May 11, 2017

மவ்லானாவுக்கு மறுப்பு - மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதத் தடையா?

மவ்லானாவுக்கு மறுப்பு - மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதத் தடையா?


எஸ். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.

மாதவிடாய் பெண்கள் குர்ஆனைத் தொடுவதோ, ஓதுவதோ கூடாது என்று மனாருல் ஹுதா என்ற மாத இதழில் மத்ஹபுச் சட்ட நூல் அடிப்படையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்திருந்தனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு தவறானது என விளக்கி, ஏகத்துவம் மே 2013 இதழில், "மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, கடந்த மாத மனாருல் ஹுதா கேள்வி பதில் பகுதியில் மறுப்பு வெளியிட்டுள்ளார்கள்.

அதில் மாதவிடாய் பெண்கள், குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனைத் தொடலாம், ஓதலாம் என்பதற்கு ஆதாரமாக நாம் வெளியிட்ட ஆதாரங்கள் எதையுமே கண்டுகொள்ளவில்லை. மாறாக, மத்ஹபுச் சட்டங்களை நியாயப்படுத்துவற்காக சில பலவீனமான செய்திகளை ஆதாரமாகக் காட்டி, தங்கள் கருத்தை நியாயப்படுத்தியிருந்தார்கள். இந்தக் கருத்திற்குக் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளார்கள். முறையான ஆய்வு இல்லாத காரணத்தால் கண்ணில் தென்படுவதை வைத்து இவ்வாறு சட்டம் கூறியுள்ளனர்.

இவர்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் சற்று ஆய்வு செய்திருந்தால் உண்மையை உணர்ந்திருப்பார்கள். ஆனால் இவர்களுக்கும் ஆய்வுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது.

இது குறித்து யாராவது அரபியில் எழுதியிருந்தால் அந்தக் கருத்து தங்களது நிலைபாட்டிற்கு ஒத்ததாக இருந்தால் அதை அப்படியே மக்களுக்கு முன்பாக வைத்துவிடுவார்கள். அந்தக் கூற்று சரியானதா? தவறானதா? என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டவர்களும் குளிப்புக் கடமையானவர்களும் குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்குக் குர்ஆனிலோ ஏற்கத் தகுந்த ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை.

இவர்கள் எதை ஆதாரமாகக் கருதுகிறார்களோ உண்மையில் அவை இதற்குரிய ஆதாரங்கள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

குர்ஆனில் ஆதாரம் உள்ளதா?

குர்ஆன் ஷரீபில் அல்லாஹு தஆலா "அதனை பரிசுத்தமானவர்களைத் தவிர தொடமாட்டார்'' (56:79) என்று கூறியுள்ளான். இந்த ஆயத்திற்கு ஹள்ரத் அலீ, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஸஃதுப்னு அபீவக்காஸ், ஸயீத் இப்னுஜைத் (ரலியல்லாஹு அன்ஹும்) உட்பட பல ஸஹாபாக்கள், அதாவு, ஜுஹ்ரீ, நகயீ (ரஹிமஹுமுல்லாஹ்) உட்ளிட்ட பல தாபியீன்களான முபஸ்ஸிரீன்கள், முதஹ்ஹரூன் - பரிசுத்தமானவர்கள் என்பதன் பொருள் சிறுதொடக்கு, பெருந்தொடக்கை விட்டும் சுத்தமானவர்கள் என்று விளக்கமளித்துள்ளனர்.

(மனாருல் ஹுதா)

இவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் குறித்த வசனத்திற்கு இவர்கள் கூறுவது போல் விளக்கம் தருகிறார்களா? இல்லையா? என்பது தனி விஷயம். அவர்கள் அவ்வாறு கூறினாலும் கூறாவிட்டாலும் இவ்விஷயத்தில் முடிவு செய்வதற்கு இது எந்த வகையிலும் ஆதாரமாகாது.

