ஆய்வுக்கூடம் - மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா?
மனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு
அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்களின்
நடைமுறைக்கு நேர்முரணாக அமைகின்றன. நபி (ஸல்) அவர்கள் தடுக்காததைத் தடுக்கும் விதத்தில்
இந்தப் பதில்கள் அமைகின்றன. மத்ஹபுகள் எவ்வாறு மார்க்கத்திற்கு முரணாக அமைந்துள்ளன
என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் பதில்களே போதுமான ஆதாரமாக இருப்பதால் இவற்றை நாம் தக்க
ஆதாரத்துடன் விமர்சித்து வருகிறோம்.
அந்த அடிப்படையில் மனாருல் ஹுதா, மார்ச் 2013 இதழில் ஒரு கேள்விக்கு அவர்கள்
அளித்துள்ள பதிலைப் பார்ப்போம்.
கேள்வி: ஹைளுடைய காலத்தில் குர்ஆனை எழுதலாமா? அதனை வாயால் ஓதலாமா?
பதில்: மாதவிடாய் நேரத்தில் குர்ஆனைத் தொடுவதோ, அதனை நாவால் ஓதுவதோ, அதனை எழுதுவதோ
கூடாது. எனினும் திக்ர், ஸலவாத்கள் ஓதிக் கொள்ளலாம்.
அதுபோல் துஆவாக அமைந்த வசனங்களை ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை தனித்தனி வார்த்தையாகப்
படித்துக் கொள்வது கூடும்.
(அஹ்ஸனுல் பதாவா 2/68)
இது தான் மவ்லான அளித்துள்ள பதில். இதற்கு ஆதாரமாக மனாரின் மவ்லான
குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ ஆதாரமாகக் காட்டவில்லை.
மத்ஹபுச் சட்ட நூலையே ஆதாரமாகக் காட்டியுள்ளார்.
ஆனால் மாதவிலக்கு, பிரசவத் தீட்டு, ஜனாபத் உள்ளவர்கள் குர்ஆன் ஓதுவதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸிலோ எந்தத் தடையுமில்லை. இதை விரிவாகப் பார்ப்போம்.
குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய்
ஏற்பட்டவர்கள்,
பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் ஆகியோர் திருக்குர்ஆனை ஓதக் கூடாது
என்று கூறுபவர்கள் இக்கருத்துக்கு சில ஹதீஸ்களைச் சான்றாக எடுத்து வைக்கின்றனர். அவற்றின் விபரங்களைப் பார்ப்போம்.
முதல் சான்று
மாதவிடாய் ஏற்பட்டவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில்
எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: திர்மிதி 121
இதே செய்தி பைஹகீயில் 1375வது ஹதீஸாகவும், இப்னுமாஜாவில் 588வது ஹதீஸாகவும், பைஹகீயின் சுனனுஸ் ஸுக்ரா என்ற நூலில் 1044வது செய்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா? செயல்படுவதற்கு ஏற்றதா? என்பதை இச்செய்தியைப்
பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த ஹதீஸின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
(இச்செய்தியில் இடம்பெறும்) இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இராக்வாசிகள், ஹிஜாஸ்வாசிகள் வழியாக மறுக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார்
என்று முஹம்மது பின் இஸ்மாயீல் (புகாரி இமாம்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். அதாவது இவர் மட்டும் தனியாக இவர்கள் வழியாக அறிவிக்கும்
போது, அது பலவீனமானது என்ற கருத்தைக் கூறினார்கள். மேலும் ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பது மட்டுமே ஹதீஸாகும்
என்றும் கூறினார்கள்.
இதே கருத்தை இன்னும் பல அறிஞர்களும் கூறியுள்ளனர்.
இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இராக்வாசிகள், ஹிஜாஸ்வாசிகள் வழியாக அறிவிப்பதில் சில குறைகள் இருக்கின்றன. ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பவை உறுதியானது, ஆதாரப்பூர்வமானது என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். "இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் ஹதீஸ் துறையில்
எப்படிப்பட்டவர்?' என்று அபூஸுர்ஆவிடம் கேட்கப்பட்ட
போது, "நல்லவர், எனினும் ஹிஜாஸ்வாசிகள் வழியாக
அறிவிக்கும் ஹதீஸ்களில் குழம்பியிருக்கின்றார்' என்று பதிலளித்தார்கள்.
