May 18, 2017

இணை கற்பித்தல் 26 - மறைவான ஞானமும் இறைவனின் செய்திகளும்

இணை கற்பித்தல் 26 - மறைவான ஞானமும் இறைவனின் செய்திகளும்                                                            
தொடர்: 26

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம். ஐ. எஸ். சி.

தவறான வாதங்களும் தக்க பதில்களும் என்ற இத்தொடரில் இணை கற்பித்தல் பற்றி நாம் அறிந்து வருகிறோம்.

இறைநேசர்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும், இறைவனும், இறைத்தூதரும் யாரை இறைநேசர் என்று அறிவித்துக் கொடுத்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் இறைநேசர்கள் என்று சொல்லக்கூடாது என்பதையும், அப்படியே அவர்கள் இறைநேசர்களாக இருந்தாலும் கூட அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் அடிமைகளாக -அடியார்களாகத் தான் இருந்தார்களே தவிர அல்லாஹ்வுடைய அதிகாரத்தை ஒரு சிறிதளவும் பெற்றவர்களாக இருக்கவில்லை என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

குறைந்த பட்சம் தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாகவாவது இறைநேசர்கள் இருந்தார்களா என்று கேட்டால் அது கூட இல்லை என்பதற்கு நிறைய சான்றுகளை - சம்பவங்களை  நாம் பார்த்தோம். நபி (ஸல்) அவர்களுக்குக் கூட அந்த ஆற்றல் வழங்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம்.

இதற்கு மேலும் பல சம்பவங்கள் ஆதாரமாக அமைந்திருக்கின்றன.

மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாüல்) நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குüத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது அவர்களுக்கு நான் சலாம் (முகமன்) சொன்னேன். (அதைக் கேட்ட) அவர்கள், "யாரம்மா இவர்?'' எனக் கேட்டார்கள். அதற்கு "நான் உம்மு ஹானீ பின்த் அபீதாலிப்'' என்றேன். உம்மு ஹானியே வருக! வருக! என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி),

நூல்: புகாரி 357

இந்த சம்பவத்தில் வருகின்ற உம்மு ஹானி என்ற ஸஹாபியப் பெண்மனி நபியவர்களின் நெருங்கிய உறவுக்காரப் பெண் ஆவார். சகோதரி ஆவார். அப்படியிருந்தும் நபியவர்கள் உம்முஹானியின் குரலைக் கேட்டும் கூட வீட்டிற்கு வந்திருப்பவர் நம்முடைய சகோதரி தான்  என்பதை அறிய முடியவில்லை.

ஆனால் நம்மில் சிலர் நபியவர்களுக்கு இரண்டு கண்களுக்கு மேலாக ஞானக்கண் என்ற ஒன்று இருக்கிறது. அவர்கள் உலகத்திலுள்ள எந்த ஒரு விஷயத்தையும் இங்கிருந்தே பார்க்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் கூட கிடையாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் உண்மையாக இருந்திருக்குமென்றால் உம்மு ஹானி அவர்கள் நபியவர்களின் வீட்டிற்கு வரும் போது இவர் யார் என்று கேட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது "சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ - எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்'' என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "(தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான்'' என்றார். "முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் "இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி),

நூல்: புகாரி 799, 5458

இந்த வார்த்தைகளைச் சொன்னவர் யார் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அறவே தெரியவில்லை. யார் என்று கேட்டுத் தான் தெரிந்து கொள்கிறார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களது மகளின் அடக்கத்தில் கலந்துகொண்டோம். அப்போது கப்றுக் கருகில் உட்கார்ந்திருந்த நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். "(கடந்த) இரவு தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாதவர் எவரும் உங்களில் உள்ளனரா?'' என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அபூதல்ஹா (ரலி), நான் உள்ளேன் என்றதும் "இந்தக் குழியில் இறங்குவீராக!'' என்றார்கள். உடனே அவர் குழியில் இறங்கி அடக்கம் செய்தார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 1342

இந்த சம்பவத்தில், நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்குமென்றால், இல்லறத்தில் ஈடுபடாதவர் யார் என்பதை ஏன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்? கேள்வியைக் கேட்காமலேயே அதற்குத் தகுதியானவர் யார் என்பதை அறிந்திருப்பார்களே!

