May 14, 2017

இணை கற்பித்தல் 17 - அற்புதங்களும் அல்லாஹ்வின் தூதரும்

இணை கற்பித்தல் 17 - அற்புதங்களும் அல்லாஹ்வின் தூதரும்

தொடர்: 17



உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு ஒரு கூட்டம் நபியவர்களிடத்தில் வந்து, நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் சில அதிசயங்களை, அற்புதங்களை எங்களுக்குச் செய்து காட்ட வேண்டும். நாங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம். அவற்றில் எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். ஏதாவது ஒன்றைச் செய்து காட்டினால் போதும் என்று கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக இதைக் கேட்கவில்லை. விதாண்டாவாதத்திற்காகத் தான் இதைக் கேட்கிறார்கள். இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

"இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தை துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) "என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

"மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?'' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

"பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்'' என்பதைக் கூறுவீராக!

"எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்'' என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன். 17:90-96

இந்த வசனங்கள் நபியவர்களும் மனிதர் தான். அவர்களுக்கு எந்த ஆற்றலும், அதிகாரமும் இல்லை. அவர்களால் நினைத்ததையெல்லாம் உண்டாக்க, உருவாக்க முடியாது. இறைவன் நாடினால் மட்டுமே அவற்றைச் செய்ய முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.

ஆனால் அவ்லியாக்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். அவர்களுக்கு எல்லா விதமான சக்தியும் ஆற்றலும் இருக்கின்றது. அவர்கள் அற்புதங்கள் நிறைந்தவர்கள் என்றெல்லாம் நாம் நினைத்து வைத்திருக்கிறோம். அவ்வாறு அவ்லியாக்களுக்கு, மகான்களுக்கு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினால் இறைவனைப் பற்றி, அவனுடைய வல்லமையைப் பற்றி நம்பாதவர்களாக நாம் ஆகிவிடுவோம். அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையும் நம்பாதவர்களாக ஆகி விடுவோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய பிள்ளைகள் விஷயத்தில் தான் தன்னுடைய அதிகமான பவரை - சக்தியைப் பயன்படுத்துவான். நம்முடைய பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையென்றால் நாம் அதிகமாகச் செலவிடுவோம். வேறு யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால் கூட நாம் அவ்வளவு செலவிட மாட்டோம். ஆனால் தன்னுடைய பிள்ளைக்கு என்றால், செலவழித்தால் தான் பிள்ளையைக் காப்பாற்ற முடியும் என்றால் தன்னுடைய வீட்டை விற்றும் செலவழிப்பான். கடன் வாங்குவான். அந்தப் பிள்ளை குணமடைவதற்காக என்னென்ன பிரார்த்தனைகள் இருக்கிறதோ, என்னென்ன நேர்ச்சைகள் இருக்கிறதோ என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையும் செய்வான். இப்படித்தான் மனிதர்கள் எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறோம். அதுபோன்ற ஒரு சம்பவம் நபியவர்களுடைய வாழ்க்கையிலும் ஏற்படுகிறது.

நபியவர்களுக்கு இப்ராஹீம் என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை பிறந்து, தவழ்ந்து பால் குடித்துக் கொண்டிருக்கும் பருவத்தில் உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. அந்தக் குழந்தை மரணத் தருவாயில் மூச்சு வாங்கிக் கொண்டு துடிக்கிறது. அதைப் பார்த்த நபியவர்களுடைய கண்கள் கண்ணீரைச் சுரக்கின்றன. நபியவர்களின் கண் முன்னே அந்தக் குழந்தையின் உயிர் பிரிகிறது. அந்தக் குழந்தையின் உயிரை நபியவர்களால் காப்பாற்ற முடிந்ததா? அவர்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்ததா?

இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பின்வருமாறு:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவ்ஃபின் புதல்வரே!'' என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு "கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1303

அவ்லியாக்கள் பெயரைச் சொன்னாலே குணமாகிவிடும். மவ்லீதை ஓதினால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும். ஸலவாத்துன் நாரியா ஓதினால் நோய்கள் தீர்ந்துவிடும். நபிகள் நாயகம் நோயாளியைக் கண்ணால் பார்த்தாலே அவருடைய நோய் குணமாகிவிடும். இப்படியெல்லாம் மவ்லீது பாடல்களிலும், மீலாது விழா மேடைகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இதைச் சொல்வது கிடையாது. நபியவர்களுக்கு இப்படிப்பட்ட தன்மைகள் இருக்கின்றன என்று சொல்லி இதைப் போன்று அப்துல் காதர் ஜீலானிக்கும் இருக்கின்றது. ஷாகுல் ஹமீது பாதுஷா, ஏர்வாடி பாதுஷா போன்றவர்களுக்கும் இந்த ஆற்றல் இருக்கின்றது என்று சொல்வதற்காகத் தான்.

