May 14, 2017

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?

தமிழகத்தில் "தொட்டில் குழந்தை' என்ற திட்டத்தை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைத் தொட்டிலிலாவது வீசட்டும் என்ற நோக்கில் இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.

கன்றைப் பிரிந்த பசு, குட்டியைப் பிரிந்த ஆடு, குஞ்சைப் பிரிந்த கோழி போன்ற உயிரினங்கள் கூட கத்தி, கதறி அழுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாசப் பிணைப்பு! நேச இணைப்பு!  அந்த உயிரினங்கள் தங்கள் குட்டிகளை அம்போவென்று விட்டு விட்டுப் போய்விடுவதில்லை. தனது சந்ததிகள் சொந்தக் காலில் நிற்கின்ற வரை, தங்கள் உணவை தாங்களே தேடிக் கொள்கின்ற வரை அவற்றைப் பாலூட்டி, உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன.

ஆனால் பாழும் மனித இனம் தான், இந்த லட்சணத்தில் இது பகுத்தறிவு இனமாம்; இந்த இனம் தான் பெற்ற குழந்தைகளைப் பாழும் கிணற்றிலும் பாதாளச் சாக்கடைகளிலும் வீசி எறிகின்றது.

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்த ஐந்தறிவு மிருகங்களில் வளர்ப்புப் பிராணிகளாகட்டும், அல்லது காட்டு விலங்குகளாகட்டும். தங்களுக்குப் பிறந்த குட்டிகளை, தாங்கள் பொறித்த குஞ்சுகளை ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. வஞ்சனையில்லாமல் பாசப் பிணைப்போடும் நேச உணர்வோடும் வளர்க்கின்றன. ஆணா? பெண்ணா? என்று பார்க்காமல் தன்னுடைய பிள்ளை என்பதை மட்டுமே பார்க்கின்றன. ஆனால் மனித மிருகமோ தரம் பிரித்துப் பேதம் பார்க்கின்றது. இந்த அட்டவணையைப் பாருங்கள்:

தொட்டில் குழந்தை திட்டத்தில் பெறப்பட்ட குழந்தைகள்

ஆண்டு              ஆண்          பெண்          மொத்தம்

2009                            5                     80                   85

2010                            4                     60                   64

2011                            5                     42                   47

2012                            4                     27                   31

2013                            2                     27                   29

மொத்தம்            20                  236                 256

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டையும் வித்தியாசத்தையும் பாருங்கள். இந்தத் திட்டத்தின்படி அரசுத் தொட்டிலில் அனாதையாக விடப்படும் குழந்தைகளில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண் குழந்தைகள். அதாவது, ஒருசில ஆண் குழந்தைகளைத் தவிர மீதி அனைவருமே பெண் குழந்தைகள் தான். இந்த வேதனை சொல்லி மாளாது.

அண்மையில் தர்மபுரியில் ஒரு தாய், இல்லை... நாயை விடவும் கீழான, பெண்ணுருவில் அமைந்த பேய், தனது 9 மாதப் பெண்குழந்தையைக் கொன்று விட்டாள்.

இதனைத் தொடர்ந்து மகளிர் கிராம சபை தனது கூட்டத்தைக் கூட்டி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தொட்டில் குழந்தை திட்டத்தில் கொண்டு வரப்படும் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அதற்கான உத்தரவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும். பிறப்பித்துள்ளார். இந்தச் செய்தி கடந்த ஜனவரி 13 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளியானது.

 தர்மபுரியில் உள்ள 251 பஞ்சாயத்துகளிலும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருமண உதவித் திட்டம் போன்ற திட்டங்களைத் தெளிவுபடுத்தி விளக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் இருப்பதாகவும், அதில் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் 1000க்கு 913 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்.

பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் அழிக்கப்படுகின்ற அக்கிரமத்தையும் அநியாயத்தையும் தான் இந்தப் புள்ளிவிபரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பெண் குழந்தைகள் ஏன் இப்படி தொட்டி-லும் தொட்டியிலும் வீசியெறியப்படுகின்றார்கள்? அல்லது ஒரேயடியாக ஏன் தொலைத்து ஒழிக்கப்படுகின்றார்கள்?

பெண் என்றால் செலவு, அதனால் அது ஓர் இழவு என்று கருதப்படுகின்றது. வரதட்சணை தான் இதற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. இதை உணர்ந்து தான் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண உதவித் திட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சொல்கின்றார்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது...

அல்குர்ஆன் 81:8, 9

மறுமை நாளில் நடக்கும் விசாரணையின் போது, அது கொல்லப்பட்டதற்கான காரணத்தைக் கேட்கும் போது, அந்தக் குழந்தை உண்மையைப் போட்டு உடைக்கும். அப்போது வரதட்சணை வாங்குவோர், கொடுத்தோர் மட்டுமல்ல! அதற்குக் கூட்டாக இருந்தவர்கள், அந்தத் திருமணத்தில் போய் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேருமே இறைவனிடம் மாட்டிக் கொள்வார்கள்.

அதனால் தான் தவ்ஹீத் ஜமாஅத் அதுபோன்ற தீமைகளைப் புறக்கணிக்கச் சொல்கின்றது. இவ்வாறு புறக்கணிப்பதால் மறுமையில் அல்லாஹ்விடம் மாட்டாமல் தப்பித்து விடுவர். இது மறுமையில் கிடைக்கும் நன்மையாகும்.

இதுபோன்ற புறக்கணிப்புகளால் பெண்ணினம் அழிவதை விட்டும் காக்கப்படும். இது உலகம் சீராக இயங்குவதற்கு உதவும். இல்லையேல் அல்லாஹ் படைத்த இயற்கை சமன்பாடு முற்றிலும் அழிந்து விடும். ஆணினம் பெருகி பெண்ணினம் அழிந்து விடும். உலகம் செயல்படாமல் ஸ்தம்பித்துவிடும்.

பெண்ணைக் காக்கின்ற அந்தப் புரட்சிப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் கடைப்பிடிக்கின்ற தூய இஸ்லாத்தின் மூலம் மட்டும் தான் செய்ய முடியும்.

இஸ்லாம் வருவதற்கு முன்னால் அரபக நிலை அப்படித் தான் இருந்தது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தென அவன் கருதும்) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:58, 59


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வந்து அந்த நிலையைத் தலைகீழாக மாற்றினார்கள். உலக நாடுகள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காமல் இதற்கு எந்தவொரு தீர்வையும் ஒருபோதும் காணவே முடியாது.

EGATHUVAM FEB 2014