அறிவு சூன்யங்களின் அர்த்தமற்ற வாதங்கள்
இஸ்லாத்தின் மூலஆதாரங்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே அடிப்படைகள் தான். அவ்விரண்டைத் தாண்டி வேறெதுவும்
ஆதாரமாகாது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் தங்களைத் தாங்களே சுன்னத் வல்ஜமாஅத் என்று பிதற்றிக் கொள்கின்ற
ஒரு போலி ஜமாஅத்தினர் தங்களது மாதப் பத்திரிகையில் ஒரு கேள்வி பதிலில் குர்ஆனையும்
ஹதீஸையும் தூக்கி எறிந்து விட்டு தங்கள் மனோ இச்சைப்படி அளிக்கின்ற விளக்கத்தைப் பாருங்கள்.
"குத்பியத், அதாவது முஹ்யித்தீன் அவர்களின்
பெயரை ஓதக் கூடாது; அவ்வாறு ஓதினால் ஷிர்க் என்று
ஒரு ஆலிம் கூறுகிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?''
இவ்வாறு ஒருவர் அந்தப் பத்திரிகையில் கேள்வி கேட்கிறார்.
அதற்கு இவர்கள் அளிக்கும் பதில்:
பாத்திஹா சூராவுக்குப் பின் குல்ஹுவல்லாஹு சூரா ஓதி 12 ரக்அத்துகள் தொழுதுவிட்டு பிறகு தனிமையில் எனது பெயரை ஆயிரம்
முறை கூறி அழைத்தால் அவரின் அழைப்புக்கு நான் பதிலளிப்பேன் என்று மகான் கௌதுல் அஃழம்
அவர்கள் கூறியுள்ளார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே குத்புல் அக்தாப்
அவர்களை அழைக்க வழிகாட்டும் குத்பிய்யா எனும் முறையாகும்.
அழைத்தால் வருவார்களா? இல்லையா என்பதற்கு
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டலாகாது. மாறாக அழைத்தால் வருவார்கள் என்பது எனது
கூற்று. ஏனெனில் நாம் நடத்தில் குத்பிய்யாக்களில் மகான் வருகை தந்துள்ளார்கள். அதற்கு
சாட்சி உண்டு. நிரூபணம் செய்ய இயலும். வரமாட்டார்கள் என்று சொல்பவர் நாம் நடத்தும்
குத்பிய்யத்தில் பங்கேற்று மகான் முஹ்யித்தீன் ஆண்டகையைக் கண்டு கொண்டால் அவர் ஒரு
லட்சம் ரூபாய் நமது பணி சிறக்க தந்துதவ வேண்டும். அவ்வாறு காட்சி கிடைக்கவில்லையெனில்
குத்பிய்யத் கூடாது என்று நாமே இதை நமது பத்திரிகையில் வெளியிடுவோம்.
முஹ்யித்தீன் அப்துல் காதிரை அழைத்தால் வருவார் என்பதற்கு இதுதான்
இவர்களின் முதல் ஆதாரமாம்.
"குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டலாகாது.
ஆனால் அழைத்தால் வருவார்கள் என்பது எனது கூற்று''
இந்த வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள். எவ்வளவு விஷத்தை இவர்கள்
திமிராகக் கக்குகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதில் இவர்களின் இறைமறுப்பு
இரண்டு விதமாக வெளிப்படுகின்றது.
ஒன்று, குர்ஆன் ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள
முடியாது என்ற கருத்து. அதாவது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்
ஆதாரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எந்தத் தேவையுமில்லை. எனது மனம் சொல்வது
மார்க்கம் என்று வெளிப்படையாக இந்த நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?
அல்குர்ஆன் 25:43
இந்த வசனத்தின்படி இந்த ஆசாமி தன்னைத் தெளிவான இறைமறுப்பாளன்
என்று பகிரங்க வாக்குமூலம் கொடுக்கின்றார்.
