May 9, 2017

கால் நூற்றாண்டு கடத்திய ஸைபுத்தீன்

கால் நூற்றாண்டு கடத்திய ஸைபுத்தீன் 

களமும் காரணமும்

ஏகத்துவப் பிரச்சாரம் என்பது இறைத்தூதர்கள் செய்த பிரச்சாரம் ஆகும். இறைத்தூதர்கள் செய்த இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்கவும், முடக்கவும், தங்களது அசத்திய அணியிலிருந்து யாரும் சத்திய அணிக்குத் தாவி விடக்கூடாது என்ற நோக்கத்திலும் பல்வேறு எதிர்வாதங்களை அந்த மக்கள் முன்வைத்தார்கள். அந்த எதிர்வாதங்களுக்கெல்லாம் இறைத்தூதர்கள் இடைவிடாத, மறுக்க முடியாத பதில்களை அளித்தார்கள்.

தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்வைக்கப்பட்ட போது இதுபோன்ற எதிர்வாதங்கள் வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் அழகான, அறிவார்ந்த பதில்கள் அளிக்கப்பட்டன.

அந்தப் பதில்கள் எழுத்துக்களாக ஏடுகள், சுவரொட்டிகள், பிரசுரங்கள் வடிவிலும், உரைகளாக ஒலி, ஒளி நாடாக்கள் வடிவிலும் அமைந்தன. அதன் உச்சக்கட்டப் பரிமாணம், விவாதக் களமாக அமைந்தது. அவ்வகையில் கோட்டாறு விவாதம் முதல் களமாகவும் தவ்ஹீதின் தளமாகவும் அமைந்தது.

இந்த விவாதக் களம் அனைத்துமே நாம் அழைத்து உருவானவை. நாம் விடுத்த அழைப்பை ஏற்று வந்தவர்களும் உண்டு. நழுவி, தப்பி, தலைதெறிக்க ஓடியவர்களும் உண்டு.

இந்த வகையில் ஸைபுத்தீன் ரஷாதியின் விவாதக் களம் கடந்து வந்த பாதையை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

கால் நூற்றாண்டுகளாக எந்த வலையிலும் சிக்காமல் நழுவிக் கொண்டிருந்த ஸைபுத்தீன் ரஷாதியை விவாதக் களத்திற்குக் கொண்டு வர நாம் செய்த முயற்சிகளைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மத்ஹபுகள் மாநாடு

தவ்ஹீதுப் பிரச்சாரம் தலை தூக்க ஆரம்பித்தவுடன் அதை முடக்க வேண்டும் என்று ஆலிம்கள் மூர்க்கத்தனமாக முன்னணியில் நின்று எதிர்த்த ஊர்களில் ஒன்று மேலப்பாளையம்.

மத்ஹபுகளின் அடித்தளங்கள் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது என்று அரண்டு போன மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா, அதைத் தடுக்கும் விதமாக புதுமனைப் பள்ளிவாசலில் 06.12.1988 அன்று மத்ஹபுகள் மாநாடு நடத்தியது. இதில் ஸைபுத்தீன் ரஷாதியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

அப்போது நமது ஜமாஅத்தின் சார்பாக அசத்தியவாதிகளுக்கு எதிராக அழைப்பும் அறைகூவலும் விடப்பட்டு சுவரொட்டிகள் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டன.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த மத்ஹபு மாநாட்டில் ஸைபுத்தீன் ரஷாதி பேசிய சவடால் பேச்சுக்கள் இதோ:

யாராவது நேரடியாக விவாதிக்கத் தயாரான்னு சொல்லி இங்கே வால்போஸ்டரெல்லாம் ஒட்டியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் கூட ரொம்ப சந்தோஷம். அந்த அழகிய அருமையான நண்பர்களுக்கு நான் சொல்கிறேன். அந்தப் புண்ணிய காரியத்தை நீங்கள் கட்டாயம் செய்யுங்கள். தேதி வாங்க வேண்டியது உங்களுடைய வேலை. வரவேண்டியது என்னுடைய கடமை. இடம் குறிப்பிட வேண்டியது உங்களுயை வேலை. அந்த இடத்திற்கு ஆஜராக வேண்டியது என்னுடைய கடமை.

உன் கிட்ட தகுதி இருக்கா? சொல். தகுதி இருந்தால் கொஞ்சம் முன்னால் வா! நான் உன்னைப் பார்க்கிறேன். எவ்வளவு தகுதியானவன் என்று.... நிறைய ஆட்களிடம் சொல்லவில்லை. சவாலுடைய விஷயங்களையெல்லாம் சொல்லவில்லை. எனக்கு என்ன ஆசை என்றால் இவன் எங்கேயாவது சிக்குவான்; நேரே கேட்க வேண்டும் என்று....

ஒரு நாளில் நான் சொன்ன தேதி கேட்டு எழுதி வாதிடத் தயார். ஆனால் மக்களுக்குப் பலன் தரும் அளவில் வாதிட வேண்டும். கோட்டாறு, கடையநல்லூர் மாதிரி சண்டை போடக்கூடாது.

என்னிடம் வாதிட வேண்டும் என்றால் உட்கார்ந்து சரியான முறையில் வாதிட வேண்டும். அதற்குக் கீழ்க்கண்ட ஏதாவது குறிப்பிடுங்கள். முதலில் விவாதத்திற்குரிய பொருளைக் குறிக்க வேண்டும். எதைப் பற்றி விவாதம்? நாம் சொன்னதைத் தான் சொல்லப் போகிறோம். புதிதாக எதுவும் சொல்லவில்லை. எங்கள் கிதாபுகளிலிருந்து இதைத் தவறு என்று நீங்கள் தான் குற்றம் சொல்கிறீர்கள். எனவே எதைப் பற்றி வாதிட வேண்டும் என்று நீ தான் சொல்ல வேண்டும்.

இரண்டாவதாக, தனிக்குத் தனியாக மோதலாமா? அணிக்கு அணியாக மோதலாமா? ஏனென்றால் நான் ஒருத்தனாக வந்து நீ 4 பேருடன் வந்து கூச்சல் போட்டால் என்ன செய்வது? அப்போதும் சமாளிக்க அல்லாஹ் திறமையைக் கொடுத்திருக்கிறான். இருந்தாலும் ஒருமையா? அணியா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.

விவாத மன்றத்துக்கு யாரைத் தலைவராகப் போட வேண்டும் என்று நீயே நிர்ணயம் செய். இந்த மூன்றையும் முடித்து விட்டு வா! தேதி நான் கொடுக்கிறேன்.

நடுவர் தீர்ப்பு கூற ஆள் வேண்டும். அவன் மதனியாக இருக்கக்கூடாது. நான் முதர்ரிஸ்ஸாக 17 வருடம் சர்வீஸ் உள்ளவன். எனவே 20 வருடம் முதர்ரிஸ் ஆக இருந்த ஆளை நீ தான் கூட்டி வரவேண்டும்...

இவ்வாறு ஸைபுத்தீன் ரஷாதி சவடால் விட்டுப் பேசியதைக் கேட்ட நமது சகோதரர்கள் புதுமனைப் பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு இருந்த மஜ்லிஸ் உலமாவினர், இவர்களுடன் விவாதம் தேவையில்லை, வெளியே செல்லுங்கள் என்று கூறி விட்டனர். அப்போது ரஷாதியும் நமது சகோதரர்களுடன் வெளியே வந்து, "அவர்கள் (மஜ்லிஸ் உலமா) முனாழராவை விரும்பாவிட்டாலும் நான் தயார்; பி.ஜே.யை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கூறினார்.

