May 29, 2017

நீதியை நிலைநாட்டிய நபிகளார்

நீதியை  நிலைநாட்டிய நபிகளார்

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி.

மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளைக் குறித்தும் இஸ்லாம் நமக்குப் போதித்து இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனும் அவன் அங்கம் வகிக்கும் சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவற்றைக் களைவதற்குரிய அழகிய தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறது. இதன்படி, பல்வேறு அறிவுரைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று, எந்த விஷயத்திலும் எப்போதும் நாம் நீதமாக, நியாயமாக நடக்க வேண்டும் என்பதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:135

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

நமது விவகாரமாக இருந்தாலும், நமக்கு நெருக்கமானவர்களின் விவகாரமாக இருந்தாலும், நம்முடன் ஒட்டுறவு இல்லாத மற்றவர்களுடைய விவகாரமாக இருந்தாலும், நம்முடைய எதிரிகளின் விவகாரமாக இருந்தாலும் அதிலே நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த நீதியானது நமது பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் என்று எவருக்கு எதிராக இருந்தாலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் ஏன்? அது நமக்கு எதிராக இருந்தாலும் சரியே என்று அல்லாஹ் ஆணையிடுகிறான்.

இந்தக் கட்டளைகளை மெய்ப்படுத்தும் வகையில் நபிகளாரின் வாழ்க்கை இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் நீதியை நிலைநாட்டுபவர்களாக இருந்தார்கள். இதற்குரிய சான்றுகளாகச் சில சம்பவங்களை மட்டும் இங்கு காண்போம்.

நீதியை நிலைநாட்டும் நிலைபாடு

சமீப காலங்களில் தனிமனிதர்கள், சமூகம், அரசாங்கம் என்று எல்லா இடத்திலும் பலரிடம் ஒருதலைபட்சமான நிலைபாடுகள், கருத்துகள் ஒளிந்து கிடக்கின்றன. அவை அவ்வப்போது அவர்களின் செயல்கள் மூலம் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். இதன் அடையாளமாக நீதிக்குப் புறம்பான காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவை நிகழாமல் இருப்பதற்கு முதலில் மக்களின் தவறான எண்ண ஓட்டம் மாற வேண்டும். அனைவரும் சமம்; அனைவருக்கும் சமநீதி எனும் சிந்தனை மேலோங்க வேண்டும். இதற்குரிய போதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருக்கிறது.

குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும் என்று கருதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?’ என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள், ‘உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன் எனப் பிரகடனம் செய்தார்கள்.

நூல்: புகாரி 3475, 3733, 4304, 6787, 6788

திருட்டுக் குற்றத்திற்கு தண்டனை தருவதிலே தமது பிரியத்திற்குரிய வளர்ப்பு மகனின் மகன் பரிந்து பேசும்போதும் கூட நபிகளார் மறுத்து விடுகிறார்கள். அவரைக் கண்டிக்கிறார்கள். நீதி தவறியதே முந்தைய சமுதாய மக்களின் அழிவுக்குக் காரணம் என்று எடுத்துரைத்து எச்சரிக்கை செய்கிறார்கள்.

தமது சொந்த மகள் பாத்திமா திருடினாலும் அவரின் கையை வெட்டுவேன் என்று சொல்வதன் மூலம் நீதியை நிலைநாட்டும் தமது நிலைபாட்டினை நபிகளார் பிரகடனம் செய்கிறார்கள். அவ்வாறுதான் அண்ணலார் அவர்களின் அனைத்து செயல்களும் இருந்தன.

மக்களிடமோ, சிறிய விஷயம் முதல் பெரிய விஷயம் வரை பாரபட்சமாக நடக்கும் குணம் குடிகொண்டிருக்கிறது. உதாரணமாக, மற்றவர்கள் மூலம் தமது பிள்ளைக்குப் பாதிப்பு ஏற்பட்டால் தீர விசாரிக்காமல் ஆர்ப்பரிக்கிறார்கள். அதேசமயம் தமது பிள்ளை மூலம் அடுத்தவருக்குப் பாதிப்பு நிகழ்ந்தால் ஊமைகளாகி விடுகிறார்கள்; அதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

இதுபோன்று பக்கம் பக்கமாகப் பட்டியல் போடுமளவுக்கு சமூகம் பாகுபாடான அணுகுமுறை களாலும், நடத்தைகளாலும் கெட்டுக் கிடக்கின்றது. இந்நிலை இனியாவது மாற வேண்டும்.

