May 3, 2017

சான் ஓட்டமும் ஜாக் வாட்டமும்

சான் ஓட்டமும் ஜாக் வாட்டமும்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஓர் அபாரமிக்க வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. கழுத்தறுப்புக்கள், காலை வாருதல், முதுகில் குத்தல், முடமாக்கும் முயற்சிகள் அத்தனையையும் தாண்டி இந்த இயக்கம் அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கின்றது; சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது.

நாம் இதற்கு முன்பு உருவாக்கிய அமைப்புக்கள், நமது சரிவிலும் சாவிலும் குறியாக, வெறியாக இருக்கின்றன. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுகின்றது. இந்த அமைப்புக்கு ஒரு வீழ்ச்சியும் வேதனையும் ஏற்பட்டு விட்டால் அவர்களுக்குத் தலைகால் புரியாத சந்தோஷமும் சகலவிதமான ஆனந்தமும் உருவாகி விடுகின்றது.

இந்த இயக்கத்திற்குப் பெயரும் பெருமையும் கிடைத்து விட்டால் அவர்களுக்குத் துன்பமும் துக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.

இதோ அல்லாஹ் சொல்கின்றான்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.



அல்குர்ஆன் 3:120

ஜாக், தமுமுகவினரின் மனநிலையை இந்த வசனம் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது. அதில் குறிப்பாக ஜாக் நமது விஷயத்தில், "மகன் இறந்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவையாக வேண்டும்' என்பது போன்று, தவ்ஹீது அழிந்தாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் அழிய வேண்டும் என்பது தான் ஜாக்கின் நாட்டமும் தேட்டமுமாக உள்ளது.

இதை நாம் வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை.

2006ஆம் ஆண்டு பரேலவிசத் தலைவன் அப்துல்லாஹ் ஜமாலியின் கோஷ்டியினருக்கும தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையே களியக்காவிளையில் விவாதம் நடைபெற்றது.

அது தொடர்பாக அல்ஜன்னத் மாத இதழில் ஓர் அலசல் இடம் பெற்றிருந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது தங்கள் வெறுப்பையும் விஷ(ம)த்தையும் கக்கியிருந்தார்கள். இது அவர்களின் வாடிக்கை என்று சொல்லி விடலாம்.

அந்தக் கட்டுரையாளர் அந்த அலசலை முடிக்கும் போது, தனது உள்ளக்கிடங்கை, ஜாக்கின் ஏக்கத்தை அப்படியே வெளிப்படுத்துகின்றார்



"பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கடந்த காலங்களில் ஏற்கனவே விவாதங்களை நடத்தி வென்றெடுத்த கொள்கைகளை மீண்டும் விவாதிக்கும் நிலை ஏற்பட்டும் கூட அவற்றை எதிர்த்து வாதாடிய தவ்ஹீது ஜமாஅத்தினர், "ஜெயித்த கேஸில் தோற்று விட்டார்களோ' என்ற பிரமை களியக்காவிளை விவாதங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது''



அல்ஜன்னத், அக்டோபர் 2006

எந்த விவாதம் நடந்தாலும் இரு தரப்பினரும் தாங்கள் தான் வென்றோம் என்றே வாதிடுவார்கள்; வழக்காடுவார்கள். உண்மையில் ஒரு வாதத்தில் வென்றவர் யார்? வீழ்ந்து விட்டு வென்றது போல் மாய்மாலம் செய்பவர் யார்? என்பதை அந்த விவாதத்தில் கிடைக்கும் விளைவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1986ல் கோட்டாற்றில் நடந்த முனாளரா எனும் விவாதத்தைத் தொடர்ந்து சமாதி வழிபாட்டுக்கும், மத்ஹபு மாயைக்கும் முழுக்குப் போட்டு விட்டு ஒரு பெருங்கூட்டமே சத்தியத்தில் வந்திணைந்தனர். அதே போன்று 2006ல் களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகும் கூட்டம் கூட்டமாக மக்கள் சத்தியத்தின் பக்கம் வந்து சேர்ந்தனர்.

களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகு தான் குமரி மாவட்டத்தில் கடையாலுமூடு, ஈத்தாமொழி, நம்பாளி போன்ற ஊர்களில் தவ்ஹீத் ஜமாஅத் வேர் பிடித்தது. அதாவது சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து வெளியேறி தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தனர்.