இரண்டாவதாக, அல்லாஹ் திருக்குர்ஆனில்
இறந்தவர்கள் வர மாட்டார்கள் என்று கூறுகின்றான்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என்
இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன்
அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை
உள்ளது.
அல்குர்ஆன் 23:100
இறந்தவர்களுக்கும் உயிருடன் இருப்பவர்களுக்கும் மத்தியில் ஒரு
திரை இருக்கின்றது; அந்தத் திரையைத் தாண்டிக் கொண்டு
இவ்வுலகிற்கு வரமுடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஆனால் இவர்களோ இறந்தவர்கள் வருவார்கள் என்பது எனது கூற்று என்று
அல்லாஹ்வின் கூற்றுக்கு எதிராகச் சவால் விடுகின்றனர். இறை முழக்கத்திற்கு எதிர் முழக்கமிடுகின்றனர்.
அளவு கடந்த அகங்காரத்திலும் ஆணவத்திலும் அல்லாஹ்வுக்கு எதிராகப்
பேசுகின்றனர். இறந்தவர்கள் திரும்ப வருவார்கள் என்று சொல்வது ரஜயிய்யத் எனும் ஷியாக்களின்
கொள்கையாகும். இந்தக் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்றனர் பரேலவிகள்.
ஐயமும் தெளிவும் என்று பதிலளிக்கும் இந்த அனாமதேயம் ஓர் அறிவுசூன்யம்
என்பதற்கும் அரைவேக்காடு என்பதற்கும் ஆதாரமாக, இவர்கள் எடுத்து
வைக்கும் அறிவு கெட்ட வாதத்தைப் பாருங்கள்.
வரமாட்டார்கள் என்று சொல்பவர் நாம் நடத்தும் குத்பிய்யத்தில்
பங்கேற்று மகான் முஹ்யித்தீன் ஆண்டகையைக் கண்டு கொண்டால் அவர் ஒரு லட்சம் ரூபாய் நமது
பணி சிறக்க தந்துதவ வேண்டும்
இந்தச் சவாலும் இறைவனுக்கு எதிராக விடுக்கும் சவால் தான்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப்
போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள்
உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 7:194, 195
எதை அல்லாஹ் முடியாது என்று உறுதியாக மறுக்கின்றானோ அதை இவர்கள்
உறுதியாக வருவார்கள் என்று நம்பிச் சொல்வது மட்டுமல்லாமல் சவாலும் விடுக்கின்றனர்.
சன்மானம் தருவதாகப் பிதற்றுகின்றனர். இந்தப் பரேலவிகளுக்குப் பகிரங்கமாக நாம் மறு சவால்
விடுக்கின்றோம்.
ஒரு லட்சம் என்ன? ஒரு கோடி தருகின்றோம்.
குறுகிய வீட்டுக்குள், கும்மிருட்டுக்குள், கும்மாளமிட்டு, கூப்பாடு போட்டு
உங்கள் கடவுள் முஹ்யித்தீனை அழைத்து, மாவுக் குவியலில்
யாராவது ஒருவர் காலை வைத்து எடுத்து விட்டு இது முஹ்யித்தீனின் கால் என்று கூறி உங்கள்
முட்டாள் பக்தர்களை ஏமாற்றுவது போல் எங்களை ஏமாற்ற முடியாது.
நாங்கள் எங்கள் மக்களுடன் வருகிறோம்; நீங்களும் உங்கள் குருட்டு பக்தர்களுடன் வாருங்கள். திறந்த வெளியில்
பகிரங்கமாக எங்களுக்கு உங்கள் அப்துல் காதிர் ஜீலானி கடவுளைக் காட்டுங்கள். இன்ன தேதியில்
முஹ்யித்தீன் வருகிறார்; வந்து பாருங்கள் என்று பகிரங்கமாக
உங்கள் பத்திரிகையில் தேதியைக் குறிப்பிட்டு எங்களுக்கு அழைப்பு விடுங்கள் பார்ப்போம்.
