நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்
தொடர்: 2
தடை செய்யப்பட்ட பொருட்களை
விற்கலாமா?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
அபூஹனிஃபாவின் ஃபத்வா
மதுவைத் தவிர உள்ள தடை செய்யப்பட்ட பானங்கள் அனைத்தையும் விற்பது
அனுமதியாகும் என இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
நூல்: ஃபதாவா ஆலம்கீரி
பாகம் 3, பக்கம் 116
(ஃபதாவா ஆலம்கீரி என்பது ஹனபி மத்ஹபின் ஃபத்வாக்களின் தொகுப்பு
நூலாகும்.)
இந்த ஃபத்வாவின் விபரீதத்தை, அபத்தத்தைப்
புரிந்து கொள்ள இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு பொருள் பயன்படுத்த ஹராம் எனில் அதை விற்பனை செய்வதும்
ஹராமே!
யூதர்களுக்குக் கொழுப்பை இறைவன் ஹராம் ஆக்கினான். ஆனால் அவர்கள்
அதை உருக்கி,
பிறருக்கு விற்ற காரணத்தினால் இறைவனின் சாபத்திற்குள்ளானார்கள்
என்று நபிகளார் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களை அல்லாஹ் தனது
கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது
அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2224
இறைவன் ஒன்றை முற்றிலும் ஹராமாக்கினால் அதை விற்பதும் ஹராமே
என்பதையும்,
அவ்வாறு விற்பது இறைவனின் சாபத்திற்குரியது என்பதையும் இந்த
ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையிலே
மது, பன்றி, சிலை, செத்தவை ஆகியவை இஸ்லாத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதைப்
போன்று விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளன.
எனவே இறைவன் ஒரு பொருளை குடிக்க, பருகக் கூடாது என்று ஹராமாக்கி விட்டால் அவற்றை ஒரு போதும் விற்கலாகாது
என்பதை இந்த அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாக, தடை செய்யப்பட்ட பானங்களை விற்கலாம் என அபூஹனிஃபா ஃபத்வா (?) அளித்திருக்கின்றார். அதில் மதுவுக்கு மட்டும் விலக்களித்திருக்கின்றார்.
இஸ்லாத்தில் போதை தரும் பானம் மட்டும் ஹராமல்ல. மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவை, அசுத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பானம் போன்றவைகளும் ஹராமாக்கப்பட்டுள்ளது.
இவற்றை விற்பது அனுமதி என்று இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
இதன் மூலம் மனித உடலுக்குக் கேடு தரும் பானங்களை விற்பது கூடும்
என்கிறார். இது இஸ்லாமிய போதனைக்கு எதிரானதில்லையா?
பிறர் நலம் நாடுவது இஸ்லாத்தின் முக்கிய போதனை. இதை வலியுறுத்தி
எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கூட அபூஹனிஃபா கண்டு கொள்ளவில்லை என்பது
இதிலிருந்து தெரிகின்றது.
மேலும் ஒன்றை ஹராம் என்பதும், ஹலால்
என்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயம். இறைவன் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குவதற்கோ, அவன் அனுமதித்த ஒன்றைத் தடை செய்வதற்கோ நமக்கு யாருக்கும் துளியும்
அதிகாரம் இல்லை.
பணத்திற்காகத் தொழுகை
மத்ஹப் வழி
"நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன்'' என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காகவே
அவரும் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்று தான் கூற வேண்டும். தங்கக் காசுக்கு
அவர் உரிமை கொண்டாட முடியாது.
(துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 473)
ஹனபி மத்ஹப் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் மேற்கண்டவாறு
கூறப்படுகின்றது.
மாநபி வழி
வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக என்ற கலப்பற்ற, தூய எண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும். அதில் உலக ஆதாயம் பெறுவதோ, விளம்பர நோக்கமோ இருக்கும் எனில் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்கப்படாது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக!
அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம்
ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்)
கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
அல்குர்ஆன் 5:27
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை
நாட்டுமாறும்,
ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை.
இதுவே நேரான மார்க்கம்.
