இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 7 - மனிதனைக் கடவுளாக்கும் மடமைக் கொள்கை
தொடர்: 7
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தைத் தொடர்ந்து
பார்த்து வருகிறோம். கஸ்ஸாலியின் "அல்மன்னூன் பிஹா அலா கைரி அஹ்லிஹா' என்ற நூலை விமர்சனம் செய்யும் போது இப்னு தைமிய்யா அவர்கள் கூறுவதாவது:
"தன் சக்திக்கு ஏற்ப மனிதன், இறைநிலைக்கு
ஒப்பாவது தான் தத்துவவியல்'' என்று சூபிகள் கூறுவது தான்
இதுவரை நாம் கண்ட விஷயங்களிலேயே மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். உண்மை, தனித்தன்மை, செயல்பாடுகளில்
அல்லாஹ்வுக்கு அடியானை ஒப்பாக்குகின்ற சூபிகளின் இந்த நிலைப்பாட்டில் ஒரு கூட்டம் அவர்களுடன்
உடன்பாடு கொள்கின்றது. அந்தக் கூட்டத்தில் கஸ்ஸாலியும் ஒருவர். அத்வைதக் கருத்தைப்
பேசக்கூடியவர்களும் அவருக்குப் பின்னால் நடைபோடுகின்றனர்.
மனிதன் அல்லாஹ்வைப் போன்றவன் என்கின்றனர். "அவனைப் போன்றது
எதுவும் இல்லை'
(அல்குர்ஆன் 42:11) என்று அல்லாஹ் சொல்கிறானே என்று கேட்டால், "அல்லாஹ்வைப் போன்று அமைந்திருக்கின்ற மனிதனைப் போன்று எதுவுமில்லை' என்று ஓர் அபத்தமான விளக்கத்தை அளிக்கின்றனர்.
வானத்தில் கோள் அசைகின்றது என்றால் தனக்கு மேல் உள்ள ஒரு சக்தியை
(அல்லாஹ்வை) பார்த்து தான் அசைகின்றது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
இதன்படி ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு ஒப்பாக முடியும். வானத்தின்
கோள் அல்லாஹ்வுடன் அல்லது அல்லாஹ்வுக்கு நிகரான அறிவுடன் ஒப்பாகின்றது என்ற விபரீத
சிந்தனை உருவாகும். இப்படியோர் ஆபத்தான, அபாயமான கொள்கையை
இவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று இப்னு தைமிய்யா குறிப்பிடுகின்றார்கள்.
மேலும் அவர்கள் கூறுகின்ற விமர்சனம் வருமாறு:
மறைவான ஞானத்திற்கும் நேரடி ஞானத்திற்கும் இவர்கள் வித்தியாசமான
ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.
ஐம்புலன்களால் உணரப்பட்டால் அது நேரடி ஞானம். அறிவால் மட்டும்
விளங்கப்பட்டால் அது மறைமுக ஞானம். இதுதான் இவர்கள் கொடுக்கும் விளக்கமாகும்.
அல்மிலல் வன்னிஹல் நிஹாயத்துல் இக்தாம் என்ற நூலின் ஆசிரியர்
குறிப்பிடுவது போன்று, இது ஷியாக்களின் இறை மறுப்புக்
கொள்கையாகும். அல்லது சூஃபியாக்களின் இறை மறுப்புக் கொள்கையாகும்.
இந்தக் கேடுகெட்ட கொள்கையாளர்களுக்கு அகமிய ஞானவான்கள் என்ற
மறுபெயரும் உண்டு.
இஸ்மாயிலிய்யா என்ற சாரார் உண்டு. இவர்கள் ஷியாக்களின் இறை மறுப்புக்
கொள்கையைக் கொண்டவர்கள். திருக்குர்ஆனின் யூசுப் அத்தியாயத்திற்கு இவர்களுடைய கொள்கையின்
அடிப்படையில் கஸ்ஸாலி விளக்கமளித்துள்ளார் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
இந்தக் கொள்கையில் தான் சூபிஸத்தைச் சார்ந்த இறை மறுப்புக் கொள்கையாளர்களுடன்
அத்வைதக் கொள்கையாளர்கள் ஒன்றாக இணைகின்றனர்.
இவர்களின் சித்தாந்தம் தெளிவான மனித அறிவுக்கும் மார்க்க ஆதாரத்திற்கும்
நேர் முரணாக அமைந்திருக்கின்றது.
