May 13, 2017

மஹ்ஷரில் மனிதனின் நிலை

மஹ்ஷரில் மனிதனின் நிலை

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி

மங்கலம்

ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன.

அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன் 99:6-8)

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்'' என்று கூறியதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம் (5518)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால், அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்'' என்று கூறியதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம் (5519)

கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

மனிதர்களின் பொதுவான நிலை

இந்த உலகத்தில் பிறக்கும் போது மனிதர்கள் எவ்வாறான நிலையில் இருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய நாளில் அனைவரும் இருப்பார்கள். ஆடை அணியாதவர்களாக, செருப்பு போடாதவர்களாக, விருத்தசேதனம் செய்யாதவர்களாக பரந்து விரிந்த நிலப்பரப்பில், பரிதவித்த நிலையில் நின்று கொண்டிருப்பார்கள். நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள், நூதனவாதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் இந்த நிலையில் தான் இருப்பார்கள். இவ்வாறு எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் எல்லா மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள். இதற்குரிய ஆதாரங்களை இப்போது காண்போம்.

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

(அல்குர்ஆன் 21:104)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), "மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு "எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்'' எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.  பிறகு, "அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாüல் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் (5102)

கெட்ட மனிதர்களின் நிலை

பூமியில் வாழும் காலத்தில் நாமெல்லாம் ஓரிறைவனை ஏற்றுக் கொண்டு நல்ல காரியங்கள் செய்கிறோமா? தீய காரியங்கள் செய்கிறோமா? என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான். இதைத் தெரிந்தும் தெரியாமலும் பலர் தமக்கும் சமுதாயத்துக்கும் தீங்கு தரும் காரியங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறர் நலம் மறந்து, மறுத்து சுயநலத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் தவறான குணத்தாலும் காரியத்தாலும் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மக்கள், இவ்வுலகில் தாங்கள் செய்த குற்றங்களுக்கு, பாவங்களுக்குத் தோதுவாக மறுமையில் சில வகையான நிலைகளில் நிறுத்தப்படுவார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

இறைமறுப்பாளர்களின் நிலை

இறைவன் கொடுத்த பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல் அவனை மறுத்துக் கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்று, இறைவன் இருப்பதாக நம்பினாலும் அவனைச் சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாமல் அவனுக்குரிய ஈடு இணையற்ற இடத்தில் மற்ற படைப்பினங்களை வைத்து அல்லது அவை இருக்கும் இழிவான நிலைக்கு இறைவனை தரம் தாழ்த்தி மகிழும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.

மறுமை நாளில் மஹ்ஷரில் இவர்களுக்கென்றே குறிப்பிட்ட சில வகையான நிலைகள் இருக்கின்றன. எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத அந்த நாளில் இவர்களின் முகமெல்லாம் கருத்து, புழுதிப் படிந்து, சோகமாக இருக்கும். என்ன நடக்கப் போகிறதோ? என்ற பீதியில் பதறியவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களது முகம் கவிழ்ந்த நிலையில் இறைவனிடம் இழுத்துச் செல்லப்படுவார்கள். இதற்குரிய ஆதாரங்களைக் காண்போம்.

அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.

(அல்குர்ஆன் 80:37-42)

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். "நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!'' என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்).

(அல்குர்ஆன் 3:106, 107)

சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது "மந்திரிப்பவன் யார்?'' எனக் கூறப்படும். "அதுவே பிரிவு'' என்று அவன் விளங்கிக் கொள்வான். காலோடு கால் பின்னிக் கொள்ளும்.  அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான். பின்னர் தனது குடும்பத்தினருடன் கர்வமாகச் சென்றான்.