இது தான் விவாதத்தின் வெற்றியைத் தெளிவுபடுத்துகின்ற உண்மை விளக்கமாகும். இதில் பிரம்மை எதுவும் கிடையாது. வெற்றியின் பிரமாதமும் பிரமாண்டமும் தான் தெரிகின்றது. ஆனால் இந்த மாலைக்கண் காரர்களுக்கு இது பிரம்மையாகத் தெரிகின்றது. இதற்குக் காரணம் நாம் தோற்க வேண்டும் என்ற இவர்களது ஏக்கமும் எதிர்பார்ப்பும் தான்.

இதற்கு ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனியின் பதிலும் மற்றொரு ஆதாரமாகும்.

களியக்காவிளை விவாதம் நடைபெறுவதற்கு முன் இது குறித்து ஜாக் என்ன நிலைபாட்டில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், கமாலுத்தீன் மதனியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்துல்லாஹ் ஜமாலி அணியினர் பேசுவது போன்று பேசினார். பிஜேவுக்கு எதிரான ஆதாரங்கள் வேண்டும் கோவை ரஹ்மத்துல்லாஹ் கேட்ட போது. திருச்சி அபூஅப்துல்லாஹ்விடம் கேட்டுப் பாருங்கள் என்று கமாலுத்தீன் மதனி பதிலளித்தார். அதாவது விவாதத்தில் முஷ்ரிக்குகள் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தார்.

இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகின்ற, அப்பட்டமாகத் தெரிகின்ற விஷயம், ஏகத்துவக் கொள்கை தோற்றாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் தோற்க வேண்டும் என்ற இவர்களின் நிலைப்பாடு தான்.



வாடும் ஜாக்

பரேலவிகள், தவ்ஹீதை எதிர்க்கின்ற பக்கா குராபிகள். கடுகளவு ஈமான் கொண்டவன் கூட இவர்களிடம் இணக்கத்தையும் நெருக்கத்தையும் காட்ட முடியாது. ஆனால் ஜாக்கோ பரேலவிகள் மீது காட்டத்தைக் காட்டாமல் ஒரு மறைமுகமான ஈர்ப்பைத் தான் காட்டுகின்றது. இந்த ஈர்ப்பு இல்லாமலா போகும்? குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு ஆதாரங்களைத் தாண்டி ஸஹாபாக்கள் என்ற அஸ்திரத்தில் இவ்விரு சாராரும் ஒன்றுபடும் போது ஏன் பரேலவிகள் மீது இவர்களுக்கு ஈர்ப்பு இருக்காது? அதன் பிரதிபலிப்பு, நாம் அழிய வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்ப்பு!



இந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு சான்று...

கிறிஸ்தவ சபையினர், பிற மதத்தவர்கள் வாழ்கின்ற வீதிகளில் மட்டுமல்ல, வீடுகளிலும் புகுந்து கிறிஸ்தவத்தைத் திணிக்கின்றர். முஸ்லிம்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சொல்லப் போனால் முஸ்லிம்கள் தான் அவர்களின் வேட்டையாடும் இலக்குகள்.

ஈஸா (அலை) அவர்கள் தொடர்பான குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களின் சான்றுகளையும் எடுத்துக் காட்டி முஸ்லிம்களைத் தங்கள் வலைகளில் வீழ்த்துவதற்குப் பெரும் முயற்சிகளை இந்தக் கிறித்தவ சபையினர் மேற்கொள்கின்றனர். இதை முறியடிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விடுத்துக் கொண்டேயிருக்கின்றது.

இந்நிலையில் சான் என்ற அமைப்பினர் நம்மிடம் வசமாக மாட்டினர். விவாதத்திற்கு வந்து சிக்கினர். அவர்களை அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் நொங்கெடுத்து நொறுங்க வைத்தனர். அசத்திய வாதம் ஆட்டம் கண்டது. அவர்கள் கொண்டு வந்த துப்பாக்கிக் குண்டுகள் முதல் சுற்றிலேயே தீர்ந்து போயின. இனி அடுத்தடுத்து வருகின்ற சுற்றுக்களுக்கு அவர்களிடம் சரக்கு இல்லை.

அதனால் அடுத்த சுற்று விவாதத்திற்கு வருவது தங்கள் கழுத்துக்களுக்குப் போடுகின்ற சுருக்குக் கயிறு என்று எண்ணிய சான் அமைப்பினர் செய்த தந்திரம் தான் காவல்துறையின் தடையுத்தரவு, போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்ற சாக்குப் போக்குகள்; சால்ஜாப்புகள். இது உலகறிந்த உண்மை.

