பெருமானாரின் பெருந்தன்மை
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக
அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர் ஆவார்கள். அவர்கள் மனித சமுதாயத்தை அழகிய பண்பிலும் அருங்குணத்திலும்
வார்த்தெடுத்தார்கள் என்றால் மிகையல்ல.
முஹம்மது நபியின் தோழர்களில் ஒருவரும் இஸ்லாமியக் குடியரசின்
இரண்டாவது ஆட்சித் தலைவருமான உமர் (ரலி) அவர்களது அவையில் நடந்த ஒரு நிகழ்வு, அவர்கள் பாடம் பயின்ற பாசறையையும் அதன் அற்புத ஆசிரியரையும்
படம் பிடித்துக் காட்டுகின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு)
வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கüடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்கüல் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு
பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்கüன் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், "என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது.
ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா'' என்று
சொன்னார். அதற்கு அவர், "உமர் (ரலி) அவர்கüடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்'' என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு
அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி
கொடுத்தார்கள்.
உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்கüடம் சென்றபோது, "கத்தாபின்
புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்கüடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பüப்பதில்லை'' என்று சொன்னார். உமர் (ரலி)
அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி)
அவர்களை நோக்கி,
"இறைநம்பிக்கையாளர்கüன் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, "பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை
அலட்சியம் செய்வீராக!'' (7:199) என்று கூறியுள்ளான். இவர்
அறியாதவர்கüல் ஒருவர்'' என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி)
அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர்
(ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
நூல்: புகாரி 4642
உமர் (ரலி) அவர்கள் கோபத்திற்கும், கொந்தளிப்பிற்கும் பேர் போனவர்கள். ஆனால் அவர்கள் தமது அவையில்
உள்ள ஓர் இளைஞரின் வாயிலிருந்து வந்த ஒருசில மந்திரச் சொற்களில் அடங்கி, அமுங்கிப் போய்விடுகின்றார்கள். ஆர்த்தெழுந்த அந்த ஆவேசக்காரரை, ஆட்சித் தலைவரை அடக்கிய அந்த மந்திரச் சொற்கள் திருக்குர்ஆன்
வசனத்தின் வரிகள் தான்.
பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை
அலட்சியம் செய்வீராக!
அல்குர்ஆன் 7:199
இதற்குத் தான் அந்த இரும்பு மனிதர் அடங்கிப் போகின்றார்.
முஹம்மது நபி (ஸலர்) அவர்களை வார்த்ததும் வடித்ததும் இந்த அல்குர்ஆன்
தான். அந்தப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள் தான் உமர் (ரலி) அவர்கள். இந்த உமர்
(ரலி) இப்படியென்றால் அன்னாரது ஆசான் நபி (ஸல்) அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்
என்பதற்குக் கட்டியம் கூறுகின்ற நிகழ்வு தான் மேற்கண்ட நிகழ்வாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கும் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்கின்றது.
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து
தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே
(உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள்.
-இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள்.
அதில் (நயவஞ்சகர்கüன் தலைவர்) "அப்துல்லாஹ்
பின் உபை பின் சலூல்' இருந்தார். அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய
பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)
அவர்களும் இருந்தார்கள்.
(எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது
(நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார்.
பிறகு, "எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்'' என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு
சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபி (ஸல்) அவர்கüடம் "மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத்
தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்கüடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்'' என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு
எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்'' என்றார்.
இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்)
ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்)
அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள்
தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்கüடம்
சென்று, அவரிடம் "சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை
நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்'' என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு
வேதத்தை அருüயவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருüய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்து விட்டான். இந்த
(மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு
செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம்
அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி
அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்'' என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்து விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும்
வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்கüன்) நிந்தனைகளைப்
பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும்
சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச்
செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில்
ஒன்றாகும். (3:186)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட
வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான
பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும்
வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின்
மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (2:109)
அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை
நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்றபோது
அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர்கüன்
தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் "(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது.
ஆகவே, இந்த(இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியüத்து விடுங்கள்'' என்று கூறி
(வெüத்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.
