இயங்குவதும் தவ்ஹீத்! எதிர்ப்பதும் தவ்ஹீத்!
ஏனிந்த இரட்டை நிலை?
"தவ்ஹீதா? தமுமுகவா? என்றால் எனக்குத் தவ்ஹீது தான் அண்ணே!''
தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக பிரிவுக்கு
முன்னர் இப்படிச் சில குரல்கள் ஒலித்தன. இன்னும் அவை செவிப்பறைகளில் ரீங்காரமிட்டுக்
கொண்டிருக்கின்றன.
"இந்த ஜமாஅத்தை விட்டுப் போனால் தற்குறியாகப் போய்விடுவோம்''
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பிரியும் முன்பு ஒலித்த குரல்கள்
ஒலி, ஒளி நாடாக்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.
இப்படிச் சொல்லிவிட்டு வெளியே சென்றவர்கள், "தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தால் தான் தவ்ஹீதுவாதியா? இந்த ஜமாஅத்தை விட்டு வெளியே போய் தவ்ஹீதில் இருக்க முடியாதா?' என்று சொல்லி இயக்கம் கண்டவர்கள் இயங்குவது என்னவோ தவ்ஹீதின்
பெயரில் தான். ஆனால் எதிர்ப்பதும், ஏறி மிதிப்பதும், எகிறித் தாக்குவதும் தவ்ஹீதுக் கொள்கையைத் தான். அது எப்படி
என்று ஆச்சரியமாக இருக்கின்றதா?
2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை
மையமாக வைத்து,
அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. வக்ஃப் வாரியத் தலைவர் பதவி, ராஜ்யசபா எம்.பி. பதவி போன்ற தன்னலத்தை மையமாகக் கொண்டு தமுமுக, திமுகவை ஆதரித்தது.
தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அது தனிப்பெரும்பான்மை
பெறவில்லை. அதனால் ஒரு சிறுபான்மை அரசாகவே தனது ஆட்சியைத் துவங்கியது.
ஆலயமே அலுவலகமாய்...
மேலப்பாளையத்தில் தேர்தல் சமயத்தில் இடஒதுக்கீட்டை மையப்படுத்தி
அதிமுகவுக்கு ஆதரவான பணிகளையும் மேற்கொண்டதால் எதிரிகளின் கூடாரத்தை இது கலங்கடிக்கச்
செய்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணி அவர்களைக் நிலைகுலையச் செய்தது.
இதையெல்லாம் திமுக வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கான் அவர்களிடம்
எடுத்துக் கூறி,
உசுப்பேற்றி, தேர்தலுக்கு
முன்பே அவரை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக ஆயத்தப்படுத்தினார்கள்.
அதற்கேற்ப அவர் திமுக அமைச்சரவையில் வக்ஃப் வாரிய அமைச்சராகவும்
ஆனார். ஆட்சி வந்த ஆறு மாத காலத்திற்குள்ளாகவே ஜாக் அமைப்பை சாக்காகப் பயன்படுத்திக்
கொண்டு வக்ஃப் வாரியத்தைக் களமிறக்கி, மஸ்ஜிதுர்ரஹ்மானைக்
கைப்பற்ற அத்தனை ஏற்பாடுகளையும் செய்தனர்.
ஏகத்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்ற, ஏகத்துவத்தின் இதயத் துடிப்பான மஸ்ஜிதுர்ரஹ்மானைக் கையில் எடுக்க
மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகரக் காவல்துறை, வக்ஃப் வாரிய அதிகாரிகள் என்ற அத்தனை அதிகார வர்க்கத்தினரும், தமுமுக ஜாக் பரிவாரமும் படையெடுத்து வந்தனர்.
ஆயுதமேந்திய இந்த அதிகார வர்க்கத்திற்கு முன்னால் நிராயுதபாணிகளான
தவ்ஹீதுப் போராளிகள் என்ன செய்ய முடியும்? அனைத்திற்கும்
அதிபதியான,
ஏகாதிபதியான அந்த ஏகன் அல்லாஹ்விடம் இதயப்பூர்வமாக இருகரம் ஏந்தினர்.