இதைத் தான் ஜாக்கின் மாவட்ட நிர்வாகி, ஹாமீம் பிர்தவ்ஸி என்பவர் தனது முகநூல் இணைய தளப் பக்கத்தில், "பி.ஜே.யின் வெற்றியா? காவல்துறையின் அனுமதி மறுப்பா?'' என்ற தலைப்பிட்டு வெளியிட்டு ஜாக்கின் ஏக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.

காவல்துறை அனுமதி மறுத்ததாக சான் அமைப்பினர் வெளியிட்டுள்ள காவல்துறையின் கடித நகலை மேற்படி தலைப்பில் ஜாக் அமைப்பினர் வெளியிட்டு தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொண்டனர்.

உண்மையில் இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்ட பிறகு தான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் விவாதத்தை நடத்துவதற்கு சான் சம்மதித்தது. அதன் பிறகு, "நேரடி ஒளிபரப்பு கூடாது என்று காவல்துறை தடை செய்துள்ளது; எனவே நேரடி ஒளிபரப்பு இல்லாவிட்டால் தான் விவாதத்திற்கு வருவோம்'' என்று விவாதம் துவங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சான் அமைப்பு மின்னஞ்சல் அனுப்பியது.

எந்த நிலையிலும் விவாதத்திற்குத் தயார் என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. உண்மையிலேயே விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பது சான் அமைப்பின் விருப்பமாக இருந்தால் அவர்கள் ஒப்புக் கொண்டபடி சபைக்கு வந்திருக்க வேண்டும். வந்த பிறகு நேரடி ஒளிபரப்பு கூடாது, அவ்வாறு ஒளிபரப்பினால் விவாதம் செய்ய மாட்டோம் என்று அவர்கள் கூறியிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.



அதை விட்டு விட்டு 10 மணிக்குத் துவங்கும் விவாதத்திற்கு 8.40 மணிக்கு மெயில் அனுப்பி நேரடி ஒளிபரப்பு இருந்தால் விவாதம் இல்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் நேரடி ஒளிபரப்பைக் காரணம் காட்டி சான் அமைப்பினர் மறுத்தார்கள்.

அது மட்டுமின்றி நேரடி ஒளிபரப்பு என்பது ற்ய்ற்த் & ர்ய்ப்ண்ய்ங்ல்த் தளங்களில் தான் நடக்கப் போகிறது. காவல்துறை உத்தரவை மதித்து இவர்கள் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருக்கலாம். நமது தளங்களில் காவல்துறை உத்தரவை மீறுவதால் காவல்துறை சான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. நேரடி ஒளிபரப்பு காரணமாக நடவடிக்கை என்றால் அது தவ்ஹீத் ஜமாஅத் மீது மட்டும் தான் இருக்கும்.

பொது இடத்தில் நடத்துவதற்குத் தான் அனுமதி கோர வேண்டும். நமது இடத்தில் கலந்துரையாடல் மாதிரி நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை. எவ்வளவோ நிகழ்ச்சிகளை நமது மர்கஸ்களில் நடத்துகிறோம். அதற்கெல்லாம் எந்த அனுமதியும் கோருவதில்லை. இதனால் தான் தலைமையில் விவாதம் நடத்துவோம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

இத்தனைக்குப் பிறகும் சான் அமைப்பினர் மேற்கண்ட காவல்துறை அனுமதி மறுப்பு என்ற கடிதத்தைக் காரணம் காட்டி, விவாதத்திற்கு வர மறுத்து விட்டனர்.

சான் வெளியிட்ட இந்தக் கடிதத்தைத் தான் ஓஆணஐ வாந்தியெடுத்து, கொள்கையளவில் சானுக்குத் தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள்.

சான் அமைப்பு ஓட்டமெடுத்தது ஜாக்கை வாட்டமடையச் செய்திருக்கின்றது. இதிலிருந்து இவர்களது ஏகத்துவக் கொள்கைப் பிடிப்பும் பிணைப்பும் எக்கச்சக்கமாக வெளிப்பட்டுள்ளது.


கிறித்தவர்களிடம் தவ்ஹீதுக் கொள்கை வீழ்ந்தாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் வெற்றி பெற்று விடக் கூடாது. என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு? என்ன ஒரு கொள்கை இறுக்கம்?


இவர்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று வாதிடுவோர், வால் பிடிப்போர் இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் சரி!

EGATHUVAM MAR 2012