ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு
இந்தியாவில் வாழும் அதிகமான முஸ்லிம்களைப் போலவே தமிழக முஸ்லிம்களிடமும்
ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது ஷியா கொள்கை தான் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக
அடையாளம் காட்டி வருகின்றது. சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற இங்குள்ள முஸ்லிம்களில்
அதிகமானோர் ஷியாக் கொள்கையுடையவர்கள் என்று அடித்துச் சொல்லிவிடலாம்.
இவர்களே ஷியாக்களாக இருந்து கொண்டு மற்ற ஷியாக்களை இவர்கள் விமர்சிப்பது
வேடிக்கையும் வினோதமும் ஆகும். தமிழக முஸ்லிம்கள் ஷியாக்களா? என்று இதைப் படிப்பவர்கள் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும்
வினவலாம். சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கின்ற நடைமுறைகள், தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகின்ற சடங்கு சம்பிரதாயங்களை
இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டலாம்.
1. தரீக்காக்கள்
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்ற தரீக்காக்களில்
தங்களுக்கென்று ஸில்ஸிலா (சங்கிலித் தொடர்) என்ற பெயரில் தலைமுறைகளை வைத்திருக்கின்றார்கள்.
இந்தத் தலைமுறைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் இவர்களாக ஒரு தலைமுறையை உருவாக்கி
வைத்திருக்கின்றார்கள். இந்தத் தலைமுறை சங்கிலித் தொடரில் ஒன்று கூட அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி)
போன்ற நபித்தோழரில் எவரிடமும் போய் முடியாது. எல்லா தரீக்காவுமே அலீ (ரலி) அவர்களிடம்
தான் போய் முடியும். ஷியாக்கள் தான் இப்படி தலைமுறையை வைத்திருக்கிறார்கள். அந்தத்
தலைமுறைகள் அனைத்துமே அலீ (ரலி) அவர்களிடம் தான் போய் முடியும். அதுபோன்று தான் சுன்னத்
ஜமாஅத்தினர் வைத்துள்ள தரீக்காக்களின் தலைமுறையும் அலீ (ரலி)யிடம் போய் முடிகின்றது.
2. பூரியான் ஃபாத்திஹா
ரஜப் மாதத்தில் வீடுகள் தோறும் ஃபாத்திஹா ஓதுவார்கள். இந்த
ஃபாத்திஹாவை இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள் பெயரால் ஓதுவார்கள். இந்த ஜாஃபர் சாதிக் யார்? இவர் ஷியாக்களின் 6வது இமாம்
ஆவார். இவரது பெயரில் தான் பூரி, சேமியா பாயாசம் செய்து பாத்திஹா
ஓதுவார்கள். இன்றைக்கு வரைக்கும் இந்த ஃபாத்திஹாக்களில் ஆலிம்கள் கலந்து கொண்டு ஃபாத்திஹா
ஓதிவிட்டு,
பூரியையும் பாயாசத்தையும் வெளுத்து வாங்கிவிட்டு வருகிறார்கள்.
இது ஷியாக்களின் நடைமுறை தவிர்த்து வேறெதுவும் கிடையாது.
3. பஞ்சா எடுத்தல்
முஹர்ரம் பிறை 1 முதல் 10 வரை ஹுசைன் (ரலி) நினைவு நாள் அனுஷ்டிக்கிறார்கள். இந்தப் பத்து
நாட்களிலும் மீன் சாப்பிட மாட்டார்கள். தாம்பத்தியத்தில் ஈடுபட மாட்டார்கள். ஒன்பதாம்
நாளிலும், பத்தாம் நாளிலும் பஞ்சா எடுப்பார்கள். பஞ்சா என்பது சுமார் 10 அடி உயரம், 10 அகலத்தில்
கம்புகளால் அமைக்கப்பட்ட சதுவர வடிவத்தின் இரு பக்கத்திலும் இரு கோபுரங்கள் போன்று
அமைத்திருப்பார்கள். பள்ளிவாசலில் உள்ள மிஹ்ராபைப் போன்று குழி விழுந்த மாடமும் இருக்கும்.
இந்த மொத்த தோற்றத்தையும் மஞ்சள் நிற ஜரிகைத் தாள் கொண்டு அலங்கரித்திருப்பார்கள்.
