ஈழப் பிரச்சனைக்கு இஸ்லாமே தீர்வு
கடந்த பிப்ரவரி 15, 2012 அன்று
இத்தாலியைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்களை
சுட்டுக் கொன்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த இத்தாலியர் இருவரும் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட இத்தாலிய கொலைக் குற்றவாளிகள் மாஸ்ஸிமிலோனா, சால்வோடர் கிரோன் ஆகிய இருவரும் வாக்களிப்பதற்காகத் தங்கள் நாடு
சென்று வருவதற்கு கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்தியாவுக்கான இத்தாலிய தூதரகம் அளிக்கும் உத்தரவாதத்தின் பேரில்
மத்திய அரசு அவர்களை இத்தாலிக்கு அனுப்பலாம் என்றும், அவ்விருவரும் ஜனவரி 10, 2013 தேதிக்குள்
இந்தியா திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஜாமீன் வழங்கியது.
ஆனால் சென்றவர்கள் சென்றவர்கள் தான். இத்தாலி அரசு அவ்விருவரையும்
திருப்பியனுப்ப மறுத்தது. ஏன்? தன்னுடைய நாடு, தன்னுடைய மொழி, தனது இனம்
தான் உயர்ந்தது;
மற்ற நாடு, மொழி, இனம் மட்டமானது என்ற எண்ணம் தான்.
அவ்விருவரும் வராத வரை இத்தாலி தூதர் இந்த நாட்டை விட்டு வெளியேறக்
கூடாது என்று உச்ச நீதிமன்றம் விதித்த கடும் நிபந்தனை மற்றும் அவ்விரு குற்றவாளிகளுக்கும்
மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற இந்திய அரசின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில்
அவர்களைத் திருப்பியனுப்ப இத்தாலி சம்மதித்துள்ளது வேறு விஷயம்.
இங்கு நாம் இதைக் குறிப்பிடக் காரணம், தன் இனத்தவன் அடுத்த இனத்தவனைக் கொலை செய்தால் கூட அவன் தண்டிக்கப்படக்
கூடாது என்ற இத்தாலி அரசின் சிந்தனையைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று
கேரளா கூறுவது மலையாள இனவெறி! தமிழகத்திற்குக் காவிரி நீரை கர்நாடகா தர மறுக்கின்றது.
இதற்குக் காரணம் கன்னட மொழிவெறி!
இத்தனைக்கும் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவிற்கு வெளியேயுள்ள தனித்தனி நாடுகள்
அல்ல! இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தான். இந்த மாநிலங்கள் மத்திய அரசுக்குக் கட்டுப்படுவதில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக உச்ச நீதிமன்றத்திற்குக் கூட கட்டுப்படுவதில்லை. அந்த அளவிற்கு
மொழி வெறி தலையில் ஏறியுள்ளது. இந்த மொழிவெறியின் உச்சக்கட்டம் இப்போது தமிழ்நாட்டை
உலுக்கிக் கொண்டிருக்கின்றது.
இலங்கை ஒரு தனி நாடு! ஆனால் தமிழ் பேசும் மக்கள் அங்கு வாழ்வதால்
மொழியால் தமிழகத்துடன் ஒன்றுபடுகின்றது. அண்மையில் விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவர்
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படத்தை சேனல்
4 என்ற தொலைக்காட்சி வெளியிட்டது. அவ்வளவு தான். தமிழகத்தில்
அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் தமிழினப் பற்றை வெளிப்படுத்துகின்றன. ஈழப்
பிரச்சனையில் தமது கட்சியை மிஞ்சி எதுவுமில்லை என்று ஒவ்வொரு கட்சியும் தம்பட்டம் அடிக்க
ஆரம்பித்து விட்டன. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவை திமுக
விலக்கிக் கொண்டு விட்டது.
இதன் உச்சக்கட்டம், படிப்பில்
- பரீட்சையில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துக்
கொண்டு பேராட்டம், உண்ணாவிரதம் என்று களத்தில்
குதித்திருப்பதாகும்.
அவர்களை மீண்டும் படிப்பை நோக்கித் திரும்பச் செய்வதற்குப் பதிலாக
மேலும் மேலும் அவர்களை அரசியல்வாதிகள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அரசியல் கட்சிகளின் இலங்கை எதிர்ப்புப்
போராட்டம் தேர்தலில் எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை என்பது தான். பொதுவாக எந்த
அரசியல் கட்சியும் தான் செய்கின்ற எந்தவொரு காரியத்திற்கும் தேர்தல் ஆதாயத்தைத் தான்
கவனத்தில் கொள்ளும்.
தமிழக மக்களைப் பொறுத்தவரை, முன்னாள்
பிரதமர் ராஜிவ்காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததற்குப் பின்னர் இலங்கைப் பிரச்சனையை
அறவே மறந்து விட்டனர். தமிழக மக்களிடம் விடுதலைப் புலிகள் விவகாரம் எந்தவொரு அனுதாபத்தையும்
தேர்தல் ஆதாயத்தையும் பெற்றுத் தராது என்பது தான் உண்மை. அண்மையில் திமுக தலைமையிலான
டெசோ அமைப்பு நடத்திய பொது வேலை நிறுத்தம் பிசுபிசுத்துப் போனது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இருந்தாலும் மொழிவெறி, இனவெறியைத்
தூண்டி விட்டு அதில் ஆதாயம் அடையும் வேலையில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.