நூல்: புகாரி 4566
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவை ஆள்கின்ற ஆட்சித் தலைவர்
ஆவார்கள். அந்த ஆட்சித் தலைவருக்கு சரிநிகர் போட்டியாளனாகக் காட்டிக் கொள்ள முனைகின்ற
அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவனை நபி (ஸல்) அவர்கள் கொன்றால் கூட இந்தத் தலைவரை
எதிர்த்துக் கேட்க அரபுலகில் எந்தக் கொம்பனும் இல்லை. தண்டிக்க சக்தியிருந்தும் அவரை
மன்னித்து,
பெருந்தன்மைக்குப் பெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் முஹம்மது
நபி (ஸல்) அவர்கள்.
பெருமானாரின் இதுபோன்ற பெருந்தன்மை தான், சுபாவத்திலேயே ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் கொண்ட உமர் (ரலி)
அவர்களைப் பக்குவப்படுத்தியது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் பக்குவப்படுத்தியது
பண்புகள் நிறைந்த திருக்குர்ஆன் தான். அதனால் தான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார்
ஆயிஷா (ரலி) அன்னாரைப் பற்றிக் குறிப்பிடும் போது, "குர்ஆன் தான் நபி (ஸல்) அவர்களின் குணமாக இருந்தது' என்று கூறுகின்றார்கள்.
(முஸ்லிம் 1233)
மன்னிக்கும் மனப்பாங்கு
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு விஷயங்கüல் விரும்பியதைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில்
இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் - எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள்.
அது பாவமான விஷயமாக இருந்தால் மக்கüலேயே அதிகமாக
அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப் பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று
அவர்கள் விரும்பினாலே தவிர.
நூல்: புகாரி 3560
சுமாமா என்பவர் போர்க்கைதியாகப் பிடித்து வரப்பட்டு பள்ளிவாசல்
தூணில் கட்டி வைக்கப்படுகின்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கொண்ட அணுகுமுறையைப் பின்வரும்
ஹதீஸ் விவரிக்கின்றது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர்
"பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின்
உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்üவாசலின் தூண்கüல் ஒன்றில்
அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன
கருதுகிறாய்,
ஸுமாமாவே?'' என்று கேட்டார்கள். அவர், "நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால்
இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள்
உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே
உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக்
கேளுங்கள்''
என்று பதிலüத்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.
மறு நாள் வந்தபோது அவரிடம், "ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்கüடம் நான் (ஏற்கெனவே) கூறியது
தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்'' என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு
அடுத்த நாள் வந்தபோது, "நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அவர், "நான் ஏற்கெனவே தங்கüடம் சொன்னதைத்
தான் கருதுகிறேன்'' என்று பதிலüத்தார். நபி (ஸல்) அவர்கள், "ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்'' என்று சொன்னார்கள்.
உடனே ஸுமாமா, பள்üவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குüத்துவிட்டு, பள்üவாசலுக்கு வந்து, "வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை' என்று நான்
உறுதி கூறுகிறேன். மேலும், "முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்' என்றும் நான்
உறுதி கூறுகிறேன்'' என்று மொழிந்துவிட்டு, "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட
என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்கüலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக!
(இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை.
ஆனால், இன்று மார்க்கங்கüலேயே எனக்கு
மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட
எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள்
குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டு விட்டனர்'' என்று சொல்லிவிட்டு, "மேலும்
நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி
கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியüத்தார்கள்.
அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், "நீ மதம் மாறிவிட்டாயா?'' என்று கேட்டார்.
அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!
(நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின்•தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின்
மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை
தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 4372
இங்கு நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பு, தண்டிப்பு ஆகிய இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நபி
(ஸல்) அவர்கள் மன்னிப்பையே தேர்வு செய்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவத்தில் நாம்
பார்க்கின்றோம். அவர்களது பெருந்தன்மை இங்கு வெளிப்படுகின்றது.
மன்னிப்புக்கே முதலிடம்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர்
ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
திரும்பிய போது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள்
நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வுகொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள்
(ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகüலும்) பிரிந்து
போய்விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள்.
நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்கüடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி
அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் தூங்கிக் கொண்டிருந்த போது இவர் எனது வாளை (எனக்கெதிராக)
உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரது கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன்.