சிறு சிறு மின்விளக்குகளையும் அதில் பொருத்தியிருப்பார்கள். இந்த மின்விளக்குகளின்
வெளிச்சம் ஜரிகைத் தாளின் மினுமினுப்பில் படுகின்ற போது தங்கக் கதிர்கள் அதிலிருந்து
தெறிப்பது போன்று காண்போர் கண்களுக்குக் காட்சியளிக்கும். அந்தப் பஞ்சாவில் நடுநாயகமாக
ஒரு வெள்ளிப் பட்டையில் ஐந்து விரல்கள் கொண்ட ஒரு கைச் சின்னம் வீற்றிருக்கும். அதைச்
சுற்றி பூக்கள் தொங்கிக் கொண்டிருக்கும். பஞ்சா ஊர்வலமாகப் புறப்பட்டு ஒவ்வொரு அங்குலமாக
நகரும் போது பக்தர்கள், பக்தைகள் பக்திப் பிரவாகமெடுக்க
பூமாலைகளை அள்ளி அதன் மீது வீசிக் கொண்டிருப்பார்கள்.
ஐந்து விரல்களில் அடங்கிய ரகசியம்
பார்ப்பவர்களின் விழிகளுக்கு விருந்தாகவும், பக்தர்களுக்கு மருந்தாகவும் காட்சியளிக்கின்ற கைச்சின்னத்தின்
ஐந்து விரல்களில் அடங்கிய ரகசியம் என்ன? அதுதான் ஷியாக்களின்
கொள்கையாகும்.
முஹம்மத் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகிய ஐந்து பேரையும் கடவுளாக்குவது தான் அதில் ஒளிந்திருக்கும்
ரகசியமாகும்.
சுக்கு நூறாக நொறுங்க வைத்து, சுட்டெரிக்கும்
சூடான நெருப்பிலிருந்து என்னைக் காக்கின்ற ஐவர் இருக்கின்றனர். முஸ்தபா (என்ற முஹம்மது
- ஸல்), முர்தளா (என்ற அலீ) அவ்விருவரின் பிள்ளைகள் (ஹஸன், ஹுஸைன்), ஃபாத்திமா ஆகியோர் தான் அவர்கள்.
ஷியாக்களின் கடவுள் கொள்கையை இந்தக் கவிதை வரிகள் அம்பலப்படுத்துகின்றன.
அபத்தமும்,
ஆபத்தும் நிறைந்த ஐந்து கடவுள் கொள்கையைப் படம் போட்டுக் காட்டுகின்ற
கை விரல்கள் தான் பஞ்சாவின் நடுவில், நடு நாயகமாகக்
கொலு வீற்றிருக்கின்றன.
இங்கு சுட்டிக் காட்டியிருப்பது பஞ்சாவின் முழு நேர்முகமல்ல.
அதனுடைய ஒரு பகுதியைத் தான் காட்சிப்படுத்தியிருக்கிறோம். எடுத்துக்காட்டுக்கு இந்தச்
சிறிய துணுக்கு போதும். இது நமக்குச் சொல்வதென்ன?
இந்தப் பஞ்சாவும் இதற்கு முன்பு நாம் கண்ட தரீக்கா தலைமுறை, பூரியான் ஃபாத்திஹா அத்தனையும் உணர்த்துவது, உரக்கச் சொல்வது இங்குள்ள சுன்னத் ஜமாஅத்தினர் கொண்டிருக்கும்
கொள்கை, ஷியாக்களின் கொள்கை என்பதைத் தான்.
ஐவர் பெயரில் அரும் படங்கள்
பிற மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களுடைய வீட்டுச் சுவர்கள், கடைகளின் கல்லாப் பகுதிகள் போன்றவற்றில் சாமிப் படங்களை மாட்டி
வைத்திருப்பார்கள். அவற்றின் மூலமாகத் தங்கள் வீடு மற்றும் கடைகளில் தெய்வ அருள் கிடைக்கும்
என்பது அவர்களின் நம்பிக்கை! முஸ்லிம்கள் இதுபோன்று சில படங்களை மாட்டி வைத்திருப்பார்கள்.
அந்தப் படங்களில் முஹம்மத் (ஸல்), அலீ (ரலி), ஹஸன், ஹுஸைன், ஃபாத்திமா (ரலி) ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றிருக்கும்.
இதுவும் இவர்களின் ஷியாக் கொள்கையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது.
இதுபோன்று ஷியாக்களின் கொள்கை வார்ப்புகளை, அடையாளங்களை ஒரு பெரிய பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.
அதற்கு இந்தக் கட்டுரை இடம் தராது என்பதால் இப்போது ஷியாக்களின் முக்கியமான அடையாளமாகத்
திகழ்கின்ற ஹுஸைன் மவ்லிதைப் பார்ப்போம்.
ஹுஸைன் மவ்லிது
அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு நிகராக ஏற்றிப் பேசுகின்ற
மவ்லிதுகளை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆய்வு செய்து அடையாளங்காட்டி
விட்டார்கள். இறந்து விட்ட நல்லடியார்களைக் கடவுளாகப் பாவிக்கின்ற பாடல்களை வரிக்கு
வரி மக்களிடம் விளக்கி, வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்கள்.
