இணை கற்பித்தல் தொடர்: 9 - அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்
சென்ற இதழில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள், மகான்கள், சொர்க்கவாசிகள் என்று அடையாளப்படுத்திக்
காட்டினார்கள் என்பதற்குச் சில ஆதாரங்களைப் பார்த்தோம்.
அதே போல் நபியவர்களுடைய மகன் இப்ராஹீம் சிறு வயதிலேயே, அதாவது பால்குடிப் பருவத்திலேயே இறந்து விடுகிறார். அப்போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்காக மிகவும் கவலைப்பட்டார்கள். அதைப் பற்றி பராஉ
(ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களின் மகன்) இப்ராஹீம் இறந்த போது நபி (ஸல்) அவர்கள், "இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு'' எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1382, 3255, 6195
அதே போன்று அனஸ் (ரலி) அவர்களுடைய தாயார் குமைஸா பின்த் மில்ஹான்
அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சொர்க்கத்தில்
நுழைந்தேன். அங்கு ஒரு காலடிச் சப்தத்தைக் கேட்டேன். அப்போது இது யார்? என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், "இவர் தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த்
மில்ஹான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம்: 4851
அதேபோல பிலால் (ரலி) அவர்களையும் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று
நற்செய்தி சொல்லியிருக்கிறார்கள்.
(ஒருநாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த
பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக! ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக)
எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும் நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக
உளூச் செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும்
என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை) தொழாமல் இருந்ததில்லை.
(இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4854
அதுபோன்று, உம்மு சுஃபைர் அவர்களையும் நபிகளார்
சொர்க்கவாசி என்று நற்சான்று தந்திருக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக்
கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது
என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு
சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான்
பிரார்த்திக்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித்
திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப்
பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின்
அபீரபாஹ்
நூல்: புகாரி 5652
ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு (ஒருநாள்) கனவில் சொர்க்கம் எடுத்துக்காட்டப்பட்டது.
அப்போது அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதை செவியுற்றேன். அப்போது இவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "இவர்தான் ஹாரிஸா பின் நுஃமான்'' என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நன்மை இவ்வாறு தான். நன்மை இவ்வாறு தான்'' என்று கூறிவிட்டு, "அவர்
தான் மக்களிலேயே தன்னுடைய தாய்க்கு அதிகமாக நன்மை செய்யக்கூடியவராக இருந்தார்'' என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 24026
பத்ருப்போரில் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ (அனைவருடைய தகவலும்
இல்லாவிட்டாலும் பத்ருவாசிகள் என்று யாரெல்லாம் சொல்லப்பட்டார்களோ) அவர்களை நாம் சொர்க்கவாசிகள், மகான்கள், அவ்லியாக்கள் என்று சொல்லலாம்.
பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருடைய பெயரும் குறிப்பிடப்படாவிட்டாலும், பத்ருவாசிகள் என்று
சுமார் 60க்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் பெயர்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்களுடைய ஆதரவாளர்களில் ஒருவரானன அபூஅப்திர்
ரஹ்மான் அவர்கள் அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரானன ஹிப்பான் பின் அதிய்யா
அவர்களிடம் சர்ச்சையிட்டுக் கொண்டு, "உங்கள்
தோழர் அலீ அவர்களுக்கு இரத்தம் சிந்தச்செய்யும் துணிவைக் கொடுத்தது எது? என்று நான் உறுதிபட அறிவேன்'' என்று
கூறினார்கள். ஹிப்பான் அவர்கள், "தந்தையற்றுப் போவாய்!