விவாதத்திற்குத் தயார் - பி.ஜே. அறிவிப்பு

அப்போது நமது ஜமாஅத்தில் இருந்த நிஜாமுத்தீன் மஹ்ழரி, பி.ஜே. அவர்களுக்கு இது குறித்துக் கடிதம் எழுதுகின்றார். பி.ஜே. அவர்களிடமிருந்து, விவாதத்திற்குத் தயார் என்று குறிப்பிட்டுப் பதில் கடிதம் வந்தது. 08.12.1988 தேதியிட்ட அந்தக் கடிதத்தில் பி.ஜே. குறிப்பிட்டதாவது:

ஸைபுத்தீன் என்பவர் நேரடியாக விவாதத்திற்கு அறைகூவல் விடுவதும் நெருங்கிச் சென்றால் விலகி ஓடுவதும் வாடிக்கையாகக் கொண்டவர். விருதுநகர், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளிலும் இப்படி சவால் விட்டிருக்கின்றார். விருதுநகர் தவ்ஹீத் சகோதரர்கள் இவருடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யத் தொடர்பு கொண்ட போது, இவரிடமிருந்து மழுப்பல் நிறைந்த பதில்களைத் தவிர பயன் ஏதுமில்லை. விருதுநகர் கடிதங்கள் தேவையெனில் அனுப்பி வைக்கிறேன். அல்லது விருதுநகர் ஜமாஅத்தில் பெறலாம்.

உங்கள் ஊரிலும் அவர் சவால் விட்டிருக்கின்றார். மத்ஹபுகள் பற்றியும், தராவீஹ் பற்றியும் மட்டுமே பேச அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த இரண்டு விஷயங்களைப் பற்றி மட்டும் முதலில் பேசுவோம்.

தனியாகவும், அணியாகவும் விவாதிக்க நான் தயார் தான். எதுவானாலும் எனக்குச் சம்மதமே! இருப்பினும் என்னிடமே முடிவு செய்யும் பொறுப்பை நீங்கள் சாட்டி விட்டதால் நானும் ஸைபுத்தீனும் மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதில் அவருக்கு ஆட்சேபணை என்றால் மட்டும் அணியாக வைத்துக் கொள்ளலாம்.

குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் மட்டுமே விவாதம் நடக்க வேண்டும். விவாதத்தில் ஆதாரங்களாக மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்படலாகாது என்பது தான் எனது நிலை.

விவாதத்தில் முடிவு கூறுவதற்காக ஒரு நீதிபதியை ஏற்படுத்த வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை விசித்திரமாக உள்ளது. இரண்டு சாராரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நீதிபதிகள் எவருமே இருக்க மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டாலும் விவாதத்தின் முடிவில் தீர்ப்புக் கூறிய பின் அவரது தீர்ப்பை இரு சாராரில் எவராவது விமர்சனம் செய்து, தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கக் கூடும்.

எனவே மக்கள் மத்தியில் இரு சாராரும் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தால், மக்கள் யார் சொல்வது சரி என்று முடிவு செய்ய முடியும். இதுதான் முறையும் கூட. நீதிபதியை ஏற்படுத்துவது எனக்கு உடன்பாடில்லாத ஒன்று.

20 ஆண்டுகள் முதர்ரிஸாகப் பணியாற்றிய, எவரை வேண்டுமானாலும் நானே அழைத்து வரலாம் என்று அவர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள். யார் நியமித்தாலும் இதே பிரச்சனை ஏற்படத்தான் செய்யும். என்றாலும் இதைக் காரணம் காட்டி அவர் (ஸைபுத்தீன்) தட்டிக் கழிக்கக்கூடாது என்பதற்காக எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் அதையும் நான் ஏற்கிறேன். 20 ஆண்டுகள் முதர்ரிஸாகப் பணியாற்றிய ஒருவரை நானே அழைத்து வருகிறேன். அவர் நடுவராக இருக்கட்டும். அவருக்கு 20 ஆண்டுகள் தர்ஸ் நடத்திய அனுபவமும் அதற்கான சான்றுகளும் இருக்கின்றதா என்பதைச் சோதித்து உறுதி செய்து கொண்ட பின் அவரை நடுவர் ஸ்தானத்தில் அவர் அமர வைக்கட்டும். நீங்கள் குறிப்பிட்டிருந்த நான்கு நிபந்தனைகளுக்கும் உரிய என் பதில் இது. அடுத்து என்னுடைய நிபந்தனைகளில் சில:

1. விவாதம் நடைபெறுவதை முன்கூட்டியே முடிவு செய்து எல்லா மக்களும் வந்து அதைக் கேட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சிலர் மட்டும் அறியும் வண்ணம் அது அமையக்கூடாது.

2. சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர வேறு எவரும் பேசக்கூடாது.

3. பேசும் போது ஒருவருக்கொருவர் இடைமறித்துக் கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும்.

4. இருவரில் எவரேனும் தன்னிடம் இன்னும் பல ஆதாரங்கள் உள்ளது; அதையும் நான் கூறவேண்டும் என்று கேட்கும் போது அதை மறுக்கக்கூடாது.

5. பிரச்சனைகளில் இரு சாராரும் தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்கக் கால வரம்பு காட்டக் கூடாது. ஒரு சாரார் பேசுவதற்குத் தங்களிடம் ஆதாரம் எதுவுமில்லை என்ற நிலைக்கு வரும் வரை அனுமதிக்க வேண்டும்.

6. எடுத்து வைத்த ஆதாரங்களையே திரும்பத் திரும்ப எடுத்து வைக்கக்கூடாது.

இவை என்னுடைய நிபந்தனைகள். இவற்றில் எதையேனும் சவால் மன்னன் தகுந்த காரணங்களுடன் மறுத்தால் அதையும் பரிசீலிக்கத் தயார். எப்படியேனும் விவாதம் நடந்தாக வேண்டும். இவரது பொய்ப் பிரச்சாத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்பதே என் அவா!

இது பி.ஜே. எழுதிய பதில் கடிதம்.

பி.ஜே. அவர்களின் கடித நகலுடன் நிஜாமுத்தீன் மஹ்ழரி 11.12.1988 அன்று ஒரு கடிதம் எழுதி அதை ஸைபுத்தீன் ரஷாதிக்கு அனுப்பி வைத்தார். அதில் பி.ஜே. அவர்களின் கடித வரிகளைக் கோடிட்டுக் காட்டிவிட்டு,

"விவாதம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தங்களுக்குத் தகவல் தர வேண்டும் என்று தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்ஷா அல்லாஹ் 1989 ஜனவரி இறுதியில் விவாதம் நடைபெற இணைந்து ஏற்பாடுகள் செய்து விடுகிறோம். எனவே தாங்கள் விவாதத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒப்புதல் தெரிவித்து அதிகாரப்பூர்வமாகக் கடிதம் ஒன்று எழுதும்படி அன்புடன் வேண்டுகிறேன்''

இவ்வாறு அந்தத் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் (?) ஸைபுத்தீனின் நழுவல் ஃபார்முலா

இதற்கு 21.12.1988 அன்று ஒரு கடிதத்தை ஸைபுத்தீன் பதிலாக அனுப்பினார். மத்ஹபு மாநாட்டில் பேசும் போது, "தேதியை முடிவு செய்து விட்டு என்னைக் கூப்பிடுங்கள்; விவாதத் தலைப்பை நீயே முடிவு செய்; நடுவர் யாரென்று நீயே முடிவு செய். 20 வருட முதர்ரிஸாக இருந்தால் போதும்'' என்றெல்லாம் முழங்கிய ஸைபுத்தீன், நாம் முறைப்படி அழைப்பு விடுத்துக் கடிதம் அனுப்பியதும் தன்னுடைய புரட்டல் வாதத்தை ஆரம்பித்தார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள்:

தலைவர் பற்றிய அவர் எழுப்பிய ஐயங்களிலும் ஓரளவு நியாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன. தர்ஸில் இருந்தவர் என்றால் குர்ஆன், ஹதீஸை நன்கு விளங்கக் கூடியவராக இருக்க வேண்டும். குர்ஆன், ஹதீஸை நன்கு கற்றுக் கொடுத்தவராக இருக்க வேண்டும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விவாதம் நடைபெறும் போது அவைகளை விளங்கியவரைத் தான் நடுவராக ஏற்க இயலும்.

தர்ஸ் என்ற வார்த்தையைப் புரட்டல் செய்து, வயதெல்லாம் மீஸான் ஓதிக் கொடுத்தவரையோ, அல்லது கைர முகல்லிதீன்களில் ஒருவரையோ நடுவராகக் கொண்டு வந்தால் அவருக்கு ஏற்படும் ஐயங்கள் எனக்கும் ஏற்படத்தான் செய்யும்.