தமிழகத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி, பேராதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது போன்றவற்றின் பாடல் வரிகள் பி.ஜே. அவர்கள்
எழுதிய ஆய்வு நூல்களின் அக்கினிப் பரிட்சையில் எரிந்து சாம்பலாயின. தமிழகத்தின் மவ்லிதுக்
கச்சேரி சபாக்களில் சண்டமாருதம் செய்து கொண்டிருந்த யாகுத்பா, மறைந்த பி.எஸ். அலாவுதீன் அவர்களின் பேனா முனையில் கிழிந்து
சண்டாகிப் போனது; சமாதியானது.
கடந்த காலத்தில் நம் கைவசமிருந்த அல்ஜன்னத் இதழில், ஷாகுல் ஹமீது மவ்லிது வரிகள் பி.ஜே.யின் விமர்சனக் கணைகளுக்கு
இலக்காகி சிறிது காலம் தொடராக வெளிவந்தது.
தோளை அழுத்திய சமுதாயப் பணிச் சுமையால் அந்தத் தொடர் முழுமையடையாமல்
போனது. இருப்பினும் அந்த இணைவைப்புக் கவிதைகளின் மீது நாம் தாக்குதல் தொடுத்து அதனைக்
கலங்கடித்தது வரலாற்றுச் சுவடுகளில் பதிவாகி விட்டது, அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் போர்க்கணைகளிலிருந்து ஹுஸைன் மவ்லிது மட்டும்
இதுநாள் வரை தப்பித்துக் கொண்டிருந்தது. இந்த மவ்லிது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை எனும் போது அதன் மீது தாக்குதல் தேவை தானா? என்ற கேள்வி எழலாம்.
இன்று ஹதீஸ்களின் பெயரால் எவ்வளவோ கற்பனைச் சரக்குகளை, கலப்படப் பண்டங்களை அவ்வப்போது புதிது புதிகாக ஆலிம்கள் இறக்குமதி
செய்து கொண்டிருக்கின்றார்கள். இறக்குமதி செய்த இந்தப் பொய் ஹதீசுக்கு நதி மூலம் எங்கே
கிடைக்கப் போகின்றது? இதை எப்படி நாம் ஆய்வு செய்வது
என்ற நிராசை நம் நெஞ்சை அடைக்கின்றது. ஆனால் இந்தப் பொய்யான ஹதீஸ் தொடர்பான வார்த்தையைப்
போட்டு கூகுள் கடலில் தேடினால் அது தொடர்பான ஆய்வுகளையும் ஆவணங்களையும் அள்ளி வீசிவிடுகின்றது.
புனிதத் தூதர் மீது சொல்லப்பட்ட பொய்களையெல்லாம் ஹதீஸ் கலை அறிஞர்கள்
புலன் விசாரணை நடத்தி, அந்தப் பொய்யை உலகத்திற்கு அடையாளம்
காட்டியிருக்கின்றார்கள்; அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்
என்பதைக் காணும் போது மேனி சிலிர்க்கின்றது. அந்தத் தூதருக்கு அல்லாஹ் போட்டிருக்கும்
பாதுகாப்புக் கவசத்தை எண்ணி அவனை நோக்கி, உனக்கே புகழனைத்தும்
என்று புகழாரம் சூட்டுகின்றது.
அந்த அடிப்படையில் இந்த ஹுஸைன் மவ்லிதும் அல்லாஹ்வின் தூதர்
மீது பொய் வலையைப் பின்னியிருக்கின்றது. அதன் ஒவ்வொரு இழையையும் அறுத்து எறிவது தவ்ஹீத்
ஜமாஅத்தின் தார்மீகக் கடமை என்ற அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு
என்ற பெயரில் அதில் ஒளிந்திருக்கும் பொய்யான ஹதீஸ்களை ஏகத்துவம் அம்பலப்படுத்தவுள்ளது.
அதில் உள்ள இணைவைப்பு அபத்தங்களை அடையாளப்படுத்தவுள்ளது.
இந்த மவ்லிது பிரபலமானது இல்லை என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
வசிக்கும் சில ஊர்களில் இன்னும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் அது நூல் வடிவிலும் உள்ளதால்
அதில் அடங்கியிருக்கின்ற நாசகாரக் கருத்துக்களை, நச்சுக்
கருத்துக்களை மக்களுக்கு விளக்குவது ஓர் ஏகத்துவவாதியின் கடமை என்ற அடிப்படையில் இன்ஷா
அல்லாஹ் வரும் இதழிலிருந்து இந்த ஆய்வைப் பார்ப்போம்.
EGATHUVAM DEC 2014