ஏனெனில் நிர்ப்பந்தம் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஒரு காரியத்தை விரும்பி செய்தாலே ஒழிய நிர்ப்பந்தத்தினால் செய்தால் அது நிரந்தரமாகாது.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:256

"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 18:29

இது அறிவுரை. விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வார்.

அல்குர்ஆன் 73:19

இதுவே உண்மையான நாள்! விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் 78:39

இன்னும் ஏராளமான வசனங்கள் மற்றும் நபிமொழிகள் இஸ்லாத்தில் உள்ள எந்தக் காரியத்திற்காகவும் யாரையும் நிர்பந்திக்கக் கூடாது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கின்றன.

நிர்ப்பந்தம் கூடாது என்றால் நிர்ப்பந்தித்துச் செய்யப்படும் காரியம் செல்லாது என்றே பொருளாகும். இந்த கருத்தும் மேற்கண்ட வசனங்களில் உள்ளது. ஆனால் ஹனபி மத்ஹப் இதற்கு எதிராக நிர்ப்பந்தித்துச் செய்தால் அது செல்லும் என்று தீர்ப்பளிக்கின்றது.

நிர்ப்பந்தம் செல்லாது

நிர்ப்பந்தித்துச் செய்யப்படும் காரியம் செல்லும் என்றால் ஹனபி மத்ஹபு கூறும் பத்து விஷயத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இஸ்லாம் ஆகும். ஏனெனில் இஸ்லாத்தை ஏற்பது எரியும் நரகை விட்டும் காக்கக் கூடியது, சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லக்கூடியது. இவ்வளவு சிறப்புமிக்க இஸ்லாத்தை ஏற்குமாறு ஒருவரை நிர்ப்பந்தித்து அவரும் ஏற்றுக் கொண்டால் இது செல்லும் என்பார்களா?

அப்படியானால் நபிகள் நாயகம் காலத்தில் எத்தனையோ காஃபிர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் தாம் வலிமை (ஆட்சி) பெற்றிருந்த காலத்தில் மக்கள் நலன் கருதி காஃபிர்களை நிர்ப்பந்தித்திருப்பார்களே? ஏன் செய்யவில்லை? இறைவன் ஏன் இதைக் கட்டளையிடாமல் இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்று கூற வேண்டும்? நிர்ப்பந்தத்தால் செய்யும் காரியம் செல்லாது என்பதால் தான்.

உதாரணமாக, நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தனது மனைவியைத் தலாக் கூறி விட்டார் என்றால், அது வெறும் வாயளவில் சொன்னதாகத் தான் ஆகுமே தவிர உண்மையில் தலாக் ஆகாது. நிர்ப்பந்தத்தால் அல்லாஹ்வை மறுத்தால் கூட அது குற்றமாகாது.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப் பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.

அல்குர்ஆன் 16:106

நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ்வை மறுத்து, குஃப்ரான வார்த்தைகளைச் சொல்லி விட்டால் கூட அதனால் அவர் காஃபிராகி விட மாட்டார் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது. எனவே நிர்ப்பந்தத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் செல்லாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

கேள்விக்குறியாக்கும் சட்டம்

நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்தால் அது செல்லும் என்ற ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி யாரும், யாருடைய மனைவியையும் அல்லது எந்தப் பெண்ணையும் நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டால் ஊரில் எந்தப் பெண்ணும் நிம்மதியாக நடமாட முடியாது, வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்ற நிலை ஏற்பட்டு விடும்.

ஹனபி மத்ஹபைச் சார்ந்த ஆலிம்களில் ஒருவரை நிர்ப்பந்தித்து அவரது மனைவியை தலாக் விடச் சொன்னால் அவர் மனைவியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவாரா? அல்லது நிர்ப்பந்தத்தில் தலாக் என்று கூறினாலும் அது தலாக் ஆகாது என்று கூறுவாரா?

மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் அந்த மத்ஹபைத் தூக்கி எறிந்து விடுவது தான் இந்த மத்ஹபு ஆலிம்களின் நிலைபாடு.