அப்போது இவர் என்னிடம், "என்னிடமிருந்து உன்னைக்
காப்பவர் யார்?'
என்று கேட்டார். நான், "அல்லாஹ்' என்று பதிலüத்தேன். இதோ
அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்'' என்று கூறினார்கள். பிறகு அவரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. (மன்னித்து விட்டுவிட்டார்கள்.)
நூல்: புகாரி 4135
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவருக்கு மரண தண்டனை அளிப்பதற்குரிய
அனைத்து நியாயமும் இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவரைத் தண்டிக்காது மன்னிப்பளித்து, தமது பெருந்தன்மையைக் காட்டுகின்றார்கள்.
காலையில் பகைவன்; மாலையில் நண்பன்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைக்கு மக்காவில் எதிரிகள் விலை
நிர்ணயம் செய்கின்றார்கள். அந்த இக்கட்டான கட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது
நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களும் தப்பி மதீனாவுக்குச் செல்கிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் வர (மக்காவிலிருந்து)
மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள்....
....அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு (அவர்களுக்குப்
பின்னால்) ஒரு குதிரை வீரர் (சுராகா) அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (இதோ!)
இந்தக் குதிரை வீரர் நம்மை (நெருங்கி) வந்தடைந்து விட்டார்'' என்று கூறினார்கள். உடனே, அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு, "இறைவா! அவரைக் கீழே விழச் செய்!'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்üவிட்டது; பிறகு கனைத்துக் கொண்டே எழுந்து
நின்றது. (உடனே சுராகா மனம் திருந்தி), "அல்லாஹ்வின்
தூதரே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்'' என்று
கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இங்கேயே
நின்று கொள். எங்களை பின் தொடர்ந்து வரும் எவரையும் விட்டு விடாதே'' என்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப்
போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும்
ஆயுதமாக மாறினார்.
நூல்: புகாரி 3906, 3911
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு
நிகழ்வு அவர்கள் எதிரிகளிடமிருந்து தப்பியோடிய நிகழ்வு! அவர்களது தலைக்கு வலை வீசப்படுகின்றது; விலை பேசப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் தம்மைத் துரத்தி
வந்த துரோகியை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கிறார்கள் என்றால் அல்குர்ஆன் தான் அவர்களை
அப்படி வார்த்தெடுத்தது.
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக்
கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை
இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.
பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு)
வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.
அல்குர்ஆன் 41:34, 35
இந்தச் சம்பவத்திலும் இதற்கு முன்பு நாம் கண்ட சம்பவங்களிலும்
நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனின் மேற்கண்ட போதனைகளைச் செயல்படுத்திக் காட்டி, பகையை வெல்லும் பாக்கியவான் என்பதை நிரூபிக்கின்றார்கள். பெருந்தன்மையுடன்
நடந்து பெருந்தகையாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.
நல்ல காரியத்திற்கு இப்படி ஈவு இரக்கம் காட்டுகின்ற இனிய நபியவர்கள், பாவமான காரியம் என்றால் தயவு தாட்சண்யம் பார்ப்பது கிடையாது.
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("அஸ்த்' எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை ("ஸகாத்' வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது
பணியை முடித்துக்கொண்டு நபியவர்கüடம் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பüப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து
கொண்டு உமக்கு அன்பüப்பு வழங்கப்படுகிறதா இல்லையா
என்று பாரும்!''
என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு
எழுந்து நின்று,
ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி
போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், "அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம்
வந்து "இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பüப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறுகிறார்.
அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பüப்பு வழங்கப்படுகிறதா
இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது
சத்தியமாக! உங்கüல் யாரேனும் அந்த(ப் பொதுச்)
சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாüல் தமது பிடரியில் சுமந்துகொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக
இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக்
கொண்டு வருவார்;
அது ஆடாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக்
கொண்டு வருவார்''
என்று கூறிவிட்டு "(இறைவா! உனது செய்தியை மக்கüடம்) நான் சேர்த்துவிட்டேன்'' என்று
கூறினார்கள்.
நூல்: புகாரி 6636
ஜகாத் நிதி என்பது ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய பொருளாகும்.
