May 14, 2017

மனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் மறதி

மனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் மறதி

சின்னச் சின்ன விஷயமாக இருந்தாலும், வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் என எதை எடுத்துக் கொண்டாலும் பல சந்தர்ப்பங்களில் நபியவர்களும் மனிதர் தான் என்பதை அல்லாஹ் நிருபித்துக் கொண்டே இருக்கிறான்.

அடுத்தது அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயத்தைக் கூறுவதாக இருந்தால் நபியவர்களின் தொழுகையில் ஏற்பட்ட மறதியைக் குறிப்பிடலாம். நபியவர்கள் ஒருநாள் தொழுது கொண்டிருக்கும் போது நான்கு ரக்அத் தொழுவதற்குப் பதிலாக இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து விடுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

- (இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்து விட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்கüடம், "இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)'' என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, "ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்; (சில நேரங்கüல்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, "உங்கüல் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சிர வணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்யட்டும்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 401

இதுபோன்று மறதி ஏற்பட்ட சம்பவங்கள் ஒன்று இல்லை. பல சம்பவங்கள் நபிகளாருடைய வாழ்க்கையில் நடந்துள்ளன.

இன்றைக்கு தரீக்கா, முரீது, ஷெய்கு போன்றவர்களெல்லாம் ஒரு வாதத்தை வைத்துத் தான் ஏமாற்றுகிறார்கள். நீங்கள் தொழுகிறீர்களே அல்லாஹ்வுக்கு ஈடுபாடாகத் தொழ முடிகிறதா? அந்தப் பக்குவம் உங்களிடம் இருக்கிறதா? என்று நம்மிடம் கேட்பார்கள். அவ்வாறு நீங்கள் இரண்டரக் கலந்து முழு ஈடுபாட்டுடன் தொழ வேண்டுமானால் எங்களை போல ஷெய்கிடம் முரீதாக வேண்டும். நாங்கள் தொழுகையில் தக்பீர் கட்டினால் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்துக் கொண்டே தொழுது கொண்டிருப்போம். வேறு எதுவும் எங்களுடைய சிந்தனைக்கு வராது. மழை பெய்தாலும் தெரியாது. இடி இடித்தாலும் தெரியாது என்று கூறுவார்கள்.

இதைப்போன்று நீங்களும் வர வேண்டுமானால் எங்களிடம் முரீது வாங்கி, திக்ர் செய்து வந்தால் படிப்படியாக இருபது அல்லது முப்பது வருடங்களில் எங்களைப் போன்று ஆகிவிடலாம் என்றெல்லாம் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விடுகின்றனர். தரீக்காவாதிகள் இவ்வாறு நாங்கள் உங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்தப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். ஆனால் அவர்களது உள்ளத்தையே அவர்களால் பக்குவப்படுத்த முடியாது.

யாருக்குமே இது இயலாத காரியம். நாம் தொழுகையில் தக்பீர் கட்டிய பிறகு தான் எல்லா ஞாபகமும் நினைவுக்கு வரும். அது வரைக்கும் எந்தச் செயலும் நினைவுக்கும் வராது. தொழுகையில் மட்டும் தான், அவன் எவ்வளவு தர வேண்டும்? இவன் எவ்வளவு தர வேண்டும்? கடையில் இன்றைக்கு எவ்வளவு வியாபாரம் நடந்தது? என்று பல செயல்கள் நினைவுக்கு வரும்.

சொல்லப் போனால் இவ்வாறு அனைத்து ஞாபகமும் வருவது தான் இந்த மார்க்கம் உண்மையான மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது. கெட்ட சக்தி ஒன்று இருக்கிறது; வணக்க வழிபாடுகளில் நம்மைக் கெடுக்கின்ற ஷைத்தான் ஒருவன் இருக்கின்றான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

ஷைத்தான் இருப்பது உறுதியானால் அல்லாஹ் இருப்பதும் உறுதியாகிவிடும். ஷைத்தான் இருப்பதை நாம் உறுதி செய்து விட்டால் அல்லாஹ் இருப்பதையும் நாம் உறுதி செய்து விடலாம். மற்ற எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நினைவுக்கு வராத காரியங்கள், 10 வருடங்களுக்கு முன்னால் நாம் மறந்த காரியங்களெல்லாம் தொழுகையில் ஈடுபடும் போது மட்டும் தான் நினைவுக்கு வருகின்றது. ஆக எந்த மனிதராலும் ஒன்றிப்போய் இறைவனோடு இரண்டறக் கலந்து தொழ முடியாது. நபிகளாரும் அவ்வாறு தொழுதது இல்லை. அவ்வாறு யாரையும் அல்லாஹ் படைக்கவுமில்லை.

தொழுகையில் அடியான் தன்னுடைய இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான் என்று கூறிய நபியவர்களுக்கே, அதுவும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழுகையிலேயே அவர்களுக்கு எத்தனை தொழுதோம் என்ற மறதி ஏற்பட்டு விடுகின்றது என்றால் இந்தச் சம்பவம் நபியவர்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதர் தான் என்பதை உணர்த்தவில்லையா?

நபியவர்களுக்கே இந்த நிலை என்றால், தொழுகையில் நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்கிறோம்; எங்களுக்கு தொழுகையைத் தவிர வேறொன்றும் தெரியாது; தொழும் போது எங்களை யாரேனும் தாக்கினால் கூட எங்களுக்குத் தெரியாது என்றெல்லாம் கதை விடும் போலி ஷெய்குகளின் நிலையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

மனதை ஒருமுகப்படுத்த முடியுமா?

நபியவர்களுடைய வாழ்க்கையில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், "எனது இந்த கருப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) "அன்பிஜான்' (நகர எüய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது'' என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், "நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 373, 5817

அல்லாஹ்வுடைய தூதராக இருந்தும் கூட ஒருமித்த மனதாக, இரண்டறக் கலந்து முழு ஈடுபாட்டுடன் தொழ முடிந்ததா? அதுவும் தன்னுடைய பலவீனத்தை மறைக்காமல் மக்களிடத்தில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இன்றைக்கு தரீக்காவாதிகள், ஷெய்குகள் என்று சொல்லக்கூடியவர்கள் தங்களுக்குப் பலவீனம் இல்லாதது போல் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எந்த வகையில் உரசிப் பார்த்தாலும் சரி! உண்பது, உறங்குவது, அணிவது, நடப்பது, பேசுவது என எப்படி உரசிப் பார்த்தாலும் மனிதராகத் தான் இருந்தார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகளாக இருக்கின்றன. இன்னும் இது குறித்து ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM DEC 2013