பிடிக்க ஒரு பிறை! முடிக்க ஒரு பிறை - குட்டையைக் குழப்பிய குமரி காஜி
நீண்ட காலமாகத் தமிழகம் பிறை விஷயத்தில் குழம்பிய குட்டையாக
இருந்து வந்தது. சில இடங்களில் கசாப்புக் கடைக்காரர்கள் பெருநாளை நிர்ணயிக்கின்ற கதாநாயகர்களாகவும்
பெருநாளை நிச்சயிக்கின்ற காஜிகளாகவும் மாறிவிடுவார்கள். அவர்களுக்கு மார்க்கம் என்பது
அறவே கிடையாது. வியாபாரம் தான் நோக்கம். எனவே அவர்களும் பிறை விஷயத்தில் குட்டையைக்
குழப்பிக் கொண்டிருந்தார்கள்.
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை பெருநாள்; மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பெருநாள். இரண்டு ஊர்களுக்கும்
மத்தியில் உள்ள தூரம் நான்கு கிலோ மீட்டர் தான். இப்படி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்
இந்தப் பிரச்சனை தான். இவ்வாறு குட்டையைக் குழப்பியதில் இலங்கை வானொலிக்குச் சரி பங்குண்டு,
அன்றைய தமிழகம் சிலோன் வானொலியின் சிறைக் கைதியாக இருந்தது.
பெருநாள் விஷயத்தில் சிலோன் கைதிகளாக இருந்த தமிழக மக்களை விடுதலை செய்த புண்ணியமும்
(?) பாக்கியமும் விடுதலைப் புலிகளைச் சாரும். காரணம், விடுதலைப்புலிகள் இலங்கையை நிர்மூலமாக்கியதால் அதன் வானொலி வாயிழந்தது.
ஊமையும், ஊனமுமாகி ஒடுங்கிப் போனது.
உலகெங்கிலும் ஏற்பட்ட ஊடகப் புரட்சி தமிழகத்திலும் ஏற்பட்டது.
இதனால் இலங்கை வானொலி அடிபட்டுப் போனது. இல்லையென்றால் பிறை விஷயத்தில் இலங்கை வானொலியின்
குழப்பத்தை விட்டும் தமிழக முஸ்லிம்கள் தப்ப முடியாது. இந்திய வானில் பிறை ஒளி தெரிகின்றதோ
இல்லையோ இலங்கை வானொலியில் தக்பீர் ஒலி கேட்டால் போதும், பெருநாள் வந்து விடும்.
இலங்கையில் யார் பிறை பார்த்தார்கள்? வந்த செய்தி ஆதாரப்பூர்வமான செய்தியா? என்றெல்லாம் பார்ப்பது கிடையாது.
நோன்பு என்று முடிவாகி மக்கள் ஸஹரும் வைத்து விடுவார்கள். அடுத்து
சுபுஹ் தொழுகைக்காகவும் ஆயத்தமாவார்கள். திடீரென்று பள்ளிகளில் நகராக்கள் அடிக்கப்படும்.
நகரா முழக்கத்தை அடுத்து தக்பீர் முழக்கம்! என்னவாம்? இலங்கையில் பிறை பார்த்து விட்டார்களாம்; பெருநாள் வந்து விட்டது.
தையல் கடைகளில் ஒரு கை தைக்கப்பட்டு, மறு கை தைக்கப்படாத சட்டைகள். ஒரு கால் தைக்கப்பட்டு மறுகால்
தைக்கப்படாத கால்சட்டைகள். மூட்டப்படாத கைலிகள். மளிகைக் கடைகளில் மல்லுக்கட்டுகின்ற
மக்கள் கூட்டம். கசாப்புக் கடைகளில் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம். அடுத்தடுத்து அறுக்கப்படும்
ஆடுகளின் அலறல் சப்தம்.
அப்படி ஒரு அவஸ்தைப் பெருநாள்! அவசரப் பெருநாள்! இந்தக் குழப்பத்திற்குக்
காரணம் சிலோன் வானொலியின் பெருநாள் தக்பீர் தான்.
