May 31, 2017

மறைக்கப்படும் மார்க்கக் கல்வி

மறைக்கப்படும் மார்க்கக் கல்வி

எம்.எஸ்.ஜீனத் நிஸா, கடையநல்லூர்

அல்லாஹ் மார்க்க அறிஞர்களை அவர்களுக்கென்று பல தகுதிகளைக் கொடுத்து பல விதத்திலும் சிறப்புப்படுத்தியுள்ளான். மக்களிடத்திலும் கூட உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் இம்மார்க்க அறிஞர்களே!

பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரையிலும் ஆலிம்களை புண்ணியவான்கள் எனக் கருதி அவர்களைக் கண்ணியப்படுத்துகின்ற காட்சியை நாம் காண்கின்றோம். இதற்கான காரணம் ஆலிம் என்பவர் மார்க்கம் படித்தவர், நம்மை விடவும் அதிகமாகத் தெரிந்தவர், தூய மார்க்கம் காட்டித் தந்த அனைத்து சட்டத்திட்டங்களையும் சரிவர நிறைவேற்றுபவர் என்றெல்லாம் கற்பனை கோட்டைகளைக் கட்டி போற்றி வருகின்றனர்.

ஆனால் இந்தக் கண்ணியத்திற்கு சொந்தக் காரர்களாக இருக்க வேண்டிய மார்க்க அறிஞர்களில் சில போலி ஆலிம்களோ மக்களின் இந்த நோக்கத்தை மண்ணில் போட்டு புதைக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர். தாம் கற்ற கல்வியையே வியாபாரமாக மாற்றிவிட்டனர். மக்களிடம் தனக்குக் கிடைத்த தகுதியை பயன்படுத்தியே அவர்களை ஏமாற்றிவருகின்றனர். இது போன்ற இழிவானவர்களால் உருவானது தான் மாதம் ஒரு மவ்லிது, கத்தம் பாத்திஹா, ஓதிப் பார்த்தல் போன்ற இணைவைப்புகள்.

அவ்லியாக்களிடம் பிரார்த்திப்பது இணை வைத்தல் என்று தெரிந்திருந்தும் கூட இந்த ஆலிம்கள் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை. அந்தப் பாவச்செயலை நியாயப்படுத்துகின்றனர். மேலும் ஒரு வீட்டில் கத்தம் பாத்திஹா ஓதினால் வயிறு நிறைய சாப்பாடு, கை நிறைய பணம் என்று இருந்த இடத்திலேயே சம்பாதிக்கலாம் என்பதால் இந்தத் தவறை சுட்டிகக்காட்டும் இடத்தில் இருக்கும் ஆலிம்களே இத்தவறைச் செய்து தம் சுயமரியாதையை இழந்து வருகின்றனர்.

மக்களும், ஆலிம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றிவருகின்றனர். ஆனால் இந்த ஆலிம்கள் மக்களின் இந்த அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி மார்க்கத்தை மறைத்து ராஜவாழ்க்கை வாழ்கின்றனர்.

யாரேனும் இவர்களிடத்தில் கேள்வி கேட்டால் இவன் ஆலிமையே எதிர்த்து பேசிவிட்டான், ஆலிம்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவன் என்று பிரச்சாரம் செய்து தாம் செய்யும் தவறை யாரும் கண்டுபிடிக்காத வகையில் மக்களை வாயடைக்கச் செய்கின்றனர்.

இவ்வாறு சுக போக வாழ்க்கையைத் தான் வாழவேண்டும் என்பதற்காக தவறான கொள்கையை மக்களிடத்தில் எடுத்து வைத்து, தெளிவான மார்க்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்து வாழ்வோரை அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான வேதத்தில் சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன் 2:159, 160)

ஆனால் ஆலிம்களுக்கெல்லாம் மிகப்பெரும் ஆலிமாக இருந்த நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்கள் என்பதற்கும், இறுதி வரையிலும் சுயமரியாதையைப் பேணி வாழ்ந்தார்கள் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இந்தப் போலி ஆலிம்களோ காசுக்காக எதையும் செய்யத் தயார் என்று துணிந்து, தாம் கற்ற கல்வியை மண்ணில் போட்டுப் புதைத்து, சுயமரியாதையை இழந்து, பிறரிடம் கையேந்தும் காட்சியை நாம் பார்க்கின்றோம். இத்தகையோருக்கு நபிகளாரின் வாழ்வு ஒர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சுய இலாபத்திற்காகக் கல்வியை மறைக்கக்கூடிய போலி ஆலிம்களை நாம் பார்த்தோம்.

மார்க்கம் தடுத்த ஒரு செயலை, தான் செய்யும் ஒரே காரணத்திற்காக அந்தத் தவறை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டத் தவறும் சில மார்க்க அறிஞர்களும் இருக்கின்றனர்.

திருத்திக் கொள்ள முடியாத தவறு தன்னிடத்திலும் இருக்கும் போது அதனை மக்களுக்கு சுட்டிக்காட்டாமல் மார்க்கத்தின் மீது தனக்கிருக்கும் பொறுப்பை அவன் மறந்து அதை மக்கள் மன்றத்தில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர்.

இவ்வாறு தனக்குச்  சாதகமானதை எடுத்துச் சொல்லியும் தனக்கு பாதகமானதை கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மார்க்கச் சட்டங்களை மறைப்பது யூதர்களின் பண்பாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய  வேதத்தில் என்ன காணப்படுகிறது?’’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், “எங்கள் அறிஞர்கள், முகத்தில் கரி பூசி, முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்’’ என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினார்கள். அவ்வாறே  தவ்ராத் கொண்டு வரப்பட்ட போது, யூதர்களில் ஒருவர் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) பற்றிய வசனத்தின் மீது தமது கையை வைத்தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!’’ என்று சொன்னார்கள். அவர் தமது கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரது கைக்குக் கீழே இருந்தது. ஆகவே, கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கும் பலாத் எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த யூதர் அவள் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்.

நூல்: புகாரி 6819

(அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்)


EGATHUVAM JAN 2017