ஏகத்துவ ஆலயமான மஸ்ஜிதுர்ரஹ்மானின் நிலப்பரப்பில் நெற்றிகளைப் பதித்து தங்கள் கண்களை
நீர்வீழ்ச்சிகளாக்கினர். நெஞ்சுருக அந்த அல்லாஹ் மட்டுமே தஞ்சம் என்று கெஞ்சினர்.
வக்ஃப் வாரியத்தின் கண்காணிப்பாளர் மஸ்ஜிதுர்ரஹ்மானின் வாசலில்
காலெடி எடுத்து வைக்கும் போது, உங்கள் கால்கள் எங்கள் சடலங்களைத்
தாண்டித் தான் பள்ளியின் வாயிலில் நுழையும் என்று கொதிப்போடும் கொந்தளிப்போடும் குப்புற
வீழ்ந்து கிடந்தனர்.
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எட்டி உதைத்து, எட்டுக்கள் முன்வைக்க முனைந்த கண்காணிப்பாளர் தனது கால்களைப்
பின்னோக்கி வைத்தார். அவரால் ஓரடி கூட முன்னேற முடியவில்லை. திருப்பிச் சென்றார். காவல்துறையையும்
திருப்பி அனுப்பினார்.
ஆயுதத்தை வீழ்த்திய அல்லாஹ்வின் அற்புதம்
இடையில் நடந்தது என்ன? ஆயுதத்தை வீழ்த்தியது
அல்லாஹ்வின் அற்புதம்! கொள்கைச் சகோதரர்கள் தங்கள் கண்களால் கண்ட ஓர் இறை அற்புதம்!
ஏகத்துவ ஆலயம் ஏகன் அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்டது. இந்த ஏகத்துவ சகோதரர்கள் செய்த
பாவம் என்ன?
இஸ்லாத்தை அதன் தூய வடிவில், ஏகத்துவ
அடிப்படையில் நிலைநாட்டியது தான்.
அந்த ஏகனின் ஆலயத்தை, ஏகத்துவக்
கேந்திரத்தை இழுத்து மூடுவதற்கும் தமுமுவினர் தயாராக இருந்தனர். பிரச்சனையாகி விட்டால்
பள்ளியை இழுத்து மூடிவிடுவோம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெளிவாகவே தெரிவித்தார்.
ஆளும் வர்க்கத்திலிருந்து அவருக்கு இடப்பட்ட கட்டளையை அவர் பிரதிபலித்தார்.
இத்தனைக்கும் காரணமான தமுமுகவினர் இன்று வரையிலும் தங்களை தவ்ஹீதுவாதிகள்
என்றே சொல்கின்றனர். இவர்கள் இயங்குவது என்னவோ தவ்ஹீது தான். ஆனால் இடிப்பதும், இழுத்து மூடுவதும் ஏகத்துவத்தை நிலைநாட்டும் இறை ஆலயங்கள்.
பள்ளியை விட்டும் தடுத்தல்
இவர்கள் செய்கின்ற அநியாயங்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தையில்
என்ன பெயர்?
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர்.
"அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல்
ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை
விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:217
இந்த வசனத்தில் மிகப் பெரிய குற்றங்களை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.
அதில், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதையும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதையும் அந்த மிகப் பெரிய குற்றங்களில்
சேர்த்துள்ளான்.
சத்தியக் கொள்கையில் இருந்த முஹம்மது (ஸல்) அவர்களையும் அவர்களது
தோழர்களையும் புனித ஆலயத்தில் தொழுவதை விட்டும் அபூஜஹ்ல் வகையறாக்கள் தடுத்தார்கள்.
பள்ளியை விட்டும் தடுக்கின்ற இந்த அபூஜஹ்ல் வேலையைத் தான் மிகக் கச்சிதமாக தமுமுக, ஜாக் பரிவாரம் செய்தது.