அவரின் பல விளக்கங்களை, பல முறை பார்த்ததில் அவரிடம் நேர்மையை எதிர்பார்ப்பது "கற்றாழைச் செடியில் கஸ்தூரியின் மணத்தை' எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும். எனவே தான் அவரின், "ஒருவரை'' என்ற வார்த்தை கபடங்கள் நிறைந்ததாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன்.

எனவே விவாதம் இரு தரப்பாருக்கும் ஐயமற்ற முறையில் நடைபெற இப்படியொரு வழியைக் கடைப்பிடிக்கலாம். அதாவது: எங்கள் சார்பாக மேற்படி தகுதிகள் பெற்ற இரண்டு ஆலிம்களையும், அவர்கள் தரப்பில் இரண்டு ஆலிம்களையும் இன்னும் வாத, பிரதிவாதங்களை கிரகிக்கக்கூடிய, மார்க்கப்பற்றுடைய (வேலையில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற) வழக்கறிஞர் அல்லது நீதிபதி ஒருவர். ஆக ஐந்து பேர் கொண்ட (புல் பெஞ்ச்) ஒரு குழுவை ஏற்படுத்தி, அவர்களில் அந்த நீதிபதியைத் தலைவராகவும் நியமிக்கச் செய்யலாம். கூறப்படும் குர்ஆன், ஹதீஸ்களின் அரபிக்குரிய பொருளை இரு தரப்பு ஆலிம்களும் மேற்படி நீதிபதிக்கு விளக்கட்டும். அவர் இறுதியாகத் தீர்ப்பளிக்கட்டும்.

உதாரணமாக, தொண்டியைச் சேர்ந்த எம்.ஆர்.எம் அப்துல்கரீம் என்ற பெரியவர் இருப்பதாக அறிகிறேன். அவரையோ, அவர் போன்ற வேறொருவரையோ நடுவர் குழுவுக்குத் தலைவராக்கட்டும். யாரை ஏற்படுத்துவது என்றாலும் அவர் இன்னார் என்பதைத் தெளிவாக்கப்பட வேண்டும். நான் "ஒருவரை'' அழைத்து வருகின்றேன் என்ற மூடுமந்திர வேலையைக் காட்டக் கூடாது.

இவ்வாறு ஸைபுத்தீன் தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.

தேதி குறித்து ஒரு கடிதம்

இதற்குள் நிஜாமுத்தீன் மஹ்ழரி துபை சென்று விட்டதால், பழ்லுல் இலாஹி என்பவர் இதற்குப் பதில் கடிதம் அனுப்பினார். 30.12.1988 அன்று எழுதப்பட்ட அக்கடிதத்தில் கூறப்பட்டதாவது:

நிஜாமுத்தீன் 20.12.88 அன்று துபை சென்று விட்டார்கள். முனாழரா சம்பந்தமாக ஒரு கமிட்டியை அமைத்துச் சென்றுள்ளார். அந்தக் கமிட்டியின் சார்பில் இக்கடிதத்தை எழுதுகிறோம்.

தங்களது 21.12.88 தேதியிட்ட கடிதம் கண்டோம். ஐவர் குழுவை (புல் பெஞ்ச்) ஏற்படுத்த வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள். தாங்கள் எங்கள் ஊரில் உரையாற்றும் போது, ஒருவரை நடுவராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தீர்கள். நடுவரை அமர்த்துவதில் ஒத்தக் கருத்து இல்லாத பி. ஜைனுல் ஆபிதீன் முனாழரா நடைபெற்றாக வேண்டும் என்பதற்காகவே தங்களின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டார். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மதனியாகவோ, காலமெல்லாம் மீஸான் ஓதிக் கொடுத்தவராகவோ இல்லாமல் தங்கள் உரையில் குறிப்பிட்டபடி தங்களை விடக் கூடுதலான காலம் (20 வருடங்கள்) அரபிக் கல்லூரியில் பேராசிரியராக, ஸனது பாடங்களை நடத்தியவராக, குர்ஆன் ஹதீஸ்களை நன்கு விளங்கக்கூடிய, தமிழக ஜமாஅத்துல் உலமா சபை ஆலிம்களால் நன்கு அறியப்பட்ட, அனேக ஆலிம்களின் பாராட்டுதலைப் பெற்ற ஒருவரை நடுவராக ஏற்படுத்தினால் தாங்கள் விவாதத்திற்கு வருவீர்களா? என்பதை அறிய விரும்புகிறோம்.

ஒருவரை நடுவராக்க வேண்டும் என்ற தங்கள் முதல் நிபந்தனையின்படி 1989 ஜனவரி 28, 29 ஆகிய இரு தினங்கள் முனாழரா நிகழ்ச்சி நடத்த நாடுகிறோம். தங்கள் பதில் கண்டு நடுவர் யார் என்ற விபரம் தருகிறோம்.

இது நமது தரப்பில் விவாத ஏற்பாட்டுக் குழுவினரால் எழுதப்பட்ட பதில் கடிதம்.

அடுத்த பல்டி

எப்போது வேண்டுமானாலும் தேதியை முடிவு செய்து விட்டு எனக்குத் தெரியப்படுத்துங்கள்; ஒரு வாரத்திற்கு முன்பு எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்றெல்லாம் சவடால் விட்ட ஸைபுத்தீன் ரஷாதி, தேதியைக் குறிப்பிட்டு நாம் எழுதியவுடன் அந்தக் குறிப்பிட்ட தேதியிலும் அதைத் தொடர்ந்தும் பல்வேறு புரோகிராம்கள் இருப்பதாகப் பீலா விட்டுக் கடிதம் எழுதினார்.

14.01.1989 அன்று அவர் எழுதிய கடிதத்தில்...

விவாதக் கருப்பொருளாகிய 1. தக்லீது, 2. தராவீஹ் பற்றிய ஜைனுல் ஆபிதீன் தனது நிலையை வரையறுத்து எழுத்து மூலம் விளக்க வேண்டும். நான் மேற்படி இரண்டு பொருள்களைப் பற்றிய எனது நிலையை உங்களூர் நிகழ்ச்சியிலேயே விளக்கியுள்ளேன்.

ஐவர் நடுவர் குழு விஷயத்தில் ஜைனுல் ஆபிதீனுக்கு ஆட்சேபணை உண்டு என்றால் மூவர் குழுவாக இருக்கட்டும். இதுவும் அவருக்குச் சம்மதமில்லை என்றால் அவர் குறிப்பிடும் அந்தத் தகுதி வாய்ந்த ஒருவர் யார் என்பதையாவது தெளிவுபடுத்தச் செய்யுங்கள். இருவருக்கும் மத்தியில் தீர்ப்புச் செய்பவர் யார் என்பதைக் கூட மூடி மறைத்து மோடி மஸ்தான் வேலை ஏன் செய்கிறார்?

அடுத்து ஜனவரி 24லிருந்து பிப்ரவரி 10 வரை பல புரோகிராம்கள், சொந்த வேலைகள் இருப்பதால் பிப்ரவரி இறுதியில் ஏற்பாடு செய்யுங்கள். முதலில் மேற்கூறிய இரண்டு விசயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ஸைபுத்தீன் ரஷாதி எழுதியிருந்தார். இதற்கிடையில் முத்துப்பேட்டையில் மீரா லெப்பை என்பவர் விவாதத்திற்கு அழைத்து ஸைபுத்தீனுக்குக் கடிதம் எழுதுகின்றார். அதற்கு இவர் 22.01.1989 அன்று பதில் எழுதும் போது, மேலப்பாளையத்தில் எந்தக் கடிதப் பரிமாற்றமும் நடைபெறாதது போன்றும், பி.ஜே.வைப் பற்றியே தெரியாதது போன்றும் எழுதுகின்றார்.

