குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி...
தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் தற்போது உள்ள தண்ணீரின் மொத்த
அளவின்படி பார்த்தால், சரியாக இன்னும்
ஒரு மாதத்தில் மழை பெய்து, தமிழகத்தைக் காப்பாற்றா விட்டால்,
மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை தமிழகம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அணை மொத்தமாக வறண்டு விடும் என்பதால் தமிழகத்தில்
குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி
ஒருவர் கூறும் போது, தமிழகத்தில்
இந்தாண்டு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர்ப் பஞ்சம் இன்னும்
இரண்டு மாதத்தில் வர வாய்ப்புள்ளது. எனவே, இப்பிரச்னையை ஓரளவு
சமாளிக்க 900 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர்
எடுக்கலாம் என அறிக்கை அளித்துள்ளோம். பொதுமக்களிடம் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும்படியும் கூறியுள்ளோம். மேலும், இப்போதிருந்தே குடிநீர்
விநியோகிப்பதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார். பஞ்சத்திற்கு
ஆழ்குழாய் தோண்டுவது மட்டும் தீர்வாகாது. ஏற்கனவே, பல இடங்களில் 500, 600 அடிகளை தாண்டி போர்
போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். போதிய நீர் வராமல் புகை தான் வந்துக் கொண்டிருக்கின்றது. காரணம், நிலத்தடி நீருக்கு
ஆதாரமாக இருப்பது மழை தான்.
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில்
தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.
அல்குர்ஆன் 23:18
இந்த வசனம் நீரை பூமியில் நாமே தங்க வைத்திருக்கின்றோம். என்று
கூறுகின்றது.
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை
இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
அல்குர்ஆன் 15:22
மழை நீர் தான் பூமியில் சேமித்து வைக்கப்படுகின்றது என்று அல்லாஹ்
கூறுகின்றான்
அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக
ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா?
அல்குர்ஆன் 39:21
வான் மழை தான் பூமியில் ஊற்றாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது
என்று கூறுகின்றான். எனவே ஏற்கனவே, மழை பெய்து நிலத்தில் நீர் சேகரமாகியும், சேமிப்பாகியும்
இருந்தால் தான் ஆழ்குழாய் மூலம் நீரை பெற முடியும். இல்லையென்றால், பூமியிலிருந்து பொங்கி வழியும் நீருக்குப் பதிலாகப் பொசுங்கி வரும் புகையைத்
தான் பார்க்க முடியும். அதனால் இதற்குத் தீர்வு மழை தானே தவிர ஆழ்குழாய் கிணறுகள் அல்ல
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லாம் இயற்கை! இயற்கை! இவ்வையகத்தை இயக்குகின்ற இறை சக்தி
எதுவும் கிடையாது என்று எகத்தளமாகப் பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் பைத்தியம் வாதம்
பேசுகின்ற அறிவிலிகளை நோக்கி, ‘தண்ணீர் பஞ்சத்தில் தகித்துக் கொண்டிருக்கின்ற
தமிழகத்தை நோக்கி, தவிக்கின்ற வாய்க்குத் தண்ணீர் தரப் போவது இயற்கையா? அல்லது எல்லாம்
வல்ல ஏகனும் தனி நாயகனுமான அல்லாஹ்வா?’ என்ற கேள்வியை திருமறைக்
குர்ஆன் முன்வைக்கின்றது.
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா?
அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால்
அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?
அல்குர்ஆன் 56:68-70
அரிசி விளைவிக்கின்ற தஞ்சை போன்ற வளம் நிறைந்த விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றனவே
அந்த நிலங்களை வளங்கொழிக்கச் செய்வது இயற்கையா? அல்லது தன்னிகரற்ற தனி நாயன் நானா?
என்று அடுத்தக் கேள்விக் கணையையும் அல்குர்ஆன் வசனங்கள் தொடுக்கின்றன.
நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா?
அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால்
அதைக் கூளமாக்கியிருப்போம். “நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை!
நாம் தடுக்கப்பட்டு விட்டோம்‘’ என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்
அல்குர்ஆன் 56:63-67
1878-ல் தமிழகம் அப்போதைய ஆங்கில ஆட்சியர் கீழ்
இருந்த போது சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்டது. அந்த சென்னை மாகாணத்தில் இது போன்று
பருவ மழை பொய்த்த போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் மைசூர்,
பம்பாய், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து
இறந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி என்று கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து அதன் கடுமையான பாதிப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம். அந்த பாதிப்பிலிருந்து
தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மக்கள் இலங்கை, பர்மா,
ஃபிஜி, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்.
அவ்வாறு குடிபெயர்ந்த வம்சாவளியினர் இன்றும் அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பஞ்சம் தமிழகத்தைப் பிடிக்கவில்லை.
கடந்த 1967 முதல் 1975 வரை தமிழகத்தில்
விவசாயம் பாதித்ததால் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான
உணவான அரிசி கிடைக்கவில்லை. பட்டினியின் பிடியில் தவித்த மக்கள் மரவள்ளிக் கிழங்கு,
சோளம் ஆகியவற்றைச் சாப்பிட்டுக் காலம் தள்ளினர். ரேஷனில் கூட சோள மாவு
கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் 1977லிருந்து 1989 வரை பருவ மழை பெய்து நிலைமை சீரானது. இதற்குப்
பிந்தைய ஆண்டுகளும் பெரிய பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால், 2016ஆம் ஆண்டு போதிய மழையின்றி தமிழகம்
1878 பஞ்சத்தைப் போன்ற நிலையைச் சந்தித்து விடுமோ என்ற பயம் மக்களை
ஆட்கொண்டு விட்டது.
இதிலிருந்து விடுபடுவதற்கு வழி என்ன? வரலாறு
காணாத வறட்சியை விட்டும் காக்கின்ற வான்மழை தான். வான் மழையைப் பெறுவதற்கு மக்கள் கொடும்பாவி
எரித்தல், ஒப்பாரி வைத்தல், பெண்களை நிர்வாணமாக
ஓட விடுதல், கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம்
முடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த மூடப் பழக்க வழக்கங்கள் பிற மத சமுதாயங்களில் நடக்கின்றன
என்றால், முஸ்லிம்கள்
மழை பைத்து என்ற பெயரில் அரபி, தமிழ் கலந்த பாடல் ஒன்றை மழை வேண்டி
வீதிகளில் ஓதி வலம் வருகின்ற மூடப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இதற்கும் இஸ்லாத்திற்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லை.
மழை என்பது அல்லாஹ்வின் தனி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது. தனி
அதிகாரத்தைக் கொண்டது. அந்த வல்ல அல்லாஹ் தான் இந்த வறட்சியைப் போக்கவும், வாழ்வாதாரமான மழையைத் தரவும் வளத்தை வழங்கவும்,
ஆற்றல் பெற்றவன், அதிகாரம் படைத்தவன்.
அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது
அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.
அல்குர்ஆன் 42:28
படைத்தவனின் இந்த அருளை வேண்டி அவனிடமே நாம் பிரார்த்திக்க வேண்டும்.
வறட்சியை நீக்கும் ஆற்றல் அந்த வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. அவனிடம் நாம்
மன்றாடிக் கேட்பது மட்டும் இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாகும்.
இறைவனின் அருள் மழையை வேண்டுவதற்கு மார்க்கம் காட்டிய வழிமுறைகள்
எவை என தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்
தந்த முறைப்படி வறட்சி நீங்க வல்ல அல்லாஹ்விடம் முறையிடுவோமாக!
EGATHUVAM FEB 2017