குர்ஆன் ஒரு கருத்தை நேரடியாக, தெளிவாகச் சொல்லியிருக்கும் போது அதற்கு அந்த அர்த்தமல்ல. இது தான் அர்த்தம் என்று வேறொருவர் வேறு கருத்தைக் கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்? இந்த நேரத்தில் அவர் கூறியுள்ளார், இவர் கூறியுள்ளார் என்று பட்டியல் போடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும். அல்லாஹ்வை மீறிப் பேசுவதாகும். குர்ஆனுக்கு எதிராக வாதிடுவதாகும்.

இந்த வசனத்தின் சரியான பொருளைக் குர்ஆனிலிருந்தே அறிந்துகொள்ள முடியும். இது இன்றைக்கு ஆரம்பித்துள்ள புதிய பிரச்சனை அல்ல. பல வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு வாதம் சுன்னத் ஜமாத்தினரால் வைக்கப்பட்டு அதற்குப் பலமுறை நாம் பதிலும் கூறியுள்ளோம். நாம் அளித்த விளக்கங்களுக்கு இன்று வரை இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

இந்நிலையில் மனாருல் ஹுதா மாத இதழில் நம்முடைய பதிலையும் விளக்கங்களையும் கண்டுகொள்ளாமல் மறுபடியும் பழைய வாதத்தையே வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எனவே இவர்களுக்கு நாம் முன்பு கூறிய அதே விளக்கத்தையே மறுபடியும் கூறுகிறோம். இனிமேலாவது இதற்குப் பதில் தருவார்களா? என்று பார்ப்போம்.

குர்ஆன் கூறும் கருத்து

குளிப்புக் கடமையானவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ள மாதவிடாய் ஏற்பட்டவர்கள் தொடக்கூடாது; ஓதக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள்.

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்கள் என்றால் யார்? தொடமாட்டார்கள் என்றால் எதை? என்பதை முதலில் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொடமாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56:79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

அல்குர்ஆன் 56:77-79

56:79 வசனத்துடன் முந்தைய இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது "அதை' என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.

அல்குர்ஆன் 80:11-16

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56:79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56:79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56:79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

குரைஷிக் குல இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

அல்குர்ஆன் 26:210-212

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன்  தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56:79 வசனமும் அமைந்துள்ளது.

குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக்கூடாது என்று தொடுவதற்கு தடை போடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே உணர்த்துகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56:79 வசனத்தில் சொல்லப்பட்ட "தூய்மையானவர்கள்' என்பது வானவர்கள் என்பதும் "அதை' என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க!  இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள். எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம்; ஓதலாம்.

உமர் (ரலி) அவர்களின் பெயரில் பலவீனமான செய்தி

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று கூறியதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.

(மனாருல் ஹுதா)

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இமாம் ஹாகிம் அவர்களின் தொகுப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி என்பாரும், உசாமா பின் ஸைத் என்பாரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பலவீனமானவர்களாவர்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி பலவீனமானவர் என்பதில் அறிஞர்களுக்கிடையில் மாற்றுக் கருத்தில்லை. இவர் பலவீனமானவர் என்று அனைவரும் ஏகோபித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது தொடர்பாக வரும் செய்திகளில் இது தான் சிறந்ததாக உள்ளது. ஆனால் இதில் இடம்பெறும் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி பலவீனமானவர் என்பதில் அனைவரிடமும் ஒத்த கருத்து நிலவுகின்றது என தஹபீ அவர்கள் முஃக்னீ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.

நூல்: கன்சுல் உம்மால் (பாகம் 12, பக்கம் 550)

அபூஹாதிம், நஸாயீ, புகாரி, இப்னு அதீ, அபூ சுர்ஆ மற்றும் இப்னு ஹஜர் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் கமால்

உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியை பஸ்ஸார் அறிவித்துள்ளார். இதில் உசாமா பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

நூல்: மஜ்மஉஸ் ஸவாயித் (பாகம் 9, பக்கம் 64)

அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என தஹபீ கூறியுள்ளார்கள். இவருடைய மோசமான நினைவாற்றல் காரணமாக இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் முயீன், அபூஹாதிம், நஸாயீ, இப்னு சஅத், இப்னு ஹிப்பான், அலீ பின் மதீனீ, புகாரி, அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் கமால்