(அல்குர்ஆன் 75:22-33)

முகம் கவிழச் செய்து நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழி கெட்டோராகவும் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 25:34)

ஒருமனிதர் "அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாüல் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "இந்த உலகில் அவனை இரு கால்கüனால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாüல் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?'' என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: புகாரி (4760)

போதனையை புறக்கணித்தவர்களின் நிலை

ஒவ்வொரு முஸ்லிமும், தம்மிடம் மார்க்கம் சம்பந்தமாக ஒரு செய்தி சொல்லப்படும் போது அந்தச் செய்தி சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவராகத் திகழ வேண்டும்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்; இந்த இரண்டுக்கு உட்பட்டே நமது அமல்கள் இருக்க வேண்டும் என்று மார்க்கச் செய்திகளை நாம் எடுத்துரைக்கும் போது காது கொடுத்துக் கேட்கவே மறுக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் செய்து வரும் பித்அத்கள், அனாச்சாரங்களுக்கு எதிராக எடுத்துக் காட்டப்படும் மார்க்க ஆதாரங்களை ஏறெடுத்துப் பார்க்கவே தயங்குவதைப் பார்க்கிறோம்.

தாங்கள் செய்து கொண்டும் பிறருக்குப் போதித்துக் கொண்டும் இருக்கின்ற காரியங்கள் தவறானவை என்று தெரிந்த பிறகும் அத்தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதற்கு முன்வராத பிடிவாதக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்திருக்கும் செய்திகளை பொடும்போக்குத்தனமாகப் புறந்தள்ளும் மக்கள் மறுமையில் செவிடர்களாக குருடர்களாக ஊமைகளாக நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு இறைமறையில் ஏக இறைவன் எச்சரிக்கிறான்.

அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம். நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், "நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?'' என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.

(அல்குர்ஆன் 17:97, 98)

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக எழுப்புவோம். "என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று அவன் கேட்பான். "அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.

அல்குர்ஆன் (20:124-126)

கொலையாளிகளின் நிலை

தினமும் செய்தித் தாள்களில் கொலை பற்றிய நிகழ்வுகள் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன. காசு, போட்டி, பொறாமை, கள்ளத்தனம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கொலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொலையெனும் பாதகச் செயலில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். பல சம்பவங்களில் கொலையாளி யாரென்றே தெரிவதில்லை. இதற்காகப் பிடிபடும் சிலரும் பெயரளவுக்கு மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டவருடைய குடும்பத்தினருக்கும் போதிய உரிமை, நியாயம் கிடைப்பதில்லை.

ஆனால், மறுமை நாளில் கொலையாளிகள் தப்பிக்க இயலாது. கொல்லப்பட்டவருக்குச் சரியான நியாயம் வழங்கப்படும். கொலையாளிகள் இனம் காட்டப்படுவார்கள். எல்லா மக்களுக்கும் முன்னிலையில் கொலையாளிகள் தங்களால் கொல்லப்பட்டவர்கள் மூலம் மறுமை நாளில் முடியைப் பிடித்து இழுத்துவரப்படுவார்கள்.

(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, "என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்' என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதீ (2955)

நீதம் செலுத்தாதவர்களின் நிலை

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்.

மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள். இதையறிந்த பிறகாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?

"எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: நஸாயீ (3881)

வட்டிக்காரர்களின் நிலை

வட்டி என்பது ஒரு தனி மனிதனுக்கு மட்டும் தீமை தரக்கூடியதல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கைத் தரும் பெரும்பாவமே வட்டியாகும். வட்டியினால் பலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏராளமான தீமைகள், பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.

இப்படிப்பட்ட வட்டியினால் மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை; எனக்கு உலக ஆதாயமே முக்கியம் என்று சுயநலத்தோடு பொதுநலத்தை மறந்து பல மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இழிவு என்ன தெரியுமா? பூமியில் வாழ்ந்த முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர்கள் வரை எல்லோரும் நிற்கும் மாபெரும் சபையில் பைத்தியமாக உளறிக் கொண்டிருப்பார்கள்; புலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட கேவலம் வேண்டுமா? என்பதை வட்டி வாங்குபவர்கள் யோசிக்க வேண்டும்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் (2:275)

யாசகம் கேட்பவர்களின் நிலை

குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும்; மற்றவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்குச் சோம்பல்படும் சிலர், பிறரிம் யாசகம் கேட்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியமான கை கால்கள் இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்டு ஊரெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி மற்றவர்களுக்கு மத்தியில் சுயமரியாதை இழந்து குறுக்கு வழியில் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிச்சையெடுப்பவர்கள், மறுமையில் மிகவும் மோசமான நிலையைச் சந்திப்பார்கள். நல்ல விதமாக இருந்தும் பிச்சையெடுக்கிறோமே? நாலுபேர் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்களே? என்ற நாணமில்லாதவர்கள், மறுமையில் முகத்தில் சிறிதளவும் சதையின்றி அருவருப்பான தோற்றத்தில் மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள். உடலெங்கும் சதை இருந்து, முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சதையில்லாமல் வெறும் எலும்பாக இருந்தால் எந்தளவிற்கு சகிக்க முடியாத தோற்றமாக இருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (1474, 1475)