(நூல்: அல்ஜரஹு வத்தஃதீல், பாகம்:
2, பக்கம்: 191)
"பகிய்யா என்பவர் அறியப்பட்டவரிடமிருந்து அறிவித்தால் அவரிடமிருந்து
எழுதிக் கொள்ளுங்கள்! அறியப்படாதவரிடமிருந்து அறிவித்தால் அதை எழுதிக் கொள்ளாதீர்கள்!
இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் அறியப்பட்டவரிடமிருந்து அறிவித்தாலும், அறியப் படாதவரிடமிருந்து அறிவித்தாலும் எழுதிக் கொள்ளாதீர்கள்!' என்று அபூஇஸ்ஹாக் குறிப்பிடுகின்றார். "இஸ்மாயீல் பின்
அய்யாஷ் என்பவரைப் பற்றி நான் யஹ்யா பின் முயீன் அவர்களிடம் கேட்டேன். ஷாம்வாசிகள்
வழியாக அறிவிப்பவை சரியானதாகும். இராக்வாசிகள், மதீனாவாசிகள்
வழியாக அவர் அறிவித்தால் அது குழப்பத்திற்குரியதாகும்' என்று கூறினார்கள். "இவர் தன்னுடைய ஹதீஸில் அதிகம் தவறிழைப்பவர்.
எனவே ஆதாரமாக எடுத்துக் கொள்ளுதல் என்ற வரையறையிலிருந்து இவர் நீங்கி விட்டார்' என்று இப்னு ஹிப்பான் கூறியதாக மிழ்ரஸ் பின் முஹம்மத் அல்அஸதீ
குறிப்பிடுகின்றார்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:
1, பக்கம்: 401)
இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ
குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 16)
"மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு
கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது'' என்ற செய்தி
மொத்தம் நான்கு ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு நூற்களிலும் இஸ்மாயீல்
பின் அய்யாஷ் என்பவரே இடம் பெறுகின்றார். இந்த இஸ்மாயீல் பின் அய்யாஷைப் பற்றி ஹதீஸ்
கலை அறிஞர்கள்,
இவர் இரு விதமான ஹதீஸ்களை அறிவித்திருப்பதை தெளிவுபடுத்துகின்றனர்.
ஒன்று இவர் தன்னுடைய நாடான ஷாம் நாட்டவர் வழியாக அறிவித்தவை. மற்றவை ஷாம் நாட்டவர்
அல்லாத வேறு நாட்டவர் வழியில் அறிவித்தவை. இவற்றில் தன் நாட்டவர் வழியாக அறிவித்தவையே
சரியானதாக அமைந்திருப்பதாகவும், வேறு நாட்டவர் வழியாக அறிவித்தவைகளில்
குழப்பங்கள்,
தவறுகள் நிறைந்திருப்பதாகவும் ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் தெளிவு
படுத்தியுள்ளனர். எனவே இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றார் என்பதை முதலில் பார்க்க
வேண்டும். "மூஸா பின் உகபா' என்பவர் வழியாகவே நான்கு நூற்களிலும்
அறிவிக்கின்றார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரம் நமக்குக் கிடைக்கின்றது.
மூஸா பின் உக்பா என்பவர் மதீனாவைச் சார்ந்தவர்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால், பாகம்:
29, பக்கம்: 115
தபகாத்துல் ஹுஃப்பாழ், பாகம்: 1, பக்கம்: 70)
இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் யாரிடமிருந்து அறிவித்தாரோ அந்த
மூஸா பின் உக்பா என்பவர் மதீனாவைச் சார்ந்தவர்.
மதீனாவைச் சார்ந்தவர் வழியாக இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர்
அறிவிப்பதால் ஹதீஸ் கலை அறிஞர்களின் முடிவுப் படி இந்த ஹதீஸ் பலவீனமானதாக அமைகின்றது.
எனவே இது ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.
இச்செய்தி பலவீனமானது என்பதை இதைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான
இமாம் பைஹகீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
இது பலமான செய்தி இல்லை.