காசிம் பின் உஸ்மானின் அறிவிப்பு

இதே செய்தி காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் வழியாகவும் தாரகுத்னியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இந்த ஹதீஸைப் பதிவு செய்த தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்திக்குக் கீழ் இவர் வலிமையானவர் இல்லை என்பதையும் சேர்த்து பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: சுனனுத் தாரகுத்னீ 382

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது தொடர்பாக இவர் அறிவிக்கும் சம்பவம் மறுக்கப்பட வேண்டியது என தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம்: 3 பக்கம்: 375)

தாரகுத்னீ அவர்கள் இவர் வலிமையானவர் இல்லை என்று கூறியுள்ளார்கள். மற்றவர்கள் அறிவிக்காத இவர் மட்டும் தனித்து அறிவித்த ஹதீஸ்கள் பல உள்ளன என புகாரி கூறியுள்ளார்கள்.

நூல்: தன்கீஹுத் தஹ்கீக் (பாகம்: 1 பக்கம்: 234)

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்வூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது. ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அறிவிப்பு ஆதாரமானதா?

இஃதன்றி இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தமது முவத்தாவில் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்கள். அதில் குர்ஆனைப் பரிசுத்தமானவர் தவிர தொடலாகாது என்ற வரியும் உள்ளது. இந்த அறிவிப்பு ஹாகிம் (1447), தாரமி (2266), தாரகுத்னீ (222), இப்னுஹிப்பான் (6559) இன்னும் பலரும் அறிவித்துள்ளனர். மேலும் இதே கருத்துள்ள அறிவிப்பு ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் தாரகுத்னீ (3) அறிவித்துள்ளார்கள்.

(மனாருல் ஹுதா)

நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குர்ஆனை பரிசுத்தமானவர்களைத் தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்று குறிப்பிட்டதாக ஒரு செய்தி உள்ளது. இதை இவர்கள் ஆதாரமாக சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்கள் முதலாவதாக முவத்தாவில் இடம்பெற்றுள்ள அறிவிப்பை ஆதாரமாகக் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குர்ஆனை தூய்மையானவரைத் தவிர தொடக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

நூல்: முவத்தா (419)

இது தொடர்பு அறுந்த செய்தியாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதியதாக இதை அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் ஹஸ்ம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கவில்லை. இவர் நபித்தோழர் இல்லை.

எனவே இது முர்சல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். அபூதாவுத் அவர்கள் இதை தொடர்பு அறுந்த செய்திகளில் ஒன்றாக பதிவு செய்துள்ளார்.

தாரமியின் அறிவிப்பு

ஹாகிம், தாரமி, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் ஆகியோரின் நூற்களில் பதிவாகியுள்ள அறிவிப்பையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

தாரமி (2166)

தாரகுத்னீ (380)

இந்த அறிவிப்புகளில் சுலைமான் பின் தாவூத் என்பவர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவறாகும். சுலைமான் பின் அர்கம் என்பதே சரியானது என்று இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சுலைமான் பின் தாவூத் நம்பகமானவர் என்றாலும் இவர் இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை. சுலைமான் பின் தாவூதை குறிப்பிட்டது ஹகம் பின் மூசா என்ற அறிவிப்பாளர் செய்த தவறாகும்.

சுலைமான் பின் அர்கம் என்ற பலவீனமானவரே இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்னு ஹஜர், தஹபீ, அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூதாவுத், திர்மிதி, நஸாயீ, புகாரி, அபூ சுர்ஆ மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் கமால்

இந்த அறிவிப்பில் இடம்பெறும் ஹகம் பின் மூசா என்பவர் தவறாக அறிவித்துள்ளார். சுலைமான் பின் அர்கம் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சுலைமான் பின் தாவூத் என்று தவறாகக் கூறியுள்ளார் என்று அபூதாவுத் கூறியுள்ளார்கள். சுலைமான் பின் அர்கம் பலவீனமானவர் என்று நஸாயீ கூறியுள்ளார்.

