வான்மறையும் வான்மழையும்
எம். ஷம்சுல்லுஹா
மழை என்பது படைத்த இறைவனின் தனிப் பெரும் ஆற்றலாகும். அதிலும்
இந்தியாவில் பொழிகின்ற பருவ மழை உண்மையில் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பறை
சாற்றுகின்ற அற்புதமாகும்.
தென்மேற்குப் பருவ மழை பெய்வதற்கு பூமியின் தென் அரைக் கோளத்தில்
புறப்படுகின்ற காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது.
இந்தக் காற்று பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றது.
அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஆகிய மூன்று கடல்களின்
ஈரப்பதத்தை சுமந்து கொண்டு கருவுற்ற காற்றாக வருகின்றது.
மராட்டியத்திலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு 900 மீட்டர்கள் உயரத்திற்கு நெடிதுயர்ந்து நிற்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளால்
தடுத்து திருப்பப்படுகின்றது. அவ்வாறு தடுக்கப்பட்ட காற்று தான் மேல் நோக்கி எழுந்து
தமிழ்நாடு, கிழக்குக் கடற்கரை பகுதிகளைத் தவிர உள்ள இந்தியாவின்
அனைத்து பகுதிகளுக்கும் மழையைப் பொழிவிக்கின்றது. இந்த மழைப் பொழிவு ஜூன் முதல் செப்டம்பர்
வரை உள்ள காலத்தில் நிகழ்கின்றது. இது தான் தென்மேற்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.
அது போல் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று
பூமி சுழற்சி காரணமாக வடகிழக்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட
காற்று இமயமலையால் தடுக்கப்பட்டு மேல் நோக்கி எழுந்து தமிழ்நாடு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் மழையைப்
பொழிவிக்கின்றது. இது தான் வடகிழக்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.
இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை.
இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும்
தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன. இயந்திரப் பயன்பாடு கண்டுபிடிக்கப்படாத
காலத்தில் உந்தித் தள்ளுகின்ற இந்தப் பருவ காலக் காற்றுகளை பயன்படுத்தித் தான் அரபியர்கள்
பாய்மரக் கப்பல்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். பருவ காலத்திற்கு அரபியில் மவ்சிம் என்பதாகும்.
பின்னால் அது ஆங்கிலத்தில் விஷீஸீsஷீஷீஸீ மான்சூன் என்று மறுவியதற்குப்
பின்னணியும் பின்புலமும் இது தான்.
இந்தியத் துணைக் கண்டத்தில் பெய்கின்ற இந்த மழைக்கு காற்று, மலைகள், கடல்,
பூமியின் சுழற்சி, பூமியின் சாய்வான அச்சு ஆகியவை
காரணிகளாக அமைந்திருக்கின்றன. இவற்றை அல்லாஹ்வின் கீழ்க்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அத்துடன் அவனது வசனங்களை இந்தக் காரணிகளும் உண்மைப்படுத்துகின்றன.
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை
இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
அல்குர்ஆன் 15:22
அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப்
புகட்டினோம்.
அல்குர்ஆன் 77:27
இந்த வசனம் முளை என்ற குறிப்பிடுவது மலையைத் தான். இந்த மலைகள்
முளைகளாக மட்டுமல்லாமல், மழையை சேமித்து
ஆறாகப் பகிர்கின்ற வேலைகளைச் செய்வதுடன் அவை காற்றுகளைத் தடுத்தும் மழையைத் தருகின்றன.
இந்தியாவில் இந்த அற்புதம் மிக அற்புதமாக நடைபெறுகின்றது. அல்லாஹ்வின் இந்த சொற்பதம்
தெளிவாக உணர்த்துகின்றது.