ஆரம்ப காலத்தில் நாம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் போது சுன்னத்
வல் ஜமாஅத்தினர் அபூஜஹ்லின் வாரிசுகளாக இந்த அநியாயத்தையும், அக்கிரமத்தையும் அரங்கேற்றினார்கள். அப்போது அவர்களை நோக்கிச்
சுட்டிக் காட்டிய வசனம் இது தான்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை.
அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் 2:114
அதே வசனத்தை தமுமுக, ஜாக்கினரை
நோக்கித் திருப்புகின்ற அளவுக்கு இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்தன.
சுன்னத் ஜமாஅத்தினர் கூட, பள்ளியை
இழுத்து மூடுகின்ற படுபாதகச் செயல்களில், பாதாளக் குழியில்
இறங்கவில்லை. தவ்ஹீதுப் பெயர் தாங்கிய இவர்கள் இந்த அக்கிரமத்தை எள்ளளவும் இறையச்சமின்றி
செய்தனர்.
இதற்கு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஓர் எடுத்துக்காட்டாகும்.
பள்ளிக்குப் பூட்டுப் போட்டுவிட்டு, பள்ளியை நிர்வாகம்
செய்து வந்த அப்போதைய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் சிறைக்குள்
தள்ளினார்கள்.
சுன்னத் ஜமாஅத்தினர் நமக்கு எதிராகக் கடைப்பிடித்த அத்தனை யுக்திகளையும்
இவர்களும் நமக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். இது அல்லாஹ் தன் வசனத்தில் பட்டியலிட்ட, பள்ளியை விட்டும் தடுக்கும் மாபாதகம் அல்லாமல் வேறு என்னவாக
இருக்க முடியும்? இவர்கள் எப்படித் தங்களை ஏகத்துவவாதிகள்
என்று அடையாளப்படுத்த முடியும்?
பெயரில் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொண்டு, செயலில் அதை எதிர்ப்பதில் மும்முரமாக இருக்கின்றனர். இதனால்
தான் அவர்களிடம் ஏனிந்த இரட்டை நிலை என்று கேட்கிறோம்.
பாதையை விட்டும் தடுத்தல்
பள்ளியை விட்டுத் தடுக்கின்ற செயலை, அல்லாஹ் பெருங்குற்றமாக்கிக் கூறுவது போல், அவனது பாதையை விட்டும் தடுப்பதையும் பெரும் குற்றமாகக் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தல் என்றால் என்ன?
பாதை என்ற வார்த்தையை, அல்லாஹ் மார்க்கம்
என்ற பொருளில் பயன்படுத்துகின்றான். ஏகத்துவத்தை நிலைநாட்டுவது மார்க்கத்தின் உயர்ந்த
உன்னதப் பணியாகும். அந்தப் பணியைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் உயிரைக் கொடுத்து செய்கின்றது.
அந்தத் தூய பணியைச் செய்யும் போது சுன்னத் ஜமாஅத்தினர் அதைத் தடுக்க மூர்க்கத்தனமாக
முனைகின்றனர். அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இதே வேலையை தமுமுகவினரும் செய்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அருகிலுள்ள ஆவணம் என்ற
ஊரில் தவ்ஹீதுவாதிகள் ஏற்பாடு செய்த மார்க்கப் பொதுக்கூட்டத்தை முன்னின்று தடுத்தவர்கள்
தமுமுகவினர் தான்.
இதைவிட உச்சக்கட்டமாக, குடந்தைக்கு
அருகிலுள்ள குத்தாலம் என்ற ஊரில் ஷர்புத்தீன் என்ற தவ்ஹீதுவாதியின் ஜனாஸா தொழுகை, அடக்கம் செய்வது போன்றவற்றையும் தடை செய்தனர். இதுபோன்றே லெப்பைக்குடிக்காட்டிலும்
ஜனாஸாவை தொழ விடாமலும் அடக்க விடாமலும் தடுத்தனர்.
இது அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்ற பகிரங்க நடவடிக்கையைத்
தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்? இப்படிப்பட்டவர்கள்
ஒரு பக்கம் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். மறுபக்கம்
தவ்ஹீதைத் தகர்த்து, தரைமட்டமாக்குகின்ற பணியில்
முழு மூச்சாக இறங்குகின்றனர்.
