May 29, 2017

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்!

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

நீதியை நிலைநாட்டிய சவூதி அரசு!

ஆண்டிக்கு ஒரு சட்டம்! அரசனுக்கு ஒரு சட்டம்! வலியவனுக்கு ஒரு சட்டம்! எளியவனுக்கு ஒரு சட்டம்! இது தான் உலகெங்கிலும் நடை முறையில் இருந்து வருகின்ற அநியாயமும் அக்கிரமமும் ஆகும். ஆனால் இதற்கு நேர்மாற்றமாக சவூதியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டத்தின் ஆட்சியும், மாட்சியும் நடந்தேறி உள்ளது.

பசுவைக் கொன்ற தன் மகனை தேரில் ஏற்றிக் கொன்றதாகச் சொல்லப்படும் - மாட்டுக்காக மனிதனைக் கொன்ற மனு நீதிச் சோழன் போன்ற கற்பனைக் கதை அல்ல! உலகத்தை உலுக்கி, உள்ளத்தைத் தொட்டு நிற்கின்ற உண்மை நிகழ்ச்சியாகும். அதை  இப்போது பார்ப்போம்.

சவூதியின் ஆளும் அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசர் துர்கீ பின் சவூத் அல் கபீர்!  இவருக்குக் கடந்த அக்டோபர் 18, செவ்வாய்கிழமை  அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏன்?

அவர் ஆதில் பின் சுலைமான் என்பவரை ஒரு கூட்டத்தில் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கியால் சுட்டு விட்டார். கொலையாளி ஆளும் ஆட்சியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று சவூதியக் காவல்துறை பேதம் பார்க்காமல் உடனே கைது செய்துசிறையில் அடைத்து வழக்கு தொடர்கின்றது. கீழ்நீதி மன்றத்திலிருந்து மேல் முறையீட்டு உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து செல்கின்றது.

அரசின் தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் இவ்வழக்கு நடத்தப்படுகிறது. வழக்கு தொடுக்கப் பட்ட உடன் காவல் துறையும் நீதித்துறையும் அரச குடும்பம் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டிவிடக் கூடாது என்பதற்காக மன்னர் சல்மான், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரச குடும்பம் என்பதற்காக சட்டம் வளையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

நமது நாட்டைப் போன்று கால் நூற்றாண்டுக்கு மேல் வழக்கு  இழுத்துக் கொண்டு போகவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது 2012. நான்காண்டுகளில் நடு வீதியில் மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டு இளவரசரின் வழக்கு மட்டுமல்ல; வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

அனைத்து மட்ட நீதிமன்றங்களிலும் குற்றவாளியின் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவின் காரணமாகவே நான்கு ஆண்டுகள் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைக்கோல் போர் தீயை மிஞ்சிய  வைரலாகப் பறந்து கொண்டிருக்கின்றது.

இளவரசரின் மரண தண்டனை நிறைவேறுவதற்கு முன்னால் நடந்த அவரது இறுதி நிமிடத்துளிகளை சஃபா மஸ்ஜிதின் இமாம், கதீப் டாக்டர் முஹம்மது அல் மஸ்லூகி குறிப்பிடுவதைக் கேளுங்கள்.

இளவரசரின் குடும்பத்தினர் இறுதியாகத் திங்கள் கிழமை மாலையில் சிறைச் சாலையில் சந்தித்து  கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்துச் சென்றனர்.  இது காண்போரின் உள்ளங்களை கவலையுறச் செய்தன. கண்களை அருவியாக்கின. இளவரசர் இதன் பின்னர் தனது இரவைத் தொழுகையிலும் இறை வேதமான குர்ஆன் ஓதுவதிலும் கழிக்கின்றார். கடைசியில் ஃப்ஜர் தொழுகையையும் நிறைவேற்றுகின்றார்.