செத்துப் போன அப்துல் காதிர் ஒருக்காலும் வர மாட்டார் என்று நிரூபித்துக் காட்ட நாங்கள்
தயார்.
இரண்டாவது ஆதாரம்?
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை உஹத் மலையைப் பார்த்து யா உஹத் என்று
அழைத்திருக்கிறார்கள் என்ற தகவல் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
நமக்குத் தெரிந்து இப்படி ஒரு ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெறவில்லை.
முஸ்லிமில்,
நபி (ஸல்) அவர்கள், உஹத் என்று
அழைத்ததாக இல்லை. அதற்குப் பதிலாக ஹிரா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. அதே சமயம் இந்த
ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது
மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த்
தியாகிகளும் உள்ளனர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி 3675, 3686
இதில் உஹதே (யா உஹத்) என்று இடம்பெறாமல், உஹத் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு நபி (ஸல்)
அவர்கள், உஹதே என்று அழைத்திருந்தாலும் உஹத் மலையிடம் உதவி கேட்டு அழைக்கவில்லை
என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் உஹதே என்று கூப்பிட்டதால் நாம் முஹ்யித்தீனே
என்று கூப்பிடலாம் என்று வாதிடுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகும்.
இவர்களுக்குத் தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் இருக்கின்றது என்பதை இதிலிருந்து
தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் உஹதை அழைத்ததாக ஆதாரம் காட்டும் இவர்கள் உஹதையே
உதவிக்கு அழைக்கலாமே! அப்துல் காதிரை நபியவர்கள் அழைக்கவில்லை. உஹதைத் தான் அழைத்துள்ளார்கள்.
அப்படியானால் இருட்டில் அழைப்பதற்கு அப்துல் காதிரை விட உஹத் மலை மேலானதாகும் என்பது
இவர்களின் வாதத்திலிருந்து புலப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் உஹதிடம் பேசியதால் உஹத் மலை செவியேற்கின்றது
என்று இவர்கள் நம்புவதில்லை. ஆனால் செத்துப் போன முஹ்யித்தீன் செவியேற்பார் என்பதற்கு
மட்டும் இதை ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் புரட்டு வாதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) உஹதைக் குறிப்பிட்டுப் பேசுவது இலக்கியமாகச் சொல்லப்பட்டதாகும்.
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு,,, என்று சொன்னால் தென்றல் காற்றுக்குக்
கேட்கும் ஆற்றல் இருக்கின்றது என்று நம்பி யாரும் சொல்வதில்லை. அருள்மிகு ரமளானே வருக
என்று கூறுகின்றனர். இதனால் நாம் சொல்வதை ரமளான் கேட்கிறது என்று அர்த்தமில்லை. இவ்வாறு
பேச்சு வழக்கில் சொல்லப்படுவதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு உஹத் மலையிடம்
பேசுகின்றார்கள்.
மூன்றாவது ஆதாரம்?
"என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக்
காட்டுவாயாக!''
என்று இப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது
உள்ளம் அமைதியுறவே'' என்றார். "நான்கு பறவைகளைப்
பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர்
அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக!
அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்
என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 2:260)
இறந்த பறவைகளை அதன் பெயர் கூறி, மயிலே, புறாவே, கோழியே, காகமே என்று அழைத்ததால் ஷிர்க்கை
எதிர்த்துப் போராடிய இப்ராஹீம் நபி ஷிர்க் வைத்து விட்டார் என்று கூறுவார்களா?
இப்ராஹீம் நபி உதவி தேடும் நோக்கில் அழைக்கவில்லை; அல்லாஹ் அவர்களுக்குக் காட்டிய அற்புதத்தைக் காண, அவனது கட்டளைப்படி அழைத்தார்கள் என பளிச்சென்று தெரியும் இந்த
விஷயத்தை சம்பந்தமில்லாமல் பொருத்துகின்ற இவர்களின் புத்தியை எப்படி மெச்சுவது என்றே
தெரியவில்லை.