மேலும் பல விஷயங்களிலிருந்து குறிப்பிட்ட இந்தப் பத்து விஷயங்களை மட்டும் கூறுவதில் எந்தத் தத்துவமும் இல்லை. ஆக மத்ஹபு கூறும் இந்தச் சட்டத்திற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

கஃபா இடம் பெயருமா?

புனித ஆலயமான கஃபாவை மக்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான், (பார்க்க: அல்குர்ஆன் 5:97)

மக்களுக்காக மக்கள் அங்கே சென்று தவாப் செய்வதற்காக கஃபாவை நிலையானதாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். கஃபா எங்கேயும் நகர்ந்து செல்லாது என்பதையும், அதைச் சந்திக்கச் செல்லும் மக்களை ஏமாற்றாது என்பதையும் திட்டவட்டமாக இந்த வசனம் கூறுகிறது.

மத்ஹபு வழி

கராமத் உடையவர்களைச் சந்திப்பதற்காக கஃபா ஆலயம் இடம் பெயர்ந்து விட்டால் அது அமைந்திருந்த இடத்தை நோக்கித் தொழலாம்.

 (துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 402)

கஃபா நிலையானது என்று இறைவன் கூறியிருக்கும் போது அது இடம் பெயர்ந்து செல்லலாம் என மத்ஹபு கூறுகிறது.

கஃபா ஆலயம் எவரையும் சந்திப்பதற்காக இடம் பெயருமா? பெயரும் என்றால் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக அது மதீனாவிற்குச் சென்றிருக்குமே? நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நாடி ஹஜ் செய்ய வந்த போது தடுக்கப்பட்டார்களே அப்போது நபிகளாரை சந்திக்கச் செல்லவோ, இடம் பெயரவோ இல்லையே?

நபிகள் நாயகத்திற்கே இடம் பெயராத கஃபா இனி வேறு யாருக்கும் இடம் பெயருமா?

குர்ஆனுக்கு முரணாகவும் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையிலும் இந்த நூலாசிரியர் கற்பனை செய்து அதிசயமான சட்டத்தைச் சொல்லியிருக்கின்றார். இதற்கும் மாநபி வழிக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அறிவை கொண்டு சிந்தித்தாலே தெளிவாகி விடும்.

ஹவ்வாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டது ஏன்?

மாநபி வழி

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:222

மாதவிடாய் பற்றி இறைவன் கூறும் போது அது ஓர் தொல்லை என்று குறிப்பிடுகிறான். அந்தச் சமயத்தில் பேண வேண்டிய ஒழுங்குமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் கற்றுத் தந்துள்ளார்கள். மற்ற படி இது ஏற்பட்டதற்கான காரணத்தை, பின்னணியை நபிகளார் கூறவில்லை. பெண்களுக்கு இறைவன் வழங்கிய ஒரு சோதனை என்று இவ்வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

மத்ஹபு வழி

மாதவிடாய் ஏற்பட்டதற்கான காரணம், (தடுக்கப்பட்ட) மரத்தில் உள்ளதை ஹவ்வா சாப்பிட்டதால் தான். அதனால் தான் அல்லாஹ்வின் இந்தச் சோதனை துவங்கியது.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 283

தடுக்கப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்டதால் தான் மாதவிடாய் ஏற்பட்டது என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ எங்காவது கூறியிருக்கின்றார்களா? அதைச் சாப்பிட்டதால் என்ன ஏற்பட்டது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன.

அல்குர்ஆன் 7:19

வெட்கத்தலங்கள் வெளியாகின என்று தான் அல்லாஹ் கூறுகின்றானே தவிர இதனால் தான் மாதவிடாய் ஏற்பட்டது என்று கூறவில்லை. மேலும் இந்த வசனத்தில் இருவருமே மரத்திலிருந்து சுவைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களது இந்த அற்புதமான கண்டுபிடிப்பின் படி பார்த்தால் ஆதம் (அலை) அவர்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டிருக்க வேண்டும்.


மத்ஹபு நூல்களை எழுதியவர்கள் குர்ஆன் வசனங்களைக் கூட சரியாக விளங்காமல் குர்ஆன் மற்றும் நபிவழிக்கு முரணாகவும், இவ்விரண்டிலும் இல்லாததையுமே சட்டம் என்ற பெயரில் எழுதி வைத்துள்ளனர். இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

EGATHUVAM SEP 2012