ஆக, நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு ஒன்றல்ல! இரண்டல்ல! ஆயிரக்கணக்கான சம்பவங்களை ஆதாரமாக நாம் எடுத்துக் காட்டலாம். மேலும் நபியவர்கள் எதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்களோ அவை அனைத்துமே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தான் காட்டுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை' என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்'' என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்' எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது'' என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: முஸ்லிம் (2125)

நபியவர்களுக்கு உண்மையாகவே மறைவான ஞானம் இருந்திருந்தால் தம் வீட்டில் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா இல்லையா என்பதை ஏன் கேட்டுத் தெரிய வேண்டும்? அதைப் பற்றி விசாரிக்காமலேயே அதைக் கொண்டு வா என்று தான் சொல்லியிருப்பார்கள். தம் வீட்டில் என்ன இருக்கிறது என்பதைக் கூட  அவர்களால் அறிய முடியவில்லை. இந்தச் சம்பவமும் நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதைத் தான் காட்டுகிறது.

அதே போன்று எந்த ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டாலும் நபியவர்கள் மக்களிடம் இவர் கடனாளியா? என்ற ஒரு கேள்வியைக் கேட்பார்கள். ஏனென்றால் கடன் இருக்கும் நிலையில் இறந்தவருக்கு நபியவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மாட்டார்கள். அவர் கடனாளியாக இருந்தால் கடன் தீர்க்கப்படும்வரை அவருக்குத் தொழுகை நடத்த மாட்டார்கள்.

ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அறிவித்தார்.

தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. "இவர் கடனாளியா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் "இல்லை!' என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது "இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் "அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!'' என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) "இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!'' என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.                      

நூல்: புகாரி 2295

இந்தச் சம்பவத்தில் நபியவர்களுக்கு அவர் கடனாளியா என்பதும் தெரியவில்லை. அவரிடம் கடனை அடைப்பதற்கு ஏதாவது பொருள் இருந்ததா? என்பதும் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் அந்த மக்களிடம் இவர் கடனாளியா என்று கேட்டிருக்க மாட்டார்கள். இதுவும் நபிகளாருக்கு மறைவான விஷயம் தெரியாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாம் ஒவ்வொரு ஹதீஸையும் படிக்கும் போது அதில் நபியவர்களுடைய உரையாடலை நாம் கவனித்தால் அந்த உரையாடல்கள் சாதாரண மனிதனுடைய உரையாடல்கள் எப்படி இருக்குமோ அதுபோன்று தான் அமைந்திருக்குமே தவிர ஒரு கடவுளின் உரையாடல் போன்றோ, ஒரு மந்திரவாதியின் உரையாடல் மாதிரியோ, ஏமாற்றுப் பேர்வழியான சாமியார்களின் உரையாடலாகவோ இருந்தது கிடையாது. மனிதனுடைய உரையாடலாகத் தான் இருக்கும்.

நாம் ஒரு மனிதனிடம் எவ்வாறு உரையாடுவோமோ அதே போன்று, விசாரித்து அறிந்து கொள்ளக்கூடிய விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்வது மற்றும் தமக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லக்கூடிய வகையில் தான் இருக்கும். ஆக எந்த ஒரு நபிமார்களாக இருந்தாலும் அவர்களுக்கு அதிகாரமும் இல்லை; மறைவானவற்றை அறியும் திறனும் இல்லை என்பது தெளிவாகின்றது.

மேலும் இணை கற்பித்தலை நியாயப்படுத்தக்கூடியவர்கள், நபியவர்களுக்கு மறைவான விஷயம் தெரியும்; அவர்கள் மனிதனால் செய்ய முடியாத, இறைவனுக்கு மட்டுமே செய்ய முடிந்த பல அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள் ஆகிய இரண்டு வாதங்களை வைக்கிறார்கள்.

நபிகளார் பல மறைவான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதை யாராலும் மறுக்க இயலாது. நாம் இதுவரைக்கும் கூறிய பல சம்பவங்களிலேயே அது வந்திருக்கின்றது. பொதுவாகவும் சிலவற்றைக் கூறியிருக்கிறார்கள்.

சொர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட 10 மனிதர்களை நபிகளார் குறிப்பிட்டது, போர்க்களத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனையின் காரணத்தினால் தற்கொலை செய்த ஒருவரை எல்லோரும் நல்லவர் என்று கூற நபியவர்கள் அவரை நரகவாசி என்று கூறியது இப்படி ஏராளமான சம்பவங்கள் இருக்கின்றன.

இந்தச் செய்திகளையெல்லாம் ஆதாரமாகக் காட்டி இதையெல்லாம் நபியவர்களால் எப்படி சொல்ல முடிந்தது? அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்ததால் தான் சொல்ல முடிந்தது என்ற வாதத்தை வைக்கிறார்கள்.