அந்தப் பொருளில் அநியாயம் நடக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கொதித்து, கொந்தளித்து எழுகின்றார்கள். மன்னிப்பது, மறப்பது, விட்டுக் கொடுப்பது எல்லாம்
சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிராக நடப்பவர்களிடம் கிடையாது என்பதை நபி (ஸல்) அவர்கள்
தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
இப்படி பாவமான காரியங்களைத் தவிர மற்ற காரியங்களில் நபி (ஸல்)
அவர்கள் மிகப் பெருந்தன்மையுடனும், மன்னிக்கும்
மனப்பான்மையுடனும் நடந்து காட்டியிருக்கின்றார்கள். இது அவர்களுக்கு இறைமறை போதித்த
பண்பாகும். இப்படிப்பட்ட இறைத்தூதர் எப்படி பயங்கரவாதத்தைப் போதித்திருப்பார்கள்? தீவிரவாதத்தை எப்படி ஆதரிப்பார்கள்? என்பதை நியாயவான்கள், நீதிமான்கள்
சிந்திக்க வேண்டும்.
பிற மதத்தவர்களிடம் அன்பு காட்டிய பெருமானார்
முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களே! அவர்கள் தம் சமுதாய மக்களுக்கு சகிப்புத்தன்மையை வலியுறுத்தி போதித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களைத் தனது
பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே
வீரன் ஆவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6114
அவர்களது வாழ்வில் எந்தளவு சகிப்புத்தன்மை நிறைந்திருந்தது, பிற மதத்தவர்களிடம் எவ்வளவு அன்பாகவும், பெருந்தன்மையாகவும் நடந்துள்ளார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள்
நிறைந்துள்ளன.
பொதுவாக ஒரு மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாகவே
கருதுவது வழக்கம். அது போல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்பவர் ஒரு மதத்தின் மீது
ஆழ்ந்த பற்றுடையவராக இருந்தால் அவரும் பிற மதத்தவர்களை இழிவாகவே கருதுவார்.
ஏற்கனவே தமக்குக் கொடுமைகள் புரிந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்
வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கும் என்றால் அவர் தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களை உண்டு
இல்லை என்று ஆக்கி விடுவார். உலக வரலாற்றில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு
ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம்
செய்து அனைத்து வகையான தீமைகளையும் எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளை அவர்கள் சம்பாதித்திருந்தனர்.
அந்த எதிரிகள் மூலம் ஏராளமான கொடுமைகளையும் சந்தித்தனர். பல தோழர்கள் எதிரிகளால் கொன்று
குவிக்கப்பட்டனர். ஊரை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர். இத்தகையோர் மீது ஆதிக்கம் செலுத்தும்
வாய்ப்பு சீக்கிரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
அவர்களைப் பழிவாங்கியிருந்தால் அதை யாரும் குறை காண முடியாத
அளவுக்கு அதற்கு நியாயங்கள் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கை முழுமையாக
ஓங்கியிருந்த காலகட்டத்திலும் யாரையும் பழிவாங்கவில்லை. முஸ்லிமல்லாத மக்களுடன் நட்புறவுடனேயே
அவர்கள் பழகி வந்தனர்.
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு
ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் "நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக்
கொடுத்தீர்களா?
நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். "அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து
விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக்
கொண்டே இருந்தார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.
நூல்: திர்மிதி 1866
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் அப்துல்லாஹ்
பின் அம்ரு (ரலி)யும் ஒருவர். அவர் தமது அண்டை வீட்டு யூதருக்கும் தமது வீட்டில் அறுக்கப்பட்ட
ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் போதனையையே அவர் காரணமாகக் காட்டுகிறார்.
அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுமாறு வலியுறுத்திய நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மதத்தின் அடிப்படையில் அண்டை வீட்டாருக்கு உதவுவதில் பாரபட்சம்
காட்டக் கூடாது என்று விளக்கமளித்ததால் தான் அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழரால் இவ்வாறு
நடந்து கொள்ள முடிகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மிடம் ஆட்சியும், அதிகாரமும் வந்த பின்பும் முஸ்லிமல்லாத மக்களிடம் எவ்வாறு நடந்து
கொண்டார்கள் என்பதற்கு மற்றொரு சான்றையும் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யூத மதத்தைச் சேர்ந்த பணியாளர்
ஒருவர் பணி செய்து வந்தார். அவர் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். உடனே அவரை விசாரிக்க
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றனர். அவரது தலைக்கருகில் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். "இஸ்லாத்தை நீ ஏற்றுக் கொள்ளலாமே' என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அந்த இளைஞரின் தந்தையும்
அருகில் இருந்தார். அந்த இளைஞர் தமது தந்தையைப் பார்த்தார். "நபிகள் நாயகம் கூறுவதைக்
கேள்' என்று தந்தை கூறியதும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
"இவரை நரகத்திருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.
