May 31, 2017

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் 7 - தேளிடம் கடி வாங்கத் தயாரா? சவாலும், சறுக்கலும்!

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் 7 - தேளிடம் கடி வாங்கத் தயாரா?  சவாலும்சறுக்கலும்!

தொடர் - 7

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

தேளிடம் கடி வாங்கத் தயாரா?

இப்படியொரு கேள்வியை ஸலஃபுகளும், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிகொள்வோரும் தவ்ஹீத் ஜமாஅத்தினரைப் பார்த்து எழுப்பி வருகின்றார்கள்.

கேள்வியின் பின்னணி:

இந்தக் கேள்விக்கான பின்னணி அஜ்வா பேரீச்சம்பழம் குறித்து வரக்கூடிய செய்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது என்ன செய்தி என்பதைப் பார்த்துவிட்டு, ஸலஃபுகளும், போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் எழுப்பும் தேள் கடி பற்றிய கேள்விக்கான பதிலைக் காண்போம்.

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?

புகாரி என்ற ஹதீஸ் நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வா (ரக) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5445

புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியை நாம் திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய பொய்யான செய்தி என்று கூறுகின்றோம்.

இது நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியே அல்ல; இந்தச் செய்தியை நபிகளார் பெயரால் யாரோ இட்டுக்கட்டிக் கூறியுள்ளார்கள் என்றும் கூறுகின்றோம்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் 4:87

அல்லாஹ்வைவிட அழகிய முறையில் உண்மை பேசக்கூடியவன் யார் என்று அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான்.

அஜ்வா ரகப் பேரீச்சம்பழத்தை ஒருவர் காலையில் சாப்பிட்டுவிட்டால் அந்த நாள் முழுவதும் அவருக்கு எந்த விஷமும் பாதிப்பை ஏற்படுத்தாது; அவருக்கு சூனியத்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாது என நபிகளார் சொல்லியதாக இந்த செய்தி கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் சில அஜ்வா ரகப் பேரீச்சம் பழங்களை யார் சாப்பிடுகின்றாரோ அவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5768

மேற்கண்ட செய்தியில் இன்னும் ஒருபடி மேலே போய் தெளிவாக மற்றுமொரு செய்தியும் கூடுதலாக அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது யார் ஒரு நாள் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு அன்று இரவு வரைக்கும் எந்த விஷமோ அல்லது சூனியமோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று நபிகளார் சொன்னதாக சொல்லப்பட்டுள்ளது.

இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்; அஜ்வா பேரீச்சம்பழங்கள் இன்றும் கடைகளில் கிடைக்கின்றன. அந்தப் பேரீச்சம்பழத்தை உண்டுவிட்டு விஷத்தைக் குடித்தால் அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்; அப்போதுதான் நபிகளார் சொன்ன இந்தச் செய்தி உண்மையாகும்; ஆனால் அந்தச் செய்தியை யாரும் இதுவரை நம்பவில்லை; அது பொய் என்று உணர்ந்தே வைத்துள்ளார்கள்; அதனால்தான் ஸலஃபுகளாக இருக்கட்டும்; இந்தச் செய்தியை உண்மையென்று நம்பும் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினராக இருக்கட்டும். அவர்களில் யாரும் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு விஷத்தைக் குடித்து இந்த செய்தியை உண்மையென்று நிரூபிக்க முன்வருவதில்லை.

அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் இந்தச் செய்தியை நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்று யார் உறுதியாக நம்புகின்றார்களோ அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தை காலையில் உண்டு விட்டு, உடனே விஷத்தைக் குடித்து உயிரோடு வாழ்ந்து காட்டி நிரூபிக்க வேண்டும். இதுபோல செய்ய யாரும் முன்வந்ததில்லை; அப்படியானால் அவர்களும் இந்தச் செய்தியை பொய்யென்று தங்களது செயலளவில் மறுத்து வருகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆக அல்லாஹ்வைவிட உண்மை பேசக்கூடியவன் யார் என்ற இறைவசனத்திற்கு இந்தச் செய்தி முற்றிலும் முரண்பாடாக உள்ளதை நாம் அறியலாம்.