(நூல்: பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 309)
மேலும் இச்செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகக் கூறப்படுவது
தவறாகும். இது இப்னுஉமர் (ரலி) அவர்களின் சொந்தக்
கூற்று என்பதே சரியாகும் என்று அபூஹாத்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
"மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு
கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னுஉமர் (ரலி) அறிவிக்கும் செய்தியைக் குறிப்பிட்டு, "இது தவறாகும். இச்செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக்
கூற்றே!'' என்று என் தந்தை குறிப்பிட்டார்கள்.
(நூல்: இலல் இப்னு அபீஹாத்தம், பாகம்:
1, பக்கம்: 49)
"மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு
கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது'' என்ற செய்தி
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பலவீனமாகின்றது. எனவே இச்சான்றை வைத்து, குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய்
ஏற்பட்டவர்கள் குர்ஆனை ஓதலாகாது என்ற சட்டத்தைக் கூற முடியாது.
இரண்டாவது சான்று
குளிப்பு கடமையானவர் குர்ஆனிலிருந்து எதையும் ஓதலாகாது என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: தாரகுத்னீ 417
இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் அப்துல் மலிக்
பின் மஸ்லமா என்பவர் பலவீனமானவர். இவரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தைக் காண்போம்.
என் தந்தையிடம் இவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், "இவர் ஹதீஸ்களை குழப்பி அறிவிப்பவர், பலம் வாய்ந்தவர் இல்லை'' என்று பதிலளித்தார்கள்
என்று அப்துர்ரஹ்மான் குறிப்பிடுகின்றார். இவரைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்டேன்.
"இவர் பலம் வாய்ந்தவர் இல்லை, ஹதீஸ் கலையில்
மறுக்கப்பட்டவர்'' என்று கூறினார்கள் என்றும் அப்துர்ரஹ்மான்
குறிப்பிடுகின்றார்.
(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்:
5, பக்கம்: 371)
அப்துல் மலிக் பின் மஸ்லமா என்பவர் மதீனாவாசிகள் வழியாக ஏராளமான
மறுக்கப்பட்ட செய்திகளை அறிவிப்பவர். நபிவழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு
இது மறைவானது கிடையாது என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 134)
மூன்றாவது சான்று
"மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு
கடமையானவர்களும் குர்ஆனிலிருந்து எதையும் ஓத மாட்டார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: தாரகுத்னீ 418
இச்செய்தியும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர்
ஒரு மனிதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாமல் இடம் பெறும் ஹதீஸ்களை
ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் தெரியாத நபர் பொய்யராகவோ, பலவீனமானவராகவோ இருக்கக் கூடும்.
நான்காவது சான்று
மாதவிடாய் ஏற்பட்டவர்கள், பிரசவத்
தீட்டு ஏற்பட்டவர்கள் குர்ஆனிலிருந்து எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: தாரகுத்னீ 1860
இச்செய்தியும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் முஹம்மது
பின் ஃபழ்ல் என்பவர் பலவீனமானவர் ஆவார். ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்
ஆவார்.
முஹம்மது பின் ஃபழ்ல் என்பவரைப் பற்றி யஹ்யா பின் முயீன் அவர்களிடம்
கேட்டேன். "மதிப்பற்றவர், அவருடைய ஹதீஸ்கள் எழுதப்படாது'' என்று பதிலளித்தார் என இப்னு அபீ மர்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
முஹம்மது பின் ஃபழ்ல் என்பவர் பொய்யர் என்று ஸஅதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நான்
அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் இவரைப் பற்றிக் கேட்ட போது, "இவர் பிரமிப்பூட்டும் (பொய்யான) செய்திகளைக் கொண்டு வருபவர்'' என்று கூறினார்கள்.