முஸ்லிம்களிடையே நபியின் நீதம்

நீதி செலுத்துவதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஒருபோதும் தடுமாற்றமோ, தயக்கமோ வந்துவிடக்கூடாது. ஆளுக்கு ஏற்ப நியாயத்தை வளைத்துவிடக் கூடாது. யாராக இருப்பினும் சட்டமும் தீர்ப்பும் ஒன்றுதான் என்பதைப் புரியவைக்கும் வகையில்தான் நபிகளாரின் வாக்கும் வாழ்வும் இருந்தது என்பதை என்றும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. அதில் சிறிதளவு அவர்கள் அருந்தினார்கள். அவர்களின் வலப்புறத்தில் குறைந்த வயதுடைய ஒரு இளைஞர் இருந்தார். இடப்பக்கம் பெரியவர்கள் பலர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இளைஞரே! பெரியவர்களுக்கு முதலில் கொடுக்க எனக்கு அனுமதி தருகிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு இளைஞர் உங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை மற்றவருக்கு நான் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இளைஞருக்கு முதலில் கொடுத்தார்கள் மற்றவர்களுக்குப் பின்னர் கொடுத்தார்கள்.

நூல்: புகாரி 2351, 2366, 2451, 2602, 5620

அனஸ் (ரலி) வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டிலிருந்து பால் கறந்து நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டது. அனஸ் (ரலி) வீட்டில் உள்ள கிணற்று நீர் அத்துடன் கலக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரம் தரப்பட்டது. அதை அவர்கள் பருகினார்கள். அவர்களின் இடப் புறம் அபூபக்ர் (ரலி) இருந்தார். வலப் பக்கம் ஒரு கிராமவாசி இருந்தார். அந்தக் கிராமவாசிக்கு நபிகள் நாயகம் (ஸல்) முதலில் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சிய உமர் (ரலி) அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள் என்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலப்புறம் இருந்த கிராமவாசிக்கு முதலில் கொடுத்தார்கள். மேலும் வலப்புறம் வலப்புறமாகத் தான் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 2352

மேற்கண்ட இரு சம்பவத்தையும் நன்கு கவனியுங்கள். இடது புறத்தில் இருப்பவர் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள். தமது உடலாலும், உடமைகளாலும் இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பக்கபலமாகத் துணை நின்ற பிரபலமான நபித்தோழர். வலது பக்கம் இருப்பவர்கள், ஒரு சம்பவத்தில் கிராமவாசி, மற்றொரு சம்பவத்தில் இளைஞர் ஒருவர்.

பொதுவாக சபையில் பரிமாறும் போது, விநியோகிக்கும் போது வலது பக்கம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். அது அவர்களுக்குரிய உரிமை என்று நபிகளார் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அந்த உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில் அண்ணலார் நடந்து கொள்ளவில்லை.

தமது உற்ற தோழருக்காக வழக்கத்திற்கு மாற்றம் செய்யவில்லை. வலது பக்கம் இருப்பவரிடம் அனுமதியைக் கேட்கிறார்கள். நியாயத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதேபோன்று மற்றொரு சம்பவம் பாருங்கள்.

பத்ருப் போர் அன்று ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தோம். நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அலீ பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம் என இருவரும் கூறினார்கள். நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 3706, 3769, 3807, 3834

மூன்று பேரில் ஒருவர் வீதம் மாறி மாறி அமர்ந்து பயணிப்பதாக ஒப்புக்கொண்டு பயணம் தொடர்கிறது. தாங்களின் உடன்பாட்டுக்கு மாற்றமாக உடனிருக்கும் நபித்தோழர்கள் முடிவெடுக்கும் போது அதற்கு நபிகளார் உடன்படவில்லை. இரு நபித்தோழர்களும் சுயமாக முடிவெடுத்து வாய்ப்பு கொடுப்பது தமக்குச் சாதகமாக இருந்தபோதிலும் அதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் அனைவருக்கும் பாடம் இருக்கிறது.

தமது தோழர்கள் தம்மீது பற்றும், பாசமும் கொண்டு கொடுத்த உரிமையையே நபிகளார் ஒத்துக் கொள்ளவில்லை. இவ்வாறிருக்க, தங்களது சுயநலத்துக்காக, பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறுசெய்பவர்கள், பிறர் சொத்தைப் பறிப்பவர்கள், அநீதி இழைப்பவர்கள் மற்றும் இவர்களை ஆதரித்துப் பேசுபவர்கள் எல்லாம் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.


தமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலோ, அல்லது மற்ற இருவர்களுக்கு மத்தியிலோ பிணக்கு ஏற்படும் போது முடிவு எடுப்பதிலும், கருத்துச் சொல்வதிலும் நேர்மையாக இருப்பது அவசியம். 

EGATHUVAM NOV 2016