இப்ராஹீம் நபி செத்த பறவையை அழைத்துள்ளார்கள். சுலைமான் நபி
உயிருள்ள பறவையை அழைத்துள்ளார்கள். இன்னும் பலவற்றையும் அழைத்துள்ளனர். இவை இறைத்தூதர்
என்ற சிறப்புத் தகுதியின் அடிப்படையில் அழைத்ததாகும்.
இது இறைத்தூதர்களுக்கான சிறப்புத் தகுதி என்று இந்தக் கூறுகெட்டவர்களும்
நினைப்பதால் தான் செத்துப் போன பறவைகளையும் பாம்பையும் பல்லியையும் உஹது மலையையும்
இவர்கள் அழைப்பதில்லை. தாங்கள் எதை நம்பவில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இங்கு அழைப்பவர்கள் உயர்வானவர்களாகவும், அழைக்கப்படுபவர்கள் ஆற்றல் குறைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
இதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதன் மூலம் அப்துல்காதிர் ஜீலானி செத்த பறவையைப் போன்றவர்கள்
என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.
நான்காவது ஆதாரம்?
திருக்குர்ஆனில் யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளான்.
மலைகளை அழைப்பது கூடும் என்று திருமறையும் நபிமொழியும் கூறும்போது திருக்குர்ஆனைச்
சுமக்க மறுத்த மலைகளையே அழைக்க அனுமதியிருக்கும் போது, திருக்குர்ஆனாகவே வாழ்ந்த மாபெரும் இறைநேசச் செல்வரின் பெயர்
கொண்டு அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அல்லாஹ் மலைகளை அழைக்கின்றான்; அழைத்து, செய் என்று கட்டளையிடுகின்றான்.
மலைகள் அல்லாஹ்வின் படைப்பாகும். அவை அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும்.
இது ஓர் அதிகார உத்தரவு.
முஹ்யித்தீனை உதவி கேட்டு அழைக்கும் அழைப்பும் அல்லாஹ்வின் அழைப்பும்
ஒன்றா? ஒருபோதும் ஒன்றாகாது.
வானம், நெருப்பு, மலை உள்ளிட்டவைகளை அல்லாஹ் அழைத்துள்ளான். இங்கே அழைக்கப்படுவது
அற்பமாகவும் அழைப்பவன் உயர்வாகவும் இருக்கும் நிலை உள்ளது. அப்துல் காதிர் எங்களை விட
அற்பமானவர் என்று இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்கள்.
அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும்; அல்லாஹ்வை பின்பற்ற கூடாது. அதாவது அல்லாஹ் செய்வதையெல்லாம்
நானும் செய்வேன் என்று கூறக்கூடாது. அது சாத்தியமும் இல்லை என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு
இல்லை.
அல்லாஹ் அழைப்பதால் நானும் அழைப்பேன் எனக் கூரும் இந்தக் கூறு
கெட்டவர்கள்,
அல்லாஹ் சாப்பிடுவதில்லை என்பதால் நாங்கள் சாப்பிட மாட்டோம்
என்பார்களா?
அல்லாஹ் மலஜலம் கழிப்பதில்லை; எனவே
நாங்களும் மலஜலம் கழிக்க மாட்டோம் என்பார்களா?
அல்லாஹ் தூங்குவதில்லை; அவனுக்கு எந்தப்
பலவீனமும் இல்லை. நாங்களும் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என இந்தக் கபோதிகள் சொல்வார்களா?
அல்லாஹ் சாக மாட்டான். இவர்களும் சாக மாட்டார்களா? இவர்கள் வணங்கும் அப்துல் காதிரே செத்துப் போய் விட்டாரே!
அல்லாஹ் படைப்பவன். இவர்களும் அல்லாஹ்வைப் போல் படைக்கப் போகிறார்களா?