இந்தக் கட்டுரையை எழுதுகின்ற எனது எழுது கோல் கூட குற்றம் சாட்டப் பட்டவருக்கு ஒரு மரியாதையைக் கொடுத்து இளவரசர் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அரசு மற்றும்  செய்திக் குறிப்புகள் இளவரசரை குற்றவாளி (அல்ஜானி) என்று தான் குறிப்பிடுகின்றது என்றால் சட்டத்தின் முன்னால் சமம் என்ற நீதி நியாயக் கொள்கை கோட்பாடு வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் செயல்பாடாகவும் இருக்கின்றது என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

காலைத் தொழுகையை முடித்த அவரை சிறைக் காவலர் காலை 7 மணிக்கு அழைத்துச் சென்று இறுதி விருப்பங்களை எழுதுமாறு வேண்டிக் கொள்கின்றார். அவர் தன்னால் எழுத இயலவில்லை என்று சொன்னதும் அடுத்தவர் அவரது விருப்பத்தை பதிவு செய்கின்றார். பிறகு அவர் குளித்ததும் தண்டனை நிறைவேற்றப்படும் பொது வெளிக்கு, காலை 11 மணி அளவில் அழைத்து வரப்படுகின்றார். அங்கே  அவரது குடும்பத்திலிருந்து 10க்கு மேற்பட்ட அவரது உறவினர்கள் வருகின்றார்கள்.

நிதி நிவாரணம் வேண்டாம்; நீதி பரிபாலனமே வேண்டும்

கொலையுண்டவரான ஆதில் உடைய தந்தை மற்றும் அவரது குடும்பத்தார்களும் வருகின்றார்கள். அரசவையைச் சார்ந்த அந்த 10 இளவரசர்களும் நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு கொலையாளியை மன்னிக்கும் படி பரிந்துரை செய்கின்றார்கள். வெறும் பேச்சளவில் இல்லாமல், கோடிக்கணக்கில் ரியால்களையும் தந்தையிடத்தில் சமர்ப்பித்துத் தான் கேட்கின்றார்கள். ஆனால், கொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தையோ பணத்தையோ பரிந்துரையையோ ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

கொலை செய்யப்பட்ட இளைஞருடைய தந்தை முகத்தில் படப்படப்பு, பதட்டம் எதுவும் பிரதிபலிக்கவில்லை. மன்னிப்பு கிடையாதுநீதி மற்றும் நியாயத் தண்டனை நிறைவேற்றம் தான் என்று, தான் கொண்ட  நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து விட்டார். அதே சமயம் கொலையாளியும் குற்றவாளியுமான இளவரசரின் தந்தையோ பிரிகின்ற தன் மகனின் பிரிவை எண்ணி கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருந்தார். நஷ்ட ஈடு செலுத்துவதற்கான பேரங்கள், பரிந்துரை படலங்கள் எல்லாம் முடிந்த பின் மாலை 4:15 மணிக்கு வாளுடன் வெட்டுநர் வருகின்றார். ஒரு வீச்சு தான். பளிச்சிட்டு மறைந்த அந்த வாள் வீச்சில், பீறிட்டு பீச்சுகின்ற இரத்த வெள்ளத்துடன் அடுத்த கணம் அவரது தலை தரையில் விழுகின்றது. தண்டனை தயவு தாட்சண்யமின்றி நிறைவேற்றப்படுகின்றது.

சட்டத்தின் முன் சமம்! சடங்கு வார்த்தையல்ல!!

ஆம்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இஸ்லாமிய சமத்துவக் கொள்கை  சரியாக நிலை நாட்டப்படுகின்றது. சவூதியின் சாதாரண குடிமகனும், சவூதிய மன்னர் குடும்பத்துக் குடிமகனும் சட்டத்தின் முன் சமம் என்று நிலைநாட்டிய சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களுக்கு வலைத்தளங்களில்  ஹேஷ் டேக்குகளுடன் வாழ்த்து மழைகள் குவிகின்றன.

உலக நாடுகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட கட்டுப்பாடற்ற சுதந்திரம் சவூதியில் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்க சட்டமன்றமோ, பாராளுமன்றமோ இல்லை. ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு அனுமதி இல்லை. இவ்வழக்கை இளவரசர் தப்பிக்கும் வகையில் மோடி, அமீத் ஷா வழக்குகள் போல் நடத்தி குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தால் அந்த நாட்டில் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.

யாருக்கும் பயப்பட வேண்டிய நிலைமை இல்லாவிட்டாலும் படைத்த இறைவனுக்கு மன்னர் பயப்படுகிறார். மன்னர் குடும்பத்தினர் பயப்படுகின்றனர். இந்தக் குற்றத்துக்கு இதுதான் தண்டனை என்பது அல்லாஹ்வின் சட்டம்; அதை மீறினால் அல்லாஹ் கேள்வி கேட்பான் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.