நூல்: நஸ்புர் ராயா (பாகம்: 1 பக்கம்: 197)

இமாம் நஸாயீ அவர்கள் இந்த அறிவிப்பை சுலைமான் பின் அர்கம் என்பவர் வழியாகவே பதிவு செய்துள்ளார்கள். இதன் பிறகு சுலைமான் பின் அர்கம் என்று கூறுவது தான் சரியானது. சுலைமான் பின் அர்கம் பலவீனமானவர் என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்முஹர்ரிர் ஃபில் ஹதீஸ் என்ற நூலிலும் இந்த விபரம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மாலிக் அவர்கள் பதிவு செய்த அறிவிப்பு முர்சலாகும். இதை அபூதாவுத் அவர்கள் மராசீல் என்ற தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். மேலும் நஸாயீ, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் ஆகியோரும் இதை சுலைமான் பின் தாவூத் என்பவரின் வழியாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பலவீனமானவரான சுலைமான் பின் அர்கம் என்பதே சரியானது என்று கூறப்பட்டுள்ளது.

நூல்: அல்முஹர்ரிர் ஃபில் ஹதீஸ் (பாகம்: 1 பக்கம்: 123)

இன்னும் பல ஆதாரங்கள் எங்கே?

இந்த ஹதீஸை அதனுடைய பல வழிகளைக் கவனித்தும் இன்னும் பல வகையான ஆதாரங்கள் மூலமும் பலரும் சரிகண்டுள்ளனர். எனவே தான் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் மார்க்கத்தின் பெரும் கொண்ட கூட்டத்தினர் நான்கு இமாம்கள் அனைவரும் குர்ஆன் ஷரீபைத் தொடுவதற்கு சிறுதொடக்கு, பெருந்தொடக்கை விட்டும் சுத்தமாக இருப்பது அவசியம்; சுத்தமின்றி தொடுவது பாவம் என்பதில் ஏகோபித்த முடிவு கொண்டுள்ளனர். (மஆரிஃபுல் குர்ஆன் 8:287)

(மனாருல் ஹுதா)

இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஒரு வழி கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அனைத்தும் பலவீனமானதாக உள்ளதை மேலே தெளிவுபடுத்தி விட்டோம்.

நான்கு இமாம்களும் பெருங்கொண்ட கூட்டத்தினரும் சுத்தமின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்று கூறியதாக இவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் அவ்வாறு கூறினார்களா? இல்லையா? இதற்கு மாற்றமாக குர்ஆனை உளூவின்றி தொடலாம் என்று கூறிய அறிஞர்கள் யார் யார்? என்பது தனி விஷயம். அந்த ஆய்விற்குள் நாம் செல்லவில்லை.

ஒரு பேச்சுக்கு அவர்கள் அனைவரும் அப்படி கூறினாலும் அது சரியான கூற்று இல்லை என்பதற்கு மேலே நாம் கூறிய விசயங்கள் தெளிவான ஆதாரங்களாக அமைந்துள்ளன. இதற்குப் பதில் சொல்வது இவர்களின் கடமை.

இன்னும் பல ஆதாரங்கள் இருப்பதாக போகிற போக்கில் கூறியுள்ளனர். அந்த ஆதாரங்கள் எவை என்பதை இவர்கள் கூறக்கூடாதா? அப்படிக் கூறினால் அதன் உண்மை நிலையும் மக்களுக்குத் தெளிவாகிவிடும் என்ற பயத்தினால் கூறாமல் நழுவிச் சென்றுள்ளனர்.

தங்களிடத்தில் உள்ள ஆயுதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவை அனைத்தும் முனை மழுங்கியவை என்பதால் இன்னும் என்னிடம் பெரிய பெரிய ஆயுதங்கள் உள்ளன என பயமுறுத்தும் வேலையைச் செய்கின்றனர்.

உளூ மற்றும் குளிப்புக் கடமையை நிறைவேற்றாதவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு ஒரு சரியான ஆதாரம் கூட கிடையாது.

இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு

மேலும் இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் பெண்ணும் குளிப்பு கடமையானவரும் குர்ஆன் ஓத வேண்டாம் என்று கூறியதைப் பதிவு செய்துள்ளார்கள். இது மாதவிடாய் பெண்ணும் குளிப்பு கடமையான வர்களும் குர்ஆன் ஓதக் கூடாது என்பதற்கு தெள்ளத் தெளிவான ஆதாரமாகும்.