சில சம்பவங்களை நபியவர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அந்த சம்பவங்களெல்லாம் கண்ணால் பார்த்து அறியக்கூடிய சம்பவம்  கிடையாது. காதால் கேட்டு அறியக்கூடிய சம்பவம் கிடையாது. ஐந்து  புலன்களையும், ஆறாவதாக இருக்கக்கூடிய சிந்திக்கும் அறிவின் அடிப்படையிலும் கண்டுபிடிக்கின்ற விஷயம் கிடையாது. இறைவன் அறிவித்துக் கொடுக்கின்ற விஷயங்கள்.

நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதற்கு நாம் பல்வேறு ஆதாரங்களை வைக்கின்ற போது, "அவை உங்களுடைய ஆதாரம். மறைவான ஞானம் நபியவர்களுக்கு இருக்கின்றது என்பது சம்பந்தமாக பல செய்திகளை நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அவை எங்களுக்குரிய ஆதாரங்கள்' என்று கப்ரு வணங்கிகள் குழப்புகின்றார்கள்.

இஸ்லாத்தை, மார்க்கத்தின் ஆதாராங்களை ஆளுக்குப் பாதியாகப் பிரித்து விட்டார்கள். குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களுமே அனைத்து முஸ்லிம்களுக்கும் உள்ள ஆதாரங்கள் தான். ஹதீஸில் உள்ள அனைத்துமே அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய ஆதாரங்கள் தான். அவர்களும் நாமும் வைக்கக்கூடிய ஆதாரங்கள் அது குர்ஆனில் இருந்தாலும் சரி, ஹதீஸ்களில் இருந்தாலும் சரி அனைத்துமே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதைத் தான் காட்டுகின்றன.

நபியவர்களுக்கு மறைவான விஷயங்களை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அந்த அறிவைக் கொண்டு தானாக அறிந்து கொள்ள இயலாது என்பதைத் தான் நாம் கூறுகின்றோம்.

நபியவர்கள் 10 பேரை சொர்க்கவாசி என்று சொன்னார்களே! அதை எப்படிச் சொன்னார்கள்? சொர்க்கவாசி என்று ஒருவரை சொல்வது ஆறு புலன்களின் மூலம் அறியக்கூடியதா? ஒருவரைப் பார்த்து நீ சொர்க்கவாசி என்று யாராவது சொல்ல முடியுமா?

ஆனால் நபியவர்கள் 10 பேர் மற்றும் இன்னும் சிலரையும் சொர்க்கவாசி என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் கியாமத் நாளின் அடையாளங்கள் மற்றும் கப்ரில் நடக்கின்ற செய்திகள், மறுமையின் நிகழ்வுகள், எதிர்காலத்தில் நடக்க்கூடிய விஷயங்கள், கண்ணுக்கு அப்பால் உள்ள விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதை அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட ஆறறிவின் மூலம் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. ஆனால் அல்லாஹ் தேவையென்று கருதினால் சில விஷயங்களை, சில காரியங்களை மட்டும் தேவைக்காக வேண்டி நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். அது வஹீ என்பதாகும்.

மனிதர்கள் அனைவருக்கும் ஆறறிவு இருக்கிறது. இறைத்தூதர்களுக்கு இறைவனிடமிருந்து செய்திகள் கிடைப்பதற்கு ஏழாவது வழி ஒன்று இருக்கின்றது. அந்த ஏழாவது வழி என்றவென்றால், ஒரு மலக்கு மூலமாக செய்தி வரும். அல்லது உள்ளத்தில் உதிக்கச் செய்வது, அல்லது நேருக்கு நேர் இறைத்தூதர்களிடம் (அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்காத வண்ணம்) அல்லாஹ் பேசுவான். அல்லது அல்லாஹ்வுடைய அசரீரீ அவர்களுக்குக் கேட்கும். கேட்டவுடன் அது அவர்களுடைய மனதில் செய்தியாகப் பதிந்துவிடும். நமக்கு அது தெரியாது. இது ஏழாவது வழியாகும்.