நாகர்கோவிலில் ஒரு சந்திப்பு

"எனக்கு என்ன ஆசை என்றால் இவன் எங்கேயாவது சிக்குவான்; நேரே கேட்க வேண்டும்'' என்று மக்கள் முன்னிலையில் முழங்கிய ஸைபுத்தீன், எதிர்பாராத விதமாக 29.01.1989 அன்று நாகர்கோவிலில் பி.ஜே. அவர்களைச் சந்தித்த போது திடுக்கிட்டு ஊமையானார்.

"விவாதம் தொடர்பாக இப்போதே கையெழுத்துப் போடுவோம்'' என்று பி.ஜே. கூறிய போது, நாளைக்கு வருகிறேன் என்று கூறிச் சென்றார். பிறகு, வர முடியவில்லை என்று கடிதம் அனுப்பினார். (இந்தச் சந்திப்பின் போது நடைபெற்ற உரையாடல் விபரத்தை, இக்கட்டுரையின் இறுதியில் இடம்பெற்றுள்ள "இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்'' என்ற பிரசுரத்தில் பார்வையிடுக!)

எதற்கும் தயார்

தக்லீத், தராவீஹ் நிலைப்பாடு பற்றியும், நடுவர் பற்றியும் விளக்கம் கேட்டு ஸைபுத்தீன் ரஷாதி எழுதிய கடிதத்திற்கு 30.01.1989 அன்று பி.ஜே. எழுதிய பதில் கடிதம்:

தராவீஹ் பற்றிய எனது நிலை? என்ன என்ற கேள்விக்கு நான் அந்நஜாத்தில் ஆசிரியராக இருந்த போது வெளியிட்டது தான் எனது கருத்து. மே 86 இதழின் ஒரு பக்கத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அதில் அடிக்கோடிடப்பட்டது தான் எனது நிலை. விபரம் போதவில்லையெனில் தெரிவிக்கவும்.

மத்ஹபுகள் அவசியமில்லை, மத்ஹபுகளின் சட்டங்களாகக் கூறப்படுபவைகளில் குர்ஆன், ஹதீசுக்கு முரண்பட்ட மஸாயில்கள் உள்ளன. பல சட்டங்கள் அந்தந்த இமாம்களால் கூறப்பட்டவை அல்ல என்பது எனது நிலை. இதனடிப்படையில் மத்ஹபுகள் அவசியமா? அது கூடுமா? என்பதை முதலிலும், குர்ஆன் ஹதீசுக்கு முரண்பட்டவைகள் என நான் நினைக்கின்ற மஸ்அலாக்கள் இரண்டாவதாகவும், இமாம்களுக்கும் மத்ஹபுகள் என்று சொல்லப்படுபவற்றில் பல மஸ்அலாக்களுக்கும் எந்த உறவும் இல்லை என்பதை மூன்றாவதாகவும் விவாதிக்க எடுத்துக் கொள்ளலாம்.

நடுவராக அன்வாருல் குர்ஆன் ஆசிரியரும், 33 ஆண்டுகள் கூத்தாநல்லூர் மன்பவுல் உலா அரபிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியரும், ஏறத்தாழ 70 வயது நிரம்பியவருமான மவ்லவி இ.எம். அப்துர்ரஹ்மான் ஆலிம் அவர்களை நான் தேர்வு செய்கிறேன். நடுவர் பிரச்சனையில் எனக்கு மனப்பூர்வமான சம்மதம் இல்லாவிட்டாலும் எதிர் தரப்பு மவ்லவி அவர்கள் நடுவர் அவசியமென்பதாலும், சில தகுதிகள் உடைய எவரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம் என்று கேட்டுக் கொண்டதாலுமே இதற்கு நான் சம்மதிக்கிறேன். நடுவரில் நம்பிக்கை இல்லாவிட்டால் நடுவரின்றி விவாதிக்க எனக்கு ஆட்சேபணை இல்லை.

இ.எம். அவர்களை நடுவராக ஏற்றுக் கொள்ள எதிர் தரப்பு சம்மதித்தால் விரைவில் விவாதம் நடத்திடலாம். அதற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால் இந்தப் பிரச்சனை தீராது. எவரை நடுவராக நியமித்தாலும், அவர் நமது கருத்தையோ, எதிர் தரப்புக் கருத்தையோ ஏற்பவராக இருப்பது திண்ணம். கடைசி வரை இதிலேயே நமது கடிதத் தொடர்புகள் நீடித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழி இருக்காது.

எனவே நடுவரின்றி இரண்டு தரப்பாரும் தத்தமது கருத்துக்களை எடுத்து வைப்போம். மக்கள் முடிவு செய்யட்டும் என்ற நிலை தான் சிறப்பானது. தகராறுகள் ஏற்படாத அளவுக்கு நாம் முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டால் இதை விடச் சிறப்பான வேறு வழி இராது. இ.எம். அவர்களை எதிர் தரப்பு ஏற்காத போது தான் இந்த நிலை. நீங்கள் யோசித்துக் கொள்க!

இது தான் விவாதத்தின் தலைப்பு பற்றிய நிலைப்பாட்டிற்கும், நடுவர் குறித்தும் பி.ஜே. அவர்கள் எழுதிய கடிதம்.

மீண்டும் அதே பல்லவி

இதனிடையே நாகர்கோவில் சந்திப்பு தொடர்பாக பி.ஜே. அவர்களுக்கு ஸைபுத்தீன் ஒரு கடிதம் எழுதுகின்றார். 08.02.89 தேதியிட்ட அந்தக் கடிதம் இதோ:

அன்புள்ள மௌலவி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நலம். நலம் பல விளைக.

நாகர்கோவிலில் தற்செயலாக உங்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. உங்களின் உபசரிப்பு மனதைக் கவர்ந்தது. ஜஸாக்கல்லாஹ்.

நான் ஹம்ஸா தங்கள் அவர்களைக் கலந்து விட்டு, உங்களைச் சந்திப்பதாகக் கூறி வந்தேன். ஆனால் ஹம்ஸா தங்கள் அங்கு வரவில்லை. எனவே இதுபற்றி ஏதும் முடிவு செய்ய இயலவில்லை. எனவே தான் உங்களை மீண்டும் சந்திக்க முயலவில்லை. போன் மூலம் தகவல் தெரிவிக்க விரும்பினேன். ஆனால் வெகு நேரமாகி விட்டபடியால் தக்கலைக்காரர்களால் ஆவன செய்து தர இயலவில்லை.

ஊர் திரும்பியவுடன் உங்களுக்குத் தபால் எழுத எண்ணினேன்.

ஆனால் தொடர் பிரயாணங்கள் (திருச்சி, திருப்பனந்தாள், அதிராம்பட்டிணம்) சென்று தான் பெங்களூர் திரும்பினேன். மீண்டும் இன்று நாம்நாட் செல்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.

எனவே உங்களுக்குத் தாமதமாக, அவசரமாக இத்தபாலை எழுதியுள்ளேன்.

இன்னும் ஓரிரு நாட்களில் ஊர் திரும்புவேன். அது பொழுது விவாதம் பற்றிய முடிவை எழுதுகிறேன்.

உடனிருந்த மவ்லவி ஸைபுல்லாஹ், முஹம்மது அலீ, மதனி ஆகியவர்களுக்கு எனது ஸலாம் உரித்தாகட்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஸைபுத்தீன் கூறியிருந்தார்.

இதனிடையே 04.02.1989 அன்று நமது ஜமாஅத் சார்பில் ஸைபுத்தீன் ரஷாதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுகின்றது. அதில்....

30.01.1989 தேதியிட்ட ஜைனுல் ஆபிதீனின் கடிதம் கண்ட பின் தாங்கள் விவாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் சரி. இல்லையெனில் கடிதத்திலேயே காலம் வீணாவதைத் தவிர்த்து, இம்மாத இறுதியில் ஒன்று, பிரச்சனைக்குரிய தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும். அல்லது விவாதம் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் நடைபெற வேண்டும்.

