May 10, 2017

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்! - உடும்பின் சாட்சி

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்! - உடும்பின் சாட்சி

எஸ். அப்பாஸ் அலீ

நபி (ஸல்) அவர்களின் உண்மை வாழ்க்கை வரலாறும் அவர்களுடைய போதனைகளும் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நபிகளாரைப் பற்றிய செய்திகள் மனிதர்களின் மூலமாகத் தொடராக அறிவிக்கப்பட்டு நூல் வடிவில் இன்று அவை நமக்கு கிடைத்துள்ளன.

இந்த அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பது அவசியம். ஏனென்றால் செய்தியைக் கூறுபவர்கள் நம்பகமானவர்களாக இருந்தால் தான் அறிவிக்கப்படும் செய்தி உண்மையான தகவலாக இருக்கும். நம்பகத்தன்மை இல்லாத நபர்கள் அறிவிக்கும் செய்திகளில் தவறான தகவல்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

இதை நன்கு உணர்ந்த இமாம்கள் அறிவிப்பாளர்களின் வரலாறுகளைப் பதிவு செய்தார்கள். ஹதீஸ்கலை விதியை ஏற்படுத்தி சரியான செய்திகள், ஆதாரமற்ற செய்திகள் என ஹதீஸ்களை இரண்டாகப் பிரித்தார்கள். தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை இந்தத் துறைக்காகச் செலவிட்டார்கள்.

நம் சமுதாயத்தில் ஆலிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலருக்கு ஹதீஸ் கலையைப் பற்றிய ஞானம் கொஞ்சம் கூட இல்லை. கண்ணில் படும் செய்திகளை ஆராயாமல் தங்கள் விருப்பப்படி பரப்பி வருகிறார்கள். இவ்வாறு இவர்களால் சமுதாயத்தில் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும்.

ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலே தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஒரு காட்டரபி அங்கு வருகை தந்து, "முஹம்மதே! என்ன நீர் புதிதாக ஓரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளீராம்! உம்மை நபி என்று சொல்கிறீராம்! நீர் என்ன எங்களின் தெய்வங்களை ஏசுகின்றீராம்'' என்று சொல்லிவிட்டு, "நீ யார் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்குத் தெரியாதா? உமக்கு என்ன புத்தி புரண்டு விட்டதா?'' என்று கடுமையாக ஏசிவிட்டு, மனிதனின் வாயிலிருந்து வரக்கூடாத வார்த்தைகளையெல்லாம் சொல்லி தீய வார்த்தைகளினால் திட்டிவிட்டு, "இது போன்ற செயல்களை நீர் செய்யாதீர்'' என்று கூறுகிறார்.

இவரின் பேச்சைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அனுமதி தாருங்கள். இவரை இங்கேயே என் வாளுக்கு இரையாக்கி விடுகின்றேன்'' என்று கூறினார்கள்.

பொறுமையுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள், "உமரே! பொறுமையாக இருங்கள்'' என்று கோபப்பட்டவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, கடும் சொற்களைச் சொல்லி திட்டியவரை ஒன்றும் பேசவில்லை.

மீண்டும் அந்த காட்டரபி கோபப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களை தன் ஆசை தீர திட்டுகிறார். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கோவைக் கனியைப் போன்று சிவந்து விட்டது. கொதித்தெழுந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். "அல்லாஹ்வின் தூதரே! இப்போதாவது அனுமதி தாருங்கள். இவரை இங்கேயே துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தி விடுகின்றேன்'' என்று சொல்லி உறையிலிருந்த வாளை வெளியில் எடுத்து விடுகிறார்கள்.

இப்போதும் நபி (ஸல்) அவர்கள் திட்டியவரை ஒன்றும் சொல்லாமல் கோபப்பட்ட உமர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

அந்த அரபியிடம் நபி (ஸல்) அவர்கள், "நண்பரே! நீ இப்படி என்னைத் திட்டுகின்ற அளவிற்கு நான் உனக்கு என்ன தீங்குகள் செய்தேன்'' என்று கூறிவிட்டு, "நண்பரே! அஸ்லிம் தஸ்லிம். நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள். சந்தோஷம் அடைந்தவனாக - நிம்மதி பெற்றவனாக ஆகிவிடுவாய் - உனக்கு சுவனத்தைக் கொண்டு சுபச்செய்தி சொல்கிறேன்'' என்று கூறினார்கள்.