நூல்: புகாரி 1356
இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் வாழ்ந்த யூதர்கள் பலவகையிலும்
நபிகள் நாயகத்துக்கு இடையூறு செய்து வந்தனர். எதிரி நாட்டவருக்குத் தகவல்களைப் பரிமாறிக்
கொண்டவர்களும் அவர்களில் இருந்தனர். இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களாக நடித்து ஏமாற்றியவர்களும்
இருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன் யூதர்கள்
தான் பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் எஞ்சியவர்களுக்கு
நபிகள் நாயகத்தின் மீது கடுமையான கோபம் இருந்தது.
இத்தகைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தமது பணியாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில்
உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களிடம் மனித நேயம்
மிகைத்திருந்தது. இதனால் தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில்
ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
மேலும் இவ்வாறு அந்த இளைஞரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறிய போது,
அருகில் இருந்த தந்தை அதை ஏற்கச் செய்கிறார் என்றால் அந்த மக்களிடம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு மனித நேயத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்திருப்பார்கள் என்பதை ஊகம் செய்யலாம்.
தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தியோ அல்லது எஜமான் என்ற செல்வாக்கைப்
பயன்படுத்தியோ நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரை மதம் மாற்றிவிடவில்லை. அவர் இறக்கும் தருவாயில்
அவரிடம் சென்று அழைப்புப் பணி செய்கின்றார்கள். அந்த இளைஞரும் தமது தந்தையிடம் அனுமதி
பெற்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று பொய்ப்
பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தச் சம்பவம் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.
இத்தகைய பண்பாடுகளாலும், எல்லையற்ற
மனித நேயத்தினாலும் தான் மனிதர்களை அவர்கள் வென்றெடுத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதரிடம்
அடைமானம் வைத்து அவரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.
நூல்: புகாரி 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்வுக்குச் சான்றாக
இது அமைந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக
இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகத்தின்
எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர்.
நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் இரட்டை வேடம் போட்டு வந்த சமுதாயத்தவர்களை
எந்த நாடும் மரியாதையுடன் நடத்துவதில்லை. ஆனால் யூதர்கள் பலவிதமான இடையூறுகள் அளித்த
நிலையிலும் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் எந்த அளவு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக
அமைந்துள்ளது.
நாட்டின் அதிபதி அடைமானம் வைக்கக் கூடியவராகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெற்றுக் கொள்பவராகவும்
இருந்தனர் என்பதிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விசாலமான உள்ளத்தை அறிந்து கொள்ள
முடியும்.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த
ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர்.
உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம்
என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில்
நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்கள்.
நூல்: புகாரி 2617
நபிகள் நாயகத்திற்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண்மணி விஷம் கலந்த
ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்த போது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின்
பெருந்தன்மை இருந்தது. அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள்.
அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்ட
போது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் நிலை
என்னவென்றால் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்பது தான்.
இந்தச் சட்டத்தில் யாருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) வளைந்ததில்லை.
உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி திருடிய போது அவருக்காக பலரும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் பரிந்துரை செய்த போது என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன்
என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(நூல்: புகாரி 3475, 3733, 4304, 6787, 6788)
சட்டத்தை அமுல்படுத்துவதில் கடும் போக்கை மேற்கொண்ட நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தம்முடைய சொந்த விவகாரம் என்றவுடன் மன்னித்து விடுகிறார்கள்.
தமது குடிமக்களில் வேறு யாரையாவது அப்பெண் கொல்ல முயன்றிருந்தால்
அவரைக் கடுமையாகத் தண்டித்திருப்பார்கள். கொலை முயற்சி தமக்கு எதிரானது என்பதால் தான்
அப்பெண்ணை மன்னித்து விடுகிறார்கள்.
