May 18, 2017

பாதை மாறாமல் பயணம் தொடரும்

பாதை மாறாமல் பயணம் தொடரும்

எண்பதுகளின் துவக்கத்தில் ஏகத்துவக் கொள்கை இதயத்தைக் கழுவியதும் நம்மை விட்டு ஒரு பெருங்கூட்டம் விலகிச் சென்றது. அவர்களது பிரிவு நம்முடைய பயணத்தை முறிக்கவோ, முடிக்கவோ இல்லை. பயணம் தொடர்ந்தது.

ஏகத்துவத்தை நமது இதயம் ஏற்ற ஆரம்ப நாட்களில் நான்கு மத்ஹபுகள் என்ற மதில் சுவர்கள் கொண்ட கோட்டையில் நாம் குடியிருந்தோம். அந்தக் காலத்தில் மத்ஹபுக் கோட்டையை விட்டு வெளியேறுவது என்பது எண்ணிப் பார்க்க முடியாத, நாம் எதிர்பார்த்திராத ஒரு விஷயமாகும். ஆனால் ஏகத்துவ மரத்தின் வேர்கள் ஆழமாகப் பரவத் தொடங்கியதும் மத்ஹபுக் கோட்டையின் மதில் சுவர்கள் வெடிப்புக்கும் விரிசலுக்கும் உள்ளாகி அடியோடு சரிந்து விழுந்தது. விளைவு, மத்ஹபுகளை விட்டு வெளியேறினோம். இதனால் நம்மீது அபிமானம், அன்பு கொண்டவர்களையும், அளவுக்கு அதிகமான வெறுப்பு கொண்டவர்களையும் விட்டு ஒருசேரப் பிரிந்தோம்.

நாம் வெளியேறுவதற்கும், விலகுவதற்கும் மிகவும் பாரதூரமாக இருந்தது மத்ஹபுகள் தான். அந்த அளவுக்கு மத்ஹபு மாயை நம்மிடம் ஊட்டப்பட்டிருந்தது. 1983 வாக்கில் சங்கரன்பந்தல் மத்ரஸா மாணவர்களிடம், மத்ஹபை விட்டு விலகலாமா? என்ற வினா எழுந்த போது, அது தொடர்பான விவாதப் பொறி பறந்த போது, சங்கரன்பந்தல் பைஜுல் உலூம் மதரஸாவின் முதல்வரும் பி.ஜே. அவர்களின் சகோதரருமான பி.எஸ். அலாவுதீன் அவர்கள் அக்கினிக் குழம்பானார். மத்ஹபை விட்டு வெளியேறினால் கூழ்முட்டைகளாகி விடுவீர்கள் என்று குறிப்பிட்டார். அப்போது அவர்களது நிலைப்பாடு, மத்ஹபு வெறி கூடாது என்ற அளவில் மட்டும் இருந்தது. ஆனால் அன்றைய ஆலிம்கள் அந்த நிலைப்பாட்டைக் கூட சகித்துக் கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.

மத்ஹபின் பிடிமானம் பி.எஸ். அலாவுதீன் போன்ற புரட்சி சிந்தனை கொண்டவர்களிடமும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பிற்காலத்தில் அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் மத்ஹபிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்பது தனி விஷயம்.

இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் நம்மை வசப்படுத்தி ஆட்டுவித்த மத்ஹபின் பரிமாணத்தை விளக்குவதற்காகத் தான். இறுதியாக, மத்ஹபுகள் குர்ஆன், ஹதீஸின் நேர்எதிர்த் திசையில் பயணிக்கின்றது; அதில் பயணம் செய்வது நரகத்தின் பாதாளத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்று அல்லாஹ்வை அஞ்சி அதிலிருந்து இறங்கி, குர்ஆன், ஹதீஸ் பாதையில் பயணமானோம்.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் பெயரிலேயே கொண்ட ஜாக் என்ற இயக்கம் கண்டோம். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகள் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையில் நின்றோம். மார்க்கப் பயணத்தைத் தொடர்ந்தோம். அவ்விரண்டின் அடிப்படையிலேயே மார்க்கத் தீர்ப்பளித்தோம்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் 2:102

