சாதி ஒழிய இஸ்லாமே வழி
கடந்த அக்டோபர் 30, 2012 அன்று
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தின விழா
நடந்தது. தேவர் ஜெயந்தி என்றழைக்கப்படும் இந்த விழாவுக்குச் சென்று விட்டுத் திரும்பிக்
கொண்டிருந்த டாடா சுமோ வாகனம் வழிமறிக்கப்பட்டு கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்படுகின்றன.
அதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைகின்றனர். அதில்
6 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். இது ஒரு கலவரமாக வெடிக்கின்றது.
வழக்கமாக இந்தியாவில் கலவரக் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகத்
திகழ்வது பேருந்துகளில் கல் வீசுவது தான். இந்தக் கலவரத்திலும் பஸ்கள் மீது கற்கள்
வீசப்படுகின்றன. இந்தக் கல்வீச்சில் ஏர்வாடி தர்ஹாவுக்குக் குடும்பத்துடன் வந்த அபூபக்கர்
என்பவர் காயமடைகின்றார். அங்குள்ள தனியார் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை
பலனின்றி மரணமடைகின்றார்.
இந்தக் கலவரத் தீயின் காரணமாக பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படுகின்றது.
இதனால் மக்கள் சொல்ல முடியாத அல்லலுக்கும் அவதிக்கும் உள்ளாயினர்.
ஏற்கனவே செப்டம்பர் 11, 2011 அன்று
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளின் போது பரமக்குடியில் வெடித்த
கலவரத்தில் 6 தலித்துகள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியானார்கள்.
அதற்குப் பதிலடியாகத் தான் தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள டாடா சுமோவில் வந்தவர்கள்
மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதைத் தொடர்ந்தே பரமக்குடியில் மட்டுமல்லாது ராமநாதபுரம், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை
வெடிக்கின்றது.
இந்தக் கலவரத் தீ ஆறி அடங்குவதற்குள்ளாக தர்மபுரியில் மற்றொரு
கலவரத் தீ பற்றிக் கொள்கின்றது.
தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் தலித்துகளுக்குச் சொந்தமான
மூன்று காலனிகள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன.
சாதி இந்துக்கள் 1800 பேர் சர்வசாதாரணமாக
இந்தக் காலனிக்குள் சென்று, சாகவாசமாகக் கொள்ளையடித்து, குடியிருப்புகளைக் கொளுத்தியிருக்கின்றார்கள்.
தாங்கள் தாக்கப்படுவோம் என்று அறிந்த இந்தக் காலனி மக்கள் இரவில்
அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறு செல்லவில்லை என்றால் அவர்களின் உடைமைகளைப்
போன்று உயிர்களும் கொளுத்தப்பட்டிருக்கும்.
இப்படிக் கொடுமையாக உடைமைகளைக் கொள்ளையடிப்பதற்கும் கொளுத்துவதற்கும்
காரணம் என்ன?
நத்தம் காலனியில் வசிக்கின்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன்
என்பவர் செல்லான் கொட்டாயில் வசிக்கும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின்
மகள் திவ்யாவைக் காதல் திருமணம் செய்தது தான் இந்தக் கலவரத்திற்குக் காரணம்.
தன் மகள் ஒரு தாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம்
முடித்ததை தாங்கிக் கொள்ள முடியாத மணப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்கின்றார்.
இந்தக் காதல் எனும் காமத்தீ கலவரத் தீயாக மாறுகின்றது.
இதனைத் தொடர்ந்து விசாரணைகள், நிவாரண
நிதிகள் என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்கின்றன.
இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம், மொழியால் நாம் தமிழர்கள்; அதனால்
ஒன்றுபட வேண்டும் என்று சொன்னார்கள். அதிலும் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்
ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர்
தமிழர் ஒற்றுமையைப் பறைசாற்றுபவர்கள்; அதைத் தூக்கிப்
பிடிப்பவர்கள். இங்கு தமிழ் இவர்களை ஒன்றுபடுத்தவில்லை.
அதுபோன்று பரமக்குடியில் தேவர்களும் தலித்துகளும் தமிழர்கள்
தான். ஆனால் இந்தத் தமிழ் அவர்களை ஒன்றுபடுத்தவில்லை.
இதுபோன்று நாமெல்லாம் இந்தியர் என்று தேசத்தை வைத்து ஒற்றுமை
என்பார்கள்.
கர்நாடகாவுடன் காவிரி நீர் விஷயத்தில், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகம் நடத்தும் போராட்டத்தை
நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தியாவில் தென்னகத்திலுள்ள மூன்று மாநிலங்கள் முட்டி மோதிக்
கொண்டிருக்கின்றன. இது உணர்த்துவது என்ன? மனிதர்களை
மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது.
ஒரே கடவுள் என்ற அடிப்படையிலும், மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா
என்ற ஆண், பெண்ணிடமிருந்து உருவானவர்கள் என்ற அடிப்படையிலும் மட்டுமே ஒன்றுபடுத்த, ஒற்றுமைப்படுத்த முடியும் என மனித குலத்திற்கு வழிகாட்டியாக
வந்த திருக்குர்ஆன் என்ற வேதம் பிரகடனப்படுத்துகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு
பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக்
கிளைகளாகவும்,
கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே
அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
இந்தக் கொள்கையில் ஒன்றிணைந்தவர்கள் தான் முஸ்லிம்கள். இன்று
உலக அளவில் கறுப்பர்கள், வெள்ளையர்கள், பன்னாட்டவர்கள், பன்மொழி பேசுபவர்களை
ஒன்றுபடுத்தும் ஓர் உன்னத நடைமுறை, வாழ்க்கைநெறி
இஸ்லாம் தான்.
தென்மாவட்டங்களில் மட்டுமல்ல! தென்னிந்தியாவில் மட்டுமல்ல! ஒட்டுமொத்த
இந்தியாவிலும் சாதியை ஒழிக்க ஒரு தூயவழி, வாழ்க்கை நெறி
இஸ்லாம் தான்.
EGATHUVAM DEC 2012