ஆக, நாம் இந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் அல்லாஹ்விற்குரிய தன்மைகளை, தகுதிகளை, அதிகாரத்தை வேறு எவருக்கும் நாம் கொடுத்துவிடக் கூடாது. அவ்வாறு நாம் அல்லாஹ்விற்குரிய தன்மைகளை நபியவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு மற்ற எல்லாருக்கும் கொடுத்து விடுவோம்.

ஷைத்தான் நம்மை இதிலிருந்து தான் வழிகெடுப்பான். நபியவர்களுக்குப் பல சிறப்புகள் இருக்கின்றது. பல அந்தஸ்துகள் இருக்கின்றது. அவர்களுடைய புகழ், தகுதி, அவர்களுடைய தியாகம், வீரம் இதைச் சொல்லித் தான் வழிகெடுப்பான்.

தன்னுடைய மகனுக்கு அல்லாஹ் விதித்த மரணத்தையே நபியவர்களால் தடுக்க முடியவில்லையென்றால் இன்று அவர்களிடம், "நபியே நீங்கள் பார்த்தாலே எங்களுடைய நோய்கள் துன்பங்கள் நீங்கிவிடும்' என்று மவ்லீது புத்தகத்தை வைத்து கொண்டு பாட்டு படிக்கிறார்கள். நபியவர்களால் எவ்வாறு துன்பத்தைப் போக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

அவ்லியாக்களின் பெயரால் கட்டுக்கதைகள்

இன்றைய முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அவ்லியாக்களைப் பற்றிய எண்ணம் வைத்திருக்கிறார்கள்?

அப்துல் காதர் ஜீலானியிடம் ஒரு பெண்மனி வந்து தனது மகனின் பெயரைச் சொல்லி, தன்னுடைய மகன் இறந்து விட்டார் என்று வருத்தத்துடன் சொல்லி அழுகின்றார். அதற்கு அப்துல் காதர் ஜீலானி அந்தப் பெண்ணிடம், உன்னுடைய மகன் எப்பொழுது இறந்து போனார் என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மனி, "இரவில் மவுத்தானார்' என்று விடையளித்தார்.

அப்பொழுது அப்துல் காதர் ஜீலானி அவர்கள் தனது தலைக்கு மேலே எட்டிப்பார்த்தார். மலக்குல் மவ்த் அன்றைய தினம் யாரெல்லாம் இறந்து போனார்களோ அவர்களை ஒரு கூடையில் வைத்து வானத்திற்கு எடுத்துச் சென்றதைப் பார்த்தார். உடனே அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அந்த மலக்கிடம் அந்தப் பெண்மனி சொன்ன பெயர் உள்ள மனிதரை மட்டும் இறக்கிவிடும் படி கட்டளையிட்டார்.

அதற்கு அந்த மலக்குல் மவ்த் அதெல்லாம் முடியாது. நான் அல்லாஹ்வுடைய கட்டளையின் படிதான் நடப்பேன் என்று மறுத்து விட்டார். அதற்கு அப்துல் காதர் ஜீலானி தன்னிடம் வைத்திருந்த பாசக்கயிற்றை எடுத்து வீசினாராம். அது மலக்குல் மவ்த்தின் காலில் சிக்கிக் கொண்டதாம். உடனே அந்த மலக்குல் மவ்த் தடுமாற்றத்தால் கூடையை விட்டு விட்டாராம். கூடை கவிழ்ந்து அதில் இருந்த, இறந்து போன அனைவரும் உயிர் பிழைத்தார்களாம். பிரிந்து சென்ற உயிர் மீண்டும் அவர்களிடம் வந்து சேர்ந்து கொண்டதாம். இதுதான் அந்தக் கதை.

அவ்லியாக்கள் என்ற பெயரில் எழுதி வைத்திருக்கின்ற இந்த மாதிரியான கதைகளையும், புராணங்களை மிஞ்சுகின்ற அளவுக்குக் கிறுக்குத்தனமான இந்த கட்டுக்கதைகளையும் நம்முடைய முஸ்லிம்கள் இன்றளவும் உண்மையாக நம்புகிறார்கள் என்றால் இது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்.