செத்துப் போன அப்துல் காதிரை இதுவரை அல்லாஹ்வுக்கு இணையாக்கி
வந்தனர். இப்போது தங்களையே அல்லாஹ்வுக்கு இணையாக்கி அல்லாஹ் செய்ததை நான் செய்வேன்
எனக் கூறுகின்றனர். இதிலிருந்து இவர்கள் எத்தகைய கேடுகெட்ட கொள்கையில் இருக்கின்றார்கள்
என்பதை விளங்கலாம்.
அத்துடன், திருக்குர்ஆனை மறுத்த மலைகள்
என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் குர்ஆனை அல்லாஹ் மலைக்குக் கொடுத்து அது மறுத்ததாக
இவர்களுக்கு வஹீ வந்ததா என்று தெரியவில்லை. அல்லாஹ் தனது திருமறையில் மலைகள் மறுத்ததாகக்
கூறவில்லை.
இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது
அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக
இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.
(அல்குர்ஆன் 59:21)
குறிப்பு
33:72 வசனத்தில் குர் ஆனை ஏற்க மலைகள் மறுத்ததாக சொல்லப்படவில்லை.
மாறாக அமானித்த்ஹை மறுத்த்தாகத் தான் சொல்லப்பட்டுள்ளது. அந்த அமானிதம் எது என்பதை
அறிய
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/446-manithan-sumantha-amanitham-ethu/
ஐந்தாவது ஆதாரம்?
தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை பல மைல்களுக்கு அப்பாலிருந்து
அம்மனிதரின் பெயர் சொல்லி அழைப்பது கூடும். அவ்வாறு தான் சாரி என்பவர் மலையேறும் போது
பல மைல்களுக்கு அப்பாலிருந்து யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்களின்
குரல் சாரியாவின் காதில் விழுந்தது என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இது பலவீனமான செய்தியாகும். இந்தச் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ
என்பவர் தொகுத்த தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் இமாம் பைஹகீ அவர்களின் அல்இஃதிகாத்
எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப்
போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில்
தன் உரையின் இடையே, "சாரியாவே அந்த மலைக்குள்
செல். சாரியாவே அந்த மலைக்குள் செல்'' எனக் கூறினார்கள்.
போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே
ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து
எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு
வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.
நூல்: தலாயிலுன் நுபுவ்வா 509
இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவையனைத்தும் பலவீனமாகவே
உள்ளன. மேலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் கூத் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இமாம் புகாரி, நஸாயீ, அபூஹாதிம், ஹாகிம், அஹ்மது பின் ஹம்பள், தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 402
அம்ர் பின் ஹாரிஸ் என்ற நபித்தோழர் வழியாகவும் இந்தச் செய்தி
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலில் 514வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்து
லைஸ் பின் சஅத் என்பவர் அறிவிக்கின்றார். லைஸ் நம்பகமானவர் என்றாலும் இவர் அம்ர் பின்
ஹாரிஸ் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.
அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) ஹிஜ்ரீ 51ல் மரணிக்கின்றார். லைஸ் ஹிஜ்ரீ 175ல் மரணிக்கின்றார். அம்ர் (ரலி) அவர்களின் மரணத்துக்கும் லைஸ்
அவர்களின் மரணத்துக்கும் இடையே 124 வருடங்கள் வித்தியாசம் உள்ளது.
இவர் அம்ர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. எனவே
அம்ர் (ரலி) அவர்களுக்கும், லைஸ் அவர்களுக்கும் இடையே குறைந்தது
ஒரு அறிவிப்பாளராவது விடுபட்டு இருப்பார். விடுபட்ட இந்த நபர் யார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? என்பதைப் பற்றி எந்த விபரமும் இல்லை. இதன் காரணத்தால் இந்த அறிவிப்பும்
பலவீனமானதாகும்.
இந்தச் செய்தி முஹம்மது பின் அஜ்லான் என்பவர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலில் 512வது செய்தியாக
இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் முஹம்மத் பின் அஜ்லான் என்ற நபர் இடம் பெற்றுள்ளார்.