ஆனால் கஸ்ஸாலியோ, பாவங்களை விட்டுத்
தூய்மையான ஓர் இமாமின் அறிவு ஞானத்தை நோக்கி கைகாட்டி விடுகின்றார். அந்த இமாம், பாதுகாக்கப்பட்ட ஓர் ஆசானைக் கைகாட்டுகின்றார். அவ்விருவரில்
ஒவ்வொருவரும் தான் யாரைக் கைகாட்டி விட்டாரோ அவர் நபிமார்களின் அந்தஸ்தை விட பிரமாண்டமான, பிரமாதமான அந்தஸ்தைப் பெற்றவர் என்று வாதிட்டுக் கொள்கின்றனர்.
ஆனால் அவ்வாறு கைகாட்டப்படுபவர், கைதேர்ந்த பொய், அறியாமை, அநியாயம் நிறைந்த அக்கிரமக்காரப் பேர்வழியாகத் தான் திகழ்கின்றார்.
இவர்களின் இந்தப் போக்கிரித்தனங்களை அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவன்.
இவர்கள் புளுகித் தள்ளுகின்ற அதிகமான பொய்கள் அறியாமையாகவும்
வழிகேடாகவும் தான் இருக்கின்றன. அந்த வழிகேடும் சாதாரணமான வழிகேடு கிடையாது. அந்த வழிகேட்டைத்
தான் அவன் சத்தியம் என்று விளங்கி வைத்திருக்கின்றான். அதற்கு நேர்மாற்றமாக வருகின்ற
எந்தக் கருத்தையும் அவன் அறவே நம்புவதில்லை. இதுதான் அந்த ஆசாமி அடைந்த உன்னதமான உச்ச
நிலையாகும்.
மனோ இச்சையைப் பின்பற்றக்கூடிய கிறித்தவர்களில் அதிகமானவர்கள்
எத்தகைய வழிகேட்டில் இருக்கின்றார்களோ அதே வழிகேட்டில் தான் இவர்களும் இருக்கின்றார்கள்.
மொத்தத்தில் கோளாறு இவர்களுடைய அறிவிலும், அறிவார்ந்த விஷயங்கள் என்று அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்களோ
அவற்றிலும் தான் உள்ளது.
ஓர் அறிவாளி விளங்கிக் கொள்ள முடியாத சில அறிவார்ந்த விஷயங்களும்
இருக்கின்றன என்ற இவர்களது வாதத்திலும் அதே கோளாறு உள்ளது.
இதுதான் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள், தர்உத் தஆருலுல் அக்ல் வன்னக்ல் என்ற நூலில் குறிப்பிடுகின்ற
விஷயமாகும்.
இஸ்லாமிய உலகில் அச்சிடப்பட்டு வெளியான இந்த நூல்களில் கஸ்ஸாலி
கக்கிய இந்தக் கருத்துக்களைப் படித்தீர்கள் என்றால் அவருடைய கொள்கை, சிந்தனை, வழிமுறை, அறிவு ஞானம் ஆகியவற்றை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளலாம்.
இப்னு தைமிய்யா அவர்கள் கஸ்ஸாலியைப் பற்றி மேற்கண்ட நூல் அல்லாமல்
ஏனைய நூல்களில் எழுதியதை ஆய்வு செய்தால் அது பல பாகங்களைத் தொட்டுவிடும்.
ஆனால் நான் கஸ்ஸாலியின் நிலையைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு
எது அவசியமாகப் படுகின்றதோ அந்த எடுத்துக்காட்டுகளுடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அதே சமயம் கஸ்ஸாலியோ தான் எழுதிய அனைத்துக் கருத்துக்களை விட்டும்
திருந்தி, மனம் வருந்தி புகாரி, முஸ்லிம் என்ற
ஆதாரப்பூர்வமான நூல்கள் மற்றும் அபூதாவூத் போன்ற நூற்களின் பக்கம் திரும்பி விட்டார்.
இதை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் உறுதி செய்திருக்கின்றார்கள். கஸ்ஸாலியின்
இஹ்யா உலூமித்தீன் தொடர்பான விமர்சனத்தின் போது இந்த விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னால்
வரும்.
பெரும்பாலான மக்கள் நம்முடைய இந்த நோக்கங்களைப் புரிந்து கொள்ளவில்லை.
அப்படியே விளங்கினாலும் மக்களிடத்தில் தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
கஸ்ஸாலி போன்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாத விமர்சனம் செய்வதாக நம்மீது ஒரு குற்றச்சாட்டைச்
சுமத்துகின்றார்கள்.
"அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பான வசனங்களில் மாற்று விளக்கம் கொடுக்கின்ற, மாற்று விளக்கம் கொடுக்காத விரிவுரையாளர்கள்'' என்ற எனது நூலின் முன்னுரையில் கூறுவதாவது:
இறந்தவர்களின் விசுவாசத்தை கொஞ்சமாகவோ கூடுதலாகவோ நாம் விமர்சிக்க
வேண்டிய அவசியமே இல்லை. நாம் விமர்சிப்பதெல்லாம் அவர்கள் தங்களுக்குப் பின் விட்டுச்
சென்ற நூல் ஆக்கங்களையும் அதில் பதிவாகியிருக்கின்ற அசத்தியம், வழிகேடுகள் பற்றித் தான்.
அவற்றைத் தெளிவுபடுத்துவது நம்மீது இன்றியமையாத கடமையாகும்.
இல்லையெனில் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் அவனது தூதரையும் வழிமுறையையும் அவர்களது
சத்தியத் தோழர்களையும் நல்வழி நடந்த அனைவரையும் ஏமாற்றியவர்களாகி விடுவோம்.
இஹ்யா உலூமித்தீன்
இஹ்யா உலூமித்தீன் என்று பெயர் சூட்டப்பட்ட கஸ்ஸாலியின் நூல்
தொடர்பாகக் களமிறங்கி, காரியமாற்றிய முஸ்லிம்களின்
கலீபாக்களில் உண்மையான கலீபாவும், அக்கால மக்களின் அருமைத் தலைவருமான
இப்னு தாஷிபீன் அவர்களின் வளமிக்க வரலாற்றுப் புரட்சியை உங்களிடம் பரிமாற விரும்புகின்றேன்.
அந்தப் புரட்சியைத் தான் எனது இஹ்யாவின் விமர்சன நூல் தலைப்"பூ'வாக சூடிக் கொண்டுள்ளது.
அமீருல் முஃமினீன் இப்னு தாஷிபீன் புறத்திலிருந்து இஹ்யா உலூமித்தீனை
எரிப்பதற்கு உண்மையான காரணங்கள் என்று இதற்குப் பெயரிட்டேன். அல்லாஹ் அந்தப் பெருமனிதரை
தனது அருள்மிகு சுவனத்தில் புகச் செய்வானாக!
வரலாற்று நூல்களில் இந்நூலுக்கு எதிராகத் தப்பும் தவறுமான விமர்சனம்
பதியப்பட்டுள்ளது. புரட்டர்கள், கிழக்கத்திய புளுகர்கள், மற்றும் அவர்களின் புரட்டல் புளுகலை ரசிக்கக்கூடிய எடுபிடிகள்
அத்தனை பேரும்,
"இஹ்யா உலூமித்தீனை அமீருல் முஃமினீன் எரித்ததற்குக்
காரணம் அரசியல் தான்' என்ற பொய்யான கருத்தைப் பரப்பிக்
கொண்டிருக்கின்றனர். அதற்கு இந்நூல் மூலம் பதிலளிக்க விரும்புகின்றேன்.
நல்ல விளக்கமும் நல்ல சிந்தனையும் உள்ளவர், சரியான கொள்கைப் பிடிப்புள்ளவர், அல்லாஹ்வையும் அவனது மார்க்கத்தையும், அவனது தூதரின் சுன்னத்தையும் சரியாக மதிப்பீடு செய்தவர், பொய் புரட்டு பித்தலாட்டங்களை விட்டு விலகியவர் என்னுடைய ஆய்வில்
நான் கூறிய காரணங்களை சற்று ஆய்வு செய்து பார்ப்பாரானால் இந்தப் புரட்டர்களின் குற்றச்சாட்டு
முற்றிலும் பொய் என்று தெளிவாக விளங்கிக் கொள்வார்.
அந்தக் காரணங்களை இப்போது நான் கூறுகின்றேன்.
1. முராபிதீன் என்றழைக்கப்பட்ட அன்றைய சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையுடைய
உலமாக்கள் இஹ்யாவுக்கு எதிராக ஃபத்வா, மார்க்கத்
தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
(சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று இந்த நூலாசிரியர் குறிப்பிடுவது
நம் நாட்டில் உள்ள பரேலவிகள் அல்லர்.)
ஒவ்வொரு கால கட்டத்திலும் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது என்ற அடிப்படைப் பணி இத்தகைய உலமாக்களால்
தான் செயல்பட்டது; நிலைகொண்டது.
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது
தான் அனைத்து அடிப்படைகளுக்கு அடிப்படையாகும். அது பிரமாண்டமான பணியுமாகும். இது ஒரு
சமுதாயத்தில் சரியாகச் செய்யப்பட்டால் அந்தச் சமூகத்தின் காரியத்தை அல்லாஹ் சீராக்கி
விடுகின்றான்.