இலங்கைப் பிறையை சில மாவட்டங்கள் ஏற்கும். பல மாவட்டங்கள் மறுக்கும்.
ஏற்றோருக்கு அன்றைய தினம் இடைஞ்சலும் இன்னலும் நிறைந்த பெருநாள். அவஸ்தைப் பெருநாள்!
அல்லல் - அலறல் பெருநாள்!
மறுத்தவர்களுக்கு மறுநாள் அமைதிப் பெருநாள்!
தமிழகத்தில் இப்படி இரு பெருநாட்கள் எனும் இந்த அவல நிலை நீண்ட
நாட்கள் தொடர்ந்து வந்தது.
உதவாக்கரை உலகப் பிறை
இந்த நிலையில், பிறை விஷயத்தில்
பிரிவினையா?
பிளவா? இதைத் தாங்கிக் கொள்ள முடியாது!
உலகம் முழுவதும் ஒரு பிறையைக் கொண்டு வருகிறோம் என்று ஒரு உதவாக்கரைக் கூட்டம் புறப்பட்டது.
ஊரை, உலகை, பிறை விஷயத்தில் ஒன்றுபடுத்தப் போகின்றோம் என்று புறப்பட்ட இந்தக்
கூட்டம் கணிப்புப் பிறை, லிபியா பிறை, சவூதிப் பிறை என்று தங்களுக்குள்ளேயே மூன்று நாட்கள் பெருநாள்
கொண்டாடி சிதறி,
சின்னாபின்னமாயினர்.
இவர்களது இந்த நடவடிக்கை, தமிழகத்தில்
அதுவரை இருந்த இரண்டு பிறைகளை மூன்று பிறைகளாக, மூன்று பிரிவினர்களாக
ஆக்கியது. இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் இந்தக் கடைந்தெடுத்த மடப் பேர்வழிகள்
மக்காவில் போய் அங்கு அரஃபா நாளுக்கு முந்தைய நாள் அரஃபா நாளை அனுஷ்டித்தது தான். இதில்
இவர்களின் மடமை மற்றும் மவ்ட்டீகத்தனத்தின் உச்சக்கட்டத்தை அறிய முடிந்தது.
பிறை விஷயத்தில் மதம் பிடித்து, பிறை மதம் கண்ட இவர்களுக்கு ஜாக்கில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டது.
இந்த மவ்ட்டீகப் பேர்வழிகள் ஜாக்கில் மகுடம் சூட்டப்பட்டனர். ஏதோ அமெரிக்காவின் நாஸா
ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் போல் தங்களை நினைத்துக் கொண்டு செயல்பட்ட
இவர்களின் அரைவேக்காட்டு வாதங்கள் மக்களிடம் எந்த வரவேற்பையும் பெறவில்லை. மக்களின்
வெறுப்பையும் வேதனையையும் தான் பெற்றது.
இந்த அரைவேக்காட்டு விஞ்ஞானிகள் குட்டையைக் குழப்பினாலும் அது
தமிழக மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
குட்டையைக் குழப்புவதெல்லாம் டவுண் காஜிகள் தான்.
தமிழக முஸ்லிம்கள் இலங்கைப் பிறையைக் கைவிட்டனர். இதனால் பெருங்குழப்பம்
தவிர்க்கப்பட்டது. ஆனால் குழப்பம் அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. தமிழக அளவில்
பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பவர்கள் இந்த டவுண் காஜிகள் தான்.
2010ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதத்தில் தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை.
இந்த நிலையில் சென்னை டவுண் காஜி மாலோகானில் பிறை பார்க்கப்பட்டதாகக் கூறி பெருநாளை
அறிவித்தார். அதனால் தமிழகத்தில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
இந்த டவுண் காஜிகளுக்கு மார்க்க ஞானம் எதுவும் கிடையாது. அரசாங்கத்தால்
நியமிக்கப்படும் பொம்மைகள். மார்க்க அடிப்படையை ஆதாரமாகக் கொள்ளாமல் இவர்கள் வாய்க்கு
வந்தபடி சொல்வது தான் மார்க்கம் என்றாகி விட்டது.