அல்குர்ஆன் 98:5
இறைவனுடைய திருப்தியை முன்னிலைப்படுத்தாமல் மக்களுக்காக தொழுவது
நரகின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களின் குணம் என இறைவன் எச்சரிக்கின்றான்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை
ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை
நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 4:142
இறை திருப்தியை நாடாமல் செய்யப்படும் எந்த ஒரு வணக்கத்திற்கும்
இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பதை பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கின்றது.
"மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால்
அல்லாஹ் அதனை அவர்கள் கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக
ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் பார்க்கும் படி செய்து விடுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்: முஸ்லிம்
நமது நற்செயல்கள் இறைவனுக்காகச் செய்யப்பட வேண்டும், மற்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த நற்செயல்களுக்கும்
இறைவனிடம் கூலி கிடைக்காது என்பதை இந்த இறை சான்றுகள் தெளிவாக பறைசாற்றுகின்றன.
இந்நிலையில் அற்பக் காசு பணத்திற்காகத் தொழுதால் அந்தத் தொழுகை
செல்லும் என ஹனபி மத்ஹப் கூறுகின்றது. இது மேலே நாம் எடுத்துரைத்த அத்தனை சான்றுகளுக்கும்
எதிரானது; முரணானது.
மழைத் தொழுகை இல்லை (?)
மத்ஹபு வழி
இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்: மழை வேண்டுவதிலே ஜமாஅத்தாகத்
தொழுகின்ற எந்த சுன்னத்தான தொழுகையும் கிடையாது. மக்கள் தனித்தனியாகத் தொழுதால் கூடும்.
"உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்' என்ற வசனத்தின் பிரகாரம் மழைவேண்டுதல் என்பது துஆ செய்வதும்
பாவமன்னிப்புத் தேடுவதும் தான். நபி (ஸல்)
அவர்கள் மழை வேண்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தொழுகை நடத்தியதாக அறிவிக்கப்படவில்லை.
நூல்: ஹிதாயா
பாகம் 1, பக்கம் 87
மழைத் தொழுகை என்ற ஒன்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
மழை வேண்டித் தொழுததாக எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் அபூஹனிபா
கூறுகின்றார். நபிகள் நாயகம் மழை தொழுகை தொழுததாக எந்தச் செய்தியும் இல்லை என அபூஹனிபா
மறுத்ததால் அது தொடர்பான செய்திகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
மாநபி வழி
நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது
கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள்
தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி),
நூல்: புகாரி 1012
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள்.
கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 1024
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும் உள்ளச்சத்துடனும் அடக்கத்துடனும்
மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப்
போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல்
அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும்
ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: திர்மிதீ 512
இமாம் திர்மிதி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்து. அபூஹனிபாவின்
கூற்றையும் குறிப்பிட்டு அபூஹனிபா நபிவழிக்கு முரண்பட்டு விட்டார் என விமர்சிக்கின்றார்.
அதையே நமது விமர்சனமாகத் தருகிறோம்.
மழைத் தொழுகை உண்டு என்பதை நிறுவ இவ்வளவு ஆதாரங்களை அள்ளித்
தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஹனபி மத்ஹபினரே மழைத் தொழுகையை ஜமாஅத்தாகத்
தொழுகின்றனர். அதற்காக மக்களை அழைத்து ஒன்று திரட்டுகின்றனர். எனினும் இத்தனை செய்திகளைக்
கண்டு கொள்ளாமல் மழைத் தொழுகை இல்லை என்கிறார் அபூஹனிபா. நீங்களே ஒப்புக் கொண்ட ஒரு
வணக்கத்தை உங்கள் இமாம் இல்லை என மறுப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா? என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.
இமாம் அபூஹனிபா திமிர்த்தனமாக நடந்து கொள்கின்றார் என்று நாம்
கூற முனையவில்லை. மாறாக. பல நபிமொழிகள் அவருக்கும் தெரியவில்லை. பல மார்க்கச் சட்டங்களில்
அவர் தப்பும் தவறுமாகத் தீர்ப்பளித்துள்ளார் என்கிறோம்.
தவறுகள் ஏற்படும் இவரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தவறுகளே நிகழாத இறைவனின் கட்டளைகளை மட்டும் பின்பற்ற வேண்டும்
என்று மத்ஹபினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
தொழுகையின் துவக்கம் இனி "அர்ரஹ்மானு அக்பர்'?
தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அக்பர் என கூறுவோம். இது
தக்பீர் தஹ்ரீமா என மக்களால் அழைக்கப்படுகின்றது. தொழுகையின் ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர்
என்று தான் கூற வேண்டும் என்று அனைவரும் நன்கறிவோம். இதைத் தான் அல்லாஹ் தன் தூதர்
மூலமாக நமக்கு உத்தரவிட்டுள்ளான். இறை உத்தரவுக்கு மாற்றமாக, நாம் சுயமாக மார்க்கத்தில் எதையும் நுழைத்து விட முடியாது. அந்த
அதிகாரம் இறைத்தூதர்களுக்கே இல்லை.
தொழுகையின் ஆரம்பத்தில் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்குப்
பதிலாக அர்ரஹ்மானு அக்பர், அல்லாஹு அஜல்லு என்று கூறினால்
அவரது தொழுகை செல்லும், அதில் எந்தத் தவறும் இல்லை என்று
இமாம் அபூஹனிபா கூறுகிறார்.
தக்பீருக்குப் பதிலாக அல்லாஹு அஜல்லு, அல்லாஹு அஃலமு, அர்ரஹ்மானு
அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லது இறைவனுடைய பெயர்களில் எதையாவது ஒன்றைக்
கூறினால் அது (அந்த தொழுகை) அபூஹனிபாவிடம் செல்லும்.
நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 47
அபூஹனிபா இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் தொழுகையில் குர்ஆன்
வசனங்களை பாரசீக மொழி, வங்காள மொழி என எந்த மொழியில்
ஓதினாலும் அதையே அனுமதிப்பவராயிற்றே.
(பார்க்க: நூல் ஹிதாயா, பாகம்: 1, பக்கம் 47)
அவர் இதை அனுமதிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. யாருக்காகத்
தொழுகின்றோமோ அந்த இறைவனிடம் இது கூடுமா? அவன் ஏற்றுக்
கொள்வானா என்பதை மத்ஹபினர் சிந்தித்துப் பார்க்கட்டும்.
அபூஹனிபா அனுமதித்த இந்தச் சட்டத்தை அவரைப் பின்பற்றும் மத்ஹப்வாதிகள்
தங்கள் பள்ளிகளில் இதை அனுமதிப்பார்களா? இறைவனின் உண்மையான
அடியார்கள்,
நன்மக்கள் யாரும் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
உளூவில் ஒரு வினோத சட்டம்
ஒருவர் உளூ செய்யும் போது ஒரு உறுப்பைக் கழுவ மறந்து விடுகின்றார்.
அது எந்த உறுப்பு? கையா? காலா? அல்லது முகமா என்று தெரியவில்லை.
இந்நிலையில் அவர் என்ன செய்ய வேண்டும்?
அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும் என்று சாதாரண அறிவுள்ள யாரும்
எளிதாகப் பதிலளித்து விடுவார். இதற்குப் பெரிதாக மார்க்க அறிவு இருக்க வேண்டும் என்பதில்லை.
சந்தேகம் ஏற்பட்டு விட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, சந்தேகமற்ற
காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நபிகளார் நமக்கு வழிகாட்டியுள்ளதால் இது தான் மார்க்கத்தின்
நிலைப்பாடுமாகும். ஆனால் இதற்குப் பதிலளிக்கப்
புகுந்த ஹனபி மத்ஹப் என்ன கூறுகின்றது என்பதைப் பாருங்கள்.
(உளுவில்) அவன்
ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்பதை அறிந்தால், அது எது என்று
குறிப்பாக்குவதில் சந்தேகம் கொண்டால் தன்னுடைய இடது காலை கழுவ வேண்டும். ஏனென்றால்
இதுதான் அவனுடைய கடைசி செயல் ஆகும்
நூல்: துர்ருல் முக்தார்
பாகம் 1 பக்கம் 150
உளூவின் போது கழுவப்பட வேண்டிய உறுப்புகளில் எந்த உறுப்பைக்
கழுவவில்லை என்று சந்தேகம் கொண்டாலும் இடது காலைக் கழுவி விட்டு கூலாகச் சென்று விடலாமாம்.
இது தான் ஹனபி மத்ஹபின் சட்டம்.
இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரத்தைக் குறிப்பிடுவார்களா? நிச்சயம் இதற்கான ஆதாரத்தை அவற்றிலிருந்து காட்ட முடியாது.