நேருக்கு நேர் நின்று மோதுவதை விட பெண்களை முன்னிறுத்தி கொல்ல
முயல்வதும்,
உணவில் விஷம் கலந்து நம்பிக்கை துரோகம் செய்வதும் மிகவும் கடுமையாக
எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்.
இவ்வாறு துணிவுடன் ஒரு பெண் விஷம் கலந்து கொடுக்கிறார் என்றால்
அதற்குப் பலமான பின்னணி இருக்க வேண்டும். திட்டமிட்டவர் யார்? தூண்டியவர் யார்? யாருக்கெல்லாம்
இதில் பங்கு உண்டு என்றெல்லாம் விசாரணை நடத்துவது தான் உலக வழக்கம். சாதாரண குடிமக்களுக்காக
இவ்வாறு நடத்தப்படாவிட்டாலும் நாட்டின் தலைவர்களின் உயிரோடு விளையாடியவர்களுக்கு எதிராக
இத்தகைய நடவடிக்கைகள் தான் எடுக்கப்படும்.
அந்தச் சதியில் சம்பந்தப்பட்டவர் யார் என்பதோடு கூட நிறுத்திக்
கொள்ள மாட்டார்கள். மாறாகக் குற்றவாளியின் இனத்தைச் சேர்ந்த அப்பாவிகளையும் கூட கொன்று
குவிப்பது தான் உலக வழக்கம்.
ஆனால் இந்த மாமனிதரோ, அப்பெண்ணையும்
தண்டிக்கவில்லை;
அப்பெண்ணுக்குப் பின்னணியில் இருந்தவர் யார் என்பதையும் விசாரிக்கவில்லை.
அப்பெண் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவளோ அந்தச் சமுதாயத்தை - யூத சமுதாயத்தை - பழிவாங்கவும்
இல்லை.
எதுவுமே நடக்காதது போல் அவர்கள் பதிலளித்ததைக் காணும் எவரும்
இந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கும் மனித நேயத்திற்கும் ஈடானது ஏதுமில்லை என்பதை ஒப்புக்
கொள்வார்.
முஸ்லிமல்லாத மக்களிடம் இது போன்ற இன வெறுப்பைக் காட்டாது இஸ்லாம்
கற்றுத் தந்த மனித நேயத்தைக் காட்டினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது எதிரிகளின்
உள்ளங்களை வென்றது போல் வெல்ல முடியும் என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனித நேயத்துக்கு எடுத்துக்
காட்டாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரிமையியல் (சிவில்) வழக்குகளில்
முக்கியமான சட்ட விதியைக் கடைப்பிடிப்பது வழக்கம்.
ஒருவரது கைவசம் உள்ள பொருளுக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடினால்
உரிமை கொண்டாடுபவர் அதற்கான சான்றுகளைக் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
உரிமை கொண்டாடும் வாதியிடம் சான்று ஏதும் இல்லாவிட்டால் யாருடைய
கைவசம் அப்பொருள் இருக்கிறதோ அவரை அழைத்து 'இறைவன் மேல்
ஆணையாக இது என்னுடையது தான்' எனக் கூறச் சொல்வார்கள். அவ்வாறு
கூறிவிட்டால் அப்பொருள் அவருக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பு அளிப்பார்கள். சத்தியம்
செய்ய அவர் மறுத்தால் உரிமை கொண்டாடி வழக்குத் தொடுத்த வாதியிடம் அப்பொருளை ஒப்படைப்பார்கள்.
ஒரு முஸ்லிமுக்கும், யூதருக்கும்
இடையே இது போல் உரிமையியல் தொடர்பான வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது.
அதன் விபரம் வருமாறு:-
"ஒரு முஸ்லிமுடைய பொருளை அபகரிப்பதற்காக யார் பொய்யாகச் சத்தியம்
செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி)
கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) என்ற நபித்தோழர் 'என் விஷயமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
ஒரு நிலம் தொடர்பாக எனக்கும், ஒரு யூதருக்கும் விவகாரம் இருந்தது.
அவர் அதை எனக்குத் தர மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு
சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உன்னிடம்
சான்று ஏதும் உள்ளதா?' எனக் கேட்டார்கள். இல்லை' என்று நான் கூறினேன். உடனே யூதரிடம் "நீ சத்தியம் செய்!' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உடனே நான் குறுக்கிட்டு
"அல்லாஹ்வின் தூதரே! இவன் சத்தியம் செய்து என் சொத்தை எடுத்துக் கொள்வான்' எனக் கூறினேன். அப்போது 3:77 வசனத்தை அல்லாஹ் அருளினான்' என்று
அஷ்அஸ் கூறினார்.