மேலும் விவாத ஏற்பாட்டில் கலந்து கொள்ளுமாறு கண்ணியத்திற்குரிய மேலப்பாளையம் ஜமாஅத்துல் உலமாவினரை அழைத்தோம். அவர்கள், "விவாதம் செய்யத் தேவையில்லை. எனவே நாங்கள் அதில் ஈடுபட மாட்டோம்'' என்று கூறிவிட்டனர். இன்ஷா அல்லாஹ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கேட்போம். பிறகும் மறுத்தால் உங்கள் நிலையில் மாற்றம் இருக்காது என்று நம்புகிறோம்.

விவாதம் மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல், கல்யாண மண்டபம், பஜார் திடல் இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறும்.

இவ்வாறு நாம் எழுதிய கடிதத்திற்குப் பிறகு ஸைபுத்தீன் ரஷாதியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து, "இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்'' என்ற பிரசுரம் நமது ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்டது.

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஏகத்துவப் பிரச்சாரம் பல முனைகளிலும் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் சில ஆண்டுகளாக ஒருவர் வாய்ச் சவடாலில் இறங்குவதை வாடிக்கையாக்கி வருகின்றார்.

தன்னுடன் நேரடி விவாதத்திற்கு தவ்ஹீத் மவ்லவிகளை, குறிப்பாக சகோதரர் ஜைனுல் ஆபிதீன் அவர்களைப் பலமுறை அழைத்ததாகவும் தவ்ஹீத் அறிஞர்கள் அதை ஏற்காமல் நழுவுவதாகவும் வாய் கூசாமல் மேடைகளில் பேசி வருகிறார்.

விருதுநகர், திருச்சி, காயல்பட்டிணம், மேலப்பாளையம் என்று பல ஊர்களில் நரகல் நடையில் பொய்களை அரங்கேற்றியுள்ளார். எனவே இவரை இனம் காட்டுவதும், இவரது சவடால் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை அடையாளம் காட்டுவதும் நமக்கு அவசியமாகின்றது. அவர் தான் பெங்களூரில் உள்ள தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் என்ற அரபிப் பாடசாலையில் பேராசிரியராக, பேருக்கு ஆசிரியராக இருக்கும் ஸைபுத்தீன் என்பவர்.

சுன்னத் வல்ஜமாஅத் கூடாரம் கலகலத்துப் போய் மக்கள் இந்தப் பூசாரிகளின் பிடியிலிருந்து விடுபடுவதையும், மதத்தின் பெயரால் கிடைத்து வந்த ராஜமரியாதையும், மார்க்கத்தை வியாபாரம் செய்து பிழைத்து அதன் மூலம் பெற்று வந்த வருமானம் அடிபட்டுப் போவதையும் கண்டு, இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக இத்தகைய சவடால்களை அவர் அள்ளி வீசி வருகின்றார். உண்மை நிலையை அறியாத மக்கள் இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முதல்கட்டப் பிரசுரம் வெளியிடப்படுகின்றது.

எல்லா ஊர்களைப் போலவே மேலப்பாளையத்திலும் இந்தப் பேர்வழி சவால் விட்டார்.

"அவனை (பி. ஜைனுல் ஆபிதீனை) அழைத்து வா! அட முட்டாள், தைரியமிருந்தால் நேரடி விவாதத்துக்கு வா! எவன் வேண்டுமானாலும் வா! எப்போது வேண்டுமானாலும் வா! எங்கே நடத்துவது? எப்படி நடத்துவது? என்பதை நீயே முடிவு செய்து கொள். நான் வரத் தயார்'' என்றெல்லாம் அநாகரீக நடையில் சவால் விட்டார்.

இவர் இவ்வளவு அழுத்தமாகச் சவால் விடுகிறாரே! இவர் கூறுவது உண்மையாக இருக்குமோ என்று தவ்ஹீத்வாதிகள் கூட எண்ணுமளவுக்கு உறுதிபட விவாதத்திற்குத் தயார் என்று கூறினார். எனவே அதற்கான முயற்சியில் நாம் இறங்குவோம் என்று எண்ணி, அவரை நெருங்கிய போது தான் அவரது சுயரூபம் தெரிய வந்தது.

சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களைத் தொடர்பு கொண்டு இதுபற்றிக் கூறிய போது அவர், "நான் எப்போதும் தயார். மக்கள் மத்தியில் வைத்து விவாதிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கைப்பட எழுதி ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.

அதையும் இணைத்து இவருக்கு எங்கள் சார்பில் கடிதம் அனுப்பினோம். எங்கள் கடிதத்தில், விவாதிக்கப்படும் விஷயங்கள், விவாதிக்கப்படும் நாள், விவாதம் நடக்கும் இடம் எல்லாவற்றையும் நாங்களே முடிவு செய்து அனுப்பினோம். ஏனென்றால் அதை முடிவு செய்யும் பொறுப்பை மேடையில் எங்களிடமே அவர் ஒப்படைத்திருந்தார்.

இந்தக் கடிதத்திற்கு அவரிடமிருந்து மழுப்பலும் நழுவலும் தான் பதிலாகக் கிடைத்தது. அந்தக் குறிப்பிட்ட தேதியில் அவர் வராததால் வால் போஸ்டர் மூலமும் பொதுக்கூட்டம் மூலமும் மேலப்பாளையம் மக்களிடம் பிரகடனம் செய்தோம். மேலும் ஸைபுத்தீனை விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்றும் சுவரொட்டிகள் மூலம் தெரிவித்தோம்.

இன்று வரை எவரும் அவரை அழைத்து வர முடியவில்லை. பரிசுத் தொகை ரூபாய் 5000 அப்படியே உள்ளது. இதன் பிறகு மேலப்பாளையம் மக்கள் இந்தப் பிராடு பேர்வழியை சரியாகப் புரிந்து கொண்டார்கள். வாங்குகின்ற தொகைக்காகக் கத்தி விட்டுப் போகும் மார்க்க வியாபாரி என்பதைப் புரிந்து கொண்டனர்.

இதன் பிறகு இவருக்குத் தக்கலையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அவர் வரும் போது நாகர்கோவிலில் இறங்கி பள்ளிவாசலுக்குச் சென்றார். அந்தப் பள்ளியில் தான் நமது அரபிக் கல்லூரியும் அல்ஜன்னத் அலுவலகமும் இருந்தது என்பதை அவர் அறியவில்லை. நாகர்கோவில் கலாச்சாரப் பள்ளிக்கு அவர் வந்ததும் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அவருடன் அன்புடன் பேசி தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.

பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. முடிவில் மேலப்பாளையத்தில் அவர் விட்ட சவால் பற்றி பி. ஜைனுல் ஆபிதீன் பேச்சைத் துவக்கினார்.

"உங்கள் சவாலை நான் ஏற்கிறேன். இங்கேயே நாம் பேசி விவாதத்தின் தலைப்பு, விவாதம் செய்யும் நாள், விவாதம் நடக்கும் விதம் எல்லாவற்றையும் கலந்து பேசி ஒரு ஒப்பந்தம் எழுதிக் கொள்வோம். அதன் பிறகு மக்களிடம் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விளம்பரம் செய்வோம்'' என்று பி. ஜைனுல் ஆபிதீன் கூறினார்.

அதற்கு இந்தப் பிராடு பேர்வழி அளித்த பதில் என்ன தெரியுமா? "நான் தயார் தான். ஆனாலும் நெல்லை மாவட்ட ஜ.உ. சபை இதை விரும்பவில்லை. அவர்கள் விரும்பாத போது எப்படிக் கலந்து கொள்வது?'' என்று கேட்டார்.

அப்போது அருகிலிருந்து சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள், "இந்தச் சவால் விடுவதற்கு முன் நீங்கள் ஜ.உ. சபை சார்பாக சவால் விடவில்லை. ஸைபுத்தீனாகத் தான் சவால் விட்டீர்கள். இப்போது இப்படிப் பேசுவது முறையில்லை'' என்று கூறினார்.

"எனக்குப் பெரியவர்கள் அதை விரும்பாத போது நான் எப்படிக் கலந்து கொள்ள முடியும்? வேண்டுமானால் தக்கலைக்கு ஜ.உ. சபையின் தலைவர்கள் கலந்து கொள்ள வருகிறார்கள். அவர்களிடம் கலந்து பேசி நாளை வருகிறேன்'' என்றார்.