முந்தைய சமுதாயம் சீரழிந்து போனதற்குக் காரணம் சாதாரண மனிதன் குற்றம் செய்யும் போது அவனை சட்டத்தின்படி தண்டித்து விட்டு, பிரமுகர்கள் குற்றம் செய்யும் போது சட்டத்தின் பிடியில் இருந்து அவரை தப்புவிப்பதும் தான் காரணம் என்று நபிகள் நாயகம் செய்த எச்சரிக்கை இதற்கு மற்றொரு காரணம்.

என் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது நபியை வழிகாட்டியாக ஏற்றது தான் காரணம்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் மன்னர் மன்னித்து இருந்தால் உலகில் அதுதான் சட்டமாக உள்ளதால் எவனும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான். அந்த அதிகாரத்தை மன்னருக்கு வழங்காமல் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு வழங்கியதால் தான் மன்னர் மன்னிக்கவில்லை.

இப்போது நமது இந்தியத் திருநாட்டையும் நினைத்துப் பார்க்கிறோம்.

விபச்சாரியின் காம வலையில் விழுந்து இந்தியாவின் ராணுவ ரகசியங்களைக் கசிய விட்ட வருண் காந்தியின் காம, சரச, சல்லாப சமாச்சாரத்தை ஆளுகின்ற பச்சோந்தி பாஜக பொத்தி மறைத்துக் கொண்டிருக்கும் வேளையில், முஸ்லிம் விவகாரம் என்றால் அடுப்பங்கரை வரை தனது ஆதிக்கக் கேமராவை அனுப்பி வளைத்து வளைத்துப் படம் பிடித்து, அக்கு வேறாக ஆணி வேறாக அலசுகின்ற  ஊனமான ஊடகங்கள் வருண்காந்தி பிரச்சனையில் தங்கள் வாய்களுக்குப் பூட்டு போட்டு விட்டு ஊமையாகக் கிடக்கின்ற வேளையில், கண்களுக்குத் திரைபோட்டு உறங்கிக் கொண்டு கிடக்கும் இந்தத் தருணத்தில் சவூதியில் சட்டத்தின் ஆட்சியும் மாட்சியும் நிறைவேற்றப்பட்டிருப்பதும், நிலை நாட்டப்பட்டிருப்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாமனியனையும் சாதாரண குடிமகனையும் சவூதியை நோக்கி  திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது.

நடுநிலை சொம்புகள் என்ற பெயரில் கருத்துக் குருடுகள், இலங்கை ரிஸானா மரண தண்டனை விஷயத்தில் சவூதிய சட்டத்தை, அதாவது அல்லாஹ்வின் சட்டத்தை எவ்வித நியாய, நீதி உணர்வின்றி கழுவி ஊற்றின! கடித்துக் குதறித் தள்ளின! பகுத்தறிவுப் பகலவன் கருணாநிதி அதைக் கடுமையாகக் கண்டித்தார். காட்டுமிராண்டிச் சட்டம் என்றார். தவ்ஹீத் ஜமாஅத் அவரை இதுகுறித்து நேரடி விவாதத்துக்கும் அழைப்பு விட்டது. இப்போது அந்த  கருத்துக் குருடுகள், தங்கள் நாற வாய்களைத் திறக்காமல் கும்மிருட்டில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மட்டுமல்ல! உலகெங்கிலும் முஸ்லிம் அல்லாத சிந்தனையாளர்கள் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களுக்குப் பாரட்டு மாலைகளை சூடிக் கொண்டிருக்கின்றனர். பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றர்.

உண்மையில், இந்தப் பாராட்டு மாலைகளும் பாராட்டு மழைகளும் யாருக்குச் சொந்தம் தெரியுமா? சல்மானையும் சவூதியையும் ஆளுகின்ற அல்குர்ஆனுக்குத் தான்! காரணம் அது தான் நீதியை சார்பு வெறுப்பு பார்வையின்றி நிலை நாட்டச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:135

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:8

அல்குர்ஆன் கூறும் நீதியை நிலை நாட்டிய நீதி நாயகர், நியாய ஆட்சியாளர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசு வார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்கஜல் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்கஜடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கஜடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை கஜல் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்ட தெல்லாம் அவர்கஜல் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்கஜல் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையஜத்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3475

சாமானியனிடத்தில் கெஞ்சிய சவூதி குடும்ப இளவரசர்கள்

இந்த நிகழ்வில் எல்லோருடைய இதயத்தைத் தொட்டதும், சுட்டதும் பத்துக்கு மேற்பட்ட சவூதிய மன்னர் குடும்பத்தைச் சார்ந்த இளவரசர்கள் கொலையுண்டவரின் தந்தையிடம் கெஞ்சிய கெஞ்சலும் கேட்டுக் கொண்ட பரிந்துரையும் தான்!