இதைத் தான் ஏனிந்த இரட்டை நிலை என்று கேட்கின்றோம். இவர்கள்
இயங்குவது ஏகத்துவத்தின் பெயரில், எதிர்ப்பது ஏகத்துவக் கொள்கையை
என்று கூறுகின்றோம்.
அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் பணியைத் தான் ஜாக், தமுமுக போன்ற அத்தனை இயக்கங்களும் செய்து கொண்டிருக்கின்றன.
இவற்றுடன் வேறு சில இயக்கங்களும் சேர்ந்து கொண்டன.
திருவிடைச்சேரியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்த அனைத்து
இயக்கங்களுமே தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகக் கிளம்பி தங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத்
தடுப்பவர்கள் என்று தெளிவாக இனங்காட்டினர்.
இவற்றில் தங்களை தவ்ஹீது என்று அடையாளம் காட்டாமல் சுன்னத் ஜமாஅத்
என்று சொல்லிக் கொள்பவர்களை ஒரு வகையில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். காரணம், அவர்கள் தவ்ஹீது போர்வையைப் போர்த்திவிட்டு வரவில்லை. தவ்ஹீது
வேஷம் போட்டு வரவில்லை. நாம் விமர்சனம் செய்வதெல்லாம் தங்களைத் தாங்களே தவ்ஹீதுவாதிகள்
என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்களைத் தான்.
இப்போது இந்த இயக்கங்களுடன் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி
என்ற கோஷ்டியினரும் இணைந்து கொண்டு, அல்லாஹ்வின்
பாதையை விட்டும் தடுக்கின்ற பணியைச் செய்து கொண்டிருக்கின்றது.
பெருநாள் திடல் தொழுகை விவகாரத்தில், மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள்
தாலியறுக்க வேண்டும் என்று சொல்வார்களே! அந்தக் கதையில் முபாரக் கமிட்டி செயல்பட்டுவருகின்றது.
ஏற்கனவே ஸைபுல்லாஹ் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் பொறுப்பில் இருக்கும்
போது அவரது தலைமையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில்
பெருநாள் தொழுகை நடந்து வந்தது. அவர் விலகிய பிறகு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல்வேறு
தாயீக்களின் தலைமையில் அதே திடலில் தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக ஒவ்வொரு பெருநாளின் போதும், தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் திடலை வழங்கக் கூடாது என்று ஸைபுல்லாஹ்
என்பவர் போர்க்கொடி தூக்குகின்றார். காவல்துறையில் புகார் செய்கின்றார். இந்தப் பிரச்சனை
ஆர்.டி.ஓ. முன் விசாரணைக்கு வரும் போது, ஸ்டேடஸ் குவோ
எனும் தற்போது இருக்கும் நிலையே நீடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நியாயமான
முறையில் தீர்ப்பளித்து வருகின்றது. ஆட்சியாளர்கள் இப்படித் தான் தீர்ப்பளிக்க முடியும்.
இந்த இயற்கையான தீர்ப்புக்கு எதிராக கீழ்க் கோர்ட்டில் துவங்கி, ஹைகோர்ட் வரை வழக்கைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தக்
காயிதே மில்லத் திடல் விவகாரத்தில் சுன்னத் ஜமாஅத்தையும் ஸைபுல்லாஹ் இந்த வழக்கின்
உள்ளே கொண்டு வந்து விட்டார். அவர்களையும் இந்தத் திடலுக்கு உரிமை கோர வைத்தது மட்டுமல்லாமல், "தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் வேண்டாம்; முபாரக் கமிட்டிக்கும் வேண்டாம்; அந்தத் திடலுக்கு மிகவும் அருகிலுள்ள மக்தூம் ஞானியார் தர்கா
கமிட்டியினர் தொழுவதற்குத் திடலை அளியுங்கள்' என்று ஆர்.டி.ஓ.விடம்
தெரிவிக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக ஸைபுல்லாஹ் சென்று விட்டார்.
சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த பக்கா தர்காவாதிகள் தொழுதாலும் சரி!
தவ்ஹீது ஜமாஅத்தினர் தொழக்கூடாது என்ற உச்சக்கட்டத்திற்குச் சென்று விட்டார். இதை அல்லாஹ்வின்
பாதையை விட்டுத் தடுத்தல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவர்களும் தங்களைத் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வது தான்
வேடிக்கை. பெயரில் ஏகத்துவம்! செயலில் ஏகத்துவ எதிர்ப்பு! என்ன வினோதம்!
இதில் வேடிக்கை என்னவென்றால் மஸ்ஜிதுல் முபாரக்கை ஜாக், தமுமுகவினர் கைப்பற்ற வந்த போது கடையநல்லூரைச் சேர்ந்த ஸைபுல்லாஹ்
கோஷ்டியினர் அனைவரும் சிட்டாய் பறந்து விட்டார்கள். அன்று களத்தில் நின்று பள்ளியைக்
காப்பாற்றப் போராடியது மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்றிருந்த தவ்ஹீத்
ஜமாஅத்தினர் தான். பள்ளியைக் காப்பாற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தினர் பகையாளியாகவும், அதைக் கைப்பற்ற வந்தவர்கள் நட்பாளியாகவும் ஆகி விட்டார்கள்.
இப்போது தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து வெளியே சென்ற அப்பாஸ் அலீ
என்பவர், நாளுக்கு ஒரு நிலைப்பாடு என்று கூட இல்லாமல் மணிக்கு ஒரு முரண்பாடு
என்ற அளவில் முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்வது இவரது சமீபத்திய நடவடிக்கைகளைக்
கவனித்துப் பார்த்தால் தெரியும்.
இவர் இந்த ஜமாஅத்தை விட்டு வெளியே போனதும் இதை விடத் தூய்மையான
ஜமாஅத்தைத் தேர்வு செய்து விட்டார் போலும் என்றெண்ணி அந்த ஜமாஅத் எது என்று காண, கடும் ஆவலில் நாம் காத்திருந்தோம். ஆனால் அவர் அடைக்கலமானது, ஐக்கியமானது எல்லாமே மேலே நாம் கூறிய ஒட்டுமொத்த இரட்டை நிலைபாட்டுக்
கொள்கையாளர்களிடம் தான். இனி என்ன? முதலில் தர்ஹா
வாசல்! பிறகு தர்ஹா வாசனை! அதன் பின்னர் தர்ஹா வாசம் தான். இந்த வாசல் கதவு இப்போது
உடனே திறந்து விடாது. ஹாமித் பக்ரிக்குத் திறந்தது போன்று மெதுவாகவே திறக்கும்.
ஹாமித் பக்ரி இங்கிருந்து வெளியே போனதும் சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு
உடனே சென்றுவிடவில்லை. முதலில் இந்த இரண்டுங்கெட்ட, இரண்டாம்
தர, இரட்டை நிலைபாட்டுக்காரர்களின் பள்ளிகளுக்குத் தான் சென்றார்.
பின்னர் சுன்னத் ஜமாஅத் பள்ளிகள், அதன் பிறகு தர்ஹா படிக்கட்டுகளுக்குப்
பயணமானார். அல்லாஹ் காப்பானாக!
இதுபோன்ற ஏகத்துவப் போர்வையில் இயங்கும் அத்தனை இயக்கங்கள், தனி நபர்களையும் நோக்கி நாம் கேட்க விழைவது, ஏனிந்த இரட்டை நிலை என்பது தான். இறுதியாக இவர்களிடம் நாம் தெரிவிப்பது
ஒன்று தான்.
அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின்
உள்ளங்களையும்,
பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத்
தடுமாற விட்டு விடுவோம்
அல்குர்ஆன் 6:110
இந்த இறை எச்சரிக்கைக்கு இலக்காகி விடாதீர்கள் என்று கேட்டுக்
கொள்கிறோம்.
EGATHUVAM DEC 2014