பிறை விஷயத்தில் இவர்கள் வைத்தது தான் வரிசை! இதில் இவர்களுடைய
ராஜ்யம் தான் என்ற எதேச்சதிகார நிலை நீடித்தது.
தவ்ஹீத் ஜமாஅத் அவருக்கு எதிராப் போர்க்கொடி தூக்கியது; புரட்சி செய்தது. அரஃபா, குர்பானி ஆகிய
வணக்கங்கள் பிறையை அடிப்படையாகக் கொண்டவை. இதில் ஒரு தனிப்பட்ட நபரின் சுய விருப்பத்திற்குச்
செய்ய முடியாது;
செய்யக் கூடாது.
பிறை பார்ப்பதில் தமிழக அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டுமானால்
பிற பகுதிகளிலிருந்து வரும் பிறை அறிவிப்பை ஏற்காமல் தமிழகத்தில் பிறை பார்த்து அறிவிக்க
வேண்டும்; அல்லது முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்
என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு நிலைபாட்டை எடுத்தால் அதன்படி செயல்பட வேண்டும். அப்போது
குழப்பத்திற்கும், குளறுபடிக்கும் இடமிருக்காது.
அத்துடன் இத்தனை குழப்பத்திற்கும் குளறுபடிகளுக்கும் காரணம், விளக்கமில்லாத டவுண் காஜிகளின் மூடத்தனமான பிறை அறிவிப்புகள்
தான்.
எனவே அந்த ஹஜ் பெருநாளின் போது டவுண் காஜியின் மாலேகான் பிறை
அறிவிப்பை ஏற்காமல் தமிழகத்தில் பிறை தென்படாததால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து
மறுநாள் துல்ஹஜ் பிறை ஒன்று என அறிவித்தோம். அந்த வருட ஹஜ் பெருநாளையும் அதன்படி பிரித்துக்
கொண்டாடினோம்.
குட்டையைக் குழப்பிய குமரி காஜி
டவுண் காஜிகளின் குழப்பத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, இந்த ஆண்டு நோன்புப் பெருநாளின் போது குமரி மாவட்டத்தில் நடந்த
குழப்பம். இதைச் செய்தவர் யார்? வேறு யாருமல்ல. குமரி மாவட்ட
டவுண் காஜி அபூஸாலிஹ் தான்.
இந்த ரமளானில் நோன்பு பிடிக்கும் போது குமரி மாவட்ட ஜமாஅத்தினர்
தமிழகத்தில் பிறை கண்டதன் அடிப்படையில் நோன்பு வைத்தனர். நோன்பை முடிக்கும் போது, கேரளாவில் பிறை பார்த்ததன் அடிப்படையில் பெருநாள் என்று அறிவித்தனர்.
அதன் பிறகு இலங்கையில் பிறை பார்த்ததன் அடிப்படையில் பெருநாள் என்று அறிவித்தனர்.
இவ்வாறு அறிவித்த மாத்திரத்தில் டவுண் காஜி அபூஸாலிஹிடம், "என்ன இப்படி அறிவித்து விட்டீர்களே?'' என்று கேட்ட போது, "எனக்கு
இதில் உடன்பாடில்லை. ஜமாஅத்துல் உலமாவும், ஜமாஅத் பெடரேஷனும்
தான் இந்த முடிவை அறிவிக்கச் சொன்னார்கள்'' என்று கூறியுள்ளார்.
ஜமாஅத்துல் உலமா, ஜமாஅத் பெடரேஷன்
போன்றவை நாகர்கோவிலில் கூடியுள்ளனர். இரவு 8.30 வரை பார்த்து
விட்டு, பெருநாள் இல்லை என்ற முடிவில் கலைந்து சென்றுள்ளனர். கேரளாவில்
பிறை பார்த்ததன் அடிப்படையில் பெருநாள் அறிவிப்பார்களா? என்று கலாச்சாரப் பள்ளி இமாமிடம் கேட்ட போது, அப்படி வராது என்று பதிலளித்துள்ளார்.