இத்தனை காலம் கடந்த பிறகும் இவருக்கு "நாளை' வரவில்லை போலும்.....

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த பிரசுரம் இது தான்.

இதற்குப் பிறகு ஒரு நீண்ட தொய்வு.

ஸைபுத்தீன் ரஷாதியிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. ஆனாலும் நாம் விடாது துரத்திக் கொண்டு இருந்தோம். ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு கடிதம் அனுப்புகின்றோம்.

அதன் விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

அரங்கேறிய பொய்கள் அம்பலமான பித்தலாட்டங்கள்
விவாத சவடால் விடுவதும் விவாதத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய முன் வந்தால் தலைதெறிக்க ஓடுவதும் அதன்பின் "இவர்கள் ஓடிவிட்டார்கள்' என்ற தலைப்பில் நாடகம் நடத்துவதும் ஸைபுத்தீன் ரஷாதியின் அன்றாட பணிகளாகும்.  இப்பணியை செவ்வனே நிறைவேற்றி வந்த ஸைபுத்தீன் ரஷாதி, மரைக்காயர் பட்டிணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது வழக்கம் போல தனது விவாத நாடகக் காட்சியை அரங்கேற்றவும், அப்பகுதியிலுள்ள நமது ஜமாஅத் சகோதரர்கள் அவரை கோழிக்குஞ்சை அமுக்குவது போன்று மடக்கி விவாத ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தார்கள்.

ரஷாதியின் முகத்திரையைக் கிழித்தெறிய விவாதம் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கம் நமக்கு இருந்ததால், ரஷாதி விதித்த நிபந்தனைகளில் "விவாதத்தில் பி.ஜே மட்டும் தான் பேச வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ஏற்று, 101 தலைப்புகளில் விவாதம் நடைபெறுவதாக ஒப்பந்தமானது. அதனடிப்படையில் திருச்சியில் கடந்த பிப்ரவரி 2, 3, 4 ஆகிய தினங்களில்,

இஜ்மா மார்க்க ஆதாரமாகுமா?

மார்க்கம் சொல்வதில் பி.ஜே பொய்யரா? ஸைபுத்தீன் ரஷாதி பொய்யரா?

ஆகிய இரு தலைப்புகளில் விவாதம் இறையருளால் இனிதே நடை பெற்றது.

இவ்விவாதத்தில் எந்த ஒரு தலைப்பிலும் தனது கருத்தை ரஷாதியால் தக்க ஆதாரத்துடன் நிலைநாட்ட இயலவில்லை. அதிலும் முதல் தலைப்பான இஜ்மா மார்க்க ஆதாரமாகுமா? என்பதில் இஜ்மா மார்க்க ஆதாரம் என்பதற்குக் குர்ஆனிலும், ஹதீஸிலும் ஆதாரங்கள் கிடையாது என்பதைத் தனது வாயாலேயே ஒப்புக் கொண்ட பரிதாபமும் நடந்தது.

இரண்டாம் தலைப்பான மார்க்கம் சொல்வதில் பி.ஜே. பொய்யரா? ஸைபுத்தீன் ரஷாதி பொய்யரா? என்பதில் பி.ஜேவின் முரண்பாடுகள் என்ற பெயரில் அவர் முன்வைத்த அத்தனை சொத்தை வாதங்களுக்கும் தகுந்த பதில் அளிக்கப்பட்டது. அது மட்டுமின்றி விவாதக் களத்தில் அவர் பேசிய பேச்சிலிருந்தே முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் ஸைபுத்தீன் ரஷாதி என்பதையும், மார்க்கம் சொல்வதில் ரஷாதி துணிந்து பொய்களை சொல்லக்கூடியவர் என்பதையும் இறையருளால் சந்தேகமற நிரூபிக்கப்பட்டது.

மார்க்கம் சொல்வதில் ரஷாதி ஒரு பொய்யர், கொஞ்சமும் மன உறுத்தலின்றி நபிகளாரின் மீதே பொய், புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவர் என்பதற்கான ஆதாரங்களை, விவாதக் களத்தில் பி.ஜே. அவர்கள் முன்வைத்து நிரூபித்த ஆதாரங்களை முதலில் தொகுத்து வழங்குகிறோம்.

அதற்கு முன் மார்க்கம் சொல்வதில் பொய்யுரைப்பவரைப் பற்றி மார்க்கம் சொல்வதென்ன என்பதை அறிவோம்.

நபியின் மீது பொய்

நபி (ஸல்) அவர்கள் மீது ஒருவர் பொய் சொல்வது அவர் நரகில் நுழைவதற்குப் போதுமான ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது  பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர்: அலீ (ரலி),

நூல்: புகாரி 106

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று.  யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: முகீரா (ரலி)

நூல்: புகாரி 1291

ஒருவர் நபிகளாரின் மீது பொய் சொல்வாரேயானால் அதுவே அவரை நரகிற்கு இழுத்துச் செல்லும் என்று மார்க்கம் சொல்கிறது.

நபிகளாரின் இந்த எச்சரிக்கையைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சகட்டு மேனிக்கு வாயில் வந்ததையும் கண்ணில் கண்டதையும் நபியின் பெயரைப் பயன்படுத்திப் பொய்யுரைப்பதைத் தனது வாடிக்கையாகவே கொண்டிருப்பவர் இந்த ரஷாதி. விவாதக் களத்தில் ரஷாதியின் இந்த முகமூடி எப்படிக் கிழிந்தது என்பதை இனி அறிவோம்.

உறுதிப்படுத்திய ஊமை ஷைத்தான்

நபிகள் நாயகம் கூறாததை, நபிகள் நாயகம் கூறினார்கள் என்று மக்களுக்கு மத்தியில் திட்டமிட்டுப் புனைந்து, அசட்டு தைரியத்தோடு ரஷாதி சொல்லிய பல புருடா செய்திகளை (வீடியோ கிளிப்ஸ்) அவர் பேசிய ஐந்தாறு குறுந்தகடுகளிலிருந்து இரண்டாம் தலைப்புக்காக நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தோம்.

இந்நிலையில் முதல் தலைப்பில் முதல் நாளன்று இஜ்மா தொடர்பாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பொய்யர் ரஷாதி  "ஸஹாபாக்கள் ஒரு சட்டத்தை இயற்றி அது தவறாக இருந்திருந்தால் ஏனையோர் மௌனமாக இருக்க மாட்டார்கள்'' என்று சொல்லி பின்வருமாறு ஒரு ஹதீஸ் இருப்பதாக சொன்னார்.

"(தீமை நடைபெறும் போது) யார் சத்தியத்தைச் சொல்லாது மௌனம் காக்கிறானோ அவன் ஊமை ஷைத்தான் ஆவான்'' என நபிகள் நாயகம் கூறினார்கள்.

இந்த ஹதீஸை (?) சொல்லி ஸஹாபாக்கள் இந்த ஊமை ஷைத்தானுடைய செயலைச் செய்வார்களா? என்று பேசும் ஷைத்தான் கர்ஜித்தார்.

(ரஷாதியின் இக்கேள்விக்கும், மௌனமாக இருப்பது மட்டுமே அங்கீரமாகுமா? என்பதற்கும் விரிவான முறையில் பதில் அளிக்கப்பட்டது)

இச்செய்தியின் கருத்து சரியாக இருந்தாலும் நபியின் பெயரைப் பயன்படுத்திச் சொல்வதாக இருந்தால் உண்மையில் உறுதியான செய்தியின் அடிப்படையில் தான் சொல்லவேண்டும்.

ரஷாதிக்கு அதைப் பற்றியெல்லாம் துளியும் அக்கறை இல்லை என்பதை நாம் நன்கு அறிந்ததால் இப்படியொரு செய்தியை நபிகள் நாயகம் கூறியுள்ளார்களா? என்று பார்த்த போது நபிகள் கூறியதாக ஒரு பலவீனமான செய்தி கூட இல்லை என்பது உறுதியானது. ஏன்? இச்செய்தியை ஸஹாபாக்கள் கூறியதாகக் கூட இல்லை.