அதற்கு அந்த அரபி, "உம்மை நபி என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்? உம்மால் நிருபிக்க முடியுமா?'' என்று கேட்கிறார். "நான் நபி என்பதை நிருபித்து விட்டால், என்னை நபி என்றும் நான் கொண்டு வந்துள்ள இஸ்லாமிய மார்க்கம் உண்மையானது என்றும் நம்பி இஸ்லாத்திலே வந்துவிடுகிறாயா?'' என்று கேட்கின்றார்கள். "நீர் நபி என்பதை நிருபித்து விட்டால் நான் இஸ்லாத்திலே வந்து விடுகிறேன்'' என்று கூறினார்.

உடனே நபி (ஸல்) அவர்கள், "நண்பரே! உன் கையில் என்ன இருக்கிறது. என்ன கொண்டு வந்துள்ளீர்'' என வினவ அந்த அரபி, "முஹம்மதே! என் கையில் பை இருக்கிறது. பையின் உள்ளே உடும்பு இருக்கிறது. இதை நானே வளர்க்கிறேன். இது எனக்கே சொந்தமானது'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், "அப்படியா! உனக்குச் சொந்தமான நீ வளர்க்கிற உன் உடும்பைப் பேச வைக்கிறேன் பார்'' என்று சொல்லி அந்த உடும்பின் பக்கம் தங்களின் முபாரக்கான திருக்கரத்தை நீட்டி சைக்கினை செய்தது தான் தாமதம். உடனே உடும்பு, "அல்லாஹ்வின் தூதரே! இதோ பணிந்து விட்டேன்; என்னை எதற்காக தாங்கள் அழைத்தீர்கள்?'' என்று உடும்பு கேட்டது. இதைப் பார்த்த அந்த அரபி உடல் சிலிர்த்தவராக ஆனந்தக் கண்ணீர் விடுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த உடும்பிடம், "நான் யார்? நான் கொண்டு வந்துள்ள மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை இந்த அரபியிடம் சொல்'' என்று கூறினார்கள். உடனே அந்த உடும்பு, "மனிதா! இது போன்ற ஒரு நபி உலகில் வேறு யாரும் கிடையாது. நீ இவர்களை நபி என்றும் இவர்கள் கொண்டு வந்துள்ள மார்க்கத்தையும் நீ ஏற்றுக் கொள். நீ சலாமத் பெற்றவராக ஆகிவிடுவாய். இல்லையானால் உன்னை விட ஒரு நஷ்டவாளி உலகில் யாரும் கிடையாது. இவர்களை நான் மட்டுமல்ல; உலகில் படைக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளும் நபி என்று ஏற்றிருக்கின்றன'' என்று கூறியது.

தன்னுடைய உடும்பின் உபதேசத்தை கேட்ட அந்த அரபி அழுதவராகத் தன் தவறை நினைத்து மனம் வருந்தியவராக, "யா ரஸூலல்லாஹ்! என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கூறி முழு மனதுடன் நபி (ஸல்) அவர்களின் திருக்கரத்தைப் பிடித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.

பிறகு உமர் (ரலி) அவர்களைப் பார்த்து நபியவர்கள், "உமரே! நீ இவரை வெட்டுவதற்கு நான் அனுமதி கொடுத்திருந்தால் இஸ்லாத்திற்கு வருவதில் ஒருவர் குறைந்திருப்பார்'' என்று சொல்லி கோபப்பட்ட உமர் (ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

நூல்: தலாயிலே நுபுவ்வத்

இந்தச் செய்தி தப்ரானியிலும் இமாம் பைஹகீ அவர்களுக்குரிய தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது பின் அலீ பின் அல்வலீத் அஸ்ஸுலமீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அபூபக்ர் இஸ்மாயீலீ கூறியுள்ளார்.

முஹம்மது பின் அலீ பின் அல்வலீத் அஸ்ஸுலமீ என்பவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட வேண்டியவர்.

நூல்: முஃஜமு அஸாமி சுயூகி அபீ பக்ர் இஸ்மாயீலீ

பாகம்: 1, பக்கம்: 458

மேலும் இமாம் பைஹகீ இந்தச் செய்தியில் இவர் இடம் பெறுவதால் இது பலவீனம் என்று இமாம் பைஹகீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் தஹபீ அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இமாம் பைஹகீ அவர்களின் இந்தக் கூற்று உண்மையானது. உடும்பு தொடர்பான இந்தச் செய்தி தவறான செய்தி'' என்று கூறியுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியை நாம் ஏற்கக்கூடாது.

EGATHUVAM MAY 2013