ஆனால் இரவு 8.45 மணிக்கு குமரி
மாவட்ட காஜி,
நாளை பெருநாள் என்று அறிவிப்புச் செய்துள்ளார். இதற்கு அடிப்படைக்
காரணம் என்ன?
ஒரு தெளிவான நிலைபாடு இல்லாதது தான்.
அதிலும் குறிப்பாக குமரி மாவட்டம் கேரளாவை ஒட்டியிருப்பதால்
கடிகாரத்தின் பெண்டுலம் போன்று ஒரு தடவை அந்தப் பக்கம், மறு தடவை இந்தப் பக்கம் என்று ஆடிக் கொண்டிருக்கின்றது.
இதில் வேடிக்கையும் வினோதமும் என்னவென்றால் டவுன் காஜி இலங்கைப்
பிறையை ஆதாரமாகக் கூறியிருப்பது தான். இரண்டு நிலைகள் என்பதைத் தாண்டி மூன்றாவது நிலைக்கு
இந்த டவுண் காஜி தாவியிருப்பது தான்.
இதன் அடிப்படையில் நோன்பு பிடிப்பதற்கு ஒரு பிறை! நோன்பை முடிப்பதற்கு
வேறு பிறை!
நோன்பு வைப்பதற்கு நிதானம்! நோன்பை முடிப்பதற்கும் முறிப்பதற்கும்
அவசரம்!
தெளிவான ஆதாரமின்றி ஒரு நோன்பை அநியாயமாக ஓய்க்கும் பாவத்தைப்
பற்றி இவர்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை என்பதை இது காட்டுகின்றது.
குமரியைத் தவிர உள்ள தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு தெளிவான
வழித்தடத்தில் செல்கின்றார்கள். குமரி மாவட்ட டவுண் காஜி மட்டும் தமிழ்நாடு, கேரளா, இலங்கை என்று பெருநாளை சீக்கிரம்
கொண்டு வருவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு மூன்று வழித்தடங்களில் பயணம் செய்கின்றார்.
கொள்கைக் குன்றாய் நின்ற குமரி தவ்ஹீத் ஜமாஅத்
இந்த விஷயத்தில் குமரி மாவட்டத்தில் சுன்னத் ஜமாஅத் எனப்படுவோர்
அனைவரையும் குறை சொல்ல முடியாது. ஏன்?
சரியான கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பில் செயல்படுகின்ற
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு நிலைபாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. அதன்
ஓர் அங்கமான குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத், இதுபோன்ற அர்த்தமற்ற, ஆதாரமற்ற பெருநாள் அறிவிப்புக்களுக்குப் பலியாகாத, பணியாத துணிச்சலான கிளையாகும். எதற்கும் வளைந்து கொடுக்காத கொள்கைப்
பிடிப்புள்ள கிளையாகும்.
சரியான நிலைபாட்டின் அடிப்படையில், தமிழகத்தை ஒத்து, மறுநாள் தான்
பெருநாள் என்று குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. இந்தப் பெருநாள் தொழுகையில்
கடந்த ஆண்டுகளை விட அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, சுன்னத் ஜமாஅத்தினர் அதிக அளவில் கலந்து கொண்டனர். வழக்கத்தை
விடப் பெருநாள் திடல் வசூலும் அதிகரித்தது.
இதிலிருந்து சுன்னத் ஜமாஅத்தின் நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள், மார்க்க விபரம்
தெரிந்தவர்கள் குமரி மாவட்ட காஜியின் கண்மூடித்தனமான பெருநாள் அறிவிப்பை நிராகரித்து
விட்டனர்; அதன் மீது அதிகமான அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர்
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இனியாவது குமரி மாவட்ட டவுண் காஜி பாடமும் படிப்பினையும் பெறுவாரா? அல்லது பழைய, பாழாய் போன
பாதையிலேயே செல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
EGATHUVAM SEP 2012