தமிழகத்திற்கு வருகையளித்த புத்த பிட்சுவின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அவர்களின்
இனவெறிக்கு எடுத்துக்காட்டு!
இலங்கைத் தமிழருக்காகப் போராடுகின்ற இவர்களின் கோரிக்கை தான்
என்ன?
1. இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து தன்னிச்சையான சர்வதேச
விசாரணை நடத்தும் வகையில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தீர்மானம்
கொண்டு வர வேண்டும்.
2. இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும்.
இதல்லாமல் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை சர்வதேச போர் குற்றவாளியாக
அறிவிக்க வேண்டும்; தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு
நடத்த வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுக்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றினாலும்
அது ராஜபக்ஷேவை கடுகளவு கூடப் பாதிக்காது. கடந்த மார்ச் 21 அன்று ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறி
விட்டது. இதில் இந்தியாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்தத் தீர்மானம்
இலங்கையில் எள்ளளவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி மார்ச்
20 அன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதீய ஜனதா, சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா
தளம் உள்ளிட்ட பெரிய கட்சிகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று
மறுத்து விட்டன. எனவே இவர்களின் இரண்டாவது கோரிக்கையும் பயனற்றதாகி விட்டது.
தமிழக அரசியலின் கட்டுக்கடங்காத எதிர்ப்பு, இலங்கையிலிருந்து வந்த சிங்களர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்
போன்றவை இலங்கைத் தமிழர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடும். இப்படியொரு எதிர்விளைவை
இந்த மொழிவெறியர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இதற்கு ஒரே தீர்வு இணக்கமான அணுகுமுறை தான். இந்தப் பாதையை தமிழ்நாட்டிலுள்ள
அரசியல்வாதிகள் அடைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் வேதனை என்னவெனில் இந்த மொழிவெறிக்கு
சில முஸ்லிம் அமைப்புகளும் துணை போவது தான். இத்தகையவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின்
ஹதீஸை நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ
இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன மாச்சரியத்துக்கு
அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர்
கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே
ஆகும்.
யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறை நம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில்
நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம்
செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை.
நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3437
பொதுவாக போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை
நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது
கண்டனத்திற்குரியது தான். ஆனால் அதைக் கண்டிக்கும் அதே வேளையில் பிரபாகரனை ஹீரோவாக்கிப்
பார்க்கும் அநியாயம் இங்கே அரங்கேறிக் கொண்டிருப்பது தான் வேதனைக்குறிய விஷயம்.
ஆகஸ்ட் 03, 1990 அன்று காத்தான்குடியில்
பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச்
சூட்டில் 103 பேர் கொல்லப்பட்டனர். 325 பேர் காயமடைந்தனர்.
இதில் பாலச்சந்திரனைப் போன்று எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர்? இன்னும் பிரபாகரன் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி
பொதுமக்கள்,
பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர்?
சிங்கள ராணுவத்தினரை மட்டுமல்ல! அப்பாவி பொதுமக்களை, தமிழர்களை குறிப்பாக முஸ்லிம்களைக் கொன்றொழித்த பிரபாகரன் ஒரு
மனித குல விரோதி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. அவருடைய தலைமையில் விடுதலைப்புலிகள்
அமைப்பு ஏராளமான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியுள்ளது. இலங்கை ராணுவமும் மனித உரிமை
மீறல்களை அரங்கேற்றியுள்ளது. இரண்டு தரப்புமே கண்டனத்திற்குரியவர்கள்.
இதில் ராஜபக்ஷேவை கொடுங்கோலனாகவும் பிரபாகரனை பரிதாபத்திற்குரியவராகவும்
சித்தரிப்பதற்குக் காரணம் மொழிவெறி, இனவெறி தான்.
இந்தப் பார்வை நீதிப் பார்வையல்ல. சாதிப் பார்வை தான். இத்தகைய பார்வையை திருக்குர்ஆன்
வன்மையாகக் கண்டிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள
பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட
வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக்
கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 5:8
இந்த நீதியற்ற சாதிப் பார்வைகள் தான் இலங்கைப் பிரச்சனைக்கும்
இதர பிரச்சனைகளுக்கும் ஒரு முட்டுக்கட்டையாக வந்து நிற்கின்றது.
இலங்கையில் தனி ஈழத்தை ஆதரிப்பவர்கள், இந்தியாவில் காஷ்மீர் விடுதலையை ஆதரிக்க மாட்டார்கள். இங்கு
நடக்கும் மனித உரிமை மீறல்களை, இனப் படுகொலைகளை, கற்பழிப்புகளைக் கண்டிக்க மாட்டார்கள். காரணம், என் இனம், என் மொழி, என் நாடு என்ற பாகுபாடு தான்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே
அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
மனிதர்கள் அனைவரையுமே ஒரு தந்தை, தாயின் வழித்தோன்றலில் கொண்டு வந்து, அவர்களை நாடு, மொழி, இனம், குலம் எல்லாவற்றையும் கடந்து
இஸ்லாம் என்ற ஒரு கயிற்றில் இணைத்து வைத்திருக்கின்றது. இந்த ஒரு கொள்கையை ஏற்றுக்
கொண்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்குள்ளவர்கள் சிந்திப்பார்களா?
EGATHUVAM APR 2013