அல்லாஹ்வுடைய தூதருக்கே அவருடைய மகனுடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆற்றல் தனக்கு இல்லையென்று சொல்வதற்குத்தான் அவர்களை நபியாக அனுப்பினான். அத்தகைய தூய்மையான சிந்தனையைத் தூண்டக் கூடிய மார்க்கத்தில் இப்படி ஒரு கதையா? இந்தக் கதையைச் சொன்னால் ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா? இதைக் கேட்டால் நமக்கு கோபம் தானே வர வேண்டும்.

அல்லாஹ்வுடன் விளையாடுகிறீர்களா? அல்லாஹ்வை கிள்ளுக்கீரையாக ஆக்கப் பார்க்கிறீர்களா? இந்த அபத்தக் கதைகளை அல்லாஹ்வின் ஆலயத்திலேயே மக்களுக்குச் சொல்கிறீர்களே என்று நமக்குக் கோபம் வர வேண்டாமா? இதையெல்லாம் பார்க்கும் போது இவர்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்:

நபியவர்களுடைய மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்களுடைய மகன் (அதாவது நபியவர்களுடைய பேரன்) மதீனாவில் இருக்கும் போது கடுமையான நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் இருக்கிறார். எனவே நீங்கள் அவசரமாக வரவேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் ஜைனப் (ரலி) ஆள் அனுப்புகிறார்கள். ஆனால் இந்தச் செய்தி நபியவர்களுக்கு வந்தடைந்த பிறகும் அவர்கள் தமது பேரனைப் பார்ப்பதற்குச் செல்லவில்லை.

உசாமா பின் ஸைத் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்-ரலி) தம் மகன் மரணத் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, "எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!'' என்றும் கூறி அனுப்பினர்கள்.

அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப் போன பழைய தோல் துருத்தியைப் போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன.

"அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?'' என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள, "இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் விதைத்த இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.

நூல்: புகாரி 1284

மேலும் இந்த ஹதீஸ் புகாரி 1204, 5223, 6163, 6829 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கடைசியாக அவர்களுடைய பேரன் இறந்து விடுகின்றார். அவர்களுடைய பேரன் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே வேதனைப்பட்டு மரணமடைகிறார்கள். அதை அவர்களால் தடுக்க முடிந்ததா? அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்ட வேதனையைப் போக்க முடிந்ததா? அந்தச் சிறுவனை வேதனை இல்லாமல் மரணிக்கும்படி செய்ய முடிந்ததா?

அனைத்தையும் பார்த்துக் கொண்டு அவர்களால் கண்ணீர் தான் சிந்த முடிந்தது. அவன் நேரத்தை நிர்ணயித்து விட்டால் நாம் தடுக்கவா முடியும் என்று சொல்லி ஆறுதல் தான் படுத்த முடிந்தது.

உலகத்தில் எத்தனையோ மனிதர்களுக்கு மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று கொடுத்திருக்க நபியவர்களுக்கு மட்டும் ஏன் இத்தகைய சோதனையைக் கொடுக்கிறான்? அவர்களைத் தண்டிப்பதற்காகவா? இல்லை. இறைவனாகிய நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காகத்தான்.

"நான் நினைத்தால் எதையும் செய்வேன். நபிமார்கள் அனைவரும் மனிதர்கள்; என்னுடைய அடிமைகள்; ஆனால் சிறந்த அடிமைகள். அவ்வளவு தானே தவிர அவர்கள் கடவுள் கிடையாது. கடவுளுக்குரிய அந்தஸ்து அதிகாரம் எதுவும் கிடையாது' என்பதை உணர்த்துவதற்காகத் தான்.

அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்சும், பாத்திமா என நான்கு பெண் குழந்தைகளைக் கொடுத்தான். அந்த நான்கு பெண் குழந்தைகளும் பெரியவர்களாக வளர்ந்து ஆளாகி திருமணம் முடித்தார்கள். ஆனால் அதில் பாத்திமாவைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்து விட்டார்கள். அந்த மூன்று பெண் குழந்தைகளும் தன் கண்முன்னே இறந்த போது அவர்களைக் காப்பாற்ற முடிந்ததா?


இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், மகான்கள், அவ்லியாக்கள் நினைத்தால் எதையும் செய்வார்கள் என்ற கதைகள் எல்லாமே பொய்தான். மகான்கள், அவ்லியாக்கள் அனைவரும் மனிதர்கள் தான்.

EGATHUVAM DEC 2013