ஒருவர் முகத்தைக் கழுவ மறந்திருப்பார், மற்றொருவர் கையைக் கழுவ மறந்திருப்பார் இந்த இரண்டிற்கும் இடது
காலைக் கழுவுவது எப்படிப் பரிகாரமாக அமையும்? இறைவனோ, இறைத்தூதரோ கூறியிருந்தால் இது பரிகாரமாக அமையுமே ஒழிய வேறு
யார் கூறினாலும் பரிகாரமாகாது.
மேலும் இத்தகைய வினோத தீர்ப்புக்கு, "இதுதான் அவனுடைய கடைசிச் செயல்' என்பதையே காரணமாகக் கூறுகின்றார்கள். கடைசிச் செயலுக்கும், மறந்த காரியத்திற்கும் என்ன சம்பந்தம்? சொல்லப் போனால் கடைசியாகச் செய்த காரியம் தான் மறக்காமல் இருக்கும்.
தொழுகையில் ஒருவர் ஒரு காரியத்தை மறந்து, அது ருகூவா, ஸஜ்தாவா என்றும்
தெரியவில்லை எனில் அவர் ஸலாம் கூறவேண்டும். ஏனெனில் இதுவே அவரின் கடைசிச் செயல் என்று
பதிலளிப்பார்களா?
இது கொஞ்சமும் பொருத்தமற்ற, மார்க்க
ஆதாரமற்ற (மத்ஹபு) சட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ருகூவு செய்யும் முறை
மத்ஹப் வழி
ருகூவில் சீராக இருக்காமல் தலையைச் சிறிது தாழ்த்தினாலே அபூஹனிபாவிடம்
தொழுகை கூடும் என்பதே தெளிவான பதிலாகும்.
நூல்: ரத்துல் முக்தார்
பாகம் 3 பக்கம் 392
ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்த வேண்டும் என்பதில்லை. மாறாக
சிறிது தாழ்த்தினாலே போதும் என ஹனபி மத்ஹப் சட்டம் சொல்கின்றது.
மாநபி வழி
ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்தி, முதுகை நேராக வைக்க வேண்டும் என்று நபிவழி கூறுகின்றது. எந்த
அளவிற்குத் தலையைத் தாழ்த்துகிறோமோ அதைப் பொறுத்து தான் நமது முதுகு வளைவின்றி நேராக, சீராக அமையும். இந்தச் சீரான அமைப்பு இல்லையெனில் தொழுகை கூடாது
என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
ருகூவிலும், ஸஜ்தாவிலும்
எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ
1017
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள்.
அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிக்கு வந்து தொழுதார். (தொழுது முடிந்ததும்) நபி (ஸல்)
அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்லிவிட்டு, "திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே
தொழுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி
(ஸல்) அவர்கள்,
"திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர்
(முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள். இவ்வாறு
மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், சத்திய(மார்க்க)த்துடன்
உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதை விட அழகாக எனக்குத் (தொழத்)தெரியாது. எனவே நீங்களே
எனக்கு கற்றுத் தாருங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும், தக்பீர்
(அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக!
பின்னர் ருகூவில் (குனிந்ததும் நிமிர்ந்து விடாமல்) (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு
நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக
நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர்
சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! இதையே (இதே வழிமுறையையே)
உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 757
ருகூவை பூரணமாகச் செய்யாதவனை தொழுகையில் திருடுபவன் என்று நபிகளார்
எச்சரித்துள்ளார்கள்.
"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். "தனது ருகூவையும் சுஜூதையும்
பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: அஹ்மத் 11106
இன்னும் இதுபோல் ஏராளமான ஹதீஸ்கள், நன்றாகக் குனிந்து ருகூவு செய்வதை வலியுறுத்துவதுடன் அவ்வாறில்லையெனில்
தொழுகை கூடாது என்றும் தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) எந்தத் தொழுகையைக் கூடாது என்று கூறினார்களோ அந்தத்
தொழுகையைக் கூடும் எனக் கூறி நமது தொழுகைகளைப் பாழாக்கும் மத்ஹபுகள் இனியும் தேவையா? மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்.
EGATHUVAM MAR 2012