நூல்: புகாரி 2357, 2411, 2417, 2516, 2667
பொதுவாக அன்றைய யூதர்கள் பொய்ச் சத்தியம் செய்வதற்கு கொஞ்சமும்
கூச்சப்படாதவர்களாக இருந்தனர். முஸ்லிம்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் என்று நம்பியதால் நபிகள் நாயகம் (ஸல்) முன்னிலையில் பெரும்பாலும் பொய் சொல்ல
மாட்டார்கள்.
இந்த நிலையில் யூதர் பொய்ச் சத்தியம் செய்யத் தயங்க மாட்டார்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாரபட்சமான தீர்ப்புக் கூறவில்லை. வழக்கமாக இரண்டு
முஸ்லிம்களுக்கிடையில் இது போன்ற விவகாரம் எழுந்தால் எவ்வாறு தீர்ப்பு வழங்குவார்களோ
அதே விதியின் கீழ் தான் யூதருக்கும் நீதி வழங்கினார்கள்.
தனது சமுதாயத்தவர், தனது எதிரிகளின்
சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று பேதம் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீதி வழங்கியதில்லை
என்பதற்கு இதுவும் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள்
மீது சாந்தி நிலவட்டும் - எனக் கூறுவது இஸ்லாமிய முகமன் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் சிறுபான்மையாக இருந்த
யூதர்கள் இந்த வாசகத்தை வேறு விதமாக மாற்றிக் கூறி முஸ்லிம்களைப் புண்படுத்தி வந்தனர்.
நபிகள் நாயகத்திடமே இவ்வாறு பயன்படுத்தவும் துணிந்தனர்.
அஸ்ஸலாமு என்பதில் "லா' வை
நீக்கி விட்டு "அஸ்ஸாமு' என்று கூறுவர். அஸ்ஸாமு அலைக்கும்
என்றால் உங்களுக்கு நாசம் ஏற்படட்டும் என்று பொருள்.
அஸ்ஸலாமு என்று சொல்வது போல் பாவனை செய்து அஸ்ஸாமு எனக் கூறி
வந்தனர்.
பொதுவாக இது போன்ற விஷமத்தனங்களைப் பெரும்பான்மை மக்கள் தான்
சிறுபான்மை மக்களிடம் செய்வது வழக்கம். சிறுபான்மையினர் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டால்
அவர்கள் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்ற சில்மிஷங்களுக்காகக்
கோபம் கொள்ள மாட்டார்கள் என்று யூதர்கள் நன்றாக அறிந்திருந்ததால் தங்கள் வழக்கத்தில்
நீடித்து வந்தனர்.
யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபிகள் நாயகத்திடம் வந்து அஸ்ஸாமு
அலைக்கும் (உங்களுக்கு நாசம் ஏற்படட்டும்) எனக் கூறினார்கள். அவர்கள் கூறியது எனக்கு
விளங்கியதால் "அலைகுமுஸ் ஸாமு (உங்கள் மீதும் அழிவு ஏற்படட்டும்)' என்று நான் கூறினேன்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே! நிதானம்
வேண்டும். அனைத்து காரியங்களிலும் மென்மையான போக்கையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று என்னிடம் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே அவர்கள்
கூறியது உங்கள் காதில் விழவில்லையா?' என்று நான்
கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அலைகும் (உங்களுக்கும்) என்று
நான் கூறி விட்டேனே' என விடையளித்தார்கள்.
நூல்: புகாரி 6024
மாமன்னராகவும் மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் நபிகள் நாயகம்
இருந்த போது சிறுபான்மைச் சமுதாயம் இப்படிக் கூறத் துணிந்தது எப்படி?
எவ்வித அச்சமும், தயக்கமும்
இன்றி வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் யூதர்களுக்கு வழங்கப்பட்டதால் தான் இவ்வாறு அவர்களால்
நடந்த கொள்ள முடிந்தது.