மேலும், தன் பெயரில் இதுபோன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

ஆக மேற்கண்ட செய்திகளின் அடிப்படையிலும் அஜ்வா பேரீச்சம்பழம் விஷத்தை முறித்துவிடும் என்று சொல்வது பொய்யான செய்திதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் சூனியத்திற்கு ஆற்றல் இல்லை; அதனால் எவ்வித பாதிப்பையும் யாருக்கும் எவராலும் ஏற்படுத்த முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு;

மேலும் சூனியத்திற்கு ஆற்றல் உண்டு என யார் நம்புகின்றாரோ அவர் சுவனம் செல்ல முடியாது என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள். (பார்க்க: அஹ்மது 26212)

சூனியத்தால் யாரும் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்த முடியாது; அவ்வாறு நம்புபவருக்கு சொர்க்கத்தில் இடமில்லை என நபிகளார் தெளிவுபடுத்திச் சென்றுள்ள நிலையில், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற ரீதியில் சொல்லப்பட்டுள்ள இந்தச் செய்தி பொய்யானதுதான் என்பதும், இதை நபிகளார் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதும் மேலும் உறுதியாகின்றது.

அஜ்வா பேரீச்சம்பழத்தை காலையில் உண்டால் அன்று இரவு வரை சூனியமும், விஷமும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற இந்தச் செய்தியை யார் உண்மையென்று நம்புகின்றாரோ அவர் அஜ்வா பேரீச்சம்பழத்தையும் உண்டு, விஷத்தையும் குடித்து உயிர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாம் அறைகூவல் விடுத்து வருகின்றோம்.

இதற்கு இதுவரை ஸலஃபுக் கும்பலோ அல்லது போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரோ பதிலளிக்கவில்லை.

மாறாக, தேளைப் பிடித்து உங்களைக் கடிக்க விடுகின்றோம் என்று எதிர்க் கேள்விதான் எழுப்பி வருகின்றனர்.

தேள் கடி சவாலும் அறியாமையும்

தேளைக் கடிக்க விடுகின்றோம் என்று அவர்கள் சொல்லக் காரணம் கீழ்க்கண்ட செய்தி தான்:

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. ‘‘உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?’’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் ‘‘நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்’’ என்றார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து சூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். ‘‘நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்’’ என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். ‘‘அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்!’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2276

மேற்கண்ட செய்தியில் தேள் கடித்த ஒருவருக்கு அல்ஹம்து சூராவை வைத்து ஓதிப்பார்த்தவுடன் அவருக்குக் குணமாகியுள்ளது. அந்த ஹதீஸின் அடிப்படையில் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது ஒரு தேளைப் போட்டு கடிக்க விடுகின்றோம்; தேள் கடித்தவுடன் அல்ஹம்து சூராவை ஓதி அந்த விஷத்தை முறிப்பீர்களா? இந்த சவாலுக்குத் தயாரா என்பது தான் நம்மை நோக்கி எழுப்பப்படும் கேள்வி.

சவாலும் சறுக்கலும்

இது அறியாமையால் எழுப்பப்பட்டுள்ள கேள்வி என்பதை நாம் சற்று சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

இது சவால் அல்ல; அவர்களது அறியாமையால் விளைந்த சறுக்கல்.

இதற்கும், அஜ்வா பேரீச்சம்பழம் குறித்த கட்டுக் கதைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் தேள் கடிக்கு அல்ஹம்து சூராவைக் கொண்டு ஓதிப்பார்த்தால் ஷிஃபா (நலம்) கிடைக்கும் என்று நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.

இது ஒரு பிரார்த்தனை தான். பிரார்த்தனை என்பதைப் பொறுத்த வரை, அல்லாஹ் நாடினால் அதை ஏற்றுக் கொள்வான்; நாடினால் அதை நிராகரிக்கவும் செய்வான்; அது அவனது அதிகாரத்தில் உள்ளது.

அல்லது நாம் கேட்கும் பிரார்த்தனைக்குப் பதிலாக நமக்கு வரும் ஏதேனும் ஒரு துன்பத்தை அல்லாஹ் இல்லாமல் ஆக்குவான்; அல்லது மறுமை சேமிப்பாக ஆக்குவான் என்று நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள். கீழ்க்கண்ட செய்தியிலிருந்து அதை நாம் அறிந்து கொள்ளலாம்.

‘‘பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ‘‘அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே!’’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத் 10709

அல்ஹம்து சூராவை ஓதினால் தேள் கடி குணமாகும் என்ற செய்தியை அறிவித்த அதே அபூ ஸயீத் அல்குத்ரி அவர்கள் தான் அல்லாஹ் நமது பிரார்த்தனையை அங்கீகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நபிகளார் சொல்லிக்காட்டிய செய்தியையும் அறிவிக்கின்றார்கள்.

இதை விளங்காமல் ஸலஃபுக் கும்பலும், போலி சுன்னத் வல் ஜமாஅத்தார்களும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைக்கப்பார்க்கின்றார்கள்.