(நூல்: அல்காமில், பாகம்: 6, பக்கம்: 161)
முஹம்மத் பின் ஃபழ்ல் என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று
இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 93)
இவர் நம்பகமானவர்களின் பெயரைப் பயன்படுத்தி இட்டுக் கட்டப்பட்ட
செய்திகளை அறிவிப்பவர். படிப்பினை பெறுவதற்காகவே தவிர இவருடைய செய்திகளை பதிவு செய்வது
அனுமதி இல்லை என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அல் மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 278)
ஐந்தாவது சான்று
ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக்
குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்: திர்மிதீ (136)
இச்செய்தியின் கீழ் இமாம் திர்மிதீ அவர்கள் இது ஆதாரப்பூர்மானது
என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நானும் இரண்டு மனிதர்களும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது
அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியேறுவார்கள். குர்ஆனை
ஓதுவார்கள். எங்களுடன் இறைச்சியை சாப்பிடுவார்கள். ஜனாபத்தைத் தவிர வேறு எதுவும் குர்ஆன்
ஓதுவதைவிட்டும் தடுக்காது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்: நஸயீ (265)
இக்கருத்து அபூதாவூதில் 198வது
செய்தியாகவும் இப்னுமாஜாவில் 587வது செய்தியாகவும் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவாகள், ஜனாபத் இல்லாத
எல்லா நிலையிலும் குர்ஆனை ஓதக்கூடிவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்: நஸயீ (266)
தூய்மையில்லாமல் குர்ஆனை ஓதக் கூடாது என்று வலியுறுத்தும் இச்செய்தி
இமாம் திர்மிதீ குறிப்பிட்டது போல் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் இரண்டாவது அறிவிப்பாளர்
அப்துல்லாஹ் பின் ஸலிமா என்பவர் பலவீனமானவராவார். இதன் முழு விபரத்தைக் காண்போம்.
இவரிடத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளும் மறுக்கக் கூடியவைகளும்
உள்ளன என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் பாகம்: 1, பக்கம்: 64)
அப்துல்லாஹ் பின் ஸலிமா முதுமையடைந்தார். அப்போது எங்களுக்கு
(ஹதீஸ்களை) அறிவித்தார். அதில் சரியானதையும் மறுக்கப்பட வேண்டியதையும் கண்டோம் என்று
அவரின் மாணவர் அம்ர் பின் முர்ரா குறிப்பிடுகிறார்.
(நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 9, பக்கம்: 460)
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் ஸலிமா அவர்கள் முதுமையை அடைந்த
பிறகே அறிவித்தார் என்று ஷுஅபா குறிப்பிடுகிறார்.
(நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 15, பக்கம்: 53)
இவர் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஒத்த அறிவிப்புகள் இருப்பதில்லை
என்று இமாம் புகாரீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:
4, பக்கம்: 111)
இமாம் ஷாஃபீ அவர்கள் ஸுனன் ஹர்மலா என்ற நூலில் "இந்தச்
செய்தி சரியானதாக இருந்தால் ஜனாபத் உள்ளவர்கள் குர்ஆன் ஓதுவது ஹராம் என்பதற்கு ஆதாரமாகும்'' என்று கூறியுள்ளார்கள், ஹதீஸ் கலை
அறிஞர்கள் இச்செய்தியை (ஆதாரப்பூர்வமானது என்று) உறுதி செய்யவில்லை என்று ஜிமாவு கிதாபுத்
தஹுர் என்ற நூலில் இமாம் ஷாஃபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் பைஹகீ குறிப்பிடுகிறார்கள்: இமாம் ஷாஃபீ இவ்வாறு குறிப்பிடுவதற்குக்
காரணம், இச்செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸலிமா என்பவர் மூளை
குழம்பி விட்டார். இச்செய்தியை முதுமையடைந்த (மூளை குழம்பிய) போது அறிவித்துள்ளார்
என்று ஷுஅபா அவர்கள் அறிவித்துள்ளார். (எனவே தான் இமாம் ஷாஃபீ அவர்கள் இச்செய்தியை
ஆதாரப்பூர்வமானது என்று கூறவில்லை,) இச்செய்தி
சந்தேகத்திற்குரியது என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியதாக கத்தாபீ குறிப்பிடுகிறார்கள்.
(இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்ற) இமாம் திர்மிதீ அவர்கள் பெரும்பான்மையினருக்கு
மாற்றமாக கூறியுள்ளார்கள். (இவரல்லாத) அனைவரும் இந்த ஹதீஸை பலவீனமாக்கியுள்ளனர் என்று
இமாம் நவவீ அவர்கள், குலாஸா என்ற நூலில் குறிபிட்டுள்ளார்கள்.
(நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 139)
(இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும்) குளிப்பு
கடமையானவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது என்று சொல்பவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.
இதில் (குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது என்பதற்கு) எந்தத் தடையும் இல்லை.
இது நபி (ஸல்) அவாகளின் செயலை (அப்படியே) எடுத்து சொன்னது தான். (நபி (ஸல்) அவர்கள்)
குர்ஆன் ஓதாமல் தடுத்துக் கொண்டது குளிப்பு கடமையினால் தான் என்று நபி (ஸல்) அவர்கள்
தெளிவுபடுத்தவில்லை (ஓதாமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருந்திருக்கலாம்.) என்று
இமாம் இப்னு ஹுஸைமா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம்: 1, பக்கம்: 139)
ஆறாவது சான்று
"அலீயே நான் எதை பொருந்திக் கொள்வேனோ அதை உனக்கும் நாடுகிறேன்; எனக்கு எதை வெறுப்பேனோ அதை உனக்கும் வெறுக்கிறேன்; நீ குளிப்பு கடமையானவனாக இருக்கும் போது குர்ஆனை ஓதாதே; நீ ருக்கூவில் இருக்கும் போதும் நீ ஸஜ்தாவில் இருக்கும் போதும்
(குர்ஆனை) ஓதாதே; உன் முடியை கொண்டை போட்டுக்
கொண்டு தொழாதே;
கழுதையைப் போல் (ருகூவில் அதிகமாக) முதுகையை தாழ்த்தாதே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுனார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி),
நூல்: தாரகுத்னீ (420)
இச்செய்தியை இமாம் தாரகுத்னீ மூன்று அறிவிப்பாளர் வரிசையுடன்
பதிவு செய்துள்ளார்கள். இந்த மூன்று அறிவிப்பாளர் வரிசையிலும் அபூ நயீம் அந்நகயீ என்ற
அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். இவரைப் பற்றிய விமர்சனங்களை காண்போம்.
இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று அபூஹாத்தம் அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள்,
(நூல்: அல்இலல் வமஃரிபத்துர் ரிஜால், பாகம்: 3, பாக்கம்: 386)
இவர் அறிவிக்கும் பெரும்பாலான அறிவிப்புகளுக்கு ஒத்த அறிவிப்புகள்
இருப்பதில்லை என்று இப்னு அதீ அவர்கள் குறை கூறியுள்ளார்கள்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:
4, பக்கம்: 324)
கூஃபாவில் அபூ நயீம் அந்நகயீ, ளிரார்
பின் ஸர்மத் என்ற அபூ நயீம் அந்நகயீ ஆகிய இரு பொய்யர்கள் உள்ளனர் என்று யஹ்யா பின்
முயீன் குறிப்பிடுகிறார்கள். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ, அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் உண்மையில் நல்லவர் எனினும்
இவரிடம் பிரச்சனைகள் உள்ளன என்று இமாம் புகாரீ கூறியுள்ளார்கள். உகைலீ அவர்கள் இவரை
பலவீனமாக்கியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:
6, பக்கம்: 259)
மேலும் இச்செய்தியில் இடம் பெறும் அல் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் கடுமையாக
விமர்சிக்கப்பட்டவர்.
அல்ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பொய்யர்களில் ஒருவர் என்று அல்லாஹ்வின்
மீது சத்தியமிட்டு கூறுகிறார் ஷஅபீ அவர்கள்.
(நூல்: அஹ்வாலுர் ரிஜால், பாகம்: 1, பக்கம்: 43)
ஹாரிஸ் என்பவர் அலீ (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸ்களில் உண்மையாளராக
இருக்கவில்லை என்று முகீரா குறிபிடுகிறார், பொய்யர் என்று
இப்னுல் மதீனீ குறிப்பிடுகிறார். பலவீனமானவர் என்று இப்னு முயீன், தாரகுத்னீ ஆகியோர் கூறுகிறார்கள். பலம் வாய்ந்தவர் இல்லை என்று
இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். அலீ (ரலி) அவர்கள் தொடர்பாக இச்சமுதாயத்தில் இவரைப்
போன்று வேறு எவரும் பொய் சொன்னதில்லை என்ற ஷஅபீ குறிப்பிடுகிறார். இவர் அலீ (ரலி) அவர்கள்
தொடர்பாக கூறும் பெரும்பாலான செய்திகள் பொய்யானதாகும் என்று இப்னு ஸீரீன் குறிப்பிடுகிறார்.
(நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்: 2, பக்கம்: 172)
இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று அபூஸுர்ஆ குறிப்பிடுகிறார்.
வலிமை வாய்ந்தவர் இல்லை என்று அபூ ஹாத்தம் குறிப்பிடுகிறார்கள். ஹாரிஸ் பெரும்பாலும்
சியா கொள்கை கொண்டவர்; ஹதீஸ் துறையில் பலவீனமானவர்
என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 2, பக்கம்: 127)
ஏழாவது சான்று
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் உணவருந்திவிட்டு, "நான் குளித்துக் கொள்வதற்காக என்னை மறைத்துக் கொள்'' என்றார்கள். அதற்கு நான் "நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக
இருக்கிறீர்களா?''
என்றேன். ஆம் என்றார்கள். இவ்விசயத்தை உமர் (ரலி) அவர்களிடம்
தெரிவித்தேன். (இதைக் கேட்டவுடன்)அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இவர் நீங்கள் குளிப்பு கடமையான நிலையில் சாப்பிட்டதாகக் கூறுகிறாரே
என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "ஆம் நான் உளூச் செய்து சாப்பிட்டேன். குடித்தேன்.
எனினும் குளிக்கும் வரை (குர்ஆனை) ஓதவில்லை'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல் காஃபிகீ (ரலி),
நூல்: தாரகுத்னீ (421)
இதே கருத்து தாரகுத்னியில் 422வது
செய்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தப்ரானியின் அல் முஃஜமுல் கபீர்
(பாகம்: 19, பக்கம்: 295) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்செய்தியில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலவீனமானவர்.
இவரைப் பற்றிய விமர்சனங்களைப் பல இடங்களில் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
எட்டாவது சான்று
நாங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருக்கும் நிலையில் எங்களில்
ஒருவர் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: தாரகுத்னீ (424)
இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் ஸம்ஆ பின்
ஸாலிஹ் என்பவர் பலவீனமானவராவார்.
ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் வலிமை வாய்ந்தவர் இல்லை. மேலும் ஸுஹ்ரீ
வழியாக ஏராளமான தவறுகளை செய்துள்ளார் என்று இமாம் நஸயீ குறிப்பிட்டுள்ளார்
(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 43)
அபூஸுர்ஆ, அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர்
என்று குறிப்பிட்டுள்ளனர்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:
3, பக்கம்: 119)
ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் நல்ல மனிதர் எனினும் சந்தேகத்துடன்
அறிவிப்பவர். ஆனால் அதை அறிய மாட்டார். தவறிழைப்பார். அதை விளங்க மாட்டார். (இதனால்
இறுதியில் அவர் அறிவிக்கும்) ஹதீஸில் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகள்
மிகைத்தன. அப்துர் ரஹ்மான் அவர்கள் இவரிடமிருந்து அறிவித்து வந்தார். பின்னர் (இவரின்
தவறின் காரணமாக அறிவிப்பதை) விட்டு விட்டார் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். நான்
யஃஹா பின் மயீன் அவர்களிடம் ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவரை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் பலவீனமானவர் என்று பதிலளித்ததாக ஜஃபர் பின்
அபான் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: மஜ்ரூஹீன், பாகம்: 1, பக்கம்: 312)
ஒன்பதாவது சான்று
மாதவிடாய் ஏற்பட்டவர்கள், குளிப்பு
கடமையானவர்கள்,
பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் எவரும் குர்ஆனை ஓதக் கூடாது.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: தாரகுத்னீ (428)
இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் யஹ்யா பின்
அபீ உனைஸா என்பவர் பலவீனமானவர்.
யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று
இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 109)
யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் (ஹதீஸ் அறிவிப்பதற்கு) தகுதி வாய்ந்தவர்
இல்லை என்று இமாம் புகாரீ குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்லுஅஃபுஸ் ஸகீர் பாகம்: 1. பக்கம்: 118)
இவர் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றக் கூடியவர். நபித்தோழர்கள்
விடுபட்டு அறிவிக்கப்பட்ட செய்திகளை (இவராக) நபித்தோழர்களுடன் அறிவிப்பார். இவர் உருவாக்கியதை
ஆரம்ப நிலையில் உள்ளவன் கேள்விப்பட்டால் இது
உருவாக்கப்பட்டது என்று ஐயம் கொள்ள மாட்டான். எந்த நிலையிலும் இவரை ஆதாரமாக எடுத்துக்
கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யஹ்யா பின் அபீ உனைஸாவின் சகோதரர் ஸைத், "என்னுடைய சகோதரரிடமிருந்து (ஹதீஸ்களை) எழுதிக் கொள்ளாதீர்கள்.
ஏனெனில் அவர் பொய்யர்'' என்று கூறியதாக உபைதுல்லாஹ்
பின் அம்ர் குறிப்பிடுகிறார்.
(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 3, பக்கம்: 110)
இதே செய்தியை பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களும் அந்த ஹதீஸின்
இறுதியில் யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையின்றி குர்ஆனை ஓதக்கூடாது என்று வாதிடுபவர்களின் சான்றுகளைப்
பார்த்தோம். அதில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே குர்ஆனை தூய்மையின்றி ஓதக்
கூடாது என்று கூறுவதற்கு எந்த நியாயமும் இல்லை. இப்போது தூய்மையற்ற நிலையில் திருக்குர்ஆனை
ஓதலாம் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.
தூய்மையின்றி குர்ஆனை ஓதலாம் என்பதற்கான ஆதாரங்கள்
நபி (ஸல்) அவர்கள், அன்றைய காலத்தில்
இருந்த சில மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தில்
திருக்குர்ஆன் வசனங்களையும் எழுதியனுப்பினார்கள்.
ரோமாபுரி மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம்
ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார் ரோமாபுரிச்
சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது, நேர்வழியைப்
பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக நிற்க. இஸ்லாத்தைத் தழுவாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீர்
இஸ்லாத்தை ஏற்பீராக, நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்.
அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால்
(உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக்
கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு
வாருங்கள்!''
எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள்
என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி
விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64) என்று எழுதப்பட்டிருந்தது.
(நூல்: புகாரீ 7)
திருக்குர்ஆனைத் தூய்மையின்றி தொடக்கூடாது, ஓதக்கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்காத
ரோமாபுரி மன்னருக்கு எப்படி திருக்குர்ஆன் வசனத்தை எழுதியிருப்பார்கள்? இஸ்லாத்தை ஏற்காதவர்கள் இஸ்லாம் கூறும் முறைப்படி தூய்மையாக
இருப்பார்களா?
இஸ்லாத்தை ஏற்காத ரோமாபுரி மன்னர் அவ்வசனத்தைப் படிக்கவேண்டும், அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நபி (ஸல்)
அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதியிருப்பது எல்லோரும் திருக்குர்ஆன் வசனங்களை எல்லா
நேரங்களிலும் ஓதலாம் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.
நாம் எடுத்து வைக்கும் இக்கேள்விக்கு சிலர் விந்தையான விளக்கத்தைக்
கூறுகின்றனர். நபி (ஸல்) குறிப்பிட்டது ஒரு வசனத்தைத் தான், முழுக் குர்ஆனையும் அல்ல என்கின்றனர்.
திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனமும் அல்லாஹ்வின் வார்த்தைகளே!
இதில் தனி வசனத்திற்கு ஒரு சட்டம் முழுக் குர்ஆனுக்கு ஒரு சட்டம் என்று பிரித்துப்
பார்க்க முடியாது. அவ்வாறு பிரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
மேலும் எந்த வசனத்தைக் கொண்டு திருக்குர்ஆனைத் தூய்மையின்றி
தொடக்கூடாது என்கிறார்களோ அந்த (56:79) வசனம் இறக்கப்பட்ட போது
முழுக் குர்ஆனும் இறங்கவில்லை. அப்போதும் அவற்றைக் குர்ஆன் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
முதன் முதலில் இறங்கிய அலக் அத்தியாயத்தின் ஐந்து வசனங்களையும் குர்ஆன் என்றே குறிப்பிடப்பட்டது.