மேசாடி செய்பவர்களின் நிலை

இறையச்சம் இல்லாமல் பிறருக்குரிய பொருளாதாரத்தை, பொருட்களை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை வாழும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை அபகரிக்கும் மோசடிக்காரர்கள் சமுதாய மக்களிடத்தில் இருந்து மறைந்து கொள்ளலாம்; தங்களது மோசடியை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மறுமை நாளில்  இவ்வாறு தப்பிக்க இயலாது. இவர்களின் முகத்திரையை மற்றவர்களின் முன்னிலையில் வல்ல இறைவன் கிழித்தெறிவான்.

இத்தகைய மோசடி மன்னர்களுக்கு பல இழிவான நிலைகளைக் கொடுத்து கேவலப்படுத்துவான். மோசடிக்காரர்கள் தாங்கள் செய்த மோசடிப் பொருட்களைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்களை இனம் காட்டும் விதமாக அவர்களுக்கு அசிங்கமான முறையில் கொடி ஒன்று குத்தப்பட்டிருக்கும். இவ்வாறான வெட்கக்கேடான நிலையில் வெட்டவெளி மைதானத்தில் மற்றவர்களுக்கு மத்தியில் உலாவந்து கொண்டிருப்பார்கள். இந்த அவலத்தை அறிந்து கொண்டால் நிச்சயமாக யாரும் மோசடி செய்வதற்குக் கடுகளவும் நெருங்க மாட்டார்கள் என்பதே உண்மை.

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:161)

அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்'' என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது - "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அவர், "தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3743, 3266)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு  மறுமை நாüல் (அவனுடைய மோசடியை  வெüச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது "இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (6178, 6177)

நபி (ஸல்) அவர்கள் எங்கüடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, "மறுமை நாüல் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாüல்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது   நான், "என்னால் உனக்கு எந்த உதவியும்  செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாüல்) தன் கழுத்தில் வெள்üயும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்'’என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு  (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது  நான், "என்னால் உனக்கு எந்த உதவியும்  செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (3073)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

அறிவிப்பவர்: சயீத் பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி (2452)

ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை

மார்க்கம் கூறும் கடமைகளுள் முக்கியமான ஒன்று ஜகாத் ஆகும். முஸ்லிம்களாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் தங்களது செல்வத்தில் இருந்து சிறு பகுதியை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இந்தப் பொதுநலத்தைப் போதிக்கும் ஒப்பற்ற திட்டமே ஜகாத். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் பெரும் பொடும்போக்காக இருக்கிறார்கள்.

ஜகாத் எனும் கடமையை மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜகாத் விஷயத்தில் கடமையை புறக்கணித்தவர்கள், தூதரின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுமையில் மோசமான நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களை மஹ்ஷரிலேயே அல்லாஹ் அடையாளம் காட்டுவான். எதற்கெல்லாம் இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அவற்றை சுமந்து கொண்டிருப்பார்கள். ஜகாத் கொடுக்கப்படாத செல்வங்களால் சூடுபோடப்படுவார்கள். முறையாக ஜகாத் கொடுக்கப்படாத செல்வம் உருமாற்றப்பட்டு அதனால் வேதனைப் செய்யப்படுவார்கள். இதை முஃமினாக செல்வந்தர்கள் கவனத்தில் கொள்வார்களா? தங்களை மாற்றிக் கொள்வார்களா?

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1402)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது உயிர் எவன் கையிலுள்ளதோ' அல்லது "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ' அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும்.  அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும்.  இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி (1403, 4659, 1403, 1460)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு, "அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், "அது தங்களுக்கு நல்லது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1403), திர்மிதீ (2938)

உங்களது கருவூலம் மறுமைநாüல் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (4659)

"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: முஸ்லிம் (1803)

EGATHUVAM AUG 2013