மேலும்,

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

தேள் கடிக்கு துஆ செய்த விஷயத்தில் சவால் விடும் அறிவாளிகள் மேற்கண்ட ஹதீஸ் குறித்தும் சவால் விடலாம் நீங்கள் கைகளை விரித்து துஆ செய்யுங்கள்; அதில் ஏதேனும் விழுகின்றதா என்று பார்ப்போம் என்று சவால் விட்டால் அதற்கு என்ன பதிலோ அதுதான் தேள் கடி குறித்து கேள்வி எழுப்பக்கூடியவர்களுக்குமான பதில்.

நாம் செய்யும் துஆக்களை அல்லாஹ் பல வழிகளில் அங்கீகரிக்கின்றான் என நம்பும் ஒரு இறை நம்பிக்கையாளன் இதுபோன்ற கேள்வி எழுப்ப மாட்டான் என்பது தான் அடிப்படையான விஷயம் என்பதை இது குறித்து கேள்வி எழுப்புவோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மெட்டீரியலும், பிரார்த்தனையும் ஒன்றா?

இன்னுமொரு முக்கியமான விஷயத்தையும் இதில் எதிர்தரப்பினர் சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் எந்த செய்தியைச் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே நம்ப மாட்டீர்களா? அதை ஆய்வு செய்து உண்மை என்று நிரூபித்த பிறகுதான் நம்புவீர்களா என்றும் நம்மிடம் இது குறித்து விதண்டாவாத கேள்வியை எழுப்புகின்றனர் எதிர்த்தரப்பினர்.

நம்பிக்கை விஷயத்தில் நாம் எதையும் ஆய்வு செய்து தான் நம்புவோம் என்று இதுவரை சொன்னதில்லை.

சொர்க்கம், நரகம், மண்ணறை வாழ்க்கை, மறுமை என்று மறைவான விஷயத்தில் நாம் எதையும் ஆய்வு செய்து, அதை நிரூபித்துக் காட்டினால் தான் நம்புவோம் என்று சொன்னதில்லை. அவை அனைத்துமே நம்பிக்கை தொடர்புடையவை.

மாறாக மெட்டீரியலாக இருக்கும் ஒரு விஷயத்தில் நபிகளார் சொன்னதாக ஒரு செய்தி வந்தால் அதை ஆய்வு செய்ய வழி இருக்கும் போது அதை ஆய்வு செய்துதான் நம்ப வேண்டும்.

உதாரணத்திற்கு,

விலங்குகளுக்குப் பகுத்தறிவு உள்ளது; மனிதன் குடும்ப வாழ்க்கை நடத்துவது போல அவை தங்களுக்கு மத்தியில் குடும்ப வாழ்க்கை நடத்தி கணவன் - மனைவி - பிள்ளை பேரன் - பேத்தி - குடும்பம் - குட்டிகள் என வாழ்ந்து வருகின்றன என நபிகளார் சொன்னதாக ஒருவர் சொல்கின்றார் என வைத்துக் கொள்வோம். அது பொய் என்று நாம் உடனே சொல்வோம்; ஏனென்றால் அதுபோன்ற ஒரு நடைமுறை இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்துள்ளோம். இது உண்மையென்றால் விலங்குகளுக்கு மத்தியில் அவ்வாறு குடும்ப வாழ்க்கை நடத்தப்படுகின்றது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் நம்புகின்றோம் என நாம் சவால் விடுவோம்.

இது சோதித்து அறியக்கூடியது; அதனால் அந்த சவாலை விடுக்கின்றோம்; அதுபோலத்தான் இந்த அஜ்வா பேரீச்சம்பழம் குறித்து நபிகளார் சொல்வதாக வரும் செய்தி.

அஜ்வா பேரீச்சம்பழத்தில் விஷ முறிவு ஏற்படுத்தும் தன்மை உள்ளதாக இந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது; அப்படியானால் அதை ஆய்வு செய்து ஆய்வகத்தில் கொடுத்து சோதனை நடத்தி அதில் விஷ முறிவுத்தன்மை உள்ளதை நிரூபிக்க வேண்டுமா இல்லையா?

அதைத்தான் நாம் கேட்கின்றோம்.


ஆனால் தேள் கடி தொடர்பான விஷயத்தில் அவ்வாறு சொல்லப் படவில்லை. அது ஒரு பிரார்த்தனை! அல்ஹம்து சூராவை எடுத்துக் கொண்டு போய் ஆய்வகத்தில் கொடுத்து சோதித்து அதில் என்னென்ன கலந்துள்ளது என்பதை சோதித்து அறிய  முடியாது. இந்த அடிப்படையான விஷயத்தை விளங்காமல் தான் இவர்கள் இந்தக் கேள்வியை அறியாமையால் எழுப்பி வருகின்றார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆக இது நமது எதிர்த்தரப்பினரின் சவால் அல்ல; அறியாமையால் அவர்களுக்கு வந்த சறுக்கல் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

EGATHUVAM FEB 2017