(அலீ அவர்களுக்குத் துணிவைத் தந்த) அந்த விஷயம் எது?'' என்று கேட்டார்கள். அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள், "அது ஒரு சம்பவம். அதனை அலீ (ரலி) அவர்களே கூற நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள். ஹிப்பான் அவர்கள், "என்ன சம்பவம் அது?'' என்று கேட்க, (பின்வருமாறு) அபூஅப்திர் ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்:
அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களையும்
அபூமர்ஸத் (ரலி) அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் "ரவ்ளத்து ஹாஜ்' எனும்
இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு "ஹாஜ்' என்றே அபூஅவானா
(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூசலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் "ரவ்ளத்து
காக்' என வந்துள்ளது) - அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப்
பின் அபீபல்த்தஆ (மக்காவிலிருக்கும்) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய (நமது இரகசிய திட்டங்களைத்
தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டுவாருங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின்
மீதேறிச் சென்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில்
தனது ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(மக்காவை வெற்றி கொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப்
பின் அபீபல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), "உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே?'' என்று கேட்டோம். அவள், "என்னிடம்
கடிதம் எதுவுமில்லை'' என்று சொன்னாள். உடனே நாங்கள்
அவள் அமர்ந்திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்)
தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் "இவளிடம்
எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையே'' என்று சொன்னார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று
திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம்'' என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, "ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை
(சோதனையிடுவதற்காக உனது ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும்'' என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தனது இடுப்பை நோக்கி (தனது
கையைக்) கொண்டு சென்றாள். அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து)
அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் கொண்டு வந்தோம். பிறகு அதை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்யைôளர்களுக்கும்
துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக்
கொய்துவிடுகிறேன்'' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "ஹாத்திபே! ஏன் இப்படிச்
செய்தீர்கள்?''
என்று கேட்டார்கள். ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை
கொள்ளாமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக்
கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம்
ஏதேனும் செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர்களையும்
என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களுடைய (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களுயை குடும்பத்தாரையும்
செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர்'' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர் உண்மை பேசினார். இவர்
குறித்து நல்லதையே சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். உமர் (ரலி)
அவர்கள் மீண்டும் "அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்
இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையா? உங்களுக்கு
என்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ்
பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் "நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்.
சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்' என்று
கூறிவிட்டிருக்கலாம்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட
உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 6939
இந்த ஹதீஸ் மேலும் புகாரியில் 3007, 3081, 4274,
4890, 6259, 3983 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருமே சொர்க்கவாசிகள்
என்பது தெளிவாகிறது. அவர்களிடம் எத்தனை தவறுகளைக் கண்டாலும் அவர்கள் சொர்க்கவாசிகள்
தான் என்று அல்லாஹ்வும் கூறுகிறான். இந்த ஹதீஸில் இடம்பெற்ற ஸஹாபியும் பத்ருப் போரில்
கலந்து கொண்டவர்தான். அந்தப் போருக்கு பிறகு அவர் தவறு செய்திருக்கிறார் என்ற செய்தி
நபியவர்களுக்குத் தெரிய வருகின்றது. ஆனால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் என்று
சொன்ன காரணத்தினால் அவர்களை நபியவர்கள் தண்டிக்கவில்லை. எனவே இந்தச் செய்தியில் இடம்பெற்ற
ஹாதீப் பின் அபீபல்தஆ அவர்களையும், பத்ருப்போரில்
கலந்து கொண்ட அனைவரையுமே நல்லடியார்கள், மகான்கள், அவ்லியாக்கள் என்று நாம் சந்தேகமற உறுதிபடக் கூறலாம்.
இதுபோன்று, பைஅத்து ரிள்வான் என்று சொல்லப்படக்கூடிய
ஹுதைபியா உடன்படிக்கையின் போது ஒரு மரத்தடியில் உறுதி மொழி எடுத்தவர்கள் அனைவரையும்
சொர்க்கவாசிகள் என்று நாம் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் தியாகம் செய்யாவிட்டாலும்
அதற்காகப் பின்வாங்காமல், உயிரை விடவும் தயாராக இருந்ததால்
அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகப் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை
அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு
நிம்மதியை அருளினான். அவர்களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.