மாறாக அபூ அலி என்ற கவிஞர் கூறியதாகத் தான் இச்செய்தி உள்ளது.

 (தீமை நடைபெறும் போது) யார் சத்தியத்தைச் சொல்லாது மௌனம் காக்கிறானோ அவன் ஊமை ஷைத்தான் ஆவான் என அபூ அலி தகாக் கூறினார்.

நூல்: ரிஸாலதுல் குஷைரி, பாகம் 1, பக்கம் 57

இதைத் தான், "நபியவர்கள் சொன்னார்கள்' என்று புருடா விட்டுள்ளார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விவாதக் களம் என்பது சாதாரண ஒன்றல்ல, பல அறிஞர் பெருமக்கள், பொதுமக்கள் கூடியிருக்கிற சபையாகும். அது மட்டுமின்றி நேரலை மூலமாக உலகின் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டும் உள்ளனர். இந்த இடத்தில் ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால் தீர ஆராய்ந்து சொல்ல வேண்டும் அல்லவா?

இப்படியொரு இடத்தில் அல்லாஹ்வின் பயமும் இல்லாமல், சபையோர் பயமும் இன்றி, நபியவர்கள் சொல்லாததை நபி சொன்னார் என்று நா கூசாமல் சொல்வாரேயானால் எவ்வளவு நெஞ்சழுத்தமுள்ளவராக இருக்க வேண்டும்? ஏனைய பொதுமக்களுக்கு மத்தியில் இது போன்று எத்தனை சொந்தச் சரக்குகளை ஹதீஸ்களாகச் சொல்லியிருப்பார் இந்த ரஷாதி? என்பதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.

அந்தர் பல்டிகளும் ஆகாசப் புளுகுகளும்

இச்செய்தியை நபிகள் நாயகம் கூறியதாகக் கூறுவது திட்டமிட்ட பொய். நபிகளார் இவ்வாறு கூறினார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமாஎன்று நாம் கேள்வி எழுப்ப உடனே அடித்தாரே பார்க்கலாம் அந்தர் பல்டி.

ஸஹாபாக்கள் சொன்னார்கள் என்று உள்ளது, அதைத் தான் நபிகள் சொன்னதாகக் கூறிவிட்டேன் என்றார் முதலில்.

"இதைக் கூறிய ஸஹாபி யார்? அவர் ஸஹாபி இல்லையே!' என்று நாம் மடக்கியபோது, "இல்லையில்லை, அவர் ஸஹாபியில்லை, ரழியல்லாஹு அன்ஹு என்று எழுதியிருந்ததால் எனக்கு ஸஹாபி போன்று தெரிந்தது. அதனால் ஸஹாபி என நினைச்சு சொன்னேன்' என்று ரஷாதியிடத்தில் அடுத்த பல்டி.

உண்மையில் ரழியல்லாஹு அன்ஹு என்று அந்தப் புத்தகத்தில் இல்லை, அச்செய்தியை அவரது ஆட்கள் கைப்பட எழுதும் போது குறிப்பிட்ட பெயருடன் சேர்த்து ரழியல்லாஹு அன்ஹு என்று எழுதி விட்டார்கள். அப்படிக் கைப்பட எழுதிய பேப்பரைத் தான் நம்மிடமும் தந்தார்கள். இதை வைத்துத் தான் ஸஹாபி என்று நினைத்தாராம்.

அடுத்து, "நபிகளார் சொன்னார்கள் என்று ஹதீஸ் உள்ளது தெரியும்; ஆனால் எங்கு உள்ளது என்று முதலில் தெரியவில்லை. இப்போது தேடிப் பார்த்தேன். இதோ ஹதீஸ் உள்ளது' என்று ஃபிக்ஹ் சுன்னாவில் உள்ளதையும், கஷ்புல் அஸ்ராரில் உள்ளதையும் மறுநாள் மேற்கோள் காட்டினார்.

அதில், "நபிகள் நாயகம் கூறியதாகச் சொல்லப்படுகின்றது' என்று தான் உள்ளது, ஹதீஸ் என்று சொல்லத் தகுந்த, முழுமையான அறிவிப்பாளர் தொடர் அதில் இல்லை, இதைத் தான் ஆதாரமாகக் காட்டினார். பிறகு அதிலிருந்தும் பின்வாங்கினார். இப்படி ஊமை ஷைத்தான் விஷயத்தில் பலவாறாகப் பல அந்தர் பல்டிகள் அடித்தார்.

இவர் ஹதீஸ்களைப் பார்த்து உறுதி செய்து விட்டுப் பிறகு சொல்பவர் அல்ல, வாயில் வந்ததை நபிகளார் பெயரில் சொல்லி விட்டுப் பிறகு அப்படி ஹதீஸ் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பவர் என்ற ரஷாதி பற்றிய நமது நிலைப்பாட்டை இந்த ஊமை ஷைத்தான் சம்பவம் உறுதி செய்தது.

மேலும் அவர் செய்த தவறை உள்ளங்கை நெல்லிக்கனியாய் அவருக்கு விளக்கினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் சிறிதும் அவருக்கு இல்லை என்பதும் வெளிப்பட்டது.

தான் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காக அறிவிப்பாளர் தொடர் ஏதுமில்லாமல் உள்ள பொய்யைக் கூட தனக்கு ஆதாராமாகக் காட்டும் கீழ் நிலைக்குச் செல்வார் என்பதையும் இது உணர்த்தியது.

இரண்டாவது பொய்

ஊமை ஷைத்தான் சம்பவத்தை அடுத்து, நாம் ஏற்கனவே வைத்துள்ளநபிகளார் மீது ரஷாதி இட்டுக்கட்டியிருந்த பொய் மூட்டைகளிலிருந்து ஒவ்வொன்றாகப் போட்டோம். பொதுவாக ரஷாதியின் இது போன்ற பொய்யான செய்திகள் யாவும் வெளிநாடுகளில் அவர் ஆற்றிய உரைகளில் அதிகமாகவே காணப்படுகின்றது. அது போன்ற  ஒரு உரையில் நபிகளாரின் குடும்பத்தாரை நேசிப்பதைப் பற்றிச் சொல்லும் போது ரஷாதி அள்ளிவிட்ட பொய் பின்வருமாறு:

ஒரு மனிதர் நபிகள் நாயகத்திடம் வந்து மறுமை நாளைப் பற்றிக் கேட்கும் போது நபிகள் நாயகம், "நீ அதற்காக என்ன தயாரித்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்க அம்மனிதர், "நாயகமே நான் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்  நேசிப்பதைத் தவிர பெரிதாக ஒரு தயாரிப்பும் என்னிடம் இல்லை' என்கிறார். அதற்கு நபிகளார், "நீ யாரை நேசிப்பாயோ மறுமை நாளில் அவருடன் இருப்பாய்' என்று கூறினார்கள்.

இதன் அரபி வாசகங்களை எல்லாம் சொல்லி நபிகளாரின் குடும்பத்தாரை நேசிப்பது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்று ரஷாதி பேசுகிறார்.

ரஷாதி சொன்ன இச்சம்பவத்தை வீடியோ கிளிப் ஆதாரத்தோடு எடுத்துக் கூறி இப்படி ஒரு ஹதீஸ் இல்லை; இருந்தால் இதற்கான ஆதாரத்தைத் தாருங்கள் என்று விவாதக் களத்தில் கேட்டோம்.

அதற்கு ரஷாதி, நபியின் குடும்பத்தாரை நேசிப்பது பற்றிய பொதுவான செய்திகளை எடுத்துத் தந்தாரே ஒழிய நபியின் குடும்பத்தாரை நேசிப்பது பற்றி அவர் எந்தப்  பொய்யான செய்தியைக் குறிப்பிட்டாரோ, மேற்கண்ட அந்தச் செய்திக்குரிய ஆதாரத்தை அவரால் விவாத இறுதி வரை எடுத்து தர முடியவே இல்லை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம், நபியின் குடும்பத்தாரை நேசிக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. நாம் முன்னரே குறிப்பிட்ட படி ஒரு சம்பவத்தை நபியின் பெயரில் சொல்வதாக இருந்தால் அதற்குத் தகுந்த ஆதாரம் இருக்க வேண்டும். இவர் குறிப்பிட்டதற்குத் தகுந்த எவ்வித ஆதாரமும் இல்லை.