அவர்கள் சொன்ன அதே வார்த்தையைத் தமது மனைவி திரும்பிக் கூறியதைக்
கூட இந்த மாமனிதர் கண்டிக்கிறார்.
உங்கள் மீதும் நாசம் ஏற்படட்டும் என்று பதில் கூறாமல், 'உங்கள் மீதும்' என்று மட்டும்
பதில் கூறுமாறு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்திய அநாகரீக வார்த்தையைக் கூட
அவர்கள் தவிர்க்கிறார்கள்.
மன்னராட்சியில் இது போன்று நடந்து கொண்டவர் உயிர் பிழைப்பதே
அரிது என்ற நிலையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் பெருந்தன்மை எத்தகையது
என்பது விளங்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களில்
பலரது உறவினர்களும் குடும்பத்தாரும் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தனர்.
இஸ்லாத்தை ஏற்காத தங்களின் உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச்
செய்யலாமா?
என்று இஸ்லாத்தை ஏற்றவர்கள் கேட்டபோதெல்லாம் உறவினருக்கான கடமைகளைச்
செய்தாக வேண்டும் என்பது தான் நபிகள் நாயகத்தின் அறிவுரையாக இருந்தது.
இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என் தாய் என்னிடம் வந்தார். அவரை
என்னோடு வைத்துக் கொள்ளலாமா? என்று நபிகள் நாயகத்திடம் நான்
கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் "ஆம்! கண்டிப்பாக உன் தாயை உன்னோடு சேர்த்துக்
கொள்' எனக் கட்டளையிட்டனர் என்று அஸ்மா (ரலி) அறிவிக்கிறார்.
நூல்: புகாரி 2620, 3183, 5979
ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீதும் மிகவும் கருணையுடன்
நடந்து கொள்வது அவர்களின் வழக்கம். மனிதர்கள் புனிதமாக மதிப்பவை சிதைக்கப்படும் போது
தான் அதிகமான கோபம் கொள்வது வழக்கம்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை பள்ளிவாசல் தான் மிகவும் புனிதமானதாகும்.
அதிலும் மூன்று பள்ளிவாசல்கள் அதிகமான புனிதம் கொண்டவை.
அவற்றுள் மஸ்ஜிதுந்நபவீ என்ற பள்ளிவாசல் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தமது திருக்கரத்தால் கட்டிய பள்ளிவாசலாகும். அங்கே நடந்த இந்த நிகழ்ச்சியைப்
பாருங்கள்!
ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள்
அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்!
அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு
தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை
என்றார்கள்.
நூல்: புகாரி 220, 6128
....அவர் சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுங்கள் என்றார்கள்.
அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். "இது அல்லாஹ்வின் ஆலயம்.
இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும்
இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியது' என்று அறிவுரை
கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்: 429
சிறுநீர் கழிப்பவர் அதை அடக்கிக் கொள்வதற்காகச் சிரமப்படக் கூடாது
என்பதற்காக அவர் சிறுநீர் கழிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்து அறிவுரை கூறுகிறார்கள்.
குறைந்த பட்சம் கடுமையான வார்த்தைகளால் அவரை ஏசியிருக்கலாம். அல்லது அவரையே சுத்தம்
செய்து தருமாறு கட்டளையிட்டிருக்கலாம். அறியாமையின் காரணமாக அவர் செய்ததை உணர்ந்து
மென்மையான முறையில் அவருக்கு போதனை செய்கிறார்கள்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபம் வராத, நிதானம் தவறாதவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இதுவும்
காரணமாக உள்ளது.
எனவே பிற மக்களிடம் அன்பாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்பவனே
நபிகள் நாயகத்தின் உண்மை தொண்டன் ஆவான். அவனே உண்மை முஸ்லிமும் ஆவான். அன்புக்கு எதிராக
காட்டுமிராண்டித்தனத்துடன் நடப்பவர்கள் யாரும் நாங்கள் நபிகள் நாயகத்தை பின்பற்றும்
முஸ்லிம்கள் என்று சொல்ல அருகதையற்றவர்கள். இப்படிப்பட்ட மனிதர் போதித்த இஸ்லாமிய மார்க்கம்
எப்படி தீவிரவாதத்தை ஆதரிக்கும் என்பதையும் அனைவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி: ஆன்லைன் பி.ஜே. இணைய தளம்
EGATHUVAM NOV 2014