எனவே இவ்வாதமும் சரியில்லை.
இரண்டாவது ஆதாரம்
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப்
பகுதியில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள். பிறகு, வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய
மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும்
பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப்
படைக்கவில்லை;
நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக்
காப்பாயாக!"
(அல்குர்ஆன் 3:190, 191)
ஆகிய வசனங்களை ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குள் திரும்பி வந்து
பல் துலக்கி உளூச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் எழுந்து (வீட்டிற்கு)
வெளியே சென்று வானத்தைப் பார்த்தபடி,
வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய
மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும்
பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப்
படைக்கவில்லை;
நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக்
காப்பாயாக!"
(அல்குர்ஆன் 3:190, 191)
ஆகிய வசனங்களை ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து பல் துலக்கி
உளூச் செய்து நின்று தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் (376)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிய பின் எழுந்து 3:190,191 ஆகிய வசனங்களை உளூச் செய்யாமல் ஓதுகிறார்கள். பின்னர் தான்
உளூச் செய்து விட்டு தொழுகிறார்கள். திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்குத் தூய்மை அவசியம்
என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அவ்வசனங்களை ஓதியிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாததிலிருந்து திருக்குர்ஆன் வசனங்களை தூய்மையின்றி ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்களே முன்னுதாரணமாகத்
திகழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
(அல்குர்ஆன் 47:24)
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான
முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் 4:82)
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர்
உண்டா?
(அல்குர்ஆன் 54:17)
இவ்வசங்களைக் கவனித்தால் உலக மாந்தர்கள் அனைவரும் எந்நிலையிலும் திருமறைக் குர்ஆனை ஓதலாம் என்பதை ஐயமின்றி விளங்கலாம்.
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர்
உண்டா? ஆகிய வாசகங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களை மட்டும் பார்த்துப் பேசும்
வசனங்கள் இல்லை. தெளிவாகச் சொன்னால் இது இஸ்லாத்தை
ஏற்காதவர்களைப் பார்த்தே பேசுகிறது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வசனம் இறக்கப்பட்டது.
அப்போது நபித்தோழர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்து இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். மக்காவில்
இணை வைப்பவர்கள் தான் திருக்குர்ஆனை மறுத்தார்கள். அப்போது இவ்வசனம் இறக்கப்பட்டதால்
இது இஸ்லாத்தை ஏற்காதவர்களைப் பார்த்தே பேசுகிறது என்றே நாம் முடிக்கு வரமுடியும்.
ஓரிறைக் கொள்கையை ஏற்காதவர்கள் இந்தக் குர்ஆனை நன்றாகப் படித்து
இதில் குறைபாடுகள் உள்ளதா? கருத்து மோதல்கள் உள்ளதா? முரண்பட்ட சட்டங்கள் உள்ளதா? மனிதனால்
இது போன்ற வாசனங்களைக் கொண்டு வர முடியுமா? என்று சிந்தித்துப்
பார்த்து இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தூய்மையான நிலையில் இருக்க மாட்டார்கள், உளூச் செய்தும் இருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் உளூச் செய்திருந்தாலும்
அது ஏற்றுக் கொள்ளப்படாது. ஏனெனில் அவர்களிடம் இறை நம்பிக்கை இல்லை.
இந்நிலையில் அவர்களைப் பார்த்து நீங்கள் இஸ்லாத்தை ஏற்று, தூய்மையான நிலையில் இக்குர்ஆனைச் சிந்தித்துப் பாருங்கள் என்றால்
அவர்கள் அதை ஏற்பார்களா? படித்துப் பார்த்துவிட்டுத்
தான் அது சரியா?
அல்லது தவறா? என்பதை விளங்கி
இஸ்லாத்தை ஏற்க முடியும். இந்நிலையில் அல்லாஹ் திருக்குர்ஆனைச் சிந்திக்கச் சொல்வதும்
படிப்பினை பெறச் சொல்வதும் யாரும் எந்நிலையிலும் திருமறைக் குர்ஆனை ஓதலாம் என்பதைத்
தெளிவுபடுத்துகிறது.
EGATHUVAM MAY 2013