அல்குர்ஆன் 48:18
அந்தச் சம்பவம் என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு
உம்ரா செய்வதற்காகச் செல்லும் போது இடையில் தடுக்கப்படுகிறார்கள். அப்போது ஒரு மரத்தின்
அடியில் அனைவரும் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களைப் பேச்சு
வார்த்தை நடத்துவதற்காக, தூதுவராக மக்காவிற்கு அனுப்பி
வைக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை மக்காவில்
உள்ள எதிரிகள் கொன்று விட்டார்கள் என்று வதந்தி பரவுகின்றது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், ஒரு நாட்டிலுள்ள தூதரை மற்றொரு நாட்டிலுள்ளவர்கள் கொல்லக்கூடாது
என்ற சட்டம் அந்த காலத்தில் மட்டுமல்ல இன்றைக்கும் நடைமுறையில் உலகம் முழுவதும் ஒத்துக்கொண்ட
விஷயமும் கூட. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடந்தால் கூட பாகிஸ்தான் தூதுவர்
இந்தியாவில் பாதுகாப்பாகத் தான் இருப்பார். இந்தியாவினுடைய தூதர் அங்கு பாதுகாப்பாகத்
தான் இருப்பார். அவருடைய உயிருக்கு யாரும் எந்தக் கெடுதலும் பண்ணக்கூடாது. தூதுவர்
என்ற அடிப்படையில் அவர் செய்யக்கூடிய பணிகளைத் தடுக்க மாட்டார்கள். இதுதான் இன்றைக்கும்
அன்றைக்கும் உள்ள நடைமுறையாக இருந்து வருகின்றது.
இந்தச் சம்பவத்தில், எதிரிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூதுவராக சென்ற உஸ்மான் (ரலி) திரும்பி வருவதற்கு தாமதமாகி
விட்டது. எதிரிகள் அவரைப் பிடித்தும் வைக்கவில்லை; தடுத்தும்
வைக்கவில்லை. ஆனால் இந்தத் தாமதமான செய்தியை அறியாமல் அவர்களைக் கொன்று விட்டார்கள்
என்று வதந்தியை பரப்பி விடுகின்றனர்.
தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று விட்டார்கள்
என்ற செய்தி வந்தவுடன் நபியவர்கள் தன்னுடைய தோழர்களை ஒரு மரத்தடியின் கீழ் ஒன்றுகூட்டி, "நாம் தூதுவராக அனுப்பிய உஸ்மான் (ரலி) அவர்களை எதிரிகள் கொன்று
இருப்பார்களானால், அல்லாஹ்வுக்காகக் கடைசி வரையும்
நின்று போராடுவோம் என்று சொல்லக்கூடியவர்கள் என்னுடன் உறுதிமொழி எடுங்கள்!'' என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த அனைவரும் நபியவர்களிடத்தில்
நாங்கள் கடைசி வரைக்கும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்.
ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வந்ததால் போர் நடக்கவில்லை.
எந்தவித சண்டையும் நடக்கவில்லை. யாரும் எந்தவித தியாகமும் செய்யவில்லை. ஆனால்
"கடைசி நிமிடம் வரைக்கும் பின்வாங்கமாட்டோம். இந்த விஷயத்தை (அதாவது தூதரைக் கொன்ற
விஷயத்தை) நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வெற்றி பெறும் வரை அல்லது வீரமரணம்
அடையும் வரைக்கும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று என்னிடத்தில் உறுதிமொழி அளிக்கக்கூடியவர்கள்
யார்?' என்று கேட்டவுடன் அனைவரும் உறுதிமொழி அளிக்கிறார்கள். இந்த உறுதிமொழியில்
பங்கெடுத்துக் கொண்டவர்கள் எல்லாருமே சொர்க்கவாசிகள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்
கூறுகின்றான். எனவே அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொண்டதால் இவர்களை நல்லடியார்கள், அவ்லியாக்கள், மகான்கள் என்று
நாம் கூறலாம்.
உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எகிப்து வாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தை ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே)
அமர்ந்திருப்பதைக் கண்டு, "இந்தக் கூட்டத்தார் யார்?'' என்று கேட்டார். மக்கள், "இவர்கள்
குறைஷிகள்''
என்று கூறினர். அவர், "இவர்களில்
முதிர்ந்த அறிஞர் யார்?'' என்று கேட்டார். மக்கள், "அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள்'' என்று பதிலளித்தனர். உடனே அவர், (அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உமர் -ரலி- அவர்களை நோக்கி)
"இப்னு உமர் அவர்களே! நான் உங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்கின்றேன். நீங்கள்
எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்லுங்கள். உஸ்மான் அவர்கள் உஹுதுப் போரின் போது (போர்க்களத்திலிருந்து)
வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "ஆம் (அறிவேன்)'' என்று பதிலளித்தார்கள். அவர், "உஸ்மான் அவர்கள், பத்ருப் போரில்
கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்க, இப்னு உமர்
(ரலி) அவர்கள்,
"ஆம் (தெரியும்)'' என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், "அவர் ஹுதைபிய்யாவில் நடந்த "பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத்
தெரியுமா?'' என்று கேட்க, இப்னு உமர்
(ரலி) அவர்கள்,
"ஆம் (தெரியும்)'' என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டு விட்டு) அந்த மனிதர், (உஸ்மான் -ரலி- அவர்கள், தாம் நினைத்திருந்தது
போலவே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள் தாம் என்று தொனிக்கும்படி) "அல்லாஹு அக்பர்
- அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்று சொன்னார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், "வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் -ரலி- அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று)
உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹுதுப் போரின் போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்து
விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன். பத்ருப் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக்
காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா-ரலி-) உஸ்மான்
அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்)
நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், "பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும்
(போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக்
கவனியுங்கள்)''
என்று சொன்னார்கள். (எனவே தான் அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.)
"பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில்
அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி)
அவர்களை விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா
பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை
நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள்.
(அப்படி ஒருவரும் இல்லை) எனவே தான், அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப்
போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச்
சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, "(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச்
செய்யப்படுவதாகும்'' என்று சொன்னார்கள்'' என (இப்னு உமர் -ரலி- அவர்கள்) கூறிவிட்டு, (உஸ்மான் -ரலி- அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த)
அந்த மனிதரிடம்,
"நான் சொன்ன இந்த பதில்களை எடுத்துக் கொண்டு
இப்போது நீ போகலாம்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 3699
இந்தச் செய்தியில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்ற உஸ்மான் (ரலி)
அவர்களுடைய சிறப்பைப் பற்றி விளக்குகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் அந்த மரத்தினடியில்
உறுதிமொழி (பைஅத்) எடுத்தார்களோ அவர்கள் நரகில் நுழைய மாட்டார்கள். அவர்கள் சொர்க்கவாசிகள்.
சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்ற கருத்தில் அமைந்த செய்தி
முஸ்லிமில் 4552வது ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
இதைப் போன்று எந்த நல்லடியார்களைப் பற்றி சொர்க்கவாசி என்று
சொல்லப்பட்டிருக்கிறதோ அவர்களைத் தான் சொர்க்கவாசிகள் என்றோ, நல்லடியார்கள் என்றோ சொல்ல வேண்டும்.
நபியவர்கள் இப்படி ஏராளமானவர்களைப் பற்றி நல்லடியார்கள் என்றும்
சொர்க்கவாசிகள் என்றும் நற்சான்று அளித்திருக்கிறார்கள்.
அதேபோல் ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது நல்லவர்கள், சொர்க்கவாசிகள் என்று முன்னறிவிப்பு செய்திருக்கிறார்களா? நற்சான்று அளித்திருக்கிறார்களா? என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபியவர்கள் சொர்க்கவாசிகள்
என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். அந்த இருவர் யார் என்பதைப் பற்றி இன்ஷா அல்லாஹ்
அடுத்த இதழில் காண்போம்.
EGATHUVAM FEB 2013