May 14, 2017

சுத்தம் ஏன்றால் சும்மாவா?

சுத்தம் ஏன்றால் சும்மாவா?

கடந்த நவம்பர் 19ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகக் கழிப்பறை தினமாக அறிவித்தது. இதன் மூலமாக மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இப்படி அறிவித்துள்ளது.

உலக மகளிர் தினம், குழந்தைகள் தினம், முதியோர் தினம், நீரிழிவு தினம், இருதய நோய் தினம் என்றெல்லாம் அறிவிப்பதால், அனுஷ்டிப்பதால் மக்களிடம் மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் இந்த நினைவு தினங்கள் அனுஷ்டிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடு கிடையாது. மாற்றம் என்பது மனதளவில் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் அதில் எந்தவிதப் பயனும் இல்லை. இந்த அடிப்படையில் உலகக் கழிப்பறை தினம் கொண்டாடுவதால் மட்டுமே சுகாதார விழிப்புணர்வு ஏற்பட்டுவிடாது.

இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பற்றி உலக வங்கி வெளியிட்ட அறிக்கை அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியானது. தி இந்து தமிழ் நாளேட்டில் வெளியான அந்தச் செய்தி இது தான்.

சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை...

இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது,

அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப் பெற்ற குழந்தைகள் தங்களின் 6-ம் வயதில் எண்களையும் எழுத்துகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியக் குழந்தைகள் உயரம் குறைவாக உள்ளனர். அதேநேரம் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையில் வாடும் குழந்தைகள், இந்திய குழந்தைகளைவிட உயரமாக உள்ளனர். சகாரா பகுதி ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 5 வயது சிறுமிகளைவிட இந்திய சிறுமிகள் 0.7 செ.மீட்டர் உயரம் குறைவாக உள்ளனர். இந்த முரண்பாட்டை 'ஆசிய புதிர்' என்றுதான் கூற வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சுகாதாரக் குறைவு மிக முக்கிய காரணியாக உள்ளது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பான் கி - மூன் யோசனை...

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: உலகில் 250 கோடி பேருக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கழிப்பறை இல்லை. இதை கருத்தில் கொண்டு முதல்முறையாக கழிப்பறை தினத்தை ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

'போதிய கழிப்பறை வசதி இல்லாததால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உள்பட்ட 8 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர்.

உலகளாவிய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண 2025-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கழிப்பறை வசதி கிடைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மார்ச் 14, 2012 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு கணக்கெடுப்பு விபரம் வெளியானது. 2011ஆம் ஆண்டுக்கான அந்தக் கணக்கெடுப்பு மக்கள் தொகை பற்றியது மட்டுமல்லாது அவர்களின் வீடுகள் பெற்றிருக்கின்ற வசதி வாய்ப்புகளையும் கணக்கெடுத்திருந்தது.

இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் செல்போன்கள் இருக்கின்றன. ஆனால் கழிப்பறைகள் இல்லை என்று அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற இதழ் இது தொடர்பாக ஒரு புள்ளி விபரத்தைத் தருகின்றது. பத்து கோடி பேர் வாழ்கின்ற மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 சதவிகிதம் பேர் செல்போன்கள் வைத்திருக்கின்றனர். 60 சதவிகிதம் பேர் டி.வி. வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் பாதிப் பேர் கழிப்பறைகள் வைத்திருக்கவிலலை என்று அந்தப் பத்திரிகை குறிப்பிடுகின்றது.

நிலைகெடாத வளைகுடா

இங்கு தான் இந்தியாவும், உலகிலுள்ள இதர நாடுகளும் முஸ்லிம்கள் வாழ்கின்ற வளைகுடா நாடுகளை சற்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

அங்கு யாரும் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதைப் பார்க்க முடியாது. மக்கள் நடமாடும் பாதைகள், மர நிழல்கள், பொது இடங்களில் கூட ஒருவர் மலஜலம் கழிப்பதைக் காண முடியாது. அப்படி யாராவது மலஜலம் கழிப்பதைப் பார்த்தால் நிச்சயமாக அவர் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவராகத் தான் இருப்பார்.

வளைகுடா நாடுகள் பொருளாதாரச் செழிப்பில் உள்ளன. அதனால் அவர்களிடம் கழிப்பிட வசதிகள் உள்ளன என்று இதற்குக் காரணம் கூறலாம். வளைகுடா நாடுகள் மட்டுமல்ல, இதர நாடுகளிலும் இஸ்லாத்தை சரியாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் கண்ட இடத்திலும் மலஜலம் கழிப்பதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் இந்த அநாகரிகக் காரியங்களில் ஈடுபடுவதற்குக் காரணம் இங்குள்ள கலாச்சாரச் சீரழிவாகும்.

முஸ்லிம் நாடுகளில் பொது இடங்களில் யாரும் மலஜலம் கழிப்பதில்லை. காரணம் அங்கு உள்ள ஒவ்வொரு பள்ளிவாசலிலும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை. இருப்பினும் அது தொற்றுநோயை வரவழைக்கின்றது எனும் போது திருக்குர்ஆன் பொதுவான ஒரு தடையை விதிக்கின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் அதைப் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை மனதளவில் இதுபோன்ற தூய்மைக்கும் துப்புரவுக்கும் பயிற்சி கொடுத்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள்.

அதற்கு, "மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 397

இன்று அதிகாலையில் ரயில்வே பாதைகளிலும் சாலையோரங்களிலும் ஆண்களும் பெண்களும் மலம் கழிக்க ஒதுங்குவதைப் பார்க்கிறோம். இதற்காக அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் வெட்கத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையே.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெட்கத்திற்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த மனப்பக்குவத்தின் அடிப்படையில் தான் பெரும்பாலான முஸ்லிம்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதில்லை. அவர்களிடம் இந்த மனப்பக்குவம் ஏற்படுவதற்கு இந்த மார்க்கம் தான் காரணமாகும்.

இன்று அரசாங்கமே கழிவறைக்கு மானியம் வழங்குகின்றது. அதைப் பயன்படுத்தி கழிவறை கட்ட மக்கள் முன்வருவதில்லை.

செல்போன்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழிப்பறைகளுக்குக் கொடுப்பதில்லை என்பதை மேற்கண்ட அறிக்கைகளும் புள்ளிவிபரங்களும் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் மனப்பயிற்சி இல்லாதது தான். இஸ்லாம் இதில் வெற்றி கண்டுள்ளது. அதைத் தழுவிக் கொண்டால் தான் இந்தியாவின் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுதலையும் விமோச்சனமும் கிடைக்கும்.

அரசு, பொதுக் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுக்கின்றது. மக்கள் அவற்றையும் பயன்படுத்துவதில்லை. இதற்குத் தேவை மனமாற்றம் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

இங்கு சுத்தம் சும்மா வருவதில்லை. அதற்கென்று மாபெரும் புரட்சி தேவைப்படுகின்றது. அந்தப் புரட்சியை நிறைவேற்றுவதற்கு இஸ்லாம் ஒன்று தான் வழியாகும். இஸ்லாம் மனிதனுக்கு இயைந்த ஓர் இயற்கை மார்க்கமாகும். இதைத் தான் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.


இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)

EGATHUVAM DEC 2013