நம்பிக்கை கொள்வோருக்கு வானங்களிலும், பூமியிலும் பல சான்றுகள் உள்ளன. உங்களைப் படைத்திருப்பதிலும்,
ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப்
பல சான்றுகள் உள்ளன. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானிலிருந்து
அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன்
மூலம் (அதற்கு) உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும்
விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 45:3-5
நமக்குக் கிடைக்கின்ற மழையில் இத்துணை காரணிகள் பின்னிப் பிணைந்து
கிடக்கின்றன என்று இந்த வசனங்கள் பின்னி எடுத்து விட்டன. அல்குர்ஆன் மின்னிக் கொண்டிருக்கின்ற
உண்மை வேதம் என்பதையும் உலகிற்கு உரத்து உரைத்து விட்டன. ஒரு மழை பொழிய வேண்டுமென்றால்
அல்லாஹ்வின் இத்தனை ஆற்றல்கள் அடங்கியிருக்கின்றன எனும் போது, அவனிடம் மழையை வேண்டாமல் கழுதைத் திருமணம் போன்ற
மூடப் பழக்கங்கள் மழையைக் கொண்டு வருமா? என்று சிந்தித்துப் பார்க்க
வேண்டும்.
முன்காலத்தில் அரபு வணிகர்கள் பாய்மரக் கலங்களில் ஏறி தென்மேற்குப்
பருவக்காற்றின் உதவியுடன் இந்தியாவின் மேற்குக் கரைகளில் வந்து இறங்குவார்கள். வடகிழக்குப்
பருவக்காற்றின் உதவியுடன் சொந்த நாட்டுக்குத் திரும்புவார்கள். இதன் காரணமாகவே பருவக்காற்றுகளுக்கு
‘வணிகக் காற்றுகள்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது.
உலகிலேயே உயரமான மலைத்தெடரான இமயமலை, மியான்மரில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை 2 ஆயிரம் கிலோமீட்டர் வரை பரந்து விரிந்திருக்கிறது. இதன் பெரும் பகுதி தெற்காசிய
நாடுகளில்தான் உள்ளது. கங்கை, பிரம்மபுத்திரா, இன்டஸ், சல்வீன், மேகாங்,
யாங்டெஸ், ஹுவாங் ஹோ ஆகிய ஏழு நதிகள் இன்னும் வற்றாத
நதிகளாக ஓடிக் கொண்டிருக்கக் காரணம் இந்த மலைத் தொடர்தான். இந்த மலையில் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் படர்ந்திருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால்தான்
இந்த நதிகளுக்குத் தண்ணீர் கிடைக்கிறது.
இந்த பனிப் பாறைகள் எப்படி உருவாகின்றன? பருவ காலங்களில் மேகங்கள் பொழிகின்ற பனிப் பொழிவினால்
தான் பனிப் பாறைகள் உருவாகின்றன. இவற்றைத்
தான் மலைகள் வாங்கி சேமித்து வைத்து நமக்கு ஆறுகளாக உருகி ஓடச் செய்கின்றன.
இதைத் தான் மேலே இடம்பெற்றுள்ள 77:27 வசனம், உயர்ந்த முளைகளை
நிறுவி, இனிமையான நீரை உங்களுக்குப் புகட்டுகிறோம் என்று கூறி,
திருக்குர்ஆன் ஓர் அற்புத வேதம் என்பதை மெய்ப்பிக்கின்றது.
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர்
அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்!
வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான்
நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான்.
அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.
அல்குர்ஆன் 24:43
இவ்வசனத்தில் ‘வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது’ என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.
பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச்
சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
இம்மேகங்களின் பிரம்மாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள்
இன்று கூட அறிந்திருக்கவில்லை.
மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி
(பனிக்கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகின்றது.
இந்தப் பனிக்கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல்
30,000 அடிகள் வரை உயர்கின்றன. 30,000 அடி
என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான
இமய மலையின் உயரத்தை விட அதிகம்.
இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக்கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின்காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக்கட்டிகள் உருகி
தண்ணீரைக் கொட்டுகின்றன.
இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது
பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத்தான் மேலே தந்திருக்கிறோம்.
இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை
அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக்கட்டிகள் செங்குத்தாக
நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல்
போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் அப்படியே கூறுவதைப்
பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு
சான்று தேவை இல்லை.
EGATHUVAM FEB 2017