இவரின் நினைவாற்றல் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இமாம் ஹாகிம் உட்பட
பலர் இவர் நினைவாற்றல் குறைவுடையவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம்
முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை. இவருடைய
கருத்துக்கு ஏற்றவாறு நம்பகமானவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருந்தால் மட்டுமே இவருடைய செய்திகளைப்
பதிவு செய்வார்கள்.
இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் பலவீனமாக இருப்பதுடன்
இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.
மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி)
அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான
ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது.
இது இணை வைப்பாகும்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும்
அதை அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 6:59)
தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் "உங்களுக்கு என்ன
பதில் அளிக்கப்பட்டது?'' என்று கேட்பான். "எங்களுக்கு
(இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 5:109)
உமர் (ரலி) அவர்களுக்கு இதை இறைவன் அறிவித்துக் கொடுத்திருப்பான்
என்று கூற முடியாது. ஏனென்றால் இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே
கற்றுக் கொடுப்பான். இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள்
மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு
இறைவன் மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.
அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக்
கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச்
செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம்
உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.
அல்குர்ஆன் 72:26
எனவே உமர் (ரலி) அவர்கள் பல மைல் தூரத்துக்கு அப்பாலிருந்து
அழைத்ததாக இடம் பெறும் செய்தி பலவீனமானதும் திருக்குர்ஆனுக்கு முரணானதுமாகும்.
ஆறாவது ஆதாரம்
நாம் யாமுஹ்யித்தீன் என்று அழைத்தால் கவ்துல் அஃலம் அவர்களுக்குக்
கேட்கும் என்பதைப் பின்வரும் சம்பவம் நிரூபிக்கின்றது.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் வாழ்ந்த காலத்தில் வழிப்பறிக் கொள்ளையர்கள்
ஒரு பிரயாணக் கூட்டத்தை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்பொழுது பிரயாணிகளில்
ஒருவர் யா முஹ்யித்தீன் என்று சப்தமிட்டு அழைத்தார். பல மைல்களுக்கு அப்பாலிருந்த முஹ்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காதில் விழுந்தவுடன் தாம் அணிந்திருந்த செருப்பில்
ஒன்றை வேகமாக வீசினார்கள். அச்செருப்பு கொள்ளையர்களை அடிக்க ஆரம்பித்தவுடன் கொள்ளையடித்த
பொருட்களை திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள்.
இது மவ்லிதுக் கிதாபில் வருகின்ற ஒரு குப்பை சம்பவமாகும்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வருகின்ற செய்தியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
அது பலவீனமானதாக இருந்தால் ஆய்வில் அந்தச் செய்தி கண்ணுக்குத் தெரியாத கரைசலாகி விடும்
எனும் போது இந்தக் குப்பை சம்பவம் எம்மாத்திரம்? இநதக்
குப்பையை ஓர் ஆதாரமாகக் காட்ட இவர்கள் முன்வருகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள்
என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
இந்தக் கதையின் அடிப்படையில் முஹ்யித்தீனை அழைக்கலாம் என்றால், கல்லையும் மண்ணையும் கடவுளாக வழிபடும் மக்கள் இதை விட அற்புதக்
கதைகளைச் சொல்கிறார்களே! அதை நம்பி, கல்லை வணங்கச்
சொல்வார்களா?
பிள்ளையாரும் முருகனும் சிவனும் இதுபோன்று ஆபத்துக் காலங்களில்
நேரில் வந்து உதவி செய்ததாக ஏராளமான கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் நம்பி இவர்களை வணங்கப்
போகிறார்களா?
சமாதியை வணங்கும் இவர்கள் அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பரேலவிகள் அறிவு மழுங்கிய சூன்யங்கள் என்பதற்கு அவர்களின் அர்த்தமற்ற
இந்த வாதங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
EGATHUVAM DEC 2012