இந்த வசனத்தின் விளக்கத்தை அன்றே அடித்துச் சொன்னோம். ஸிஹ்ர் என்பது ஒரு வித்தை, தந்திரம்; அதைப் பயன்படுத்தி கணவன், மனைவிக்கு மத்தியில் அல்லாஹ் நாடினால் பிரிவினை ஏற்படுத்த முடியும் என்று விளக்கமளித்தோம். அதுவும் கூட சூனியத்தின் ஆற்றலால் அல்ல. கணவன் மனைவி ஆகிய இருவருக்குமிடையில் கோள் மூட்டிப் பிரிக்க முடியும் என்றே விளக்கமளித்தோம்.

இப்போதும் சூனியத்தின் சக்தியைக் கொண்டு கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்றே சொல்கிறோம். மொத்தத்தில் சூனியத்திற்கு எந்த ஆற்றலும் இல்லை என்று அன்று ஜாக்கில் இருக்கும் போதே சொல்லி விட்டோம்.

ஜாக் இயக்கத்தில் இப்படித் தெளிவான திசையில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது தான் காவி பயங்கரவாதிகளால் பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது, சமுதாயப் பிரச்சனைகளையும் கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்றளவுக்கு சமுதாயத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது.

சமுதாயப் பணியும் அழைப்புப் பணியின் ஓர் அத்தியாவசிய அம்சம் தான். மாற்றுக் கருத்தில் உள்ளவர்களை தவ்ஹீதில் இழுப்பதற்கு ஓர் ஆயுதம் தான் சமுதாயப் பணி என்பதை ஜாக்கின் தலைமைக்குப் பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் எடுத்து வைக்கப்பட்டது. ஜாக் தலைமை அதை ஏற்க மறுத்தது.

இனிமேலும் இந்தக் கூடாரத்தில் இருக்க முடியாது என்று கருதி, அல்லாஹ்வை அஞ்சியவர்களாக அங்கிருந்து வெளியேறினோம்.

சத்தியப் பணிக்கு ஓரமைப்பு, சமுதாயப் பணிக்கு வேறோர் அமைப்பு என இரண்டு அமைப்புகளைக் கண்டோம். பாதை மாறாமல் பயணம் தொடர்ந்தது. சமுதாயப் பணியில் முன்னிலைப்படுத்தப் பட்டவர்களுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. நாற்காலிக் கனவுகள் அவர்களது கண்களில் நடனம் ஆடின. தங்களது வளர்ச்சிக்கு தவ்ஹீதுக் கொள்கை தான் தடை என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

அல்லாஹ்வை அஞ்சி அங்கிருந்து வெளியேறினோம். சத்தியப் பணிக்கும் சமுதாயப் பணிக்குமாகச் சேர்த்து ஒரே அமைப்பைக் கண்டோம். அப்போதும் பாதை மாறாமல் பயணம் தொடர்ந்தது.

இந்த அமைப்பு கண்ட பின்னர் பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கள், பாலியல் குற்றச்சாட்டுக்கள், நிர்வாகத்தின் விதிகளுக்கு எதிராக நடந்தவர்கள் என நம்முடன் பயணித்தவர்களில் சிலர் கழிந்தனர். அதன் பின்னரும் நமது பயணம் தொடர்ந்தது. இப்போது அண்மையில் இதே ஏகத்துவத்தில் பல கட்டுரைகளைப் பதிய வைத்த ஒருவர் தன்னுடைய பயணத்தை இடையில் நிறுத்திக் கொண்டு பாதை மாறிப் போய்விட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டுக் கழிந்தவர்களில் இவரும் ஒருவர் என்ற கணக்கில் வந்துவிட்டார். இருப்பினும் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனியம் குறித்தான நிலைப்பாட்டை மையப்படுத்தி வெளியே சென்றுள்ளார்.

இவர் ஜமாஅத்தை விட்டு வெளியேறும் போது, இது அல்லாஹ்வை அஞ்சி எடுத்த முடிவு என்றும் வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார். இதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வை அஞ்சவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உண்மையில் இஸ்லாமிய உலகமே சூனியத்திற்கு ஆதரவான கொள்கையைக் கொண்டிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும், "அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் சூனியக்காரனுக்கு அறவே இல்லை, தெரிந்தே அவ்வாறு நம்புவது ஓர் இணை வைப்பு' என்று அல்லாஹ்வை மட்டும் அஞ்சி, வேறெந்த சக்திக்கும் அஞ்சாமல் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது.

