ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும்
உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது
தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட
தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரு சமுதாயத்தினர் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தனர்.
இந்தத் தீமைக்கு எதிராக அனுப்பப்பட்டவர் தான் நபி ஷுஐப் (அலை) ஆவார். அவர்களது பிரச்சாரத்தின்
மையக்கருத்தை கீழ்க்காணும் வசனத்தில் காணலாம்.
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம்.
"என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன்
யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக்
குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்!
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 7:85
ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதுடன் இந்தத் தீமைக்கு
எதிராக அவர்கள் போர் தொடுத்துள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
இன்னொரு சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டுக்
கொண்டிருந்தது. இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க தீமையை எதிர்ப்பதை
முதன்மையாகவும் மையமாகவும் கொண்டு அனுப்பப்பட்டவர் தான் நபி லூத் (அலை) அவர்கள்.
லூத் நபியவர்கள் இப்ராஹீம் நபியின் சம காலத்து நபியாவார். தன்னந்தனியாக
நின்று கொண்டு அம்மக்களிடமிருந்து இந்த மிருகச் செயலை எதிர்த்துப் போர் முழக்கமிட்டார்கள்.
இந்த ஈனச் செயலை, இழிவான காரியத்தைச்
செய்யாதீர்கள் என்று திரும்பத் திரும்ப அந்த மக்களிடம் அறிவுரை வழங்கினார்கள். இந்தக்
காரியத்தைச் செய்தால் இறைவனிடமிருந்து இழிவு தரும் வேதனை வரும் என்று எச்சரித்தார்கள்.
ஆனால் அதை அம்மக்கள் அறவே கண்டுகொள்ளவில்லை. அத்துடன் லூத் நபியைக் கேலியும் கிண்டலும்
செய்தனர்.
"இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான
மனிதர்களாக உள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக
இருந்தது.
அல்குர்ஆன் 7:82
உம்மை ஊரை விட்டு விரட்டுவோம் என்று அவரை மிரட்டினார்கள். உமது
வாதத்தில் உண்மையாளராக இருந்தால் வேதனையைக் கொண்டு வாருங்கள் என்று இறைத்தூதருக்கு
எதிராகச் சவாலும் விட்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.
லூத்தையும் (அனுப்பினோம்). "நீங்கள் வெட்கக்கேடான செயலைச்
செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை'' "சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?'' என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, "நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக
இருக்கவில்லை.
அல்குர்ஆன் 29:28, 29
இந்தக் கட்டத்தில்தான் லூத் நபியவர்களின் வீட்டிற்கு விருந்தாளிகள்
வருகின்றனர். வந்த விருந்தாளிகள் பிரமிக்க வைக்கும் அழகு பிம்பங்களாக இருந்தனர். கட்டழகு
கொண்ட காளையராக இருந்தனர். வசீகரமும் வனப்பும் மிக்க வாலிப வட்டங்களான இந்த விருந்தாளிகளை
அனுபவிப்பதற்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திரண்டு அவர்களை நோக்கி ஓடி வருகின்றனர்.
மட்டற்ற மகிழ்ச்சி அலைகள் கரை புரள, கட்டிளங் காளையரைக்
கொள்ளை கொள்ள,
கூட்டமாய் வந்து குழுமுகின்றனர்.
கண்ணியப்படுத்த வேண்டிய தனது விருந்தாளிகள் களங்கப்படுத்தப்படப்
போகின்றனரே என்று கலங்கிய லூத் நபி கையறு நிலையில் நிற்கின்றார்கள்.
வந்தவர்கள் லூத் நபியின் கண்களுக்கு வெறும் வெளியூர் விருந்தாளிகளாகவே
தெரிகின்றனர். காமுகக் காட்டுமிராண்டிகளுக்கு கவர்ச்சியூட்டும் வேட்டைப் பிராணிகளாகத்
தெரிகின்றனர். இந்தக் காட்சியை திருக்குர்ஆன் நம் கண்களுக்குப் படமாக்குகின்றது.
அவ்வூர்வாசிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர். "இவர்கள் எனது
விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை
இழிவுபடுத்தாதீர்கள்!'' என்று (லூத்) கூறினார்.
"உலகத்தாரை விட்டும் (மற்றவருக்காகப் பரிந்து பேசுவதை விட்டும்) உம்மை நாங்கள்
தடுக்கவில்லையா?''
என்று அவர்கள் கேட்டனர். "நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால்
இதோ எனது புதல்விகள் உள்ளனர்'' என்று அவர் கூறினார். உமது வாழ்நாளின்
மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர்.
அல்குர்ஆன் 15:66-72
இதே சம்பவம் திருக்குர்ஆனில் மற்றோரிடத்திலும் இடம்பெற்றுள்ளது.
நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார்.
"இது மிகவும் கடினமான நாள்'' எனவும் கூறினார். அவரது சமுதாயத்தினர்
அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். "என்
சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்!
உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?'' என்று கேட்டார்.
"உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்!
நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.