இந்த ஏழாவது அறிவினைப் பெறக்கூடிய வழிமுறை இறைத் தூதர்கள் அனைவருக்கும் இருந்தது. அந்த அடிப்படையில் அவர்கள் எதையெல்லாம் இறைவன் அறிவித்துக் கொடுத்தானோ அதை மட்டும்தான் அவர்கள் சொல்வார்கள். அறிவித்துக் கொடுக்காத விஷயங்களை அவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது. இறைவன் அறிவித்துக் கொடுத்தவை மறைவானது ஆகுமா? ஆகாது. ஒருவர் சொல்லிக் கொடுத்து அறிவது என்பது மறைவான விஷயம் கிடையாது. யாரும் எதையும் அறிவிக்காமல் தன்னுடைய அறிவைக் கொண்டு தன்னால் பார்க்க முடியாத, கேட்க முடியாத விஷயங்களை அறிந்து கொள்வது தான் மறைவானதாகும்.

மேலும் இந்த வழிகேடர்கள் சில வசனங்களையும் தவறான கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுவார்கள். ஆனால் அது அவர்களுக்குரிய ஆதாரம் கிடையாது. நாம் அந்த வசனங்களை ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்தால் நபிமார்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று வாதிடுபவர்களுக்கு நேர் எதிரான சான்றாகத் தான் இருக்கின்றது. அந்த வசனங்களைப் பார்ப்போம். அந்த வசனத்தை இவர்கள் தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு வாதிடுகிறார்கள்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்தியை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். (அல்குர்ஆன் 72:26,27,28)

இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, தனது தூதர்களுக்கு அனைத்து மறைவான விஷயங்களையும் அறிவித்துக் கொடுக்கிறான்; ஏனென்றால் அனைத்து நபிமார்களும் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள்; அதனால், நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும் மறைவானதை அறியக்கூடியவர்களாக இருந்தார்கள். இறந்த பிறகும் கப்ருக்குள் இருந்து கொண்டே நாம் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அதையும் அறிவார்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

நபிமார்கள் இறைவனுடைய திருப்தியைப் பெற்றவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பதாகத் தான் இந்த வசனத்தில் சொல்லியிருக்கிறானே தவிர அல்லாஹ்வைப் போன்று தூதர்களும் மறைவானதை தாங்களாகவே அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் என்று சொல்லவில்லை. அதிலும் அனைத்தையும் இறைவன் அறிவித்துக் கொடுத்தான் என்றால் நாம் இதுவரைக்கும் பார்த்த அத்தனை சம்பவங்களிலும் நபியவர்களுக்கு மறைவானது இல்லை என்பதைத் தானே காட்டுகின்றது. இதிலிருந்தே அனைத்தையும் இறைவன் அறிவித்துக் கொடுக்கவில்லை என்பது விளங்குகின்றது. ஆக அவர்கள் கூறுவது அவர்களுக்கே எதிரான வாதமாக அமைந்துள்ளது.

மேலும், "எனக்கு மறைவான ஞானம் எதுவும் கிடையாது. அவ்வாறு மறைவானவற்றை அறிந்து கொள்ளக் கூடியவனாக இருந்தால் நான் நன்மைகளை மட்டுமே அதிகம் அடைந்திருப்பேன். தீமைகள், துன்பங்கள்  என்னை அடைந்திருக்காது. துன்பங்களை விட்டும் நான் தூரமாகியிருப்பேன்' என்று நபியவர்களையே அல்லாஹ் மக்களுக்குச் சொல்லச் சொல்கிறான். இதுவே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைக் காட்டவில்லையா?

மேலும் இறைவன் எதையெல்லாம் மறைவானது என்று நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தானோ அதை நமக்கும் நபியவர்கள் சொல்லி விட்டார்கள். அதனால் நபியவர்களுக்கு தெரிந்த அத்தனை மறைவான விஷயங்களும் நமக்கும் தெரியும். சொர்க்கம் என்பது மறைவான விஷயம். ஆனால் அதை நபியவர்கள் நமக்கு அறிவித்துள்ளதால் நாமும் சொர்க்கத்தை நம்புகிறோம்.

மண்ணறை வாழ்க்கை என்பதும் மறைவானதுதான். அதைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து அதை நமக்கும் சொன்னதால் அதைப் பற்றி நாமும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

மண்ணறையில் தீயவர்களுக்கு என்னென்ன வேதனைகள் கொடுக்கப்படும் என்பதையும், நல்லவர்கள் அங்கு எப்படி இருப்பார்கள் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இதை நாம் நேரில் பார்த்து அறிந்து கொண்டோமா? இல்லை. நபியவர்கள் அறிவித்துக் கொடுத்துள்ளதால் நாமும் அதை அறிந்து வைத்திருக்கின்றோம். அவ்வாறு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்களை நமக்கு நபியவர்கள் சொல்லவில்லையென்றால் தூதுத்துவத்தை அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்றாகிவிடும்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM DEC 2014