ஆனால் இவர் குறிப்பிடுவது போன்ற வேறொரு செய்தி புகாரியில் பின்வருமாறு உள்ளது.

கிராமவாசிகüல் ஒருவர் நபி (ஸல்) அவர்கüடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முன்முயற்சி செய்துள்ளாய்?'' என்று  கேட்டார்கள். அவர் "நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை; ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்று பதிலüத்தார். நபி (ஸல்) அவர்கள், "(அப்படியானால்) நீ யாரை நேசிக்கின்றாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!'' என்றார்கள். உடனே நாங்கள், "நாங்களும் அவ்வாறுதானா?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று சொன்னார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

புகாரி 6167

நபிகள் நாயகத்திடம் வருகின்ற மனிதர், "நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றேன்' என்று சொன்னதாகத் தான் புகாரி, முஸ்லிம் உள்பட அனைத்து ஹதீஸ் கிரந்தங்களிலும் உள்ளது. ஆனால் இந்த ஸைபுத்தீன் ரஷாதி இந்த ஹதீஸை அப்படியே தனது கருத்திற்குத் தோதுவாக திரித்து, ஹதீஸில் இல்லாத வாசகங்களைச் சேர்த்து, "நாயகமே! நான் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்  நேசிக்கின்றேன்' என்று வேண்டுமென்றே நபியின் பெயரில் புனைந்து சொல்லியுள்ளார்.

இச்செய்தியை எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தும் விவாத இறுதி வரை எந்தப் பதிலும் இல்லை.

தனது சொந்தச் சரக்கை நபியின் மீது இட்டுக்கட்டிச் சொல்வது இவருக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதும், அதை ஹதீஸ் என்று எண்ண வைப்பதற்காக அரபி வாசகங்களை எல்லாம் சொல்லி சினிமா நடிகர்களை மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும், இதற்கு அவர் விவாதத்தில் பதிலளிக்காமல் பல் இளித்ததிலிருந்து அறிவுடைய மக்கள் புரிந்து கொண்டனர்.

மூன்றாவது பொய்

ஸைபுத்தீன் ரஷாதி ஒரு உரையின் போது அன்பளிப்பை பற்றிப் பேசுகிறார். நமக்கு வழங்கப்படும் அன்பளிப்பை மறுக்க கூடாது என்ற கருத்தைக் குறிப்பிடும் போது, தனது கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக நபிகள் நாயகத்தின் பெயரால் மற்றுமொரு பொய்யை கட்டவிழ்த்து விடுகிறார்.

"எதிர்பாராமல் வரும் அன்பளிப்பை மூன்று முறைக்கு மேல் மறுக்க கூடாது. மறுத்தால் இறைவனின் ரிஸ்க் தடையாகிவிடும்'' என்று ஹதீஸ்களின் கருத்தை பெரியவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள் என்கிறார்.

இதன் ஆதார வீடியோ கிளிப்பை ஓடச் செய்து, அன்பளிப்பை மூன்று முறைக்கு மேல் மறுக்கக்கூடாது என்ற நபிகளாரின் ஹதீஸை எடுத்துக்காட்ட முடியுமா? என்று கேட்டோம்.

அவர் மானமுள்ளவராக, உண்மையாளராக இருந்திருந்தால் தன்னை நபியின் மீதே பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டுகிறார்களே? நான் அப்படிப்பட்டவன், இல்லை இதோ நான் பேசியதற்கான ஆதாரம் என்று அப்படி ஒரு ஹதீஸைக் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இறுதி வரை இதைப்பற்றி மூச்சுக் கூட விடவில்லை என்பது ஸைபுத்தீன் ரஷாதியின் சிறப்புத் தன்மை! இந்த அன்பளிப்பு விவகாரத்திலும் நபியின் மீது பொய் சொல்வது தனக்குக் கை வந்த கலை என்பதை ரஷாதி சந்தேகமற நிரூபித்தார்.

நான்காவது பொய்

நபிகள் நாயகத்தின் மீது ரஷாதி இட்டுக்கட்டும் அடுத்த பொய்யைப் பார்ப்போம்.

"அல்லாஹ்வின் பண்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபிகள் நாயகம் கூறினார்கள்'' என்று ஒரு உரையில் ரஷாதி கூறுகிறார்.

இந்த வீடியோ கிளிப்பை ஒளிபரப்பி, "இந்த ஹதீஸ் எங்கு உள்ளது? ஆதாரத்தைத் தாருங்கள்' என்று கேட்டோம். காரணம், இப்படி ஒரு ஹதீஸ் முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை, ஒரு பலவீனமான ஹதீஸ் கூட இல்லை.

மேலும் அல்லாஹ்வின் பண்புகளை நாம் எப்படி எடுத்து வாழ முடியும்? அல்லாஹ்வுக்குத் தூக்கமில்லை, சோர்வு இல்லை, பசியில்லை, பலவீனமில்லை, குடும்பமில்லை. இத்தகைய பண்புகளைக் கொண்ட இறைவனைப் போன்று நம்மால் வாழமுடியுமா?

அவனைப் போல் எதுவும் இல்லை. (அல்குர்ஆன் 42:11) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. இப்படியிருக்கும் போது, இத்தகைய கருத்தை எப்படி நபிகள் நாயகம் கூறியிருப்பார்கள்?

எனவே இதுவும் ரஷாதியின் சித்து வேலைகளில் ஒன்று என்பதை உறுதியாகப் புரிந்து கொண்டு தான் இதற்கான ஆதாரத்தைத் தாருங்கள் என கேட்டோம்.

ஆதாரம் என்று அவர் தரப்பிலிருந்து தரப்பட்ட பிரிண்ட் பேப்பரைப் பார்த்தால் ஏதோ ஒரு புத்தகத்தின் பொருளடக்கம் தான் இருந்தது, அதாவது அந்தப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள், பகுதிகள் உள்ளது, அதன் ஆசிரியர் யார், பதிப்பகம் யாருடையது உள்ளிட்ட விபரங்கள் இருந்ததே தவிர குறிப்பிட்ட ஹதீசுக்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை.

ஆதாரம் என்ற பெயரில் இப்படி சிறுபிள்ளைத்தனமான, மூளைக்குச் சம்பந்தமில்லாத செயலைச் செய்தாரே தவிர நாம் கேட்ட ஆதாரத்தை அவர் தரவில்லை. நாம் கேட்ட இக்கேள்விக்கு முறையான எந்தப் பதிலும் இறுதி வரை அவரிடம் இல்லை.

இங்கே ஒரு மார்க்க அறிஞருக்கு இறைவன் கூறிய இலக்கணத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

அல்குர்ஆன் 35:28

இறை பயத்தை முன்னிறுத்தி தமது வாழ்வை, பிரச்சாரத்தை அமைப்பது மார்க்க அறிஞரின் இன்றியமையாத கடமை. நபிகள் நாயகம் கூறினார்கள் என்று ஒரு ஹதீஸைச் சொல்வதாக இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? இது நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைக் காக்கக் கூடியதா என்றெல்லாம் நாம் ஆய்வு செய்து சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஸைபுத்தீன் ரஷாதியோ கண்டதையெல்லாம் ஹதீஸ் என்று துணிந்து  ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால் இவரிடம் இறை பயமுள்ளதா? இதுதான் மார்க்க அறிஞருக்கான இலக்கணமா?

இறைவனுடைய பயமில்லாமல் வாயில் வந்ததையும் கேள்விப்பட்டதையும் நபிகள் நாயகத்தின் மீதே இட்டுக்கட்டி பொய் சொல்லத் துணிந்து விட்ட இவர் மார்க்கம் சொல்லத் தகுதி பெற்றவரா? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இன்னும் பொய்கள் அம்பலமாகும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM MAR 2013