அல்குர்ஆன் 11:77-79
"உங்களில் ஒருவர் கூட..'' என்று லூத்
நபி கேட்பது,
அந்த ஊர் எப்படிக் கெட்டுப் போயிருந்தது என்பதை மிகத் தெளிவாகவே
விவரிக்கின்றது. இந்தக் கட்டத்தில் லூத் நபியின் மனிதப் பலவீனமும் இயலாமையும் அவர்களை
அறியாமல் வெளிப்படுகின்றது. அதன் உச்சக்கட்டத்தில் தான் லூத் நபியின் வாயிலிருந்து
இந்த வார்த்தைப் பிரயோகம் வருகின்றது.
"உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11:80
ஆம்! அவர்களுக்கு ஆதரவாக, இந்தக்
காட்டுமிராண்டிகளுக்கு எதிராகத் தோள் கொடுத்து, துணை நிற்க
எவருமில்லை. சொந்த பந்தமும் எதுவுமில்லை. பாதிப்புக்குள்ளான பாதக வேளையில் இந்த உணர்வு
அலைகளைப் பதிகின்றார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இந்த சமயத்தில் அடைக்கலத்திற்கும்
ஆதரவிற்கும் அல்லாஹ்வை அழைத்திருக்க வேண்டும். இதைத் தான் நபி (ஸல்) அவர்கள் மென்மையாக
உணர்த்துகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லூத் (அலை) அவர்களை அல்லாஹ்
மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர்களாயிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 3375
இறைத்தூதர்களும் அவர்களது சமுதாயத்தினரும் நம்பிக்கை இழப்பின்
விளிம்பிற்கு வருகின்ற போது இறை உதவி அரும்பி வரும்.
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது
உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை
விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.
அல்குர்ஆன் 12:110
வந்தவர்கள் வெறும் விருந்தாளிகள் அல்லர்; தூதரைக் காக்கவும் அவரது எதிரிகளைத் தாக்கவும் வந்த வான தூதர்கள்
என்ற உண்மை இப்போது தான் வெளிச்சத்திற்கு வருகின்றது.
"லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே
முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக!
உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும்.
அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்று தூதர்கள் கூறினார்கள்.
அல்குர்ஆன் 11:81
இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும்
விதமாக அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு மலக்குகள் தங்கள் விளையாட்டை ஆரம்பிக்கின்றனர்.
வந்த வானவர்களிடமும் தங்கள் காம வேட்டைகளையும் சேட்டைகளையும்
காட்ட ஆரம்பித்தவர்களின் கண்களை அல்லாஹ் குருடாக்கினான்.
அவருடைய விருந்தினரைத் தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர்.
உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும் எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்!
(என்றோம்)
அல்குர்ஆன் 54:37
இது முதல் தண்டனை. இரண்டாவதாக பெரும் சப்தம், பேரிறைச்சல் அவர்களைப் பிடிக்கின்றது.
அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.
அல்குர்ஆன் 15:83
மூன்றாவதாக, சூடாக்கப்பட்ட
கல்மழை அவர்கள் மீது பொழிகின்றது.
நான்காவது, இயற்கைக்கு எதிராகக் கிளம்பி
தலைகீழாகப் புரண்ட அந்தச் சமுதாயம் வாழ்ந்த ஊரை அல்லாஹ் தலைகீழாகப் புரட்டி விடுகின்றான்.
அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல்மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு
இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையில் தான் உள்ளது.
அல்குர்ஆன் 15:74-76
நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட
கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக்
கீழ்ப்பகுதியாக்கினோம். (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த
இவர்களுக்குத் தொலைவில் இல்லை.
அல்குர்ஆன் 11:82, 83
இறுதியில் லூத் (அலை) அவர்களின் வீட்டைத் தவிர வேறெதையும் விட்டு
வைக்காத அளவிற்கு மலக்குகள் தங்கள் ஆட்டத்தை ஆடித் தீர்த்தனர்.
இதுதான் ஓரினச் சேர்க்கைக்கு, ஓரிறைவன்
கொடுத்த தண்டனையும் நிந்தனையும் ஆகும். மிஞ்சியது இறைத்தூதரின் வீடு மட்டும் தான்.
மற்ற அனைத்தும் அழித்து, சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்தச்
சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய தண்டனையிலிருந்து ஓரினச் சேர்க்கை எனும் பாவத்தின் கோரத்தையும்
கொடூரத்தையும் புரிந்து கொள்ளலாம்.
இந்தச் சாபக்கேட்டையும் சமூகக் கேட்டையும் தான் இன்றைய சமுதாயம்
சட்டமாக்கத் துடிக்கின்றது. இந்த மானக்கேட்டிற்குத் தனிமனித சுதந்திரம் என்ற முத்திரையும்
பொறித்துள்ளனர். இந்த அசிங்கத்தைச் செய்தவனை மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ளவர்களையும், சமூகத்தையும் பாதிக்கும் எய்ட்ஸ் நோயைப் பரப்புவதை தனிமனித சுதந்திரம்
என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய் பரிசாகக் கிடைத்தது இந்தப்
பாவத்தின் காரணமாகத் தான். இதற்குப் பின்னரவாது இந்தச் சமுதாயம் திருந்துமா?
EGATHUVAM JAN 2014