நமது நாட்டில் குடியரசுத் தலைவரிடத்தில் போய் தண்டனையை ரத்து செய்யக் கோரி கெஞ்ச வேண்டும். ஆனால் இங்கு சாதாரணக் குடிமகனிடத்தில் சவூதிய குடியரசுத் தலைவர்கள் கெஞ்சிக் கேட்கின்றார்கள் ஆனால் அந்த சாதாரண குடிமகனோ மிஞ்சுகின்றார். பரிந்துரைகளை ஏற்க மறுக்கின்றார். பணக் குவியலை ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன் என்கின்றார். ஏன்?

நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலைசெய்த) சுதந்திர மானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் (இழப்பீடு) வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்

அல்குர்ஆன் 2:178,179

பாதிக்கப்பட்டவருக்கு இந்த வசனங்கள் கொடுத்த அதிகாரமும் அடித்தட்டு மக்களுக்கு அல்குர்ஆன் அளித்த அற்புதமான உரிமையும் தான்.

இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தால் போதும். சாட்சி சொல்லி விட்டு வெளியே வந்த மாத்திரத்தில் தடயம் தெரியாமல்  அவனை அழித்து விடுகின்றார்கள். இத்தனைக்கும் சவூதிய மன்னர்களுடன் ஒப்பிடுகின்ற போது இவர்கள் செல்வத்தில் பிச்சைக்காரர்கள். இவர்களுக்கு இந்த தெனாவெட்டும் திமிறும் இருக்குமேயானால் அவர்களுக்கு என்ன தெனாவெட்டும் திமிறும் இருக்கும்? அவர்கள் நினைத்தால் இந்தச் சாதாரண குடிமகனை உருத் தெரியாமல் அழித்திருக்க முடியும். அப்படியிருந்தும் அவர்களை அடங்கிப் போகச் செய்தது எது?

அல்குர்ஆனும் அது ஊட்டிய மறுமை சிந்தனையும் தான்!

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:92,93

இந்த இறை வசனங்கள்  கொலைக் குற்றத்திற்குரிய தண்டனை அதற்குரிய பரிகாரம், கொலையுண்டவரின் குடும்பத்திற்கு மன்னிப்பதற்கோ தண்டிப்பதற்கோ உரிய அதிகாரம் ஆகியவற்றைப் பேசுவதுடன் கொலை செய்தவர் ஏதாவது ஏமாற்று வேலைகள் செய்து இந்த உலகில் தப்பித்து விட்டால் மறுமையில் அவர்களுக்கு நிரந்தர நரகம் என்று எச்சரிக்கை செய்கின்றன. இவை தான் இந்த ஆட்சியாளர்களை சாதாரண குடிமக்களிடம் இவ்வளவு இறங்கியும் இணங்கியும் போகச் செய்திருக்கின்றன.

சவூதி அரபியாவின் அரச குடும்பத்தைச் சார்ந்த அரசர் கொல்லப்படுவது இது தான் முதல் நிகழ்வு என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இது இரண்டாம் நிகழ்வாகும்.

1975ஆம் ஆண்டு சவூதி மன்னர் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்களை அவர்களது மருமகன் இளவரசர் ஃபைசல் பின் முஸாயித் கொலை செய்து விடுகின்றார்.  அவருக்கு அப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது சவூதி அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை. அதன் பின் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரச குடும்பத்தைச் சார்ந்த துர்கீ பின் சவூத் அல் கபீர் கொல்லப்பட்டிருக்கின்றார். ஆனால் இந்நிகழ்வை உலகறியச் செய்து  இஸ்லாம் மனித  உயிருக்கு அளித்திருக்கின்ற மாண்பையும் மகிமையையும் உணர்த்தியிருக்கின்றது.

மன்னர் சல்மான்  2015ல் பதவிக்கு வந்தார். அந்த 2015ல் மட்டும் 158 பேர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு 2016ல்  மே வரைக்கும் 94 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது இவ்வாறு ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் குறிப்பிடுகின்றது.


இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சவூதி அரசு, குர்ஆனிய பாதையில் கம்பீரமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. உலகுக்கு ஒரே ஓரு விமோசனம் இஸ்லாம் தான் என்பதை உலகுக்கு இது பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. 

EGATHUVAM NOV 2016