அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!
எம். ஷம்சுல்லுஹா
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல் தொடர்பாக
மூன்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன,
மக்கா நிகழ்வு
நபி (ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரம் செய்த போது மக்கா குரைஷிகள்
சத்தியத்தை ஏற்க மறுத்தனர். அப்போது, ‘யூசுஃப் (அலை) காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை ஏழாண்டுகள் பிடித்தது போன்று இவர்களையும் ஏழாண்டுகள் பிடிப்பாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
அதன் விளைவாக மக்காவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள்
பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங்களையும் புசிக்க நேர்ந்தது. இந்த நேரத்தில்
(குறைஷிகளின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! நீங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட
வேண்டும் என்றும் உறவுகளைப் பேணவேண்டும் என்றும் கட்டளையிடுகின்றீர்கள். உங்கள் சமுதாயத்தார்
அழிந்துவிட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்’’ என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்காக மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள்.
பார்க்க புகாரி: 1007,4821
ஜும்ஆ தொழுகையில் மழை வேண்டிப் பிரார்த்தனை
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடைமீது)
நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மேடைக்கு எதிர் திசையிலிருந்த வாசல் வழியாக
ஒரு மனிதர் வந்தார். அவர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடைகள்
அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான்’’ என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச்
செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச்
செய்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள்
காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான
அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே
எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப்
பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம்
கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை.
அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒரு
மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால்
எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் தடைபட்டு
விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!’’ என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி,
“இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)
எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’’
என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில்
நடந்து சென்றோம்.
நூல்: புகாரி 1013
திடலுக்குச் சென்று தொழுது பிரார்த்தித்தல்
அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆசிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (தொழும் திடலுக்குப்)
புறப்பட்டுச் சென்றார்கள். பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்த போது தமது மேல் துண்டை
(வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளின் மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
நூல்: புகாரி 1005
முந்திய இரண்டு நிகழ்வுகள் துஆ மூலம் மழை வேண்டியதையும் மூன்றாவது
நிகழ்வு திடலுக்குப் போய் தொழுகை மூலம் மழை வேண்டியதையும் விளக்குகின்றது. நாம் இவற்றின்
அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மழை வேண்டி பிரார்த்திப்போமாக!
(குறிப்பு: மழைத் தொழுகையின் முறை, அதில் இடம்பெற வேண்டிய பிரார்த்தனைகள், ஜும்ஆவில் செய்ய
வேண்டிய பிரார்த்தனைகள் ஆகியன குறித்து கடந்த ஏகத்துவம் - ஜனவரி 2017 இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)
இறைவன் விதிக்கும் நிபந்தனைகள்
பொதுவாக மழையை அளிப்பதற்கும், அருள்வதற்கும் இறை நம்பிக்கை, இறையச்சம், பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற நிபந்தனைகளை விதிக்கின்றான்.
அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால்
வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை
அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள்
(தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.
திருக்குர்ஆன் 7:96
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக
இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.
திருக்குர்ஆன் 71:10
நாம் இறை நம்பிக்கையாளர்கள் என்றாலும் நம்மிடம் இறையச்சத்திற்கு
மாற்றமான செயல்பாடுகள் அதிகம் இருக்கின்றன. நாம் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். அவனிடத்தில்
பாவமன்னிப்பும் அதிகமதிகம் தேடிக் கொள்ள வேண்டும்
வல்ல இறைவனிடம் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்வோமாக! பஞ்சம்
தீரப் பரிகாரம் வேண்டுவோமாக! மழை பெறுவதற்கு பிழை பொறுக்கத் தேடுவோமாக!
EGATHUVAM FEB 2017