அந்தச் சமுதாயத்தின் ஆட்சியாளர்களும் குடிமக்களும் உறுதியாகச்
செயல்படுகின்றனர். அதனுடைய மார்க்கமும் கொள்கையும் சரியான பாட்டையில் பயணிக்கின்றது.
இந்த அடிப்படை தொலைந்து போனால், குர்ஆன் ஹதீசுடைய ஆலிம்கள் மறைந்து போனால், அந்நிய, அசத்தியக் கருத்துக்கள் அந்தச்
சமுதாயத்தில் படையெடுத்து வந்து விடுகின்றது.
முராபிதீன் காலத்தில் வாழ்ந்த குர்ஆன், ஹதீஸ் ஆலிம்கள் அசத்தியத்தில் ஐக்கியமாவது அபூர்வமான விஷயம்.
இஹ்யா எனும் நூலின் உள்ளே இடம்பெற்ற கருத்துக்கள் இஹ்யாவுக்கு
எதிரான அவர்களுடைய மார்க்கத் தீர்ப்பைத் தெளிவுபடுத்தும்.
இஹ்யா நூலிலுள்ள கருத்து அந்த ஆலிம்களின் எந்த ஒரு சொந்த நலனுக்கும்
சவால் விடுக்கவில்லை.
அதனால் இஹ்யாவுக்கு எதிரான மார்க்கத் தீர்ப்பு அல்லாஹ்வுக்கும்
அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொதுவானவர்களுக்கும் நன்மையை நாடுதல் என்ற அடிப்படையில் தான்
அமைந்தது.
முராபிதீன் உலமாக்கள் இப்படி உண்மையை மக்கள் மன்றத்தில் போட்டு
உடைத்தது தான் பித்அத்காரர்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. அதன் விளைவாகத் தான் இஹ்யாவை
எரித்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டைக் கட்டவிழ்த்து விட்டனர்.
பித்அத்காரர்களின் முழுநேரப் பணியே பொய் சொல்வதும், சரியான
விஷயங்களை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து விடுவதும் தான். அந்த வேலையை இங்கும் செய்திருக்கிறார்கள்.
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இப்னு தாஷிபீன் வாழ்க்கைக் குறிப்பு
இப்னு தாஷிபீன் வாழ்க்கையைப் பற்றி ஹாபிழ் தஹபீ அவர்கள் பின்வருமாறு
கூறுகின்றார்கள்:
அவர் ஒரு வீரர்; தியாகி; அர்ப்பணிப்பாளர்; நீதமானவர்; நேர்மையாளர்; மார்க்க பக்தியாளர்; ஒழுக்கமிக்கவர்; நல்லவர். உலமாக்களை
கண்ணிப்படுத்துபவர்; அவர்களிடம் ஆலோசனை கலப்பவர்.
அவருடைய காலத்தில் ஃபிக்ஹ் கலை நூல்கள், சிறு சிறு சட்டத் தொகுப்புகள் இல்லாமல் போய்விட்டன. இதன் விளைவாக
ஹதீஸ் மற்றும் வரலாறுகளில் மக்கள் ஆர்வமில்லாமல் ஆகிவிட்டனர். தத்துவவியல் மிகவும்
கேவலமான கல்வியாகக் கருதப்பட்டது. தர்க்க அடிப்படையில் அமைந்த இறையியல் (இல்முல் கலாம்)
காரி உமிழப்பட்டது; கோபத்திற்குள்ளானது.
முன்னோர்கள் அடையாளப்படுத்தியதற்கு ஏற்ப இல்முல் கலாம் ஒரு பித்அத்
என்ற சிந்தனை இப்னு தாஷிபீன் உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்தது. அதனால் அவர் அது விஷயத்தில்
கொஞ்சம் கூடுதலாகவே களம் இறங்கிவிட்டார்.
இம்மாதிரியான நூல்கள் எழுதுவதையும் இயற்றுவதையும் மிக வன்மையாகக்
கண்டித்ததுடன் அவற்றை எரிக்கவும் உத்தரவிட்டார். கஸ்ஸாலியின் ஆக்கங்களையும் எரிக்கும்படி
உத்தரவிட்டார். அதை மூடி மறைப்பவர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை விடுத்தார். சிறு
சிறு ஏடுகள்,
ஆக்கங்களை எழுதுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நீண்ட ஆயுளும்
வழங்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலாஃ என்ற
நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM FEB 2014