வறட்சியை நீக்குபவன் வல்ல அல்லாஹ்வே!
தமிழகத்தில் இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி
அது தீவிரமடையவில்லை. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள 89 அணைகளும், பூண்டி, சோழவரம்,
செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம் உட்பட 14 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்ன.
தற்போது தமிழகத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் 194 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் வெறும் 24 டிஎம்சி மட்டுமே உள்ளது. இந்த நீரைக்
கொண்டு தமிழகத்தில் 2 மாதம் கூட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய
இயலாது. இதனால், இப்போது முதலே பெரும்பாலான பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வாரியத்திற்கு
பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இது வெறும் செய்தி அல்ல! தமிழகம் சந்திக்கப் போகின்ற பயங்கர
பஞ்சத்தைப் பற்றிய எச்சரிக்கை மணியாகும். வரப் போகும் வறட்சியை அறிவிக்கின்ற அபாயச்
சங்காகும். தமிழகம் தற்போது மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது. இரண்டு புயலைத்
தவிர, பெரிதாக எந்த மழையும் பெய்யவில்லை.
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால்
இயல்பை விட 62 சதவிகித மழை குறைவாகப்
பெய்துள்ளது. இது கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மழை
அளவாகும். இதற்கு முன்னர் கடந்த 1876ஆம் ஆண்டு 63 சதவிகிதம் பொய்த்துப் போனது தான் இதுவரையில் குறைந்த மழை அளவாக இருந்தது.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இயல்பான அளவை விட 50 சதவிகிதத்திற்கும்
குறைவான மழைதான் பெய்து உள்ளது. கடலூர், புதுச்சேரி, நாமக்கல்லில் 19 சதவிகித மழையே பெய்துள்ளது.
தமிழகத்தில்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேரள மாநிலம் இந்த
ஆண்டு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத மிகக்குறைந்த மழை அளவைப் பெற்றுள்ளது. மாநிலத்தின்
தென்மேற்குப் பகுதியில் 34 சதவிகிதமும்,
வடகிழக்குப் பருவமழையில் 61 சதவிகிதமும் குறைவான
மழையைப் பெற்றுள்ளது. கேரளாவில் வழக்கமாக, இந்த காலங்களில் அணைகளில்
90 சதவிகிதம் நீர் இருப்பு இருக்கும். ஆனால் தற்போது 47 சதவிகிதம்தான் உள்ளது.
கர்நாடகத்தின் நிலைமையும் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. தொடந்து
மூன்றாவது வருடமாக வறட்சியைச் சந்தித்து வருகிறது கர்நாடகம். அங்கு உள்ள 175 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள்
வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை 20 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழை 62 சதவிகிதமும் குறைவாகப் பெய்துள்ளது.
தென் மாநிலங்களில் மழை அளவு குறைவால் தமிழகத்தின் அரிசித் தேவையில்
மூன்றில் ஒரு பகுதியைத் தந்து வந்த காவிரிப் பாசனப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் பயிர் செய்யப்படாமல்
தரிசாகக் கிடக்கின்றன. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை
செய்து கொண்டுள்ளனர்.
பருவ மழை பொய்த்துப் போனதால் தமிழகமும், கர்நாடகமும் காவிரிப் பிரச்சனையில் போர் மழையைச் சந்திக்க நேர்ந்தது. பல உயிர்கள் பலியாயின. பலகோடி ரூபாய் பொருளாதாரம்
பாழாயின. இவ்விரு மாநிலங்களும் அதன் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
கேரளாவில் ரப்பர், தென்னை, காப்பி போன்ற நீண்டகாலப் பயிர்கள் கூட கடுமையான
பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதே நிலை தான் கர்நாடகத்திலும்.
வறண்ட தமிழக அணைகள்
மேற்கு மாவட்டங்களில் பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகத்தில் உள்ள 15 முக்கிய
அணைகள் வேகமான வறண்டு வருகின்றன. மேட்டூர், பவானிசாகர்,
அமராவதி, பாபநாசம், மணிமுத்தாறு,
சாத்தனூர், பெரியார், வைகை,
சிறுவாணி உள்ளிட்ட அணைகளில் 13 சதவிகித அளவு தண்ணீர்தான்
உள்ளது.
சேலம், ஈரோடு,
நாமக்கல், கரூர், திருச்சி,
அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம்,
திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது மேட்டூர் அணை.
சுமார் 127 குடிநீர்த் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,050 மில்லியன் கனஅடி தண்ணீர் இந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள நீர் அளவைக் கொண்டு இன்னும் இரண்டு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க
முடியும். விரைவில் கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், குடிநீர்த்
தேவை அதிகரிக்கும் என்பதால், இரண்டு மாதம் என்பதுகூட குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல கோயம்புத்தூருக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலும்
இன்னும் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது. இதனால் கோவையில் குடம் நீர்
பத்துக்கு விற்கின்றது.
தூத்துக்குடியில் குடிநீருக்காக குடங்களைத் தூக்கிக் கொண்டு
அலைகின்ற தாய்க்குலத்தைப் பார்க்கின்ற போது கண்கள் குளமாகின்றன.
தென் மாவட்ட அணைகள் பாபநாசம், மணிமுத்தாறு, வைகை ஆகிய மூன்று அணைகளிலும் போதிய அளவுக்கு
நீர் இல்லை. வைகையில் 4 சதவிகித தண்ணீர் தான் இருப்பில் உள்ளது.
இது 10 நாள் குடிநீர்த் தேவைக்குதான் போதுமானதாக இருக்கும். தேனி,
திண்டுக்கல், சிவகங்கை, மதுரை,
ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் கடுமையான நீர்த்
தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டிவரும். முல்லைப் பெரியாரில் உள்ள நீரை வைத்து இன்னும்
ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.
தமிழகத்தின் ஜீவநதி என்று வர்ணிக்கப்படும் தாமிரபரணி நீரைக்
கொண்டு உள்ள பாபநாசம் அணையில் இருந்து இன்னும் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தைச் சந்திக்க உள்ளனர்.
வட மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்யும் சாத்தனூர் அணையில் இன்னும் 15 நாட்களுக்கு
மட்டுமே நீர் உள்ளது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் சுமார் ஒரு மாதத்திற்குத்
தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது.
EGATHUVAM FEB 2017