உருவாகட்டும் ஊருக்கு ஓர் அழைப்பாளர்
அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை
என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய
அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை
விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில்
மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
இந்தக் கட்டளைக்குப் பயந்து தான் நாம் ஏகத்துவக் கொள்கையை ஏற்று
அசத்தியத்திலிருந்து விடுபட்டோம்; விடுதலையானோம். இவ்வாறு விடுபடுவதும்
விடுதலையாவதும் நமக்கு மட்டும் தானா? நாளை வரக்கூடிய
தலைமுறைக்கு இல்லையா?
பொருளாதாரத்தைத் திரட்டுகின்ற நாம், நமக்காக மட்டும் திரட்டுவதில்லை. நாளை வரக்கூடிய நம்முடைய சந்ததிக்கும்
சேர்த்துத் தான் திரட்டுகின்றோம். இவ்வுலக வாழ்க்கைக்குக் கொடுக்கக் கூடிய இந்த முக்கியத்துவத்தை
மறுமைக்குக் கொடுக்க வேண்டாமா?
இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
அல்குர்ஆன் 93:4
அல்லாஹ் குறிப்பிடும் இந்த மறுமைக்கு நாம் என்ன முக்கியத்துவத்தைக்
கொடுக்கிறோம்?
பூஜ்யம் என்பது தான் பூரண பதிலாக அமைகின்றது.
ஏகத்துவத்தை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் அழைப்பாளர்களை
உருவாக்குவதற்காகத் தலைமையின் கட்டுப்பாட்டில் இஸ்லாமியக் கல்லூரி, தவ்ஹீத் கல்லூரி போன்றவை இருக்கின்றன.
எங்களூரில் ஏகத்துவம் வளர்ச்சி கண்டிருக்கின்றது; ஆனால் தாயீ தான் இல்லை, தாயீக்களை
அனுப்பி வையுங்கள் என்று கொள்கைவாதிகள் கோரிக்கை வைக்கின்றனர். தாயீ - அழைப்பாளர் அனுப்பவில்லை
என்றதும் குறைபடுகின்றனர்; கோபப்படுகின்றனர்.
ரமளான் மாதத்தில் தாயீக்களின் தேவையும் தேட்டமும் பன்மடங்காகப்
பெருகி விடுகின்றது. அப்போதும் தலைமை கை விரிக்கும் போது அவர்களின் ஆத்திரத்திற்கும்
ஆதங்கத்திற்கும் அளவே இல்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் ஒவ்வொரு மாநில செயற்குழு
மற்றும் பொதுக்குழுவின் போதும், இஸ்லாமியக் கல்லூரிக்கு, தவ்ஹீது கல்லூரிக்கு ஆளனுப்பி வையுங்கள் என்று தலைமை ஓயாமால்
கூவிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் இதைக் கிளைகள் காதில் கேட்டுக் கொள்வதும் இல்லை. உள் வாங்குவதும்
இல்லை.
இந்த நிலை நீடித்தால் என்னவாகும்? நாம் வளர்த்த நம்முடைய உயிரினும் மேலான இந்த ஏகத்துவக் கொள்கையை
நமது காலத்திலேயே, நம் கண் முன்னாலேயே அழித்து
விட்டுப் போக வேண்டியது தான். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத்
துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம்
அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்!
இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில்
அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.
அல்குர்ஆன் 16:92
சிரமப்பட்டு ஒரு நூலை நூற்று, பின்னர்
அதைத் துண்டு துண்டாக ஆக்கியவரைப் போல் ஆகி விடாதீர்கள் என்று அல்லாஹ் கூறுவது போல்
நாம் உருவாக்கிய இந்த ஏகத்துவக் கோட்டையை நம் கைகளால் தகர்த்தெறிந்து சுக்குநூறாக்கி
விடக்கூடாது.
நாம் கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கை நாளைய தலைமுறையினருக்குப்
போய்ச் சேர வேண்டுமானால், தாயீக்கள் பற்றாக்குறை தீர வேண்டுமானால்
உடனடியாக ஒவ்வொரு கிளையிலிருந்தும் ஒரு மாணவனை, மார்க்கக்
கல்வி பயில்வதற்காக அனுப்பியாக வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் அவருக்குரிய பொருளாதாரத்தை
கிளையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படி உருவாக்கினாலே தவிர தாயீக்களின் பற்றாக்குறையைத் தீர்க்க
முடியாது. நாளைய தலைமுறையினருக்கு இந்தக் கொள்கையைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் முடியாது.
இன்று நாம் மிகப் பெரிய சிரமத்திற்கும் சிக்கலுக்கும் இடையே
மர்கஸ்களை,
அழைப்பு மையங்களை நிறுவுகின்றோம். இந்த அழைப்பு மையங்கள் ஏகத்துவக்
கொள்கையின் அடித்தளங்கள். ஆனால் அவற்றில் அழைப்பாளர்கள் இல்லாவிட்டால் அவை உயிரற்ற
சடலங்களாகி விடும்.
ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள், இஸ்லாமிய மையமான கஅபாவை நிறுவி விட்டு இறைவனிடம் கையேந்துகின்றார்கள்.
"எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக!
அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார்.
நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்''
அல்குர்ஆன் 2:129
அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்று, நபி (ஸல்) அவர்களை தூதராக அனுப்பி அந்த அழைப்பு மையத்தை அதன்
அடிப்படைக் கொள்கையின் பக்கம் திருப்பி விடுகின்றான்.
ஓர் அழைப்பாளர் இருப்பாரானால் அழைப்பு மையத்திற்கு ஒரு வாடகைக்
கட்டடத்தைக் கூட பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அழைப்பாளரை வாடகைக்குப் பிடிக்க முடியாது.
அழைப்பாளர் இல்லாத மர்கஸ், மாலுமி இல்லாத கப்பல்! அடிக்கின்ற
காற்றில் எந்தத் திசையை நோக்கியும் அது திருப்பப்படும்; அலைக்கழிக்கப்படும். இதைக் கவனத்தில் கொண்டு அழைப்பாளர்களை உருவாக்குவோமாக!
வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்புகளை மட்டும் படித்து விட்டு
அழைப்புப் பணியைத் தொடரலாம்; தொடர்கின்றோம். ஆனால் குர்ஆன், ஹதீஸ் அரபு மொழியில் அமைந்திருப்பதால் அதில் ஆழ்ந்த ஞானம் அவசியம்
இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையவர்கள் வாதங்களை எடுத்து வைக்கும் போது அதற்கு
நாம் தக்க பதிலைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தப்பும் தவறுமாக அர்த்தம் கொடுத்து
தவ்ஹீதை விட்டு மக்களைத் தடம்புரளச் செய்யும் நிலை ஏற்பட்டு விடும்.
எனவே அசத்தியவாதிகளைச் சந்திக்கும் போது அவர்கள் தூக்கி வருகின்ற
ஆயுதங்களை விட வலுவான ஆயுதங்களைத் தூக்கி வர வேண்டும். தூய இஸ்லாத்தைக் காக்க வேண்டும்.
அன்று ஒவ்வொரு நபித்தோழரும் இந்த ஏகத்துவத்தைக் காக்கத் தங்கள்
இன்னுயிரை ஈத்தனர். இன்று நாம் உயிரை இழக்கின்ற நிலை ஏற்படவில்லை. அப்படி வந்தால் உயிரையும்
விடுவோம். ஆனால் இப்போதுள்ள தேவை குறைந்தபட்சம் இந்தக் கொள்கையைக் காக்க நம் குடும்பத்திலிருந்து
ஒருவரையாவது அனுப்ப வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின்
பாடத்திட்டங்களின் படி இங்கு படித்தவர்களின் இவ்வுலக வாழ்க்கை இருண்டு விடாது.
இங்கு படித்த மாணவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால் அது இருண்டு விடவில்லை, ஒளிரத் தான் செய்கின்றது. இவ்வுலக வாழ்க்கையுடன் சேர்ந்து மறுமை
வாழ்க்கையும் ஒளிர்கின்றது. அதனால் இந்தக் கல்வியைப் பயின்றால் இவ்வுலக வாழ்க்கை பாழாகி
விடும் என்று யாரும் கருத வேண்டாம்.
உலகக் கல்வியைக் கற்றால் உலக வாழ்க்கை மட்டும் சிறக்கும்; அவருடைய பொருளாதாரம் வளம் பெறும். அப்படி அவர் அனுமதிக்கப்பட்ட
வழியில் பொருளாதாரத்தைத் திரட்டுவதில் தவறேதுமில்லை.
அல்லாஹ் இந்தப் பொருளாதாரத்தைப் பற்றிக் கூறும் போது, ஹைர் - நன்மை என்று குறிப்பிடுகின்றான்.
உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம்
நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும்
சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு
இது கடமை.
அல்குர்ஆன் 2:180
பொருளாதாரத்திற்குக் குறிப்பிடும் அதே "ஹைர்' என்ற வார்த்தையை கல்வி ஞானத்திற்கும் குறிப்பிடுகின்றான்.
தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர்
ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.
அல்குர்ஆன் 2:180
இதற்கு ஏன் அல்லாஹ் இந்த வார்த்தையைக் குறிப்பிட வேண்டும்?
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில்
செலுத்துவது (அரபுகளின் உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 3009
ஓர் அழைப்பாளர் மூலம் யார் யாரெல்லாம் நேர்வழி பெறுகின்றாரோ
அத்தனை பேரின் நன்மைகளும் அவர்களின் கணக்கில் குறைக்கப்படாமல், அந்த வழிகாட்டிக்குக் கிடைக்கின்றது என்றால் இதென்ன சாமான்யமான, சாதாரணமான நன்மையா? அபரிமிதமான, அளப்பரிய நன்மையாகும். அந்தப் பாக்கியத்தை அடைய குடும்பத்திற்கு
ஒருவரை அனுப்பி வைப்போம்.
EGATHUVAM FEB 2012