அல்லாஹ்வுக்கு எந்தவகையிலும் இணை வைத்துவிடக் கூடாது என்பதைத் தவிர தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லை. இந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத் உலகத்திலிருந்து இந்தக் கருத்தில் தனித்து நிற்கின்றது.

தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க வந்த இறைத்தூதர்கள், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மட்டுமே அஞ்சியுள்ளனர் என்பதை கீழ்க்காணும் வசனம் தெரிவிக்கின்றது.

அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் 33:39

ஜைனப் (ரலி) திருமண விவகாரத்தில் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களை நோக்கி இவ்வாறு எச்சரிக்கை செய்கின்றான்.

மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்.

அல்குர்ஆன் 33:37

அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:150

அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக்கூடாது என்று அவர்களிடம் வேதத்தில் (தெளிவுபடுத்தி) உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறைவனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது. (இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?

அல்குர்ஆன் 7:169

இதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கடைப்பிடிக்கின்றது. ஆனால் இந்த ஜமாஅத்திலிருந்து வெளியேறியவர் பெருங்கூட்டத்திற்கு அஞ்சி தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு வெளியே போய்விட்டு தனக்குத் தானே இறையச்சம் என்று சொல்வது வேடிக்கையாகும்.

ஆரம்பத்திலிருந்து கப்ரு வணக்கம், மத்ஹபு, சூனிய நம்பிக்கை என அத்தனை ஷிர்க், பித்அத்களை விட்டு வெளியேறியது அல்லாஹ்வை அஞ்சித் தான். எத்தனை பேர்கள் பயணத்திலிருந்து விலகினாலும் சரி! அது தவ்ஹீத் ஜமாஅத்தை ஒருபோதும் பாதிக்காது. அகிலத்தை அஞ்சாமல் அல்லாஹ்வை மட்டும் அஞ்சி, பாதை மாறாமல் தவ்ஹீத் ஜமாஅத், சுவனத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடரும்.

இதுவரையிலும் எத்தனையோ பேர் வெளியே சென்றுள்ளனர். அவர்கள் எல்லோரும் ஜமாஅத்தின் கொள்கையில் ஒன்றுபட்ட நிலையில் தான் வெளியேறினர். பின்னர் வெளியே போய் தங்கள் கொள்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டனர்.

வெளியேறியவர் இங்கிருக்கும் போது, அதிலும் குறிப்பாக மிக அண்மைக்காலத்தில் சூனியம் உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் தனது பேச்சு, எழுத்து ரீதியாக ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் ஆதரித்தார். இப்போது வெளியேறுகையில் நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. இது அவசரமாக எடுத்த முடிவல்ல, மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த முடிவுக்கு நான் வந்து விட்டேன் என்றெல்லாம் சொல்வதன் மூலம் இவ்வளவு காலமும் தான் அல்லாஹ்வை அஞ்சவில்லை, தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு அஞ்சியதாக அவரே வாக்குமூலம் கொடுக்கின்றார். அல்லாஹ்வே இந்த வார்த்தைகளை அவரிடமிருந்து வரவழைத்து அவரது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அடையாளம் காட்டியுள்ளான். இதன் மூலம் இவரது இறையச்சம் கேள்விக்கும் கேலிக்கும் உரியதாக ஆகியுள்ளது.

இந்த இயக்கத்தை விட்டும் வெளியே சென்றவர்களில் தனக்கு எதிரான தடத்தைப் பதிய வைத்து, தகுந்த தடயங்களையும் விட்டுச் சென்றவர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்.


தவ்ஹீத் ஜமாஅத்தினரின் பயணம் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் அச்சத்தை அச்சாணியாகக் கொண்டே செல்கின்றது. அந்த இலக்கை நோக்கியே பாதை மாறாமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்கின்றது.

EGATHUVAM DEC 2014