இந்த ஹதீஸ் இஸ்மாயீல் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றிருப்பதால் பலகீனமானதாக இருந்தாலும் தாரகுத்னீ அவர்களின் அறிவிப்பில் (ஹதீஸ் எண்: 428, 432, 433) இவரல்லாத அபூ மஃஷர், முகீரா என்ற இருவர் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த ஹதீஸ் ஆதாரம் பிடிக்கத்தக்க ஹதீஸாகும். எனவே இந்த ஹதீஸை பலகீனமானது என்று இதன் மூலம் பெறப்படும் சட்டத்தை நிராகரிக்க இயலாது.

(மனாருல் ஹுதா)

திர்மிதியில் (121) இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். இதை இவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவரல்லாமல் அபூ மஃஷர் மற்றும் முகீரா ஆகியோர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இதை ஏற்கிறோம் என்று கூறியுள்ளனர். எனவே அபூ மஃஷர் மற்றும் முகீரா ஆகியோரின் அறிவிப்பு சரியானதா என்ற ஆய்வுக்கு வருவோம்.

அபூ மஃஷரின் அறிவிப்பு

சுனனுத் தாரகுத்னீயில் (424) இடம்பெறும் இந்த அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.

1.         அபூ மஃஷர் பலவீனமானவர் ஆவார். இவரை பலவீனமானவர் என்று இமாம்கள் கூறியுள்ளனர்.

2.         அபூ மஃஷரிடமிருந்து பெயர் கூறப்படாத ஒருவர் இந்தச் செய்தியை அறிவிக்கின்றார். இவர் யார்? நம்பகமானவரா? என்பது தெரியவில்லை.

இந்தக் காரணங்களால் இதுவும் பலவீனமான செய்தியாகும். அபூமஃஷரின் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பில் அறியப்படாத ஒருவர் இடம்பெற்றுள்ளார். மேலும் அபூ மஃஷர் பலவீனமான மனிதர் ஆவார்.

நூல்: நஸ்புர் ராயா (பாகம்: 1 பக்கம்: 195)

அபூ மஃஷர் என்பார் வழியாகவும் இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். அபூ மஃஷர் பலவீனமானவர் ஆவார்.

நூல்: தல்ஹீசுல் ஹபீர் (பாகம்: 1 பக்கம்: 373)

முகீராவின் அறிவிப்பு

குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனில் எதையும் ஓதக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: சுனனுத் தாரகுத்னீ (423)

இந்த அறிவிப்பில் முகீராவிடமிருந்து அப்துல் மலிக் பின் மஸ்லமா என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இப்னு ஹஜர் அவர்களும் மற்ற அறிஞர்களும் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

முகீராவின் அறிவிப்பைச் சரியானது என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் அதில் அப்தில் மலிக் பின் மஸ்லமா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் தான் இந்த தொடர் சரியானதாக இருக்கும்.

நூல்: தல்ஹீசுல் ஹபீர் (பாகம்: 1, பக்கம்: 373)

முகீராவிடமிருந்து அறிவிக்கும் அப்துல் மலிக் பின் மஸ்லமா பலவீனமானவர் ஆவார். இவர் தவறான செய்திகள் அதிகம் அறிவிப்பவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என இப்னு யூனுஸ் கூறியுள்ளார். இவர் தடுமாறக்கூடியவர். வலிமையானவர் இல்லை என அபூஹாதிம், அபூ சுர்ஆ ஆகியோர் கூறியுள்ளார்.

நூல்: பத்ருல் முனீர் (பாகம்: 2, பக்கம்: 545)

எனவே இதுவும் பலவீனமாதாகும். குளிப்புக் கடமையானவர்கள், உளூ இல்லாதவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது, தொடக்கூடாது என்பதற்கு ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. மாற்றுக் கருத்துடையவர்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டும் அனைத்தும் பலவீனமானதாகவே உள்ளது.


எனவே மாதவிடாய் பெண்கள், குளிப்புக் கடமையானவர்கள், உளூ இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதற்கோ ஓதுவதற்கோ எந்தத் தடையுமில்லை.

EGATHUVAM AUG 2013